இராமகிருட்டிண பரமகம்சரின் சீடர்களுள் ஒருவர். அவர் மேற்கு வங்காள மாநிலத்தில் இருபத்துநான்கு பர்க்கானா என்னும் மாவட்டத்தில் சகத்தால் என்னும் ஊரில் பிறந்தவர் எனினும், கல்கத்தா மாநகருக்கருகில் சிந்தி என்னுமிடத்தில் பெரும்பாலும் வாழ்ந்து வந்தவர். தம் துணைவியார் காலமானவுடன் அவர் துறவியானார். அவருடைய தொடக்கக் காலப் பெயர் கோபால சந்திரகோசு என்பதாகும். இராமகிருட்டிணரின் சீடர்களுள் அவர் வயது முதிர்ந்தவராக இருந்தமையால், சீடர்கள் அவரை அன்பாகவும் கனிவாகவும் நடத்தினர். இந்தியாவின் பல பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்யுங்கால், அவர் கேதார்நாத், பத்ரி நாராயணன், அரித்துவாரம், துவாரகை, இராமேசவரம் போன்ற இடங்களுக்குச் சென்றவர். பழுத்த பழமாய் நீண்ட காலம் நல்வாழ்வு வாழ்ந்த அப்பெரியார் 1909–ஆம் ஆண்டு திசம்பர் 28–ஆம் நாள், தம் எண்பத்தொன்றாம் வயதில் காலமானார்.