இந்தியாவின் நேராட்சிக்குட்பட்ட பகுதிகளுள் ஒன்று, முன்னர் வடகிழக்கு எல்லைப்பகுதி (North East Frontier Agency) என்று பெயர் கொண்ட இது, அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1972 சனவரி 21 ஆம் நாள் இது அசாமிலிருந்து பிரிக்கப்பட்டு. இந்திய ஒன்றியத்தின் நேராட்சிப் பகுதியாக்கப்பட்டது. அருணாசலப் பிரதேசம் இது, கொமங் (Komeng), திராப் (Tirap), சுபன்சிரி (Subansiri), சியாங் (Siang), உலோகித் (Lohit) ஆகிய மாவட்டங்களைக் கொண்டது. இதன் பரப்பளவு 81,426 ச.கி.மீ. அருணாசலப் பிரதேசத்தின் மக்கள்தொகை 6,28,050 (1981). இங்கு மக்கள்தொகை மிகக் குறைவு. ஒரு சதுரக் கிலோ மீட்டரில் 7 பேர் வாழ்கிறார்கள். அருணாசலப் பிரதேசத்தின் (Arunachal Pradesh) நிலப்பரப்பில் 60 விழுக்காடு காடுகள் நிறைந்துள்ளன. மக்கள் தொகையில் 18.5 விழுக்காட்டினர் பயிர்த் தொழில் செய்கின்றனர். 1970–இல் 2 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்யப்பட்டது. அதில் 32,600 ஏக்கர் நீர்ப்பாசன வசதியைப் பெற்றிருந்தது. நெல், இரப்பர், (Rubber), காபி, தென்னை, கமுகு, பழவகைகள், நறுமணப் பொருள்கள் போன்றவை பயிரிடப்படுகின்றன. இங்குக் கூட்டுறவு நிறுவனங்கள் ஏறத்தாழ 100க்கு மேல் இயங்குகின்றன. அருணாசலப் பிரதேசத்தின் தலைநகர் இட்டாநகர் (Itanagar) என்பதாகும்.