பிரான்சு நாட்டைச் சார்ந்த பழம்பொருள் திரட்டுபவரும், சுவடிக்கூடம் காப்பவரும் (Antiquarian and Archivist) ஆவர். இவர் பிரான்சு நாட்டின் தலைநகரமான பாரிசில் கி.பி. 1807–ஆம் ஆண்டு பிறந்தார். இலாபோர்டே (Laborde) கி.பி. 1827–28–இல் உரோமாபுரியிலும், பின்னர் கி.பி. 1831 வரை இலண்டனிலும் பிரெஞ்சுத் தூதரின் செயலராகப் பதவி வகித்தார். இவர்தம் தந்தையார் சோசப்பு–டி–இலாபோர்டே (Joseph de Laborde)யுடன் அராபியா, சிரியா, அனடோலியா (Anatolia), எகிப்து போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்தார். ‘அராபிய பிட்ரியா பயணம்’, ‘சிரியாவின் பயணம்’, ‘ஆசியா மைனர் பயணம்’, என்னும் நூல்களைச் சில எழுத்தாளருடன் சேர்ந்து எழுதினார். ஏதென்சு நகரில் கி.பி. 15, 16–ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சுப் பண்பாட்டில் அச்சுச்கலை, செதுக்குக் கலை ஆகியவற்றின் தோற்றம் பற்றிய செய்திகளை வெளியிட்டார். இவர் கி.பி. 1841–ஆம் ஆண்டில் தம் தந்தையாருக்குப் பின் சட்டப் பேரவையின் உறுப்பினரானார், அடுத்த ஆண்டு கல்வெட்டியல் கழகத்தில் பேராசிரியரானார். இலுவார் அருங்காட்சியகக் காப்பாளராக கி.பி. 1845–இல் இவர் அமர்த்தப்பட்டார். பின்னர் கி.பி. 1857–இல் ‘இம்பீரியல்’ சுவடிக்கூடத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இப்பொறுப்பில் இவர் அரசு ஆவணங்கள் பலவற்றையும் பல தொகுதிகளாக வெளியிட்டார். ஆளவை மன்றத்தில் கி.பி. 1868–இல் உறுப்பினராக இருந்தார். இவர் இடைக்காலம் பற்றிய அருஞ்சொல் விளக்கக் கோவை (Glossary) ஒன்றை எழுதினார். இலாபோர்டே கி.பி. 1869–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 26–ஆம் நாள் பான்டெயின்புளு (Fontaine–bleau) என்னுமிடத்தில் காலமானார்.