அசாமிய மொழி
acāmiya moḻi
இந்திய தேசிய மொழிகளில் அசாமிய மொழியும் ஒன்றாகும்.
இந்திய தேசிய மொழிகளில் அசாமிய மொழியும் ஒன்றாகும். இந்திய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அசாம் மாநிலத்தில் வாழும் 1,99,00,000 மக்களால் (1981 கணக்குப்படி) பேசப்படுவது இம்மொழி. இவர்களில் பெரும் பகுதியினர் இம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் மட்டுமன்றி இம்மாநிலத்தில் வாழும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வேற்று மொழியினரும் இம்மொழி பேசுவோராக உள்ளனர்.
அசாம் என்ற சொல் அண்மைக் காலச் சொல்லாகும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டளவில் இப்பகுதியில் படையெடுத்துத் தங்கள் ஆட்சியை நிறுவிய அகோம் அல்லது சான் (Shans) மக்களைக் குறிக்கவே இச்சொல்லை இம்மக்கள் பயன்படுத்தினர். “அழிக்க முடியாதவர்கள்” அல்லது “ஒப்பு உயர்வு இல்லாதவர்கள் (அ+சமா)” எனப் பொருள்படும் இச்சொல், தங்களை வென்ற மக்களைக் குறிக்குஞ் சொல்லாகத் தோன்றிப் பின்னர்த் தங்கள் நாட்டையே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.
இம்மொழி இந்தோ–ஆரிய மொழிகளுள் ஒன்றாகும். இந்தோ-ஆரிய மொழிகள், இந்தோ–இரானிய மொழிகளின் பின்னர்த் தோன்றிய விரிவாகும். இந்தோ இரானிய மொழிகள், இந்தோ–ஐரோப்பிய மொழிகளுள்
ஒரு பிரிவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தோ ஆரிய மொழிகளுள் பல பிரிவுகள் உள்ளன என்பதும் அவற்றுள் கிழக்குப் பிரிவு ஒன்று என்பதும், அப்பிரிவுக்கு மூலமாக உள்ள மகதி பிராகிருதம் என்பதிலிருந்து தோன்றியனவே ஒரியா, வங்காள, அசாமிய மொழிகள் என்பதும் ஒப்புமொழியியல் காட்டும் உண்மைகள். இம்மூன்று மொழிகளும் மகதி பிராகிருதம் அல்லது மகதி அபப்பிராம்சா (Apabhramsa) கிளையிலிருந்து தோன்றியவை. இவற்றுள்ளும் மூன்று பிரிவுகளைக் காணலாம். இவற்றுள் கிழக்குப் பிரிவிலிருந்து தோன்றியவையே இம்மூன்று மொழிகளும். இம்மூன்றுள்ளும் அசாமி, வங்காளி ஆகியவற்றிடையே நெருங்கிய தொடர்புண்டு. பண்டைய வங்காளி மொழிக்கும் அசாமிய மொழிக்குமிடையே மிகுதியான வேறுபாடுகள் கிடையா. இவை இரண்டும் ஒரே மொழியாகவே கருதப்பட்டு வந்தன. இவை தனித் தனி மொழியாக வளர்ந்தன என்று கூறுவாரும் உளர். இவற்றோடு தொடர்புடைய வங்காள மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அண்மைக் காலம் வரை தனித்து வழங்கிய மற்றொரு மொழி வங்காள மொழியின் செல்வாக்கில் மறைந்து விட்டது என்றும் கூறுவர்.
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இது தனியொரு மொழியாக வளரத் தலைப்பட்டது. கி.பி. 643-இல் இப்பகுதிக்கு வந்த யுவான் சுவாங்கு (Hiuen Tsang) என்ற சீனப் பயணி இம்மொழியைப் பற்றிக் குறிப்பிடும் போது “நடு இந்தியாவில் பேசப்படும் மொழிகளிலிருந்து இப்பகுதி மொழி சிறிது மாறுபட்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார். கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இது மகதி அபப்பிராம்சாவிலிருந்து தோன்றியது என எண்ண இடம் உண்டு. வடக்கு வங்காளத்தில் பேசப்பட்ட மொழியும் உண்டாயின என்ற கருத்தும் உண்டு.
கி.பி. 13-ஆம் நூற்றாண்டு முதலே தனியொரு மொழியாக வளரத் தலைப்பட்ட இம்மொழியின் காலப்பகுதியையும் பழங்காலம், இடைக்காலம், இக்காலம் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிப்பர். எனினும் பழங்காலம் இக்காலம் எனப்பிரிப்பது நல்லது.
கி.பி. 13-16-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதி பழங்காலப் பகுதியாகக் கருதப்படுகிறது. இதனையும் வைணவ காலத்திற்கு முந்திய பகுதி என்றும் வைணவ காலப் பகுதி என்றும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.
முன்பகுதியில்தான் அசாமிய மொழியின் முதல் எழுத்துச் சான்று உருவாயிற்று. ஏமா சரசுவதி என்னும் கவிஞர் இயற்றிய பிரகலாத சரிதம் (Prahalada Carida) என்னும் சிறிய கவிதையே இம்மொழியின் முதல் இலக்கியம். பின்னர் வந்த அரிகர விப்ரா, கவிரத்தின சரசுவதி, உருத்திரா கந்தலி, மாதவ கந்தலி போன்றவர்கள் குறிப்பிடத்தக்க கவிஞர்கள், இவர்களுள் மாதவ கந்தலி முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இராமாயணம் முழுவதையும் அசாமிய மொழியில் மொழிபெயர்த்துத் தந்தவர் இவரே. இக்காலத்தில்தான் பாரதத்தின் பல பகுதிகள் இம்மொழியில் எழுதப்பட்டன.
வைணவ காலத்தில் குறிப்பிடத்தக்கவர் சங்கர தேவா. இவர் கவிஞராக மட்டுமன்றி, வைணவச் சீர் இருத்தவாதியாகவும் விளங்கியவர். இவர் பல வைணவ நூல்கள் இயற்றியுள்ளார். இவரைப் போன்றே இவர்தம் சீடர் பலரும் பலவேறு நூல்களை இயற்றியுள்ளனர். இக்காலப் பகுதியில் சமய நூல்கள் மட்டுமன்றி, நாடகங்கள் போன்ற வேறு இலக்கியவகை நூல்களும் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசாமிய மொழியில் எழுதப்பட்டிருப்பினும் இந்நூல்களில் வடமொழிக் கலப்பும் செல்வாக்கும் அதிகமாகவே உள்ளன என்பர்.
அகோம் மன்னர்களின் கீழ் அரசவைக் கவிஞர்களாக வாழ்ந்த பலர் வடமொழி நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கவிச் சக்கரவர்த்தி என்ற புலவர். இவர் சில சிங்கா என்ற மன்னனின் (கி.பி. 1714-44) அரசவைப் புலவராக இருந்தவர். சங்கராசுரவதம், கீத கோவிந்தா போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இவரைப் போன்ற பல்வேறு கவிஞர்கள் வாழ்ந்த காலம் இது. எனினும் இக்காலக் கவிதைகள் செறிவுடைய இலக்கியங்களாக இல்லை என்றே அறிஞர் கருதுகின்றனர்.
கி.பி. 17-ஆம் நூற்றாண்டு முதல் இன்றுவரையுள்ள காலப் பகுதியே இக்காலம் என்று கருதப்படுகிறது. ஆங்கிலேயர் வரவிற்குப் பின்னர் அசாமிய மொழியில் ஏற்பட்ட பலவேறு மாற்றங்கள் இம்மொழியையும் வளரும் மொழியாக ஆக்கியுள்ளன. பல்வேறு அகராதிகள், இலக்கணங்கள், கவிதை நூல்கள், நாடகங்கள், உரைநடைகள் போன்ற பல துறைகள், இம்மொழி வளர்ந்துள்ளமைக்குச் சான்று பகர்கின்றன. 1836-இல் வங்காள மொழி இப்பகுதியில் பல நிலைகளில் நுழைந்த போதிலும், நாட்டு விடுதலைக்குப் பின்னர் அசாமிய மொழி நன்கு வளரத் தலைப்பட்டது.
1836-இல் இங்குவந்த பிரௌன் (Dr. Wathan Brown), காட்டர் (O.T. Cotter) போன்றவர்களும், பின்னர் வந்த ஆங்கிலேயப் பாதிரிகளான கரே (Carey), மார்சுமன் (Marshman) போன்றவர்களும் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கன. அசாமிய மொழியில் எழுதப்பட்ட வேதாகமம் 1813-இல் முதல் அச்சு நூலாக வெளிவந்தது. பின்னர்ப் பல்வேறு இலக்கண நூல்களும் (A grammar of the Assamese Language (W. Robinson); Grammatical Notice of the Assamese Language) உருவாயின.
இவர்களைப் போன்றே அசாமிய அறிஞர்களுள் சிலரும் இம்மொழி வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இவர்களுள் ஆனந்தராம் தெக்கியல் புக்கன் (Anandaram Dhekial Phukan), குணாகிராம் பருவா (Gunahiram Barua, 1837–95), ஏமச்சந்திர பருவா (1835-96) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுல் ஏமச்சந்திர பருவா இக்கால அசாமிய மொழியின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
இக்காலத்தில்தான் அசாமியமொழி புது வேகத்துடன் வளர்ந்தது எனக் கருதலாம். கவிதை, நாடகம், உரைநடை போன்ற துறைகளில் இது நன்கு வளர்ந்துள்ளது.
இலட்சுமிநாத பெசு பருவா (1868-1938) மிகச் சிறந்த கவிஞர்; உரைநடையாளர்; இதழாசிரியர். இவர் எழுதிய படைப்பிலக்கியங்கள் பலவாகும். அசாமியமொழியின் சொற்களஞ்சியம் இவரால் வலுப்பெற்றது. இவர் தேசியப் பாடல்களும் பல புனைந்தார். மக்களிடையே நல்ல விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்த பெருமை இக்கவிஞரைச் சாரும். இவர் இயற்றிய ‘என் திருநாடே’ (Oh my Beautiful Land) என்ற கவிதையே இன்றைய அசாமிய நாட்டின் தேசப்பாட்டாகக் (State Anthem) கருதப்படுகிறது.
இவரைப் போன்றே பல கவிஞர்கள் அசாம் மொழிக் கவிஞர்களாகக்காலம் கடந்து நிற்கும் கவிதைகளை யாத்துள்ளனர். பத்மநாத கோகெய்ம் பருவா (Padmanath Gohim Barua), சந்திரகுமார் அகர்வாலா, ஆனந்த சந்திர அகர்வாலா (1874–1940), இதேசுவர் பார்பருவா (1876–1939), சந்திரதர் பருவா, இலட்சுமி ராம் பருவா, தயானந்தர் பட்டாச்சாரியா, உமேசு சந்திர சௌத்திரி, பரேந்திர குமார் பட்டாச் சாரியா போன்ற பல கவிஞர்கள் இம்மொழியின் கவிதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கவர்கள்.
கவிதையைப் போன்றே பிற துறைகளும் இம்மொழியில் நன்கு வளர்ந்துள்ளன. நாடகம், புதினம், குறு நாவல், சிறு கவிதைகள் போன்ற பல துறைகள் நன்கு வளர்ந்துள்ளன.
அசாமிய மொழியில் பல்வேறு கிளை மொழிகள் {Dialects) உள்ளன. பொதுவாக இவற்றைக் கிழக்கு, மேற்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மேற்குப் பிரிவையும் இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பர். கோவல்பாரா மாவட்டத்தில் பேசப்படும் கிளைமொழி காமரூபி (Kamrupi) எனப்படும். கிழக்குக் கிளைமொழியே நிலைமொழியாகக் (Standard) கருதப்படுகிறது. இது சிபசாகர் போன்ற மாவட்டங்களில் பேசப்படுகிறது. எனினும், பண்டை இலக்கியங்கள் மேற்குக் கிளை மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
இம்மொழியில் எட்டு உயிர் ஒலியன்களும் இருபத்தாறு மெய் ஒலியன்களும் உள்ளன. உயிர் ஒலியன்களில் குறில் நெடில் வேற்றுமை இல்லை.
பிற இந்திய மொழிகளைப் போன்றே அசாமிய மொழியிலும் பெயர், வினை, இடை (Particles) என்ற மூன்று வகைச் சொற்களைக் காணலாம். இவற்றுள் இடைச்சொற்கள் மிகக்குறைவாகவே உள்ளன.
பிற மொழிகளைப் போன்றே இம்மொழியிலும் பெயர்ச் சொற்கள் அமைந்துள்ளன. பொதுவாக இவை எண், பால், வேற்றுமைத் திரிவொட்டுகளைக் (Inflexional suffix) கொண்டு இவ்விலக்கணக் கூறுகளைக் காட்டி நிற்கின்றன. ஒருமை, பன்மை என்ற இரு எண்களே இதன்கண் உள்ளன.
இம்மொழி இலக்கணத்தில் பால் பகுப்பு இல்லை என்பர். எனினும் ஆண், பெண் பால்களையும், ஒன்றன்பாலினையும் (Neuter: காணமுடிகிறது. முன்னர்க் குறிப்பிட்டபடி பல்வேறு பெயர்கள் பல ஒட்டுகளையும் பெண் (Maiki), ஆண் (Mota) போன்ற சொற்களையும் கொண்டு ஆண், பெண் பால்களைக் காட்டுகின்றன (manuh–to ‘மனிதன்’; manuh–zni ‘பெண்’).
இம்மொழியில் காணப்படும் வேற்றுமைகளை எழுவாய், செயப்படு பொருள், கருவி, கு வேற்றுமை, உடைமை வேற்றுமை, இடவேற்றுமை என ஆறு வேற்றுமைகளாகப் பிரிப்பர், இவற்றை உணர்த்தும் ஒட்டுகளும் உள்ளன. எழுவாய் வேற்றுமை ஒட்டோடும் ஒட்டின்றியும் காணப்படுகிறது. ::{|
மேலும், இம்மொழியில் குறிப்பிட்ட பண்பை (Definiteness) உணர்த்தும் ஒட்டுகளும் சொற்களும் காணப்படுகின்றன. தமிழ் போன்ற மொழிகளில் இப்பண்பு (manuh ‘மனிதன்’ manuh–to ‘குறிப்பிட்ட மனிதன்’) காணப்படுவதில்லை. இவ்வொட்டுகளிலும் பல வகைகள் உள்ளன.
பதிலிடு பெயர்களும் (Pro–nouns) பல உள்ளன. தன்மை, முன்னிலை, படர்க்கைப் பதிலிடு பெயர்களுடன் சுட்டுப் பெயர்களும் காணப்படுகின்றன. தன்மை, முன்னிலைப் பெயர்கள் பால் காட்டுவதில்லை. பிற பதிலிடு பெயர்கள் பால் காட்டுவதுடன் உணர்வு ஒருமையையும் சுட்டுகின்றன. உணர்வு ஒருமையிலும் பொதுவான உயர்வு, சிறப்பு உயர்வு என இருவகை உயர்வுப் பண்புகளையும் காணலாம். எடுத்துக்காட்டாக, முன்னிலையில் வரும் ti என்ற சொல் நீ என்றும், tumi என்பது நீர் என்றும், apuni என்பது நீங்கள் என்றும் பொருள்படும்.
சுட்டுப் பெயர்களிலும் அண்மைச் சுட்டு என்றும் (i ‘இவன்’, ei ‘இவள்’, ei–to ‘இது’) சேய்மைச் சுட்டென்றும் இரு பிரிவுபடும். இவற்றில் சேய்மைச் சுட்டு அண்மைச் சேய்மைச் சுட்டு என்றும், தொலைவுச் சேய்மைச் சுட்டு என்றும் பிரிவுபடும்.
வினைச்சொற்கள் தொழில்காட்டும் சொற்களே. இவை இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் திரிவொட்டுகளை அடுத்து வரும். ஆனால் எண் காட்டுவதில்லை; பாலும் காட்டுவதில்லை. இதனால் ஒரே வினைமுற்று ஒருமை, பன்மை காட்டும் எழுவாய்களுடன் வர முடியும். mizao ‘நான் போகிறேன்’ iamza0 ‘நாம் போகிறோம்’ எனக் கூறமுடியும். எண், பால் ஆகியவை எழுவாயால்தான் காட்டப்படுகின்றன.
பல்வேறு காலங்களைக் காட்டும் கால ஒட்டுகளாலேயே காலம் காட்டப்படுகின்றது. ::{|
போன்ற எடுத்துக் காட்டுகள் இப்பண்பைக் காட்டும். எதிர்மறை n என்ற முன்னொட்டால் காட்டப்படுகின்றது. எஸ்.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 170)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qxfpgstw/
தமிழ்“அசாமிய மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qxfpgstw/APA
Oliyon Research. (2026). அசாமிய மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qxfpgstw/MLA
"அசாமிய மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qxfpgstw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment