இருமுக வாணிக ஒப்பந்தம்
irumuka vāṇika oppantam
பொருள்களை ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்ய இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுகின்ற வாணிக ஒப்பந்தம் இருமுக வாணிக ஒப்பந்தம் (Bilateral Trade Agreement) எனப்படும்.
பொருள்களை ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்ய இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுகின்ற வாணிக ஒப்பந்தம் இருமுக வாணிக ஒப்பந்தம் (Bilateral Trade Agreement) எனப்படும். உற்பத்தியையும் விலைகளையும் ஏற்றுமதி இறக்குமதி அளவுகளையும் ஒரு நிலைப்படுத்தும் நோக்கத்தோடு இத்தகைய ஒப்பந்தங்களைச் செயற்படுத்துகின்றனர். ஒரு நாடு மற்றொரு நாட்டோடு மேற்கொள்ளும் வாணிகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் சமநிலையை அடையவும், இத்தகைய வாணிக ஒப்பந்தங்கள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் மிகுதியாகத் தேயிலை, முந்திரிப் பருப்பு, சணல் ஆகியவை உற்பத்தியாகின்றன. செருமனியில் உற்பத்தியாகிற எந்திரங்கள் இந்தியாவிற்குத் தேவைப்படுகின்றன. இந்தியாவும் செருமனியும் இந்தப் பொருள்களை எவ்வகையில் எவ்வளவு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதென ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இந்த ஒப்பந்தம், ஒருவகையில் பண்டமாற்று முறையில் (Barter System) அமையும். இந்தியா மிகுதியாக ஏற்றுமதி செய்தால் அதன் மதிப்பினை உரூபாயில் பெறுவதா? செருமனி மார்க்கில் பெறுவதா? மிகுதியாக இறக்குமதி செய்தால் எப்படிப் பணத்தைப் பெறுவது என்பன ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுக் குறிக்கப்படும்.
ஒரு நாடு அயல்நாட்டு வாணிகத்தில் (Foreign Trade) கட்டுப்பாடற்ற வாணிகக் (Free Trade) கொள்கையைப் பின்பற்றலாம். அந்நிலையில் அந்நாட்டு வணிகர்கள், கட்டுப்பாடுகளின்றிப் பிற நாடுகளுக்குப் பொருள்களை ஏற்றுமதி (Export) செய்வதிலும், இறக்குமதி (Import) செய்வதிலும் தன்னிச்சையுடன் ஈடுபடுவார்கள். தடையிலா வாணிகத்தில் பல நாடுகளோடு வாணிகம் நடைபெறும். இதன் விளைவாக மொத்த ஏற்றுமதிகள் இறக்குமதிகளை விட மிகுதியாக இருக்கலாம். அல்லது மொத்த இறக்குமதிகள் ஏற்றுமதிகளை விட மிகுதியாக இருக்கலாம். இதனால், உள்நாட்டு வாணிகத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்படலாம். இது நாட்டுப் பொருளாதாரத்தில் சாதகமான (Favourable) அல்லது பாதகமான (Unfavourable) விளைவுகளை ஏற்படுத்தும்
பல நாடுகளோடு வாணிகம் நடைபெறும் பொழுது ஒரு சில நாடுகளிலிருந்து மிகுதியாக இறக்குமதி செய்யலாம். வேறு சில நாடுகளுக்கு மிகுதியாக ஏற்றுமதி செய்யலாம். மிகுதியாக இறக்குமதி செய்திருக்கும் நாடுகளுக்கு அந்நாட்டுப் பணம் தர வேண்டும். அப்பணம் இல்லாதபொழுது தங்கமாகக் கொடுக்க வேண்டும். அதற்காக ஏற்றுமதிகளைப் பெற்றுக்கொண்ட நாடுகளிடமிருந்து பணத்தைத் தங்கமாகப் பெற வேண்டும். இவ்வாறு ஏற்றுமதிகளையும் இறக்குமதிகளையும் சமநிலைப் (Balance) படுத்த முயலுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் தோன்றுகின்றன. இவற்றைத் தவிர்க்க வாணிக ஒப்பந்தங்களின் மூலம் ஒரு நாடு மற்றொரு நாட்டோடு வாணிகம் செய்து, ஏற்றுமதி இறக்குமதிகளைச் சமநிலைப்படுத்தலாம்.
தடையிலா வாணிகத்தை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் வழிவகையாக வாணிக ஒப்பந்தங்கள் அமைகின்றன. இத்தகைய வாணிக ஒப்பந்தங்கள் இருவகைகளில் அமையலாம். ஒன்று, ஒரு நாட்டின் அரசு மற்றொரு நாட்டு அரசோடு செய்து கொள்கிற ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின் மூலம் ஒரு பொருளை எந்த அளவு ஏற்றுமதி செய்து அதற்கு ஈடாக வேறு எந்தப் பொருளை எந்த அளவு இறக்குமதி செய்வதென்று முடிவு செய்வார்கள். இது ஒருவகைப் பண்டமாற்று முறை போல் அமையும். மற்றொரு முறை, ஒரு நாட்டிலுள்ள வாணிக நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து, மற்றொகு நாட்டிலிருக்கும் வாணிக நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்வதாகும். இத்தகைய ஒப்பந்தங்களை அரசின் ஆதரவின்றிச் செயற்படுத்த இயலாது.
முதல் உலகப் போருக்குப்பின் பல ஐரோப்பிய நாடுகள், தங்களுக்குள் வாணிக ஒப்பந்தங்களைச் செய்து கொண்டன. எடுத்துக் காட்டாக, 1930க்குப் பின் பிரேசிலுக்கும் (Brazil) செருமனிக்கும் (Germany) நடந்த வாணிக ஒப்பந்தத்தின் மூலம் செருமனி பிரேசிலுக்கு ஒன்பது மிலியன் மார்க்கு மதிப்புள்ள நிலக்கரியை அனுப்பி. அதற்கு ஈடாகப் பிரேசிலிடமிகுந்து அதே மதிப்புள்ள காப்பியைப் பெற்றது. இதேபோலச் செருமனி எகிப்தோடும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி செருமனி உரத்தைக் கொடுத்து. எகிப்திடமிருந்து பருத்தியைப் பெற்றது. இத்தகைய வாணிக ஏற்பாடுகள் பொருளாதாரத்தில் சிறப்பிடம் பெறுகின்றன.
பல நாடுகள் இணைந்து வாணிகச் சமநிலையை எற்படுத்தும் நோக்கில் ஒப்பந்தம் செய்து கொள்வதை பன்முக வாணிக ஒப்பந்தம் (Multilateral Trade agreement) என்பர் ஒரு நாடு தனக்குத்தானே மற்றைய நாடுகளின் ஒப்புதல் பெறாமல், எந்தெந்த நாடுகளோடு ஏற்றுமதி, இறக்குமதி செய்வது, எவ்வகைப் பொருள்களில் செய்வது என முடிவு எடுத்துச் செயற்படலாம். இவ்வாறு செயற்படும் வாணிகம் ஒருமுக (Unilateral) அணுகுமுறை என்று கூறப்படும்.
இருமுக வாணிக ஒப்பந்தங்களில் உள்ள விதிமுறைகள் ஒன்றுபோல் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒப்பந்தம் செய்து கொள்கிற நாடுகளையும், அவை ஏற்றுமதி, இறக்குமதி செய்கிற பொருள்களையும் சார்ந்து, மாற்று விகிதங்கள் (Exchange Rate) வரையறுக்கப்படும். இதனால், இத்தகைய ஒப்பந்தங்களில் மிகுதியான வேறுபாடுகள் காணப்படலாம். பெருமளவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்கிற இரு நாடுகள் செய்து கொள்கிற வாணிக ஒப்பந்தங்கள் சிறப்பாகச் செயற்படுகின்றன என்று கருதுகின்றனர்.
பன்முக வாணிக ஒப்பந்தங்களைவிட இருமுக வாணிக ஒப்பந்தங்கள் எளிதாகச் செயற்படுகின்றன. பன்முக வாணிக ஒப்பந்தங்களில் பல நாடுகள், பல பொருள்களில் வாணிகம் செய்வதை முடிவு செய்ய வேண்டியுள்ளதால், நடைமுறையில் பல சிக்கல்கள் எழுவதுண்டு. பல நாடுகள் பல பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய விரும்பும்போது, எந்தெந்த நாடுகளோடு என்னென்ன பொருள்களை எந்த மாற்று வீதத்தில், எந்தெந்த அளவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதென்று முடிவு செய்வது மிகவும் சிக்கல் நிறைந்த பணியாகும். இருமுக வாணிக ஒப்பந்தத்தில் இத்தகைய சிக்கல்கள் இல்லை. இரு நாடுகள் தங்கள் உற்பத்தி வாய்ப்புகளையும் நாட்டின் தேவைகளையும் கணக்கிட்டு, எளிதாக வாணிக ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளலாம்.
இருமுக வாணி ஒப்பந்தத்தில் ஏற்றுமதி செய்கிற பொருள்களைப் பற்றிய விவரங்களை இரு நாடுகளும் முன்கூட்டியே அறிவதால், உற்பத்தி தங்கு தடையின்றி நடைபெறும், அங்காடி உறுதி செய்யப்பட்டுவிடுவதால் திட்டமிட்டு உற்பத்தியைப் பெருக்கலாம். குறிப்பாக, வேளாண்மை போன்ற துறைகளில் தொழில் நுட்ப முன்னேற்றம் ஏற்பட இது தூண்டுதலாக அமைகிறது. மிகுதியாக ஒரு பொருளை உற்பத்தி செய்யும் நாட்டிற்கு இருமுக வாணிக ஒப்பந்தத்தின் மூலம் புதிய அங்காடி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இது தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக உதவுகிறது.
அயல்நாட்டுச் செலாவணி எவ்வளவு கிடைக்குமென்று இருமுக வாணிக ஒப்பந்தத்தில் முன்கூட்டியே திட்டவட்டமாக அறிய முடிகிறது. அதற்கு ஏற்றாற் போல் பொருள்களை எவ்வளவு இறக்குமதி செய்வதென்று முடிவு செய்ய இயலும். இறக்குமதி செய்கிற நாடுகளுக்கு, குறிப்பிட்ட விலையில் எவ்வளவு பொருள்கள் கிடைக்குமென்பது திட்டவட்டமாகத் தெரியும். ஆதலால், அவற்றை உற்பத்தி செய்ய வேண்டுமென்ற கவலை இல்லை. எப்பொழுது பொருள்கள் இறக்குமதியாகும் என்பதை வரையறுத்து விட்டால், உள்நாட்டு அங்காடியில் பொருள்களின் விலைகளை ஒருநிலைப் படுத்த இயலும்.
சில பொருள்கள் உலக அளவில் பற்றாக்குறையாக இருக்கலாம். அவை ஒரு நாட்டின் பொருளாதார வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத தேவையாகவும் இருக்கலாம். இருமுக வாணிக ஒப்பந்தங்கள் அத்தகைய பொருள்கள் கிடைக்குமென்பதை உறுதி செய்கின்றன. இதனால், திட்டமிட்ட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளலும்.
இருமுக வாணிக ஒப்பந்தத்தில் வாணிகச் செலுத்துநிலை எளிதாகச் சமநிலைப்படுத்தப்படுகிறது. ஏற்றுமதி, இறக்குமதி அளவுகளை வறையறுத்துக் கொடுக்கல் வாங்கலில் சமப்படுத்தல் நிகழ்கிறது. இருமுக வாணிக ஒப்பந்தம் அதில் ஈடுபடும் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் நிலையில் அமைகிறது. ஒரு நாடு மற்றொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி, அதன் மூலம் தானும் வளர வாய்ப்புப் பெறுகிறது.
இருமுக வாணிக ஒப்பந்தத்தில் சில குறைகளும் உள்ளன. இருமுக வாணிக ஒப்பந்தத்தின் இயல்பினைத் தெளிவாக அறிய அவை உதவுகின்றன. ஏற்றுமதி செய்ய ஒப்புக் கொண்டிருக்கும் பொருள்களின் உற்பத்திச் செலவு கூடினால், ஏற்றுமதி செய்யும் நாட்டிற்கு மிருந்த இழப்பு ஏற்படும். விலையை முன்கூட்டியே வரையறுத்து ஒப்பந்தம் செய்யப்படுகிறது. ஆனால், உற்பத்திச் செலவை ஒரே நிலையாக வைத்திருக்க முடியுமென்று கூற இயலாது. குறிப்பாகப் பணவீக்கக் காலத்தில் உற்பத்திச் செலவு கூடும். இதனால், இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியாது. உற்பத்திச் செலவு குறையுமானால் ஏற்றுமதி செய்கிற நாட்டிற்கு மிகுந்த ஆதாயம் கிடைக்கும், ஆதாயம் கிடைக்குமா, இழப்பு ஏற்படுமா என்பதை முன் கூட்டியே ஊகிக்க முடியாது. இந்த உறுதிப் பாடின்மையான இடர்தாங்கலை (Risk bearing) ஏற்றுமதி செய்யும் நாடு ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதே காலத்தில் இறக்குமதி செய்யும் நாடும் ஒப்பந்த விலையிலிருந்து நடைமுறை அங்காடி விலை கூடினாலோ குறைந்தாலோ ஏற்படக் கூடிய விளைவுகளை ஏற்றுக் கொள்ளவேண்- டும். இதிலும் ஒருவகை இடர்தாங்கல் இருப்பதைக் காணலாம்.
இருமுக வாணிக ஒப்பந்தத்தில் ஈடுபடும் நாடுகள், பிற நாடுகளை வேறுபடுத்திப் பார்க்கின்றன. பிற நாடுகளோடு செய்யக்கூடிய வாணிகம் தடைபடுகிறது. இதனால், பிற அரசியல் உறவுகளும் பாதிக்கப்படுகிற நிலை ஏற்படலாம். இருமுக ஒப்பந்தம் செய்கிற நாடுகளுள் ஆற்றல் மிக்க நாடு தனக்குச் சாதகமான முறையில் ஒப்பந்தத்தை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பலமற்ற நாடு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். குறிப்பாக, வேளாண்மைப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்குப் பேரம் செய்கிற ஆற்றல் (Bargaining power) குறைவு. பொருள்களை நீண்டகாலம் வைத்துக் கொண்டு காத்திருக்க முடியாதாகையால் தொழில் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு அவை கட்டுப்பட வேண்டியுள்ளன. பொதுவாக இருமுக வாணிக ஒப்பந்தம் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்குப் பாதகமாக அமைகிறது.
இருமுக வாணிக ஒப்பந்தத்தின் விளைவாக உள் நாட்டு அங்காடியில் ஓர் உள்ளார்ந்த நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. ஒப்பந்தத்தில் ஈடுபட்ட நாடு, ஒப்பந்தப்படி பொருள்களை ஏற்றுமதி செய்ய உள் நாட்டு அங்காடியில் பொருள்களை வாங்கலாம். ஒப்பந்த விலை, முன்பு நாட்டில் நிலவிய விலையின் அடிப்படையில் அமைந்திருக்கும். பின்னர் ஏற்றுமதிக்காகப் பொருள்களைக் கொள்முதல் செய்கிற பொழுது உள்நாட்டு விலையில் மாறுதல் ஏற்படும், உள்நாட்டு விலைகளை நிலைப்படுத்துதல் என்பது சிக்கலான பணியாகிவிடும். இதனால், உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்படலாம். இருமுக ஒப்பந்தங்களைப் பொதுவாகக் குறுகிய கால அடிப்படையிலேயே செய்கின்றனர். நீண்டகால வாணிக ஒப்பந்தங்களில் ஆண்டுதோறும் சில குறிப்பிடத்தக்க விதிமுறைகளை மாற்றியமைக்க வழிவகை செய்திருப்பார்கள். ஆதலால், இத்தகைய வாணிக ஒப்பந்தங்களை நம்பி ஒரு நாடு அடிப்படைப் பொருளாதார மாற்றங்களைச் செய்ய இயலாது.
முதன்மைப் (வேளாண்மைப்) பொருள்களை ஏற்றுமதி செய்பவர்களின் உண்மையான வருவாயை இருமுக வாணிக ஒப்பந்தங்களின் மூலம் நிலைப்படுத்த முடியுமென்று கூற முடியாது. ஏனென்றால் ஒப்பந்த விலைகளை, இரு நாடுகளின் பேரம் பேசும் ஆற்றல்களையும், வெளி அங்காடியில் நிலவும் விலைகளையும் ஒட்டியே முடிவு செய்கின்றனர். பொருள்களை உற்பத்தி செய்ய ஆகின்ற செலவைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. உற்பத்திச் செலவின் அடிப்படையில் விலைகளை வரையறுத்தால், உற்பத்தியாளர்களின் உண்மையான வருவாய் கூடும். இருமுக வாணிக ஒப்பந்த விலைகளை ஆய்வின் அடிப்படையில் முடிவு செய்யாமல் பொதுவான கண்ணோட்டத்தில் முடிவு செய்கின்றனர். இவ்வாறு வரையறுக்கப்பட்ட விலைகள், நீண்டகால விலைப் போக்கிலிருந்து மாறுகிறபொழுது, நாட்டின் உற்பத்திக் காரணிகளைப் பகிர்ந்தளித்துப் பயன்படுத்தும் போக்கில் மாறுதல் ஏற்படும். இதனால், நாட்டின் மொத்த உற்பத்தி குறைகிற நிலை ஏற்படலாம்.
இருமுக வாணிக ஒப்பந்தம் ஒரு நாட்டின் அயல்நாட்டு வாணிகத்தை வரையறுக்கிறது. பல நாடுகளோடு வாணிகம் செய்கிற பொழுது பலவகையான பொருள்களை ஏற்றுமதி செய்யவும் இறக்குமதி செய்யவும் வாய்ப்புகள் இருக்கும். இருமுக வாணிக ஒப்பந்தப்படி வாணிகம் நடைபெறுகிற பொழுது அயல்நாட்டு வாணிகப் பொருள்களின் எண்ணிக்கையும் அளவும் குறைகின்றன. இதனால் உலகின் மொத்த வாணிகம் குறையும் போக்குத் தோன்றலாம். இது உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றதன்று என்று சிலர் கருதுகின்றனர்.
இன்று உலக நாடுகளுக்கிடையில் குழு மனப்பான்மை வளர்ந்திருக்கிறது. அரசியல் கொள்கை, அங்காடி வாய்ப்பு, உள்நாட்டுச் சிக்கல்கள், வெளிநாட்டு உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகள் குழுக்களாகப் பிரிந்துள்ளன. இதனால், வாணிக உறவுகளையும் ஒவ்வொரு நாடும் சில குறிப்பிட்ட நாடுகளோடு மட்டும் வைத்துக் கொள்ள விரும்புகின்றன. இந்தச் சூழ்நிலையில் இருமுக வாணிக ஒப்பந்தங்கள், இயல்பான பன்னாட்டு வாணிக நடவடிக்கைகளாக மாறி வருகின்றன. சீரான ஆய்வின் அடிப்படையில், உள்தாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் செய்து கொள்கிற இருமுக வாணிக ஒப்பந்தங்களை வரவேற்கலாம். மா.பா.கு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 233)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qu5svpzg/
தமிழ்“இருமுக வாணிக ஒப்பந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qu5svpzg/APA
Oliyon Research. (2026). இருமுக வாணிக ஒப்பந்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qu5svpzg/MLA
"இருமுக வாணிக ஒப்பந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qu5svpzg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment