காற்றுப் பறப்பியலின் (aeronautical) சீரான பாய்வில் ஒரு கட்டகம் வைக்கப்படும் போது, கட்டகத்தில் தானாகத் தூண்டப்படும் அதிர்வே சிறகடிப்பு (flutter) எனப்படுகிறது. கட்டகத்தில் உண்டாகும் மீளும் தன்மை உள்ள உருமாற்றத்தால் விளையும் காற்றியங்கு விசையே இந்த அதிர்வுக்குக் காரணம். காற்றுப் பாய்வு அடுக்குப் பாய்வாக இருக்கும் போது, காற்றியக்கத்தின் பழைய தத்துவத்திற்கேற்ப அமையும். பாய்வு அடுக்குப் பாய்வாக இல்லாமல், பிரிந்து செயல்படுமேயானால், தடுமாற்றச் சிறகடிப்பு ஏற்படுகிறது. பறந்து கொண்டிருக்கையில், வானூர்தியில் சிறகடிப்பு நிகழுமானால், கட்டகம் உருச் சிதைவு அடைந்து விடும். சிறகடிப்பினால் எண்ணற்ற வானூர்திகளும், உயிர்களும் அழிவுக்குள்ளாயின. ஒரு வளிமப் பாய்வில் ஒரு பொருளை நகர்த்தும் போது, நகரும் பொருள் பாய்விலிருந்து ஆற்றலை உறிஞ்சித் தனக்குள் ஓர் அதிர்வை ஏற்படுத்திக் கொள்கிறது. இதுவே, சிறகடிப்பு உருவாவதற்கான அடிப்படைத் தத்துவமாகும். காற்றியங்கு விசை, சிறகு நகர்வு இவற்றைப் பொறுத்துச் சிறகடிப்பு வேறுபடுகிறது. ஒரு முனையில் தாக்கப்பட்ட சிறகில் உருவாகும் வளை—முறுக்கு விசையை ஆராய்ந்தால், பறக்கும் வேகம் சிறகடிப்பு வேகத்தை விட அதிகரிக்கும் போது, வளை—முறுக்குச் (bending-torsion) சிறகடிப்பின் அதிர்வு அலை நீளம் நேரத்தோடு நேர் விகிதத்தில் வேறுபடுகிறது. அதே சமயம், சிறகின் மேல் செயல்படும் இழுவிசை அதிகரிப்பதால், பறத்தலை நிலை நிறுத்த மிகு ஆற்றல் தேவைப்படுகிறது. ஒரு சீரான நகர்வில் (harmonic motion), விசைக்கும், நகர்வுக்கும் இடையேயான நிலை வேறுபாடு இத்தகைய ஆற்றல் மாற்றத்திற்கு (பாய்விலிருந்து ஆற்றலை உறிஞ்சிச் சிறகின் அதிர்வாக மாற்றுதற்கு) உறுதுணையாகிறது. எனவே, சிறகடிப்பிற்குக் காற்றியங்கு விசையே அடிப்படையாகிறது. வளிமப் பாய்வின் அழுத்தம், சிறகின் வடிவம், நகர்வின் அலை நீளம், அதிர்வின் குறைவான அதிர்வெண் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சிறகடிப்பின் தன்மை அமைகிறது. தற்கால விமான வடிவமைப்புகளில், தொடக்க நிலையிலேயே சிறகடிப்பு ஆய்வு தொடங்கி விடுகிறது. இந்த ஆய்வுகளில் இருந்தே எந்திரம், கலன் ஆகியவற்றின் இருப்பிடம் முடிவு செய்யப்படுகின்றது. கனமான பகுதிகளைச் சிறகுகளின் மேல் அமைப்பதன் மூலம், சிறகடிப்பைப் பெரிதும் குறைக்கலாம் என்று நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு சிறகுகளின் மேல் பல்வேறு எடையுள்ள பகுதிகளை அமைத்து, அவற்றால் சிறகடிப்பில் உருவாகும் மாற்றங்களை ஆராய்தல் எடைச் சமனிடல் எனப்படுகிறது. எந்த வேகத்தில் பறக்கும் போது, சிறகடிப்பு நிகழக் கூடும் என்பதைத் துல்லியமாக ஆய்ந்து அறிதல் மிகவும் இன்றியமையாதது. ஆனால், சிறகடிப்பு வேகத்தைத் துல்லியமாகக் கணித்தல் என்பது மிகக் கடினமானதும் சிக்கலானதும் ஆகும். இவற்றை ஆய்வதோடு கீழ்க் காணும் முறைகளைக் கையாள்வதன் மூலமும் சிறகடிப்பைத் தவிர்க்க முயலலாம். வடிவமைப்பின் போது, கட்டகத்திலும், சிறகிலும் போதுமான அளவு உறுதித் தன்மை ஊட்டல், பறப்பு நிகழும் போது, பாய்வு பிளவு படாது இருக்குமாறு காற்றியங்கு தத்துவங்களின் அடிப்படையில் வடிவமைத்தல், எடைச் சமனிடல் ஆய்வுகளின் மூலம் சிறகின் மீது சுமையான பகுதிகளை அமைத்தல், விசைக்கும், நகர்வுக்கும் இடையேயான நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த போதுமான கருவிகளை அமைத்தல் என்பன அவற்றுள் அடங்கும். காண்க: இறக்கைச் சுமை, சிறகின் கட்டமைப்பு. —வயி. அண்ணாமலை நூலோதி. Baumeister, A. Avallone and Baumeister III, Marks Standard Hand Book for Mechanical Engineers, Eighth Edition, MoGraw Hill Book Company, New York, 1978.