இது சாதனங்களின் மூலப்பொருள்களில் இயற்பியல் சார்ந்த தொடர்புகளை ஏற்படுத்துவதும், எந்திர ஆற்றலைப் பல வகை இணைப்புகளால் தருவதும் ஆகும். சிப்பங்கட்டலின் (packaging) முதற்படி, திட்ட அமைப்புச் செயல் முறையாகும். அதாவது, உறுப்புகள் (components) அல்லது சாதனங்களின் இயக்கக் கூறு சார்ந்த விளக்கவுரையை உருவாக்குவதாகும். இதன் மூலம் சாதனங்கள் சிப்பங்கட்டப்படுவதுடன், தேவைக்கேற்பவும் பயன்படும். சிப்பங்கட்டுதலின் அளவு, வடிவம், எடை ஆகியவை ஓர் அமைப்பின் குறிப்பீட்டைப் (specification) பொறுத்து அமைகின்றன. உறுப்புகளை ஒழுங்குபடுத்துவதில், உறுப்புகளுக்கிடையே தொடர்பின்மை (isolation), குறுக்கு மின் சுற்று வழி (short circuit) ஏற்படாமல் தடுத்தல், வெளியீடு (venting) இவையனைத்தும் சுற்றுப்புற வெப்பம், ஈரப்பதம், அழுத்தம், அதிர்வு, இரைச்சல் ஆகியவற்றிற்கு ஏற்றாற் போல் இருக்க வேண்டும். முக்கியமாக வெப்ப இயங்கியலிலும் (thermodynamics), வெப்பப் பரிமாற்றத்திலும் (heat transfer) மூலக்கூறுகளுக்கும், சுற்றுப்புறச் சூழ்நிலைக்குமிடையே உள்ள தொடர்பு இன்றியமையாதது. இதனால் பாதிப்புகள் குறைகின்றன. சிப்பங்கட்டுதல் சார்புக் குறுக்கீட்டைப் (mutual interference) பெரிதும் குறைக்கிறது. இதில் அணுகுதலும் (access), பாதுகாத்தலும் இன்றியமையாதவை. சிப்பங்கட்டப்பட்ட சாதனங்களின் பயன், அதன் திறமையைச் சிப்பங்கட்டுதலில் செயல்படுத்துவதைப் பொறுத்து அமைகிறது. —சே. வீணா நூலோதி. R. L. Peurifoy, Construction Planning, Equipment and Methods, Third Edition, McGraw-Hill International Book Company, London, 1979.