சிக்கோனிஃபார்மிஸ்
cikkōṉiḵpārmis
கொக்கு, நாரை, குருகு, பூநாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், காலணி அலகி, சுத்தித் தலை ஆகிய இனங்களை உள்ளடக்கிய ஆறு குடும்பங்கள் சிக்கோனிஃபார்மிஸ் வரிசையில் உள்ளன.
கொக்கு, நாரை, குருகு, பூநாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், காலணி அலகி, சுத்தித் தலை ஆகிய இனங்களை உள்ளடக்கிய ஆறு குடும்பங்கள் சிக்கோனிஃபார்மிஸ் வரிசையில் உள்ளன.
அனைத்துப் பகுதிகளிலும் பரவிக் காணப்படும் ஹெரான் எனப்படும் கொக்கு இனங்களைப் போலல்லாமல், காலணி அலகி, சுத்தித் தலை ஆகிய இரு இனங்களும் ஆஃப்ரிக்காவுக்கே உரியவை. ஆஸ்திரேலியாவில் பூநாரைகளும், வட அமெரிக்காவில் நாரைகளும் காணப்படுவதில்லை. ஆஸ்திரேலியாவில் கூட நாரைகளில் ஓரினம் மட்டுமே காணப்படுகிறது. ஐரோப்பிய நாட்டு நாரை, உண்ணிக் கொக்கு ஆகியவை தவிர்த்த பிற இனங்கள் அனைத்துமே ஆறு, குளம் போன்ற மென்னீர் நிலைகளில் வாழ்கின்றன. இவை சிறிது உப்புத் தன்மை அல்லது காரத் தன்மை கொண்ட நீர் நிலைகளையும், சதுப்பு நிலப் பகுதிகளையும் நாடிச் செல்வதுண்டு.
சிக்கோனிஃபார்மிஸ் பிரிவின் பறவை இனங்களுக்குள் மிகப் பெரிய நாரைகள் 1.2 மீ உயரம் கொண்டவை. விரித்து வைக்கப்பட்ட இவற்றின் இறக்கைகளின் இரு முனைகளுக்கும் இடைப்பட்ட இடைவெளி 2.6 மீ நீளம் இருப்பதுண்டு. மிகச் சிறிய இனங்கள் 30 செ.மீ. அளவிலும், சிறு குருகுகளைப் போன்று 100 கிராம் எடையிலும் அமைந்துள்ளன. இவ்விரண்டு வகைகளுக்கும் இடைப்பட்ட நடுத்தரமான இனங்கள் 60—90 செ.மீ. உயரம் உள்ளவை. பெரும்பாலான பறவை இனங்கள் வெண்மையான இறகுகளையும், சாம்பல் நிற இறகுகளையுமே கொண்டுள்ளன. ஆனாலும், சில நாரை இனங்களில் கறுப்பு இறகுகளும் காணப்படுகின்றன.
சுத்தித் தலை நாரைகளின் இறகுகள் பழுப்பு நிறத்திலும், பூநாரை (Scarlet ibis) கரண்டி வாயன் (Roseate spoon bill) ஆகியவற்றின் இறகுகள் சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன. பெரிய குருகு (Large bittern), புலிக் கொக்கு (Tiger heron) ஆகியவற்றின் இறகுகள் இவ்வினங்கள் வாழும் சுற்றுப்புறச் சூழலுக்கேற்பவே அமைந்துள்ளன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> குருகு, காலணி அலகி, புலிக் கொக்கு ஆகிய இனங்களைச் சேர்ந்த பறவைகள் ஒவ்வொன்றும் தனித்தே இரை தேடித் திரிகின்றன. ஆனால், சிக்கோனிஃபார்மிஸ் பிரிவின் பெரும்பாலான பறவை இனங்கள் சமுதாயக் கூட்டமாகவே சேர்ந்து திரிகின்றன. ஆஃப்ரிக்காவிலுள்ள குளங்களில் 10 லட்சத்துக்கும் மேல் கூடிக் காணப்படும் பூநாரைகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். பெரும்பாலான இனங்களில், கழுத்தின் நீளத்திற்கேற்ப அமைந்த நீண்ட கால்கள் சிக்கோனிஃபார்மிஸ் பிரிவுப் பறவைகளுக்கே உரிய பொது இயல்பாகும். ஆனாலும், தென் அமெரிக்காவில் காணப்படும் சிவப்பு வயிற்றுக் கொக்கு (Agamia agamia) இனம் மட்டும் நீண்ட கழுத்தையும், குட்டையான கால்களையும் கொண்டுள்ளது.
சிக்கோனிஃபார்மிஸ் பிரிவைச் சார்ந்த பேரினங்கள் ஒவ்வொன்றிற்கும் இயல்பான உணவுப் பழக்கங்களுக்கேற்ப, அவற்றின் அலகு வடிவங்கள் மாறுபட்டே அமைந்துள்ளன. இப்பிரிவு இனங்கள் பெரும்பாலும் தரையிலும், ஆழம் குறைந்த நீர் நிலைகளிலும் நடந்தபடியே இரை தேடுகின்றன. ஆழம் அதிகரித்த நீர்ப் பகுதியில் நீந்திச் செல்லும் இயல்பைப் பூநாரைகளே பெற்றுள்ளன. சிக்கோனிஃபார்மிஸ் பிரிவின் பெரும் பகுதியான இனங்கள் முழுக்க முழுக்கவோ, முதன்மையாகவோ மீன்களையும், தவளை, ஓணான் ஆகியவற்றையும், பூச்சி, புழு, நத்தை, கூனிறால் ஆகிய முதுகெலும்பற்ற விலங்குகளையும் இரையாக்கிக் கொள்கின்றன. விழுங்கிய பின், செரிக்க இயலாமல் எஞ்சிய கடினமான பகுதிகளை இப்பறவைகள், சிறு சிறு குருணை வடிவில் துப்பி வைத்து விடுவதுண்டு.
பூநாரைகள், ஆல்காக்கள், உண்ணிக் கொக்குகள், பூச்சிகள் ஆகியவற்றை முதன்மையான இரையாகக் கொள்கின்றன. கால்நடைகளைப் பின் தொடர்ந்து சென்று, பூச்சிகளைப் பற்றி இரையாக்கிக் கொள்ளும். தவளைகளேயே முதன்மையான இரையாகக் கொள்ளும். சுத்தித் தலை நாரைகள் நீந்தித் திரியும் நீர் யானைகளின் முதுகில் இருந்தபடியே இரை தேடும். கொக்குகளின் சில இனங்கள் ஆழங்குறைந்த நீரில் எத்தகைய சலனமும் உண்டாக்காமல், நின்றபடியே அவ்வப்போது அருகில் நீந்தி வரும் மீன்களையும், வேறு சில இனக் கொக்குகள் இறக்கைகளை விரிந்து நிழல் காட்டி நிற்கும் போது, அதைப் பாதுகாப்பான, இயற்கையான நிழல் என எண்ணி, அங்கு வந்து சேரும் மீன்களையும் இரையாக்கிக் கொள்கின்றன. சில இனப் பறவைகள் இரையைத் துரத்திச் சென்று, கௌவி விழுங்கிக் கொள்கின்றன.
அகன்ற இறக்கைகளின் துணையால், வலிமையாகப் பறக்கும் தன்மை கொண்ட சிக்கோனிஃபார்மிஸ் பிரிவுப் பறவைகள், கால்களைப் பின்புறமாக நீட்டியபடியே பறக்கின்றன. அப்போது நாரைகளின் கழுத்து முழுமையாக முன்னோக்கி நீட்டி வைக்கப்பட்டிருக்கும். மாறாக, கொக்கு, காலணி அலகி, சுத்தித் தலை ஆகியவற்றின் கழுத்து வளைந்து, தலை உடலை ஒட்டியபடி அமைந்திருக்கும். ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளிலிருந்து தென் ஆஃப்ரிக்கா, இந்தியா ஆகிய இடங்களுக்கு, குறிப்பாக தென்னிந்தியாவின் தென்கோடி வரை வலசை செல்லும் இயல்பு ஐரோப்பிய நாரைகளிடம் காணப்படுகின்றது. கூட்டமாகப் பறந்து செல்லும் போது, V வடிவில் அணி வகுத்துச் செல்லும் இயல்பைச் சிக்கோனிஃபார்மிஸ் பிரிவுப் பறவைகளிடம் காணலாம்.
சிறு குருகு தவிர்த்த பிற இனங்களில் இறகு வண்ணங்களின் அடிப்படையிலான ஆண், பெண் தோற்ற வேறுபாடுகள் எதுவும் தென்படுவதில்லை. இவை 2 ஆண்டுகள் நிறைவுற்றதும், இனப் பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. இனப்பெருக்க காலங்களில் வட்டமிட்டுச் சுற்றிப் பறந்து வந்து, கூடு கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதியில் போய் அமர்வது ஆண் பறவைகளின் இயல்பு. புலிக் கொக்கு, குருகு, காலணி அலகி, சுத்தித் தலை ஆகியவற்றைத் தவிரப் பிற இனங்கள் அனைத்துமே பெருங்கூட்டமாகக் கூடி, இனப் பெருக்கம் செய்கின்றன. மஞ்சள் மூக்கு நாரைகள் பெலிக்கனிஃபார்மிஸ் பிரிவைச் சார்ந்த கூழைக்கடாக்களுடன், ஒரே மரத்தில் கூடு கட்டிக் கொள்வதுண்டு. சிக்கோனிஃபார்மிஸ் பறவைகள் காய்ந்த குச்சிகளால் அமைக்கப்பட்ட மேடை போன்ற ஒரு கூட்டைக் கட்டிக் கொள்கின்றன. ஊனுண்ணிகள் நெருங்க முடியாத வகையில், நீர் நிலைகளுக்குள் நிற்கும் மரங்களிலேயே கொக்குகள் கூடு கட்டிக் கொள்கின்றன. குருகுகள் நாணற்புதர்களிலும், காலணி அலகி தரையிலும் கூடு கட்டிக் கொள்ளும் இயல்பை ஐரோப்பிய நாரை, அப்டிம் நாரை (Abdims stork) ஆகியவற்றிடமும், ஹெரான் எனப்படும் கொக்குகளிடமும் காணலாம்.
சிக்கோனிஃபார்மிஸ் பிரிவுப் பறவைகள் இடும் முட்டைகளின் மொத்த எண்ணிக்கை பெரும்பாலும் 2—6 வரை அமைந்திருக்கக் கூடுமென்றாலும், பூநாரைகள் மட்டும் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளையே இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சுகள் பெற்றோரைப் போன்ற தோற்றத்தையோ, அலகுகளின் வடிவத்தையோ கொண்டிருப்பதில்லை. கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்கு அரை குறையாகச் செரித்த இரையைப் பெற்றோர்ப் பறவைகள் ஊட்டுகின்றன. கூட்டுப் பருவம் முடிந்து, பறந்து சென்ற பின்னரும், பெற்றோர்ப் பறவைகளுடனேயே குஞ்சுகள் மேலும் சில காலத்தைக் கழிக்கின்றன. —எஸ்.ஏ.செல்லப்பா
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 189)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qzdavrun/
தமிழ்“சிக்கோனிஃபார்மிஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qzdavrun/APA
Oliyon Research. (2026). சிக்கோனிஃபார்மிஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qzdavrun/MLA
"சிக்கோனிஃபார்மிஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qzdavrun/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment