அத்துவிதம்
attuvitam
அத்துவிதம் என்ற சொல் அ+துவைதம் எனப் பிரித்து நின்று, இரண்டற்றது (துவைதம்=இரண்டு; அ=அற்றது) எனப் பொருள்படும்.
அத்துவிதம் என்ற சொல் அ+துவைதம் எனப் பிரித்து நின்று, இரண்டற்றது (துவைதம்=இரண்டு; அ=அற்றது) எனப் பொருள்படும். பொருள் ஒன்றே; இரண்டற்றதாக நின்ற ஒன்றே என்பது, அத்துவிதம் என்ற சொல்லுக்குச் சற்று விரிவான விளக்கம்.
அத்துவிதம் என்ற சொல்லுடன் முன்னாகவோ பின்னாகவோ ஒட்டுச் சொற்களைச் சேர்த்து, விசிட்டாத்துவிதம், துவைதாத்துவிதம், சிவாத்துவிதம், சுத்தாத்துவிதம் என நிறுத்தி, வேதாந்த இயலான மெய்ப்பொருட் கொள்கையை விளக்குவது மரபு. ஆசார்ய சங்கரர் தாம் விளக்கப் புகுந்த வேதாந்த இயலான மெய்ப் பொருட் கொள்கையைக் ‘கேவலாத்துவிதம்’ என்ற பெயரின் அடிப்படையிலேயே விளக்கினார் எனச் சில அறிஞர்கள் எழுதியிருந்தாலும், ஆசார்ய சங்கரரின் வேதாந்த இயலான மெய்ப்பொருள் கொள்கையானது ‘அத்துவிதம்’ எனத் தனித்து நிறுத்திய பெயரிலேயே இன்றும் வழங்கி வருவதைப் பெருவழக்காகக் காண இயலும்.
சொற்பொருளடிப்படையில், வேதாந்தம் என்பது வேதத்தின் இறுதிப் பகுதியாகிய உபநிடதத்தைக் குறிக்கும். வேதாந்தம் எனப்பெறும் உபநிடதங்களை மூல நூல்களாகக் கொண்டு அமைக்கப்பெற்ற மெய்ப் பொருளியற் கொள்கைகள் – தத்துவக் கொள்கைகள் அனைத்தும் ‘வேதாந்தம்’ என்ற பொதுப் பெயராலேயே வழங்கப் பெற்றன. வேதாந்த இயலான மெய்ப் பொருட் கொள்கைகள் அனைத்தும் ‘அத்துவிதம்’ என்ற சொல்லுடன் இணைத்தே விளக்கம் செய்யப்பெறுகின்றன.
வேதாந்த இயலான அத்துவித மெய்ப்பொருளியற் கொள்கையானது ஆசார்ய சங்கரரின் காலத்துக்கு முன்னமேயே நின்று நிலவிய வரலாற்றுப் பெருமையுடையதாயினும், ஆசார்ய சங்கரருடன் இணைத்து நிறுத்தியே வழங்கப்பெறும் மரபினைப் பெற்றிருக்கிறது. ஆசார்ய சங்கரரால் அக்கொள்கை இயற்றப் பெற்றதன்று. ஆயினும், அவர் அத்துவித வேதாந்தக் கொள்கையைத் தம் நூல்களில் தெளிவாக விளக்கியுள்ளார். ஆசார்ய சங்கரருக்கு முன்னே, உபநிடதங்களிலும், யாக்ஞவல்கியர் உரையாடல்களிலும் அத்துவிதக் கொள்கை விளக்கம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆசார்ய சங்கரருக்குக் காலத்தால் முற்பட்ட கௌடபாதர் அத்துவிதக் கொள்கையை விளக்கியிருப்பதை வரலாற்றால் உணரலாம்.
வேதாந்தக் கொள்கை என்றாலே உபநிடதங்களை மூலமாகக் கொண்டு வெளிப்பட்ட கொள்கை என்பதே பொது விளக்கம். ஆயினும், வேதாந்த இயலான மெய்ப் பொருட் கொள்கைகள் மூன்று நூல்களை முதன்மை மூலங்களாகக் கொள்கின்றன. அவை உபநிடதம், பிரமசூத்திரம், பகவத்கீதை (பிரத்தானத்ரயம்) என்பன. அம்மரபுப்படி, அத்துவித வேதாந்தக் கொள்கையும் மூன்று முதன்மை நூல்களை (பிரத்தானத்ரயத்தை) மூலமாக ஏற்கிறது.
ஆசார்ய சங்கரருக்கு முற்பட்டவரான கௌடபாதர் அத்துவிதக் கொள்கையை நிறுவிக் காட்டும் வகையில் மாண்டூக்யம் என்ற உபநிடதத்துக்கு ஒரு சிற்றுரை எழுதினார். அது மாண்டூக்ய காரிகை எனப் பெறும். அவருக்குப் பின்னர் வந்த ஆசார்ய சங்கரர் அத்துவித வேதாந்தக் கொள்கையைச் சிறப்பாக நிலைநிறுத்தும் பணியினை மேற்கொண்டு, பிரத்தானத்ரயம் எனப்பெறும் மூன்று மூல நூல்களுக்கும் விரிவுரை எழுதினார். பிரமசூத்திரம் பகவத்கீதை, சில முக்கிய உபநிடதங்கள் ஆகியவற்றிற்கு விரிவுரை இயற்றினார். பிரத்தானத்ரயத்துக்கு விரிவுரை எழுதுவதன் மூலம் அத்துவித வேதாந்தக் கொள்கையை நிலைநாட்டியதோடன்றி, ‘விவேக சூடாமணி’ ‘உபதேச லகரி’ என்ற தனி நூல்களையும் இயற்றி, அத்- துவித மெய்ப்பொருளியற் கொள்கையை வரையறுத்து நிறுவினார் ஆசார்ய சங்கரர்.
பிருகதாரண்யம், தைத்திரீயம் என்ற உபநிடதங்களுக்கு ஆசார்ய சங்கரரால் இயற்றப்பெற்ற விரிவுரைகளுக்கு மேலும் விளக்கம் அமையும் வகையில், அவருடைய மாணாக்கர் சுரேசுவரர் வார்த்திகம் எனப்பெறும் பொழிப்புரை எழுதியுள்ளார். அவை தவிர, சுரேசுவரர் நைசுகர்மியசித்தி என்ற நூலையும் இயற்றியுள்ளார்.
ஆசார்ய சங்கரரின் இன்னொரு மாணாக்கராகிய பத்மபாதர் ஆசார்ய சங்கரரின் பிரமசூத்திர விரிவுரைக்கு ஒரு விளக்கவுரை இயற்றினார், பத்மபாதரின் விளக்கவுரையில், முதலில் உள்ள ஐந்து பகுதிகள் மட்டுமே வெளிவந்தன. அதனால், அதற்குப் பஞ்சபாதிகை என்பது பெயர்.
பத்மபாதரின் பஞ்சபாதிகைக்கு, பிரகாசாத்மன் என்பவர் பஞ்சபாதிகா விவரணம் என்ற பெயரில் ஒரு பேருரை எழுதினார். அவ்வாறே, ‘வாசசுபதி மிசுரா’ என்பவர் ஆசார்ய சங்கரரின் பிரமசூத்திர விரிவுரைக்கு விளக்கம் அமைக்கும் வகையில், பாமதி என்ற பெயரில் ஒரு பேருரை அமைத்தார். மேலே குறிப்பிடப்பெற்ற இரண்டு விளக்கவுரைகளின் அடிப்படையில், விவரண மரபு என்றும் பாமதீமரபு என்றும் இருவகை மரபுகள் அத்துவித வேதாந்தக் கொள்கையில் இடம்பெறலாயின.
அத்துவித மெய்ப்பொருளியற் கொள்கையில், விவரண மரபுக்குரிய கருத்துகளைத் திரட்டித் தொகுத்து, ‘விவரணப் பிரமேய சங்கிரகம்’ என்ற நூலைப் பாரதீ தீர்த்த–வித்யாரண்யர் இயற்றினார். அதைத்தவிர, பஞ்சதசீ என்ற நூலையும் அவர் இயற்றியுள்ளார்.
விவரணக்கொள்கையின் வளர்ச்சியைப் போலவே, பாமதீக் கொள்கையின் விளக்கமாக, கல்பதரு என்ற நூலை அமலானந்தர் இயற்றினார். இத்நூலுக்கு உரையாக அப்பைய தீட்சிதர் கல்பதரு பரிமளம் என்ற நூலை இயற்றினார். மேலும், அவர் அத்துவிதக் கொள்கையில் மரபு நெறியில் வந்த வேறுபாடுகளை எடுத்துக்காட்டும் வகையில் ‘சித்தாந்த லேச சங்கிரகம்’ என்ற நூலை இயற்றினார்.
மூன்று முதன்மை மூல நூல்களுக்கும் பேருரைகளை இயற்றி, அவற்றின் மூலம் நிறுவப்பெற்ற வேதாந்த இயலான மெய்ப்பொருட் கொள்கைகளாக இன்று பெருவழக்கில் இருப்பவை மூன்று கொள்கைகளே. அவை ஆசார்ய சங்கரரின் அத்துவிதம், இராமானுசரின் விசிட்டாத்துவிதம், மத்வாசார்யாரின் துவைதாத்துவிதம் என்பனவே. அவ்வாறு மூன்று நூல்களுக்கும் விரிவுரை எழுதாமல், பிரமசூத்திரம் என்ற ஒரு நூலுக்கு மட்டுமே பேருரை எழுதுவதன் மூலம் நிலைநாட்டப் பெற்ற கொள்கைகளும் வேதாந்த இயலான மெய்ப்பொருட் கொள்கைகளே. அவ்வகையில் பாசுகரரின் பேதா பேத வாதம், நிம்பார்க்கரின் சுத்தாத்துவிதம், சீகண்டரின் சிவாத்துவிதம், சீபதி பண்டிதாசார்யாரின் சத்தி விசிட்டாத்துவிதம் என்பவையும் பிறவும் அடங்கும். வரலாற்று மரபிலான வளர்ச்சி நிலையில், அத்துவிதம் என்றாலே சங்கர அத்துவிதம் எனவும் பெருவழக்கினவாய் இன்றும் அறியப்பெறும் உண்மைகளாம்.
மேலே குறிப்பிடப் பெற்ற உரைநூல்கள், தனி நூல்கள் என்பவற்றோடு ஒப்பநின்று, அத்துவிதக் கொள்கையை நிலைநிறுத்தும் ஏற்றம் உடைய சித்தி நூல்கள் அத்துவிதக் கொள்கையை அரண்களாக நின்று காப்பவையாம். அத்துவித சித்தி நூல்கள் என்ற பொதுப் பெயரில் தனி நூல்களாகவும் முதல் நூல்களாகவும் நின்று, அத்துவிதக் கொள்கையை விளக்கும் பெருமையுடையவை அவை. அவை நான்கு. மண்டன மிசிரர் என்பவரால் இயற்றப் பெற்ற பிரமசித்தி, சுரேசுவரரால் இயற்றப் பெற்ற நைசுகர்மிய சித்தி, விமுக்தாத்துமன் என்பவரால் இயற்றப் பெற்ற இட்ட சித்தி, மதுசூதன சரசுவதி என்பவரால் இயற்றப் பெற்ற அத்துவித சித்தி என்பவையே அவை, பிரம சித்தி என்ற நூலை இயற்றிய மண்டனமிசிரர், ஆசார்ய சங்கரருக்குச் சமகாலத்தவராயினும், மூத்தவர் எனக் கொள்ள வேண்டியவராகிறார். கீழே கொடுக்கப் பெற்றிருக்கும் நூல்கள், சங்கர அத்துவிதக் கொள்கையை விளக்கும் வகையில் சமசுகிருதத்திலும், இந்தியிலும், தமிழிலும் உள்ளவை.
‘சர்வஞ்ஞாத்ம முனி’வர் இயற்றிய சமசேபசாரீரகம், சிரீவுர்சர் இயற்றிய கண்டன கண்டன காத்யம், சித்சுகர் இயற்றிய தத்வப் பிரதீபிகை, மதுசூதன சரசுவதி இயற்றிய அத்துவிதசித்தி, தர்மராசர் இயற்றிய வேதாந்த பரிபாடை, சதானந்தர் இயற்றிய வேதாந்த சாரம் என்பவை சமசுகிருத நூல்களாம்.
நிச்சலதாசர் இயற்றிய விசார சாகரம், விருத்திப் பிரபாகரம் என்பவை இந்திமொழி நூல்கள். இவ்விரண்டு நூல்களையும் குப்புசாமி ராசு என்பார் தமிழாக்கம் - செய்துள்ளார். அத்துவித வேதாந்தக் கொள்கையைத் தமிழ் மக்கள் விரிவாக அறியவேண்டும் என்ற வகையில் பல நூல்களைத் தமிழில் இயற்றியும் மொழி பெயர்த்தும் பணியாற்றிய பெருமை தத்துவராயருக்கே உரியது. அவருக்கு அடுத்தநிலையில் பணிபுரிந்தவர் சிவப்பிரகாச சுவாமிகள்.
தாண்டவராய சுவாமிகள் இயற்றிய கைவல்ய நவநீதம், தத்துவராயரால் தமிழில் பெயர்க்கப் பெற்ற சூதசங்கிதையில் உள்ள ஈசுரகீதை, சொருபானந்- தரின் சொரூபசாரம், தத்துவராயர் தொகுத்த குறுந்திரட்டு, தத்துவராயரின் அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி (மோகவதைப் பரணியில் உள்ள ஒரு பகுதியே அத்துவிதக் கொள்கையின் உயிர்நாடியென விளங்கும் சசிவன்னபோதம்), மாதை-திருவேங்கடநாதர் இயற்றிய பிரபோத சந்திரோதயம், நடராசர் என்பார் இயற்றிய இரிபு கீதை, தத்துவராயர் தொகுத்த சிவப்பிரகாசப் பெருந்திரட்டு, நிசகுண சிவ யோகிகள் கன்னடத்தில் எழுதிய நூலைத் தமிழில் சிவப்பிரகாசர் பெயர்த்து அளித்த வேதாந்த சூடாமணி என்பவை தமிழ் நூல்கள்.
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் என்ற சூத்திர நூலுக்கு, சென்னை கோ. வடிவேலுச்செட்டியார் அவர்கள் அத்துவித வேதாந்தக் கொள்கை அடிப்படையில் ஓருரை இயற்றியுள்ளார்.
ஏற்புடைய அறிவைப் பெறுவதற்குரிய வழிகள் என்ற வகையில் ஆசார்ய சங்கரரின் அத்துவித வேதாந்தக் கொள்கையானது காட்சியளவை, கருதலளவை, உரையளவை, ஒப்புமை அளவை, இன்மை அளவை, ஒழியளவை என்ற ஆறு அளவைகளை ஏற்கிறது. ஆயினும், காட்சி, கருதல், உரை என்ற மூன்று அளவைகளில் தனக்கே உரிய சில தனி விளக்கங்களை அமைத்துக் கொள்ளும் அத்துவிதக் கொள்கையானது ஒப்புமை, இன்மை, ஒழிபு என்ற மூன்றளவைகளில் ஏனைய தத்துவக் கொள்கையினர் அமைத்துக் காட்டும் விளக்கத்தையே தானும் ஏற்றுக் கொள்கிறது.
கண் என்ற புறப்புலனுக்கும் அதனாற் காணப் பெறும் புறப் பொருளுக்கும் இடையே அமையும் இணைப்பை அடிப்படையாகக் கொண்டு உண்டாகும் ஞானத்தைக் காட்சியளவையாற் பெற்ற ஞானம் என்பது பொது விளக்கம். இதனை அத்துவித வேதாந்தக் கொள்கையானது வேறு வகையாக விளக்குகிறது.
வெளியே உள்ள பொருள், கண் முதலிய புறப் புலன்களைத் தாக்கி, அவைகளைத் தன்வயப்படுத்திய போது, மனம் என்னும் அகக் கருவியானது, வெளிப்பட்டு நின்று, புறத்தே உள்ள பொருளாகவே தன்னை மாற்றிக் கொள்ளுகின்றது. புறப்பொருளின் வடிவமாகவே மனம் உருவம் கொண்டு நிற்கும்போது அதனை ‘அந்தக் கரண விருத்தி’ என விளக்கம் செய்து காட்டுகிறது அத்துவிதக் கொள்கை, அந்தக் கரண விருத்தியானது, ஆத்மாவின் ஞானத்தால் விளக்கமடையும் போது உண்டாகும் அறிவே காட்சியறிவு எனப்பெறும். மனம் என்னும் அந்தக் கரணம் புறப்பொருளின் வடிவமேயாகி நின்று மாற்றங்கொள்ளும். ஆத்ம ஞானம் எப்போதும் மாறாது நிலை பெற்றிருக்கும். தொடர்ந்து நிகழும் அந்தக் கரண விருத்தியின்மேல் ஆத்மஞானம் பட்டு விளக்கமுறுத்தும் அந்நிலையில் ஏற்படுகிற விருத்தி ஞானமே காட்சியறிவு.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன புறக் கருவிகள், மனம் அகக் கருவி, புறக் கருவிகளின் மூலம் வரும் செய்திகளைப் பாகுபடுத்தியும் இணைத்தும் செயற்படும் அகக் கருவியே மனம். அதுவே, புறப் பொருளுக்கு ஏற்ப மாற்றம் பெற்று – விருத்திப்பட்டு நிற்கும், மனத்துக்கு மேல் உள்ளது புத்தி. மனத்தின் ‘செயலாகிய விருத்தியின் அடிப்படையில் அமைந்த விருத்தி ஞானத்தை’ ஏற்றுச் செயற்படுவது புத்தி, மனமும் புத்தியும் அகக் கருவிகளே, அவற்றிற்கும் அப்பாற்பட்டது ஆன்மா. அது தன்னளவில் மாறாத ஞான மயமாக என்றும் விளங்கிக் கொண்டிருப்பது. ஆன்ம ஞானம் எனப்பெறும் ஆன்ம சைதன்யம் வேறு; ஆன்ம சைதன்யம் காரணமாக அமையும் ‘விருத்தி ஞானம்’ வேறு.
அத்துவிதக் கொள்கையின்படி, அறிதல் என்பதில் நான்கு கூறுகள் உள்ளன. அறிபவன், அறியப்பெறும் பொருள், அறியும் வழி, அறிவு என்பன. இந்த நான்கும் ஆத்மா என்ற பொருளின் நான்கு கூறுகள் என்றே அத்துவிதக் கொள்கை விளக்குகிறது.
மனம் என்ற அந்தக் கரண விருத்தியின் மேலெழுந்து விளக்கமடையச் செய்யும் ஆத்மஞானமும் ‘அறிபவன்’ என்ற பெயரைப் பெறுகிறது. அறியப் பெறும் பொருளிலும் ஆத்மஞானம் உள்ளது. மனம் என்ற அந்தக் கரணமானது விருத்திப்படுவதிலும். ஆத்ம சைதன்யம் உண்டு. ஆத்ம சைதன்யத்தின் தொடர்பினால் அமையும் பொருள் விளக்கமும் விருத்தி ஞானம் எனப்பெறும் காட்சியறிவாகும்.
காட்சியளவையை அடுத்து வரும் கருதலளவையானது இரு பொருள்களின் இடை நின்ற, இடையறவுபடாத இணைப்பின் அடிப்படையில் அறிவு விளக்கம் பெறுதற்கு உரிய வழியாக அமைகிறது.
மூன்றாவதாக நின்ற உரையளவையானது இருவகைப்படும். நம்பிக்கைக்கு உரியவனாக நின்ற மனிதனால் எழுத்தாலோ பேச்சாலோ பெறக் கூடிய ஞான விளக்கம் ஒரு வகை. அடுத்தது, மனிதனைக் கடந்தது. வேத உரைகள், சுருதிகள் இரண்டாம் வகையான உரையளவை. பரம்பொருளை வேத உரைகள் எனப்பெறும் சுருதிகளால் அன்றி வேறு எந்த அளவையாலும் அறிய முடியாது, வேத வாக்கியங்களின் மூலமாகவே ஆத்மஞானம்–பிரமஞானம் அடைதல் இயலும். உலகம் முதலியவற்றைக் கடந்ததாக விளங்கும் பிரமப் பொருளின் உண்மையையும், அதைப் பற்றிய செய்திகளையும் சுருதி எனப்பெறும் உரையளவையால் மட்டும் உணரமுடியும் என்பது அத்துவிதக் கொள்கை.
கருமங்களைச் செய்ய வேண்டும் என்பதே வேத வாக்கியங்களின் உட்பொருள். ஒரு தொடரோ அதிலமைந்த சொற்களோ செயலை அடிப்படையாகக் கொண்டே பொருளைத் தெளிய வைக்கின்றன என்பது பீமாம்சகக் கொள்கையினரின் கருத்து. ஆனால், செயலோடு தொடர்பில்லாத ஒன்றைக்கூட, ஒரு தொடரிலிருந்து நாம் பெற முடியும் என்பது அத்துவிதக் கொள்கை, ‘மிகவும் ஒளியுடையது நிலா’ என்ற தொடரில், செயலுடன் ஒரு சிறிதும் தொடர்பில்லாத நிலவின் இயல்பு அறிவுறுத்தப் பெறுவதை நாம் காணலாம்.
மேலே கூறப்பெற்ற ஆறு அளவைகளாலும் ஒருவன் ஏற்புடைய அறிவைப் பெற இயலும் என ஏற்பதே ஆசார்ய சங்கரரின் அத்துவித வேதாந்தக் கொள்கை. ஆனால், நாம் பெற்ற அறிவு ஏற்புடைய மெய்யான அறிவுதானா என அளந்து பார்ப்பதும் அளவையே.
கயிற்றைப் பாம்பெனவும், சிப்பியை வெள்ளியெனவும் அறியும் வழக்கும் காணப்பெறுகிறது. சிப்பியைச் சிப்பியென, கயிற்றைக் கயிறு என அறிவதே உண்மை ஞானம். சிப்பியை வெள்ளி என அறிவது பொய்ம்மை ஞானம். பொய்ம்மை ஞானமே அஞ்ஞானம். ஞானத்தின் தன்மை உண்மை. ஒரு ஞானம் பொய்ம்மை ஞானமாக அமைவதற்குப் புறச் சூழல்கள் காரணமாகிவிடுகின்றன. பொய்ம்மை ஞானம் பற்றிய ஆய்வியல் முறையை, ‘கியாதிவாதம்’ என்ற பெயரால் தத்துவத் துறையானது விளக்கமுற்படும்.
1) கீழே கிடப்பது முத்துச்சிப்பி, அங்கே இல்லாததாகிய–இல்பொருளாகிய – சூனியமாகிய வெள்ளி தோன்றுகிறது. உள்பொருளாகிய சிப்பியில் இல்பொருளாகிய, சூனியப் பொருளாகிய வெள்ளி தோன்றுவதால் ‘அசத்கியாரி’ என்று சூனியவாத பௌத்தம் விளக்குகிறது.
2) வெளியில் இருப்பது சிப்பி. ஆனால், பார்ப்பவனின் அக நிலையில் விஞ்ஞான உருவாக அமைந்திருக்கும் வெள்ளியானது தவறாக வெளிப்பட்டுத் தோன்றி விடுகிறது என்பது விஞ்ஞான பெளத்தக் கொள்கை. இதனை ‘ஆத்மக்யாதி’ என்பர்.
3) ‘இது வெள்ளி’ என்று சொல்லும்போது ‘இது’ என்ற சொல்லால் சுட்டப்பெறும் ஞானமும், வெள்ளி என்ற சொல்லால் குறிக்கப்பெறும் ஞானமும் தத்தம் தனி நிலைகளில் உண்மைகளே. ஆனால், ‘இது’ என்னும் சொல்லால் குறிக்கப்பெறும் பொருளை நேரில் பார்க்கிறோம். வெள்ளி என்பது முன்பு எப்போதோ பார்த்தது. எப்போதோ பார்த்த ஒன்றை இப்போது நினைவிற் கொண்டுவந்து, இது என்ற பொருளோடு தவறாக இணைத்து ‘இது வெள்ளி’ என்று கருதிவிடுகிறோம். இதுவே அக்யாதி எனப்பெறும் அஞ்ஞானம். சாங்கியக் கொள்கையினரும், மீமாம்சகர்களின் ஒரு பிரிவினராகிய பிரபாகரர்களும் இவ்வாறு விளக்குகிறார்கள்.
4) பொய்ம்மை ஞானம் என்பது ஒன்றை மற்றொன்றாக நினைப்பதே, எங்கோ உள்ள வெள்ளியை இங்கு இப்போது இல்லாத வெள்ளியை, இங்கு இப்போது கிடக்கிற சிப்பியின்மேல் ஏற்றிக் காண்கிறோம். சிப்பிக்கும் வெள்ளிக்கும் இடை அமைந்த ஒப்புமை அதற்குக் காரணமாகிறது. இவ்வாறு விளக்கம் செய்து, அதனை ‘அன்யதாக்யாதி’ என்ற பெயரிட்டு விளக்குவது நியாயம் என்ற தத்துவக் கொள்கை. மீமாம்சகர்களின் ஒரு பிரிவினர்களாகிய பாட்டர்களுக்கும் இது உடன்பாடே.
5) உள்ளது சிப்பி, வெள்ளி தோற்றம் பெறுகிறது. பொய்யாகத் தோன்றும் வெள்ளி உள்ளதும் அன்று. இல்லாததும் அன்று, தோன்றுவதால் அதை ‘இல்லாதது’ என்று சொல்ல முடியாது. ‘சிப்பி’ என்ற உண்மை ஞானம் தோன்றியவுடன் வெள்ளி என்ற ஞானம் மறைந்து விடுவதால், அதை உள்ளது என்று கூறவும் முடியாது. இல்லதும் அன்று, உள்ளதும் அன்று என்றால், அப்பொருளின் தன்மை என்ன? அதாவது அப்பொருள் இன்னது என்று சொல்லொணாதது என்பதே. அவ்வகையில் ‘அநிர்வசனக்யாதி’ என்று விளக்குவது அத்துவிதக் கொள்கை. அஞ்ஞானத்தால் – அவித்யையால் தோற்றுவிக்கப் பெற்றது. ஞானத்தால் அழிவை அடைவது என விளக்கம் அமைத்துக் கொள்ளவேண்டும்.
உண்மை என என்றும் உளதாம் பொருள் என நின்ற பொருள் ஒன்றே, அதுவே பிரமம்; அதுவே ஆத்மா. குணம் இல்லை; குறியும் இல்லை; காலத்தால் தாக்கப்பெறாதது உண்மை என, உளது என, ஒன்று என நின்ற பரம முழுப் பொருளை இது இத்தன்மைத்து என்று உடன்பாட்டு முகத்தால் கூறாமல், இது அன்று, இது அன்று என எதிர்மறை முகத்தாலேயே உபநிடத வாக்கியங்கள் விளக்குகின்றன. எதிர்மறை முகத்தால் கூறுதல் என்பதன் அடிப்படையிலேயே ‘நிர்க்குணப்பிரமம்’ என்ற வழக்கு அமைகிறது.
வேத வாக்கியங்களைக் கொண்டும், உபநிடதங்களைக் கொண்டும் வரையறை செய்யப்பெற்றதாகிய அத்துவித வேதாந்தக் கொள்கைக்கு ‘அடிப்படை மூல முதற்கல்’ என நின்று, அத்துவிதக் கொள்கையின் எல்லாப் பிரிவுகளையும் சிக்கல் தீர்த்து இணைத்து விளக்கும் ஆற்றல் வாய்ந்த ஓன்றாக விளங்குவதே அவித்யை என்ற கருத்தமைவு. அவித்யை, மாயை என்ற இரண்டு குறியீடுகளும் ஒரே பொருளுக்கு அமைந்த குறியீடுகளே என்று கொள்ளும் மரபும் இரண்டும் வெவ்வேறே என்று கொள்ளும் மரபும் இருந்து வருகின்றன.
உண்மை எனலின், உளது என நின்ற பரம முழுப் பொருள் ஒன்றே என நிறுவுகிறது, அத்துவித வேதாந்தக் கொள்கை. அது குணமற்றதா குணமுடையதா என வரையறை செய்ய முற்படும் நிலையில் எழும் வேறுபாடு, ஒன்றென நின்ற பிரமத்துக்கும் சிவனுக்கும் இடையே அமைந்த வேறுபாடு, பொருள் ஒன்றாயின், பலவாக நின்ற பொருட்டன்மை நமக்குக் காட்சிப்படுவது ஏன்? புலன் கடந்த பொருள் பற்றிய ஆய்வில் எழுந்த பல்வேறு சிக்கல்களும் ‘அவித்யை’ என்ற ஒன்றால் தீர்வு பெறுகின்றன.
அடுத்துநின்ற அறிவாராய்ச்சி நிலையிலும் அறிபவன், அறியப்பெறும் பொருள், அறிவு என்று பன்முகங்கொண்டு வேறுபட்டு அமைவது ஏன்? மெய்ம்மை ஞானத்துக்கு அப்பால் பொய்ம்மை ஞானம் உண்டாவது ஏன்? இவ்வினாக்கள் மூலமாக எழும் சிக்கல்களுக்கெல்லாம் தீர்திறன் தந்து நிற்பது ‘அவித்யை’ என்ற கருத்தமைவுதான்.
ஞானமே விடுதலைக்குரிய நேர்வழி என அமைக்கும்போதும் ஞானத்தின் அடிப்படையில் அறவாழ்வை அமைக்கும்போதும் எழும் சிக்கல்களுக்கெல்லாம் தீர்திறன் விளைத்து நிற்பது ‘அவித்யை’ என்ற கருத்தமைவு ஒன்றே.
‘பிரமப்பொருள் ஒன்றே; இரண்டற்றது’ என்பதே பிரமம் பற்றிய விளக்கம். “ஏகம் ஏவ அத்விதீயம் பிரமம்” என்ற சுருதி வாக்கியத்துக்கு, பிரமப்பொருள் ஒன்றே; இரண்டற்றது என்ற விளக்கமே ஆசார்ய சங்கரரால் அத்துவித வேதாந்தக் கொள்கை விளக்கமாக அமைக்கப் பெறுகிறது. ‘ஏகம் ஏவ’ என்ற வாக்கியத்தில் நான்கு சொற்கள் உள்ளன; ‘ஏகம் பிரமம்’ என்ற சொற்களே போதுமானவை. அப்படியிருக்க ஏவ, அத்விதீயம் என்ற இரண்டு சொற்களை ஏன் அந்த வாக்கியம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்ற ஐயத்தை எழுப்பிக் கொண்டு, இருமையற்றது, பன்மையற்றது என்ற கருத்துகளை விளக்கவே அவை வந்தன என விளக்கம் தருகிறது அத்துவிதம். ‘மூவகை வேறுபாடுகளைக் கடந்த ஒருமையே ஏகம்’ என்பதை உணர்த்தவே ‘அத்விதீயம்’ என்ற சொல்லாட்சி அமைகிறது.
ஒரே இனத்தைச் சார்ந்த இரண்டு மரங்கள் இருப்பதை நாம் காணலாம். அது தற்சாதி வேறுபாடு; ஒரு மரத்தையும் ஒரு கல்லையும் எடுத்துக் கொண்டால் அவற்றிடையே அமைந்த வேறுபாடு வேற்றுச் சாதி வேறுபாடு ஒரே மரத்தில் பல கிளைகள், பல இலைகள் உள்ளன. இது அகநிலை வேறுபாடு, இம்மூன்று வேறுபாடுகளுள் எந்த ஒரு வேறுபாடும் இல்லாதது என்பதைக் குறிக்கவே ‘அத்விதீயம்’ என்ற வழக்கு அமைகிறது, எனக் கூறப்பெறும் விளக்கம் அத்துவித வேதாந்தக் கொள்கையின் உயிர்மூச்சு எனலாம்.
ஆசார்ய சங்கரர் வகுத்துக் காட்டிய அத்துவித வேதாந்தக் கொள்கையானது, இருவகையான ஆய்வியற்கலைத் திறன்களை அமைத்துக் கொடுத்துப் பிரமப் பொருளை அறிதற்குத் துணை செய்துள்ளது. இல்லாததை ஏற்றிப் பார்த்தல், அவற்றை மறுத்தல் என்பனவே அவ்விரு திற ஆய்வியற் கலைத்திறன், இருவகைக் கலைத் திறன்களாலும் பிரமப் பொருளை அறியமுடியும் என்பதே.
ஒரு பொருளின் இயல்புகளை இரண்டு நிலைகளில் அறியலாம். பிறபொருளோடு இணைத்துக் காணும் நிலையில் அப்பொருளுக்கு அமையும் இயல்புகள் யாவை என அறிதல், இதனைப் புறநிலைச் சார்பிலக்கணம் (தடத்தலக்கணம்) என்பர். சார்த்தி நிறுத்திய நிலையில் அமைந்த இயல்புகளை மறுத்து நீக்கிக் கொண்டே சென்றால், அப்பொருளின் தன்னுண்மை நிலையிலக்கணம் அறியப்பெறும். இங்கேயும் பிரமம் இருமையுடையது என அறியப் பெறுவதன்று; இரு வேறு நிலைகளில் உணரப் பெறுகிறது என்பதே உலகத்தோடும், சீவனோடும் பிரமத்தைச் சார நிறுத்திக் காணுதல். ஒன்றென, உண்மை ஞானமென, உளதென நின்ற பிரம முழுப்பொருளை உலகுக்கு மூலமாக, உலகைத் தாங்கிப் புரப்பதாக, இவ்வாறு சில பண்புகளை — சில செயல்களை ஏற்றிக் காணுதல் இந்த நிலையில் பிரமம் சகுணம் எனவும் ஈசுவரன் எனவும் கொள்ளுதல். ஈசுவரன் உலகத்துக்கு நிமித்த காரணம் என்பது மட்டுமன்று; முதற்காரணமும் அதுவே. பிரமத்திடமிருந்து உலகம் பிறக்கிறது. பிறந்தபின் அதனிடத்தே நிலைக்கிறது. இவ்வாறு பிரமத்தை உலகத்தோடு இணைத்து நிறுத்திச் சில குணங்களையும் செயல்களையும் பிரமத்தின் மேல் ஏற்றிக் காண்கிறோம்.
அத்துவித வேதாந்தக் கொள்கையின் அளவையியற் கூறு ஒன்றை எடுத்துக்காட்டுக்காக இங்கு அறியலாம். கீழே கிடக்கும் பொருள் கயிறுதான். அதைப் பாம்பு எனப் பார்க்கிறான். கயிறு பாம்பாக மாற்றங்கொண்டு விடுகிறதா என்றால் இல்லை. கயிறு இடமாக அமைய, பாம்பு தோற்றம் பெறுகிறது. கயிறு பாம்பைத் தோற்றுவித்ததா? மெய்ம்மை ஞானம் பொய்ம்மை ஞானத்தைத் தோற்றுவிக்காது. கயிறு என்ற ஞானம் வந்தவுடனேயே பாம்பு என்ற ஞானம் அழிந்துவிடுகிறது.
கயிறு எல்லாக் காலத்திலும் எல்லாராலும் பாம்பு என்றே பார்க்கப் பெறுதல் இல்லை. கயிற்றைக் கயிறு எனவே காணும் நிலையும், கயிறு என்ற ஞானத்தைப் பெறும் நிலையும் இல்லாதவை அல்ல. கயிற்றைக் கயிறாகப் பார்த்தல் அதன் தன்னுண்மை நிலை. அதுவே ‘பாரமார்த்திகம்’ எனப்பெறும். எந்த ஒரு பொருளையும் அதனதன் உண்மை நிலையைக் கண்டறிவதே அதன் பரமார்த்த நிலை. கயிற்றைப் பாம்பு எனப் பார்த்த நிலையில், அது அவனுக்கு மட்டுமே அமைந்த தனிக்காட்சி அனுபவம். அவனுக்கு மட்டுமே அமைந்த பாம்பு அனுபவம் பிரதி பாசிகநிலை எனப்பெறும். ஏனையோருக்கும் பொதுமை நிலையில் உள்ள அனுபவமாக இல்லாமல் அவனுக்கு மட்டுமே உரிய தனிநிலை அனுபவத்தைக் கொடுத்த உள்பொருள் என்பதே பிரதிபாசிக நிலை என்பதன் விளக்கம். எல்லாராலும் எக்காலத்தும் பொதுமையாகப் பார்த்து இது இது என அறியத்தகு நிலையில் அமைந்துள்ள பொருள்கள் விவகார நிலைப் பொருள்கள் எனவும் அத்துவித வேதாந்தக் கொள்கை விளக்குகிறது. இதனை ‘மூவகையில் உளதாம் நிலைப் பொருள்’ (சத்தாத்ரய) என்ற நெறியில் அத்துவித வேதாந்தம் விளக்கம் செய்கிறது. இம்மூவகை நிலைகளையும் வேறுபடுத்தி, வரையறையுடன் முறைப்படுத்தி அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஆசார்ய சங்கரரின் அறிவுரை.
கீழே கிடக்கும் கயிற்றைக் கயிறாகவே எல்லாரும் பார்க்கிறார்கள். இது அனைவர்க்கும் பொதுவாகிய நிலை, அதே கயிறு ஒருவனுக்குப் பாம்பு எனத் தோற்றமளிக்கிறது. அது அவனுக்கு மட்டும் அமைந்த தனிநிலைக் காட்சி அனுபவம், சிறிது நேரத்துக்கும் பின்னர், அவனே அப்பொருளைப் பாம்பு அன்று, கயிறு எனக் காண்கிறான். பாம்பு எனக் கயிற்றைப் பார்த்தது பொய்ம்மை ஞானம் என அறிகிறான். கயிறு ஞானம் வந்ததும் பாம்பு ஞானம் பொய் என்பது அவனால் அனுபவநிலையில் அறியப்பெற்ற ஒன்று. இதற்கு அடுத்த நிலையை இங்கே சிந்தித்தறிய வேண்டும்.
பிரமம் ஒன்றே உண்மை என உளதாய் நின்ற பொருள். பிரமம் என்ற பொருளே கிடக்க, அது கயிறாக, உலகமாக எல்லாராலும் பார்க்கப் பெறுகிறது. கயிற்றைப் பாம்பு என்று பார்த்த ஒருவன் தனிநிலை அனுபவம் போன்றில்லாமல், பிரமஞானம் பெற்றவர்களைத் தவிர ஏனைய எல்லாராலும் பிரமம் உலகமாக, கயிறு, கட்டில் போன்ற பொருள்களாகப் பார்த்தறியப் பெறுகிறது. இதனையே ‘வியவகார சத்’ எனச் சுட்டி விளக்குகிறது அத்துவித வேதாந்தக் கொள்கை. பிரமத்தை உலகமாகப் பார்க்கும் நிலை நீங்கி, பிரமத்தைப் பிரமமாகவே காணும் நிலை அமைந்துவிட்டால், உலகம் என்ற ஞானம் உண்மை ஞானமா பொய்ம்மை ஞானமா என்ற வினா எழும், பிரமஞானம் பெற்ற நிலையில், இல்லாது அழிந்து போன உலகம் என்ற ஞானத்தைப் பொய்ம்மை ஞானம் என்று சொல்லும் நிலையில், ஆசார்ய சங்கரர் ‘அத்துவிதம்’ என்ற வேதாந்தக் கொள்கையை மூன்று தொடர்களில் விளக்கி அமைத்து விடுகிறார். “பிரமம் இரண்டற்ற மூலப் பொருள்; பலவாகக் காணப்பெறும் உலகம் பொய்த்தோற்றம்; சீவன் பிரமத்தை விடவேறன்று” என்பதே அவ்விளக்கம்.
கயிற்றை இடமாகக் கொண்டு பல்வேறு பொய்த் தோற்றப் பொருள்கள் தோன்றுவதற்குக் காரணம் மாயை அல்லது அவித்யை என்பர். ஒரு பொருளின் உண்மைத் தன்மையை மறைப்பதும், இல்லாத தன்மையை ஏற்றி நிறுத்துவதும் ஆகிய இரண்டு செயல்களைச் செய்யும் ஆற்றல் உடையது மாயை அல்லது அவித்யை. உலகைப் பற்றி நின்று செயற்படுத்துவதை மாயை என்றும், ஆத்மா அல்லது சீவனைப் பற்றி நின்று செயற்படுத்துவதை அவித்யை என்றும், வேறு பிரித்து எடுத்துக்காட்டும் மரபுமுறையும் உண்டு.
பிரமப் பொருளை ஆதாரமாகக் கொண்டு உலகத் தோற்றத்தை அமைக்கும் ‘மாயை’ என்பது எதிர்மறை நிலையில் உணரப் பெறுவது அன்று. ஞானத்தின் இல்லாமையை அஞ்ஞானம் என உணர்தல் போலன்றி, பொய்ம்மை அறிவு என்றாற்போல உடன்பாட்டு முறையில் அறியத்தகும் நிலையுடையதே மாயை. அதனை ‘மித்யா ஞானம்’ – ‘பொய்ஞானம்’ என விளக்குவர். காலம் முதலியவைகளையுங் கடந்தது ஆதலின், காலத்தைத் தன்னிடத்திருத்தே தோற்றுவிப்பது ஆதலின் மாயையை அநாதி எனக் கொள்ளுகிறது அத்துவிதம். அநாதி என்பதனால் அது நித்தியம் என்பதாக ஆகாது. நித்தியப் பொருள் பிரமம் ஒன்றே. மாயை சத்தும் அன்று; அசத்தும் அன்று. ஆதலின் அநிர்வசனீயம் என அதனைக் குறிப்பிடுவது அத்துவித வேதாந்த மரபு.
சீவன் எனவும் ஆத்மா எனவும் வழங்கப் பெறும் தனிநிலை உயிரானது பொய்த்தோற்றமுடையதன்று. பிரமப் பொருளின் தன்னுண்மை நிலையும் ஆத்மாவின் தன்னுண்மை நிலையும் ஒன்றே. அதனாலேயே, ஆசார்ய சங்கரரர் ‘சீவன் பிரமத்தை விடவேறன்று’ என்று அத்துவிதக் கொள்கை விளக்கத் தொடரிலேயே அமைத்துக் காட்டியுள்ளார். அவித்யையின் காரணத்தால் சீவன் தன்னுண்மை நிலையை மறந்து, தான் வேறு, பிரமம் வேறு என்று கருதுகிறது. தான் அல்லாததைத் தான் எனப் பாவித்தும், மனம், இந்திரியம் முதலியவற்றின் இயல்புகளைத் தன்னுடைய இயல்புகள் எனப் பாவித்தும் மயங்குகிறது. ஒன்றை மற்றொன்றின் மேல் ஏற்றிக் காண்பதை ‘அத்தியா- சம்’ என்று கூறுவது மரபு. அவ்வகையில் சீவன், தான் துன்புறுவதாகவும் இன்புறுவதாகவும் மயங்குகிறது.
பிரமம், சீவன் என்ற இரண்டையும் உவமைகளைக் கொண்டு விளக்க முற்படும் நிலையில் விவரண மரபும் பாமதி மரபும் வெவ்வேறு எடுத்துக்காட்டுகளையும் விளக்கங்களையும் அமைக்கின்றன. ஒருவன் உருவம் கண்ணாடியில் தோற்றும்போது பிம்பம் பிரதிபிம்பம் என அமையும் நிலையில் பிரமமும் சீவனும் அமைகின்றன. இது விவரண மரபு தரும் விளக்கம், பாமதி மரபு இவ்விடத்தில் அவச்சேதவாதத்தை அமைக்கிறது. குடத்தின் உள்ளே இருக்கும் ஆகாயம் குடாகாயம் எனப் பெயர் பெறுகிறது. குடத்துக்கு வெளியே உள்ள ஆகாயம் மகாகாயம் என்ற பெயரைப் பெறுகிறது. இரண்டு நிலைகளிலும் ஆகாயம் வேறுபாடற்றது. குடம் என்ற ஒருவகைக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்ற ஒன்றுதான் வேறுபாடு, அவ்வாறே சீவனும் பிரமமும் ஒன்றே. உடம்பு முதலிய கட்டுப்பாடுகளுக்குள் இருப்பதால் சீவன் என்ற பெயரை ஏற்று நிற்கிறது. எடுத்துக்காட்டுகள் மாறுபட்டாலும், ‘சீவன் பிரமத்திலிருந்து வேறுபட்டதன்று’ என்பதே அத்துவித வேதாந்தத்தின் குறிக்கோட் கொள்கை.
பிரமத்துக்கும் சீவனுக்கும் வேற்றுமை இல்லை என்பதை விளக்கவே மகாவாக்கியங்கள் எழுந்தன என்று கூறி அவற்றிற்கு விளக்கம் அமைக்கிறது அத்துவிதம். மகாயாக்கியங்களுக்குப் பொருள் காணும் போது வாக்கியப் பொருள் இலட்சியப் பொருள், அகண்டார்த்தம் என்ற மூவகைப் பொருள்கோள் நிலைகளை எடுத்துக் கூறி, அகண்டார்த்தத்தை உள்ளீடாகக் கொண்டு வெளிப்பட்டவைகளே மகாவாக்கியங்கள் என்று குறிப்பிடுகிறது அத்துவித வேதாந்தம்.
பிரமமும் சீவனும் ஒன்றே என்ற கொள்கை வலிவு பெற்றால், சீவன் பிரமத்தைச் சென்று அடைவதே முத்தி என்ற பேச்சுக்கு இடமேயில்லை. சீவன் தன்னுண்மை நிலையையும் பிரமத்தின் உண்மை நிலையும் ஒன்றே என அறிந்து, அறிந்த அந்நிலையிலேயே நிற்கப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதே தேவை. இதை அடையும் வகையில் ஆசார்ய சங்கரர் நான்கு பயிற்சிப் படிகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.
1. நித்திய அநித்தியப் பொருளறிவு - அழியாதது ஆத்மா; ஏனையவை அழிவன என அறிவும் அறிவு.
2. இவ்வுலகம் பரவுலகம் என்ற இரண்டிலும் உள்ள சுகத்தை விரும்பாதிருத்தல்.
3. சமம் முதலிய ஆறு குணங்களைச் செல்வமாகக் கொள்வது. சமம்–மன அடக்கம். தமம்–இந்திரியங்களை அவ்வவற்றிற்குரிய துய்ப்பு நிலையிலிருந்து தம்மிடத்தில் திரும்புமாறு செய்தல். உபரதி – இந்திரியங்களை மீளவும் வெளியிற் செல்லவிடாது காத்தல். திதிட்டை – மாறுபட்ட அனுபவங்களைப் பொறுமையுடன் ஏற்றல். சமாதானம் – மனத்தை ஒரு நிலையில் இருத்துதல், சிரத்தை – வேதாந்த விளக்கங்களில் ஆர்வம் கொள்ளுதல்.
4. முமுட்சுத்வம்–மோட்சத்தைப் பெற வேண்டும் என்ற இச்சை. மேலே குறிப்பிடப்பெற்ற நான்கு படிகளையும் சாதித்துக் கடந்த ஒருவன் வேதாந்தக் கொள்கை விளக்கங்களைக் கேட்கவும் ஆராயவும் ஆகிய தகுதிகளைப் பெற்றவனாகிறான். இந்நிலையில் அவனுக்கு ஞானமார்க்கப் பகுதிகளாக மூன்று நிலைகள் அமைத்துக் கொடுக்கப் பெறுகின்றன.
(1) சிரவணம்–வேதாந்த வாக்கியங்களின் குறிக்கோளியலான பொருளைக் குருமுகமாகக் கேட்டல்.
(2) மனனம் – கேட்டவற்றைச் சிந்தித்தல்.
(3) நிதித்தியாசனம் – சிந்தித்துத் தெளிந்ததை இடைவிடாது தியானித்தல்.
இங்கேயும் விவரண மரபு சிரவணத்தை வற்புறுத்துகிறது. பாமதி மரபு தியானம் அல்லது பிரசங்கியானம் என்பதை வற்புறத்துகிறது. இரண்டுமே ஞானம் பெறுவதற்குரிய சாதனைப் படிகள். ஞானமே மோட்ச சாதனம் என்பதில் இருமரபுக்கும் கருத்து வேற்றுமை இல்லை.
ஆசார்ய சங்கரர் வகுத்தமைத்த அத்துவித வேதாந்தக் கொள்கையானது எடுத்த இப்பிறப்பிலேயே முத்தியைப் பெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. மோட்சம் என்பது சீவனால் சென்று அடையக்கூடிய ஒன்றன்று. சீவன் தற்சொரூப நிலையில் நிற்றல் என்பதே மோட்சம். அதை வேறு தேசத்திலோ வேறு காலத்திலோ அடைய வேண்டியதில்லை. தற்சொரூபத்தை அறிய முடியாமல் சீவனை மறைத்து நிற்கும் அஞ்ஞானத்தை அழிவு பெறச் செய்த நிலையே மோட்சம், பிரமமும் சீவனும் அபேதம் என்ற நிலையில் உண்டாகும் அத்துவித அனுபவம் என்பதே நாம் பெறும் பேறு.
சீவன் முத்தர்கள் அத்துவித அனுபவத்தில் நம் கண் முன்னால் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிற முத்தர்கள். அவர்கள் உடம்புடன் கூடியிருப்பவர்கள் போலக் காணப் பெற்றாலும் அவர்களுக்கு உடம்பு இல்லை. ஏனைய சீவர்களையும் முத்தர்களாக ஆக்குவதற்காகவே அவர்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
“ஞானமே உருவாயும், ஆகாயத்தைப் போல மேலானதாயும், எப்பொழுதும் ஒரே ஒளியாயும், பிறப்பற்றும், ஒன்றாயும், அழிவற்றும், மலமற்றும், வியாபகமாயும், இரண்டற்றதாயும் எது உளதோ அதுவே நான் – எப்பொழுதும் முக்தன் நான்” என்று அத்துவித அனுபவப் பேற்றினை ஆசார்ய சங்கரர் தம்முடைய உபதேச லகரியில் அமைத்துக் காட்டியுள்ளார்.வை.இ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 320)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r8ufg3mm/
தமிழ்“அத்துவிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r8ufg3mm/APA
Oliyon Research. (2026). அத்துவிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r8ufg3mm/MLA
"அத்துவிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r8ufg3mm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment