எவ்வித மறுபயனையும் எதிர்நோக்காமல் ஒருவர் மற்றொருவருக்குத் தன் பொருளைக் கொடுக்கும் செயல், அதாவது சொத்துரிமை மாற்றம் நன்கொடை என்று சொல்லப்படுகிறது. நன்கொடைப் பொருள் அசையும் அல்லது அசையாப் பொருளாக இருக்கலாம். நோயுற்ற ஒருவர் தன் இறுதிக் காலத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் செய்யும் நன்கொடையை உராமானியச் சட்டம் ‘இறக்குந் தறுவாய் நன்கொடை’ (Donatio Mortis Causa) என்று குறிப்பிடுகிறது. அதை இசுலாமியச் சட்டம் மர்சுல் மாத்து (Marz–Ul–Maut) என்று குறிப்பிடுகிறது. அவ்வாறான நன்கொடைக்கு இக்கட்டுரையில் இறக்கும் தறுவாய் நன்கொடை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சொத்துரிமை மாற்றல் தொடர்பான சொத்துரிமை மாற்றுச் சட்டம் (Transfer of Property Act) கி.பி. 1882–ஆம் ஆண்டில் இந்திய அரசால் இயற்றப்பட்டது. இந்தியாவில் சொத்துரிமை மாற்றம் இச்சட்டப்படிதான் நடைபெற வேண்டும். உரிமை வயது அடைந்தவனும் நல்ல மனநிலையிலுள்ளவனும் இச்சட்டத்தின்படி தன் அசையும் பொருளையும் அசையாப் பொருளையும் நன்கொடையாக அளிக்கலாம். உரிமை வயது என்பது 18 வயது நிறைவுற வேண்டும். நீதிமன்றக் காப்பாளர் இருந்தால் 21 வயது நிறைவுற வேண்டும். இந்த வயது வரையறை இந்து, முகமதியர், கிறித்தவர் முதலிய எல்லா இனத்தவருக்கும் பொருந்தும். கொடையாளி உயிருடன் இருக்கும் போதே அதுவும் நன்கொடை கொடுக்கக்கூடிய தகுதி இருக்கும்போதே பெறுபவர் கொடையை ஏற்றுக் கொண்டால்தான் அந்த நன்கொடை செல்லத் தக்கது என்பது சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அசையாப் பொருளை நன்கொடையாகக் கொடுக்க வேண்டுமானால், கொடையாளியும் குறைந்தது இரண்டு சாட்சிகளும் கையெழுத்திட்டுப் பதிவு செய்யப்பட்ட ஆவணம் மிக இன்றியமையாதது என்பதும் அசையும் பொருளாக இருந்தால் இருந்தால் அவ்வாறான ஆவணத்தின் மூலமோ கொடையைப் பெறுபவருக்குச் சுவாதீனம் கொடுப்பதன் மூலமோ நன்கொடையளிக்கலாம் என்பதும் மேற்படி சொத்துரிமை மாற்றல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதாவது, இச்சட்டப்படி ஆவணத்தின் மூலந்தான் அசையாப் பொருளை நன்கொடையாக அளிக்கலாம். அதற்குச் சுவாதீனம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அசையும் பொருள் சம்பந்தமாக இச்சட்டப்படி இரண்டு வகைகளில் நன்கொடை அளிக்கலாம். வாய்மொழியாகச் சுவாதீனம் கொடுப்பதன் மூலம் அளிப்பது முதல் வகை. இதற்கு ஆவணம் ஏதும் தேவையில்லை. மேற் கூறியவாறு ஆவணத்தின் மூலம் நன்கொடை அளிப்பது இரண்டாம் வகை. இதற்குச் சுவாதீனம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நன்கொடைத் தொடர்புடைய சொத்துரிமைச் சட்டத்தில் உள்ள அத்தியாயமானது இசுலாமியச் சட்டத்தைப் பாதிக்காது என்றும் அசையும் பொருள் சம்பந்தமான இறக்கும் தறுவாய் நன்கொடைக்கு அந்த அத்தியாயம் செல்லத்தக்கது அன்று என்றும் அச்சட்டத்தின் 129–ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஓர் இசுலாமியனால் அளிக்கப்படும் நன்கொடையைப் (இறக்கும் தறுவாய் நன்கொடை உட்பட) பொறுத்தமட்டில் இசுலாமியச் சட்டத்துக்கும் சொத்துரிமைச் சட்டத்துக்கும் முரண்பாடு இருந்தால், சொத்துரிமைச் சட்டத்தில் உள்ள முரண்பாடு செயற்படத்தக்கது அன்று. வேறு இனத்தவரைப் பொறுத்தமட்டிலும், அந்த வேறு இனத்தவர் அளிக்கும் அசையும் பொருள் தொடர்பான இறக்கும் தறுவாய் நன்கொடைக்கு மட்டும் சொத்துரிமைச் சட்டத்திலுள்ள நன்கொடை தொடர்பான அத்தியாயம் செல்லத்தகாதது ஆகும். அதாவது, இறக்கும் தறுவாய் அல்லாத அசையும் பொருள் நன்கொடைக்கும், எந்த நிலையிலும் ஏற்படும் அசையாப் பொருள் நன்கொடைக்கும், அவை ஓர் இசுலாமியரைத் தவிர வேறு இனத்தவரால் வழங்கப்படுமானால், மேற்கூறிய சொத்துரிமைச் சட்டம் செல்லத்தக்கது ஆகும். இசுலாமியர் வழங்கும் இறக்கும் தறுவாய் நன்கொடை கொடையாளிக்குப் பிணியினால் இறந்து விடுவோம் என்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும் என்றும், முடிவில் அப்பிணியினால் இறப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் ‘இறக்கும் தறுவாய்’ என்ற நிலைகுறித்து இசுலாமியச் சட்டத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, இறக்கும் தறுவாய் நன்கொடை வழங்குவதற்குக் கொடையாளி கீழ்க்காணும் உடல் நிலை- யும் மனநிலையும் உடையவராக இருக்க வேண்டும். 1. இறப்பு அபாயம் மிக அருகில் இருப்பது. 2. இறந்து விடுவோம் என்ற எண்ணம் கொடையாளிக்குத் தோன்றியிருத்தல். 3. கொடையாளியின் கவலைக்கிடமான நிலையைக் காட்டக்கூடிய வெளிப்படையான அடையாளங்கள். தன் சுய தேவைகளைத் தானே செய்து கொள்ள முடியாத நிலை ஒரு முக்கியமான வெளிப்படையான அடையாளமாகும். அசையும், அசையாப் பொருள் தொடர்பாக இறக்கும் தறுவாய் நன்கொடையை ஓர் இசுலாமிய ஆண் அல்லது பெண் வழங்குவதற்கு, உரிமை வயது அடைந்தவராகவும் நல்ல மனநிலையில் உள்ளவராகவும் இருக்க வேண்டும். நன்கொடை வழங்குவதாகக் கொடையாளி அறிவிக்க வேண்டும். கொடையைப் பெறுபவர் அல்லது அவரது சார்பில் எவராவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொடையை ஏற்றுக் கொள்ள வேண்டும். கொடைப் பொருள் பெறுபவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஒப்படைப்பு முடிந்தவுடன் கொடை நிறைவுறுகிறது. நன்கொடைக்கு அது அசையாப் பொருள் தொடர்புடையதாயிருந்தாலும்கூட ஆவணம் ஏதும் தேவையில்லை. சுவாதீனம் கொடுப்பதன் மூலம் கொடை நிறைவுற்றவுடன் நீதிமன்ற ஆணையைத் தவிர வேறு எவ்விதத்திலும் கொடையை நீக்குதல் செய்ய முடியாது. மேலும் கீழ்க்காணும் காரணங்களிருந்தால் சட்டப்படி நிறைவடையும் கொடையை எவரும் நீக்குதல் செய்ய முடியாது. 1. கணவன் மனைவிக்கு அல்லது மனைவி கணவனுக்குக் கொடுக்கும் நன்கொடை. 2. கொடை பெறுபவர் கொடையாளிக்குத் தடுக்கப்பட்ட முறையில் உறவினராயிருத்தல். 3. கொடை பெறுபவர் இறப்பது. 4. கொடை பெற்றவர் கொடைப் பொருளை சொத்துரிமை மாற்றல் செய்து விடுவது. 5. கொடைப்பொருள் அழிந்து விடுவது அல்லது காணாமல் போவது. 6. கொடைப் பொருளின் மதிப்பு அதிகமாகிவிடுவது. 7. அடையாளம் காண முடியாத அளவுக்குக் கொடைப் பொருள் உருமாறிப் போவது. 8. நன்கொடைக்கு மாற்றாகக் கொடையாளி ஏதாவது பொருளைப் பெற்றிருப்பது. கொடையாளி இறந்தபின் அவரது வாரிசுகள் கொடையை நீக்குதல் செய்ய முடியாது. ஆனால், ஓர் இசுலாமிய ஆண் அல்லது பெண் வழங்கும் இறக்கும் தறுவாய் நன்கொடைக்கு இரண்டு கட்டுப்பாடுகள் உள்ளன. இறுதிச் சடங்குகள் செய்வதற்கு ஆகும் செலவு, கடனை அடைப்பதற்கு ஆன தேவை போக, எஞ்சியுள்ள கொடையாளியின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் இறக்கும் தறுவாய் நன்கொடையாகக் கொடுக்கலாம். மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும் நன்கொடை செல்லத்தகாதது ஆகும். ஆனால், கொடையாளி இறந்தபின் அவர்தம் வாரிசுகள் ஏற்றுக் கொண்டால், மேற்படி மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான பங்கைப் பொறுத்தமட்டிலும் கூட நன்கொடை செல்லத்தக்கது ஆகும். கொடையாளியின் சொத்துக்கு வாரிசுரிமையை எதிர்பார்க்கும் வாரிசுக்கு வழங்கும் நன்கொடை (அதவாது, கொடையாளி இறக்கும் காலத்தில் கொடையைப் பெறுபவர் வாரிசாக இருந்தால்), முழுமையாகச் செல்லத்தக்கது அன்று. கொடையாளி இறந்தபின்னர் ஏனைய வாரிசுகள் ஏற்றுக் கொண்டால் அந்த நன்கொடை செல்லத்தக்கது ஆகும். வாரிசுகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்படி கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளன. இறக்குந்தறுவாய் அல்லாத நிலையில் வழங்கப்படும் நன்கொடைக்கு மேற்கூறிய இரண்டு கட்டுப்பாடுகளும் பொருந்தா. இந்து வழங்கும் இறக்கும் தறுவாய் நன்கொடை சொத்துரிமை மாற்றுச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர். இந்துச் சட்டப்படி அசையும் பொருளையும் அசையாப் பொருளையும் வாய்மொழியாகவே சுவாதீனம் கொடுப்பதன் மூலம் நன்கொடை வழங்கலாம். அதற்கு ஆவணம் ஏதும் தேவையில்லை. இறக்கும் தறுவாய் நன்கொடையைப் பழைய இந்துச் சட்டம் ஒப்புக் கொண்டிருந்தது. சொத்துரிமை மாற்றுச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், ஓர் இந்து தனது அசையாப் பொருளை இறக்கும் தறுவாயின் நன்கொடையாக வழங்க விரும்பினால், ஏற்கனவே கூறியவாறு பதியப்படும் ஆவணத்தின் மூலம்தான் கொடையை அளிக்க வேண்டும். சுவாதீனம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அசையும் பொருளைப் பொறுத்தமட்டில் இறக்கும் தறுவாயில் ஓர் இந்து வாய்மொழியாகச் சுவாதீனம் கொடுப்பதன் மூலம் நன்கொடையை வழங்கலாம். அதற்குப் பதியப்பட்ட ஆவணம் ஏற்படுத்தினாலும் அசையும் பொருளைச் சுவாதீனம் கொடுக்கவேண்டியது இன்றியமையாதது. ஏனெனில் பழைய இந்துச் சட்டப்படி சுவாதீனம் கொடுப்பது முக்கியத் தேவையாகும். நிறைவுற்ற அசையா இறக்குந்தறுவாய் நன்கொடை நீக்கத்தக்கது அன்று. ஆனால், ஏமாற்றி அல்லது பொய் சொல்லி அல்லது பயமுறுத்தி அல்லது தகாத செல்வாக்கைப் பயன்படுத்திப் பெறப்பட்ட இறக்குந் தறுவாய் அசையாப் பொருள் நன்கொடையை நீக்குதல் செய்யலாம். இறக்குந் தறுவாய் அசையும் பொருள் நன்கொடையைப் பொறுத்த மட்டிலும், கொடையாளி பிணியிலிருந்து மீண்டெழுந்தாலோ அல்லது கொடையாளிக்கு முன்னர்க் கொடைபெற்றவர் இறந்து விட்டாலோ அக்கொடை இல்லாநிலையது ஆகும். கிறித்தவர் இறக்கும் தறுவாயில் வழங்கும் நன்கொடை ஒரு இறித்தவர் அசையாப் பொருளை இறக்கும் தறுவாயில் நன்கொடை கொடுக்க விரும்பினால், அதைச் சொத்துரிமை மாற்றல் சட்டப்படி செய்ய வேண்டும். அதாவது, ஆவணம் எழுதி அதில் கொடையாளியும் குறைந்தது இரண்டு சாட்சிகளும் கையெழுத்திட்டுப் பதிவு செய்வதன் மூலம் அந்த நன்கொடையைச் செய்ய வேண்டும். கொடை பெறுபவரும் கொடையாளி நல்ல மனநிலையிருக்கும் போதே அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். அந்நிலையில் சுவாதீனம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு நிறைவடையும் நன்கொடை, ஏமாற்றியோ பொய் சொல்லியோ பயமுறுத்தியோ தகாத செல்வாக்கைப் பயன்படுத்தியோ வாங்கப்பட்டிருந்தாலொழிய நீக்குதல் செய்யத்தக்கது அன்று. ஒரு கிறித்தவர் அசையும் பொருளை இறக்கும் தறுவாயில் நன்கொடை செய்ய விரும்பினால். அதை 1925–ஆம் ஆண்டைய இந்திய வாரிசுரிமைச் சட்டம் 191–ஆம் பிரிவில் சொல்லியுள்ளபடி செய்யலாம். உயில் மூலம் அந்த அசையும் பொருள் கொடுக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும். கொடைப்பொருளைச் சுவாதீனம் கொடுக்க வேண்டும். கொடையாளி இறந்த பின்னர்த்தான் கொடை செயற்படும் என்ற நிபந்தனையோடு கொடுக்க வேண்டும். கொடையாளி நோயினின்றும் மீண்டால் கொடைப்பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். கொடையாளிக்கு முன்னர்க் கொடை பெற்றவர் இறந்துவிட்டாலும் கொடைப் பொருளைக் கொடையாளி திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம். இக்கொடையானது வாய்மொழியாக ஏற்படலாம். எழுத்து மூலம் ஏற்பட்டாலும் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்ற தேவையில்லை. வாய்மொழி அல்லது எழுத்து மூலமாக ஏற்பட்டாலும், சுவாதீனம் கொடுப்பது மிகத் தேவையானது. தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்துடன் கொடுக்கும் நன்கொடை இறக்கும் தறுவாய் நன்கொடையாகாது. இந்தக் கோட்பாடு எல்லா இனத்தவருக்கும் பொருந்தும்.