சூரிய வளி மண்டலத்தின் மேற்பகுதியிலிருந்து இடையறாது ஆரத் திசைகளில், ஒலியை விஞ்சும் திசை வேகத்துடன் பிளாஸ்மாக் கதிர்கள் வெளியே பாய்ந்து கொண்டுள்ளன. இங்ஙனம் பாயும் கதிர் வீச்சைச் சூரியக் காற்று எனலாம். சூரியக் கதிர்கள் புவியையும் தாண்டிச் சூரிய மண்டலத்தின் வெளி விளிம்பு வரை பாய்கின்றன. புவியின் ஓடு பாதையில் இக்கதிர்களில் முக்கியமாக, புரோட்டான்களும், எலெக்ட்ரான்களுமே அடங்கியுள்ளன. அவற்றின் சராசரி இயக்க வெப்ப நிலை ஏறத் தாழ 1,00,000K என்ற அளவில் உள்ளது. அவற்றின் சராசரி ஆரத் திசை வேகம் நொடிக்குப் பல நூறு கிலோ மீட்டர் ஆகும். ஆரத் திசையிலிருந்து, அவை மிகச் சிறிய ஒழுங்கற்ற அளவுகளிலேயே பிறழ்கின்றன. அவற்றின் குறுக்குத் திசை வேகம் நொடிக்கு ஏறக் குறைய 10 கி.மீட்டருக்கும் குறைவாகவே உள்ளது. பிளாஸ்மாவில் சராசரி மோதலிடைத் தொலைவுகள் மிகப் பெரும் அளவில் உள்ளமையால், அதில் மோதல்களே இல்லை எனக் கொள்ளலாம். சூரியக் காற்று ஒரு சீரான தன்மையில்லாமல், குழப்பங்கள் நிறைந்துள்ளது. அதன் நிகழ்வு மாறிலிகள் (parameters), பல விதமான நீள மற்றும் கால அளவுகளில் பெரும் ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளன. சூரிய ஒளி மண்டலத்தின் ஏறத் தாழ 10°K அளவிலான மாபெரும் வெப்ப நிலையே இந்த ஒலியை விஞ்சும் பாய்வின் ஆற்றலுக்குக் காரணம். சூரியனின் நிறையீர்ப்புப் புலம், சூரிய மண்டலத்தை அசையாச் சம நிலையில் பிடித்து வைத்துக் கொள்ளும் வலிவற்றது. அதற்கேற்ற, பாய்மச் சமன்பாடுகளிலிருந்து ஒளி மகுடம், ஒலியை விஞ்சும் வேகத்தில் விரிவடைந்து, சூரியக் காற்றை உருவாக்குவதாகத் தெரிய வருகிறது என 1957 ஆம் ஆண்டில் பார்க்கர் என்பார் குறிப்பிட்டார். அந்தச் சமன்பாடுகள் நேர் போக்குத் தன்மையற்றவை. கணிப்பொறிகள் மூலமாகவே இயல் தன்மையுள்ள தீர்வுகளைப் பெற முடியும். சூரியனுக்கு அருகில் பாய்வு, ஒலியை விடக் குறைந்த திசை வேகத்துடன் புறப்பட்டுச் சூரியனின் ஆரத்தைப் போல 10–20 மடங்கான தொலைவுகளில், ஒலியின் திசை வேகத்தை விஞ்சி, அதன் பிறகு, நொடிக்கு 350–450 கி.மீ. வரையான சீரான திசை வேகத்துடன் பெரும் தொலைவுகளைக் கடக்கிறது. 50–100 வானியல் அலகு தொலைவில் (ஒரு வானியல் அலகு = 1,495×108 கி.மீ ) இந்தப் பாய்வின் திசை வேகம், விண் மீனிடை ஊடகத்தின் தடை காரணமாகக் குறைய வேண்டும். இந்த நிலை மாற்றம் நிகழ்கிற விதத்தைப் பற்றிப் பல வகையான ஊகங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தொலைலில் உள்ள ஒரு நிலையான அதிர்ச்சி அலை காரணமாகச் சூரியக் காற்றின் திசை வேகம் ஒலியின் திசை வேகத்தைவிடக் குறைகிறது என்றும், அதன் காரணமாகச் சூரியப் பிளாஸ்மாவின் வெப்ப நிலை உயர்கிறது என்றும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சில கருத்துகளுண்டு. இந்த இடத்தைத் தாண்டியதும், சூரியப் பிளாஸ்மா மெல்ல, மெல்ல விண் மீனிடை வளிமத்துடன் கலந்து விடுகிறது. சூரியனிலிருந்து வெளி நோக்கிப் பாயும் வளிமம், கூடவே சூரியனின் காந்த விசைக் கோடுகளையும் இழுத்துச் செல்கிறது. காந்தப் புலக் கோடுகள் பாய்மத்திற்குள் உறைந்து விடுவதற்கான நிபந்தனைகளைப் பிளாஸ்மாப் பாய்வு நிறைவு செய்கிறது. பாய்வின் இயக்க ஆற்றல் அடர்த்தியான ½pυ² காந்தப் புல ஆற்றல் அடர்த்தியான B²/8π ஐவிட மிகுதியாக உள்ளமையால், காந்தப் புலத் தகைவு விசைகள் பாய்வை ஓரளவு பாதிப்பதில்லை. காந்தப் புலக் கோடுகள் சூரியனின் சுழற்சி காரணமாகச் சுருள் வடிவமுள்ளவையாக அமைகின்றன. புவிக்கு அருகில், சூரியக் காந்தப் புலம் ஏறத் தாழ, 5×10-6 காஸ் வலிவுள்ளதாகவும், ஆரத் திசைக்கு ஏறத் தாழ 45°இல் சாய்ந்திருப்பதாகவும் காணப் படும். ஒரு குறிப்பிட்ட புள்ளியில், புலத் திசை பல நாளுக்கு மாறாமல், சூரியனிலிருந்து விலகிச் செல்வதாகவோ, சூரியனை நோக்கிச் செல்வதாகவோ அமைந்துள்ளது. ஆனால், அதன் திசையில் மாற்றம் ஏற்படும் போது, அது மிகு விரைவாக நிகழ்கிறது. சூரியனின் காந்தப் புல அமைப்பு, சூரியன் கூடவே சுழலுகிறது. சூரிய காற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். மிகப் பெரும் கால அளவிலும், தொலைவிலும் சூரியக் காற்றின் முழுத் தன்மை காலத்துடன் மாறுவதாகக் கொள்ளலாம். சூரியனின் சுழற்சியைச் சார்ந்த 11 ஆண்டு ஏற்ற இறக்கங்களை இவ்வகையில் சேர்க்கலாம். சற்றுச் சிறிய ஒரு கால அளவில் சூரியக் காற்றில் வேகமான ஓட்டமும், மெதுவான ஓட்டமும் காணப்படும். அவை சூரியனின் சுழற்சி காரணமாக ஒன்றோடொன்று இடை வினை செய்யும். இரண்டாம் வகையில் சிறு நேரக் குழப்பங்கள் அடங்கும். அவை சூரியனில் தோன்றிச் சூரியக் காற்றில் பரவுகின்றன. சூரியக் கொழுந்தால் (solar flare) உண்டாக்கப்படும் வெடிப்பு அலை இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். அது சூரியனிலிருந்து வெளிப்பட்டுச் சூரிய மண்டலம் முழுதும் பல வகையான சிறு நேர விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இத்தகைய சூரியக் கொழுந்து அதிர்ச்சியால் பரப்பப் படும் ஆற்றலின் அளவு ஏறத் தாழ 1032 எர்க் வரை இருக்கும். மூன்றாம் வகை ஏற்ற இறக்கங்கள் குறுகிய கால அளவுகளிலும், சிறு தொலைவுகளிலும் நிகழ்கின்றன. அவை சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்து விடும். இவற்றைச் சூரியக் காற்றில் உள்ள அலைகளோடும், குழப்பங்களோடும் தொடர்புடையவையாகக் கருதலாம். ஆனால், சூரியக் காற்றில் உள்ள அலை வகைகளைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. சூரியனிலிருந்து வெளிப்படும் ஆல்ஃப் வென் அலைகள் இந்த இறக்கங்களுக்குப் பெரும் பங்களிப்புச் செய்கின்றன எனத் தெரிய வந்துள்ளது. சூரியக் காற்றின் உதவியால், பல சிக்கலான விண் மீன் இயற்பியல் நிகழ்வுகளை விண்வெளி ஆய்வுக் கோள்களின் மூலம் ஆய்வு செய்ய முடிகிறது. சூரியனில் ஏற்படும் பல விளைவுகள் சூரியக் காற்றின் மூலமாகவே புவியை வந்தடைகின்றன. சூரியக் கொழுந்துகளின் அதிர்ச்சி அலைகள் புவிக்கு வந்து காந்தப் புயல்கள், சிற்றலை ஒலி பரப்பு, மங்கல் துருவ ஒளிகள் ஆகியவற்றுக்குக் காரணமாகின்றன. சூரியனின் காந்தப் புலப் பகுதிகள் புவியின் தட்ப வெப்ப நிலைகளைப் பாதிப்பதும் தெரிய வந்துள்ளது. சூரியக் காற்றுக்கும், சூரிய மண்டலத்திலுள்ள பிற பொருள்களுக்கும் இடையில் நிகழ்கிற வினைகளைப் பற்றிய ஆய்வுகள், கோள் இயற்பியலில் ஒரு புதிய துறையாக விளங்குகின்றன. —கே. என். ராமச்சந்திரன் நூலோதி. M.P. Agarwal, Solar Energy, S.Chand and Co., New Delhi, 1983.