அயல்நாட்டு உதவி
ayalnāṭṭu utavi
பொருளாதார முன்னேற்றம் அடையாத நாடுகளில் முதலீடு மிகவும் குறைவாக உள்ளது.
பொருளாதார முன்னேற்றம் அடையாத நாடுகளில் முதலீடு மிகவும் குறைவாக உள்ளது. மக்களின் வருவாய் குறைவாக இருப்பதால் சேமிப்பும் குறைந்து, போதுமான அளவு மூலதனம் கிடைப்பதில்லை. கடந்த நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள், வளர்ச்சி அடையாத நாடுகளுக்கு உதவி புரிய வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்தன. பிற நாடுகளின் வறுமையை நீக்குவதன் வாயிலாகத் தன்னாட்டு வளத்தினைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு அந்நாடுகள் வந்தன. அரசாங்கங்களுக்கிடையே நீதி உதவி செய்வதன் வாயிலாக, வளர்ச்சி குன்றிய நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தைக் காண முயன்றன. இதனால், அயல்நாட்டு உதவி (Foreign Aid), கடன்கள் (Loans), கொடைகள் (Grants) முதலிய வசதிகள் ஏற்பட்டன; பன்னாட்டு நிதி நிறுவனங்கள் உருவாகி வளர்ந்தன. இந்தியா போன்ற பொருளாதார முன்னேற்றம் அடைந்து வரும் நாடுகளுக்கு; அயல் நாட்டு உதவி, முன்னேற்றத்தின் முதன்மைக் கட்டங்களில் வேண்டி இருப்பதால், இந்நாடுகள் அயல்நாட்டு உதவியைப் பெரும்பாலும் எதிர்பார்க்கின்றன. இந்நாடுகளுக்கு அயல்நாட்டு உதவி, வளர்ச்சிக் காலங்களில் மூவகை இடைவெளிகளை அகற்றுவதற்குத் தேவைப்படுகிறது. அவை (1) சேமிப்பு முதலீட்டு இடைவெளி, (2) அயற் செலாவணி இடைவெளி, (3) தொழில் நுணுக்க இடைவெளி ஆகியவையாம்.
சேமிப்பு–முதலீட்டு இடைவெளி
இந்தியத் திட்டத்தில் அயல்நாட்டு உதவி, உள்நாட்டு முதலீட்டை மேலும் பெருக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் நிகர சேமிப்பு, முதலீட்டை விடக் கூடுதலாக இருந்தது. நிகர தேசிய வருமானத்தில் 1950–51–ஆம் ஆண்டு உள்நாட்டுச் சேமிப்பு 4.98 விழுக்காடாகவும், முதலீடு 4.94 விழுக்காடாகவும் இருந்தன. ஆனால், இன்றுவரை உள்நாட்டுச் சேமிப்பு, உள்நாட்டு முதலீட்டைவிடக் குறைந்து கொண்டே வருகிறது. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதியில் 0.8 விழுக்காடு இடைவெளி, சேமிப்புக்கும் முதலீட்டிற்கும் இருந்தது. அதனால், இந்த இடைவெளியை 1984–85–ஆம் ஆண்டிற்குள் ஆறாம் ஐந்தாண்டுத்திட்டக் காலத்தில், 0.6 லிழுக்காடாகக் குறைக்க முயல்கிறார்கள்.
அயற்செலாவணி இடைவெளி
அயற்செலாவணி சிறப்பாக வெளிநாட்டுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குத் தேவைப்படுகிறது. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தில், வாணிகச் செலுத்துநிலைகளை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னுரிமை (Priority) கொடுக்கப்பட்டிருக்கிறது. உரூ. 5889 கோடி அயல்நாட்டு உதவியாக அரசு வாங்க முடிவு செய்துள்ளது. அயற் செலாவணி இடைவெளி முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் உரூ. 198 கோடியிலிருந்து மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 2825.3 கோடியாக மிகுதிப்பட்டது.
தொழில் நுணுக்க இடைவெளி
அயல்நாட்டு உதவி, இந்தியாவிற்கும் மற்றப் பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளுக்குமுள்ள தொழில் நுட்ப அறிவின் இடைவெளியைப் போக்குவதற்கு உதவுகிறது. அயல்நாட்டுத் தொழில் நுணுக்க அறிவைப் பெறுதற்குச் சில வரையறைகள் உள்ளன. சிறப்பாக, ஒரு குறிப்பிட்ட தொழில் நுணுக்க அறிவானது இந்தியாவில் செயற்படாமல் இருந்தால்தான், அந்த நுணுக்கத்தைப் பிறரிடமிருந்து பெற முடியும். இவ்வரையறையின் முக்கிய நோக்கம் இத்துறையில் நாடு தன்னிறைவை அடைய வேண்டும் என்பதேயாகும். ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம் உள்நாட்டுச் சேமிப்பைப் பெருக்கி, முதலீட்டை மிகுதிப்படுத்துவதாகும். வளர்ந்து வரும் இறக்குமதிச் செலவைக் குறைக்க ஏற்றுமதிப் பொருள்களின் உற்பத்தியை மிகுதியாக்கி, அயல்நாட்டுச் செலாவணியையும் பெருக்க வேண்டும். இதற்கு உள்நாட்டிலேயே தொழில் நுணுக்க அறிவை நன்கு வளர்ப்பதற்கு முயல வேண்டும். அயல்நாட்டு உதவி இந்நோக்கத்தை நிறைவு செய்வதற்கேயாகும்.
முதலாம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்திலிருந்து இந்தியா பல்வேறு நாடுகளின் அயல்நாட்டு உதவியைப் பெற்றுவருகிறது. அயல் நாட்டுப் பொருளாதார அங்காடிகளிலிருந்தும் திட்டமிட்ட மையப் பொருளாதாரங்களிலிருந்தும் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்தும் இவ்வுதவி இந்தியாவுக்குக் கிடைக்கிறது. அயல்நாட்டு உதவியை இரண்டு கோணங்களில் ஆராயலாம். முதலாவது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட உதவி. இரண்டாவது, அந்த உதவி எந்த அளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது. இவ்விரண்டு உதவிகளும், பொருளாதாரம் எந்த அளவிற்கு இவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதைக் காட்டுகின்றன. ஒரு பொருளாதாரம் இவ்விரண்டு உதவிகளையும் மிகுந்த அளவில் பயன்படுத்தினால், அது பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருவதைக் குறிக்கும். 1982–83–ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட உதவி உரு. 34.811.5 கோடியாகும். இதில் உரூ. 27.055 கோடி பயன்படுத்தப்பட்டது. ஒதுக்கப்பட்ட உதவி என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தப்படுவதற்காகக் கொடுக்கப்படுவது. ஆனால், சில வேளைகளில் அந்த உதவி குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தப்படாமற் போகலாம். இவ்வுதவி, பொதுவாக நிகழ்காலத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், நீண்டகாலப் பொருளாதாரச் செயல்களில் ஈடுபடுவதற்கும் கொடுக்கப்படுவதாகும். இவ்வுதவியில் ஒரு பகுதி, அதே காலத்தில் பயன்படுத்துவதற்கும் வழங்கப்படுகிறது.
அயல்நாட்டு உதவி அதிக அளவில் வழங்கப்பட்டாலும், சீரிய முறையில் வழங்கப்படாவிட்டால் அதனால் யாதொரு பலனும் அடைய முடியாது. அயல் நாட்டுக் கடன்கள் பெற்றால் கட்டாயமாக அவற்றை முதலும் வட்டியுமாகத் திருப்பித் தர வேண்டும். ஆனால், கொடைகளாகப் பெற்றதனைத் திருப்பித் தர வேண்டியதில்லை. பொதுவாக, நாடுகள் கொடைகளை மிகுதியாக நம்பி இருக்கக் கூடாது. பெரிய கடன் தொகையை மற்ற நாடுகளிடம் இருந்து பெறும் பொழுது நாட்டின் கடன் சுமை மிகுதியாகிறது. இந்தியாவில் 1974–75 வரை அயல்நாட்டு உதவி கடன் வாயிலாகப் பெறப்பட்டது. ஆனால், 1975–76–ஆம் ஆண்டிலிருந்து அயல்நாட்டு உதவி கொடை வாயிலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் கொடை. களின் அளவு மிகுந்து கொண்டே செல்கிறது. 1974–75–ஆம் ஆண்டு 7.0 விழுக்காட்டில் இருந்த கொடையின் அளவு, 1975–76, 1976–77–இல் 15.4 விழுக்காடாகவும், 1977–78–ஆம் ஆண்டு 20.2 விழுக்காடாகவும், 1978–79–ஆம் ஆண்டு 21.6 விழுக்காடாகவும், 1979–80–ஆம் ஆண்டு 22.3 விழுக்காடாகவும், 1980–81–ஆம் ஆண்டு 18.3 விழுக்காடாகவும், 1981– 82–ஆம் ஆண்டு 17.3 விழுக்காடாகவும் உயர்வு பெற்றது. இவ்வாறு கொடைகளின் அளவு மிகுதிப்படுவதற்குக் காரணம், இந்தியாவின் கடன் பளு நாளுக்கு நாள் மிகுதியாகிக் கொண்டு வருவதேயாகும்.
அயல்நாட்டு உதவியின் நெகிழ்ச்சித் தன்மையை அறிவதற்குக் கட்டுப்பட்ட, கட்டுபடாத கடன்கள் (Tied & Untied Credits) உதவுகின்றன. கட்டுப்படாத கடனை ஒரு நாடு பெறும்போது அது விரும்பிய திட்டங்களில் முதலீடு செய்வதன் வாயிலாகப் பொருளாதார முன்னேற்றம் அடையலாம். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குக் கிடைக்கும் உதவி பெரும்பாலும் கட்டுப்பட்ட உதவியேயாகும். அமெரிக்க உதவியை இந்தியா, அமெரிக்கப் பொருள்கள், பணிகள் மீதுதான் செலவிட வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. பொதுவுடைமை நாடுகளிலிருந்து கிடைக்கப் பெறும் உதவியும் இவ்வகையைச் சார்ந்ததே. கட்டுப்பட்ட கடனில் பல குறைபாடுகள் உள்ளன. கடன் பெற்ற நாடு, கட்டாயமாக உதவி அளித்த நாட்டின் பொருள்களையும் கருவிகளையும் வாங்க நேரிடுகிறது. இதனால், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களின் செலவு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக மிகுதிப் படுத்தப்படுகிறது. ஏனென்றால், பன்னாட்டு விலைகளை விட உதவி அளிக்கும் நாட்டுப் பொருள்களின் விலை மிகக் கூடுதலாக உள்ளது. மேலும், அயல் நாட்டு உதவியை அளிக்கும் நாடுகள் பொருள்களையும் கருவிகளையும் தங்கள் கப்பல்களிலேயே ஏற்றுமதி செய்வதால், உதவியைப் பெறும் நாடுகள், கப்பல் கட்டணங்களையும் செலுத்த வேண்டியுள்ளன. இதனால், கடன் உதவிபெறும் நாடு, கடன்பெறும் முக்கிய நோக்கத்தையே இழந்துவிடுகிறது. மேலும் கடன் அளிக்கும் நாடு, கட்டாயமாக மூலதனம் செறிந்த உற்பத்தி (Capital Intensive Technique) முறையையே கையாள வேண்டும் என்று உதவி பெறும் நாட்டைக் கட்டாயப்படுத்துவதால், உழைப்பு (Labour) மிகுதியாகப் பயன்படுத்தும் உழைப்புச் செறிந்த உற்பத்தி முறையைக் (Labour Intensive Technique) கையாள முடியாமல் போய்விடுகிறது.
கட்டுப்படாத கடன்கள் பொது நோக்கத்திற்காகக் கொடுக்கப்படுவதாகும். இதனைத் திட்டமில்லாத உதவி என்றும் குறிப்பிடுகின்றனர். ஆலன் கார்லின் (Alan Carlin) என்ற பொருளாதார வல்லுநரின் கருத்துப்படி, கட்டுப்படாத உதவி என்பது, உதவியைப் பெறும் நாடு, தான் பெறும் உதவியை ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு மட்டும் செலவிடாமல் பல வளர்ச்சித் திட்டங்களுக்காகச் செலவிடுவதாகும். இதனால், இவ்வுதவி கட்டுப்பட்ட உதவியை விட மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், இவ்வுதவியைப் பெறுவதால், உதவியின் செலவும் குறைவாக இருக்கும்.
ஆனால், இப்பொழுது இந்தியாவில் கட்டுப்பட்ட கடனின் அளவே பெருகி வருகிறது. கட்டுப்பட்ட கடனின் அளவு, 1976–77–ஆம் ஆண்டு, 55.4 விழுக்காடாகவும், 1977-78-ஆம் ஆண்டு 22.4 விழுக்காடாகவும், 78–79-ஆம் ஆண்டு 24.2 விழுக்காடாகவும், 1979–80–ஆம் ஆண்டு 21.3 விழுக்காடாகவும், 1980–81–ஆம் ஆண்டு 17.4 விழுக்காடாகவும், 1981–82–இல் 29.3 விழுக்காடாகவும் உயர்ந்தது. கட்டுப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும் பொழுது இந்தியாவின் செலவு ஒரு மடங்கு மிகுதியாகிறது. இக்கடனை அடைப்பதற்கு இந்தியா, தன் முக்கிய பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், ஏற்றுமதியின் மதிப்பு, தான் வாங்கும் கடனின் அளவைவிட மிகுதியாக இருப்பதால் இந்தியாவுக்கு மிகுந்த இழப்பு ஏற்படுகிறது. மேலும், இக்கடனை அடைப்பதற்கு அயற் செலாவணி பெருமளவில் தேவைப்படுகிறது. இந்தியச் செலாவணியால் கடனைத் திருப்பிக் கொடுத்தால் வெளிநாட்டுக் கடன் தொல்லையைச் சிறிதளவு குறைக்க முடியும். அன்றியும் கடனைத் திருப்பிச் செலுத்தும்பொழுது அக்கடன், நீண்டகாலக் கடனாகவோ, குறுகியகாலக் கடனாகவோ இருக்கலாம். நீண்டகாலக் கடனை விடக் குறுகியகாலக் கடனைத் திருப்பிச் செலுத்துவது மிகவும் கடினமாகும். கொடைகள் வாயிலாகப் பெறும் கடனைத் திருப்பிச் செலுத்தும் கடப்பாடு இல்லை. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவிலிருந்து பொதுச் சட்டம் 480 (P.L. 480) வாயிலாகவும், பொதுச்சட்- டம் 665 (P.L. 665) வாயிலாகவும் வரும் உதவிகளைக் கூறலாம்.
எந்தத் துறையில் இந்தியா மிகுதியாக அயற்செலாவணியைச் செலவழிக்கத் திட்டமிடுகிறதோ, அந்தத் துறைக்கு முதலிடம் கொடுத்து அயல்நாட்டு உதவி வாயிலாக அத்துறையை முன்னேற்றமடையச் செய்கிறது. மேலும் இதன் வாயிலாக, மூலதனப் பொருள்கள் உற்பத்தி செய்யும் துறையையும், பொருளாதார நடவடிக்கையையும் விரிவுபடுத்தி, நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துகிறது. உள்நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்பொழுது, உணவுப்பொருள்களை இறக்குமதி செய்து, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துகிறது. இந்தியாவில், அயல்நாட்டு உதவி, போக்குவரத்து வளர்ச்சி, மின் திட்டங்கள், இரும்பு உற்பத்தி, தொழில்துறை முன்னேற்றம், வேளாண்மை முன்னேற்றம், உணவுப் பொருள்கள் உதவி, எண்ணெய், மற்றும் எரிபொருள், ஆற்றல் (Energy) பொருள்கள் வாங்குவது, உயர்கல்வி அளித்தல், குடிநீர் வசதி, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம், நகர முன்னேற்றம் ஆகியவற்றிற்காகவும் வாங்கப்படுகிறது. மேலும், குறுகிய காலக் கடன்களை முதலும் வட்டியும் சேர்த்து அடைக்க வேண்டியிருப்பதால் இவ்வுதவி தேவைப்படுகின்றது. பற்றாக்குறையின் காரணமாக இறக்குமதிப் பொருள்களின் அளவு ஏற்றுமதிப் பொருள்களின் அளவை விட மிகுதியாக இருப்பதால், இறக்குமதிப் பொருள்களுக்கு அயற் செலாவணியைச் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அயல்நாட்டு உதவியை வரையறுக்கும் காரணிகள்
அயல்நாட்டு உதவியைச் சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டுமானால், பொருளாதார முன்னேற்றம் அடையாத நாடுகளில், அகக் கட்டுமான (Infrastructure) வசதிகளான போக்குவரத்து, மின்சாரம், உழைப்புத் திறன் ஆகியவை கண்டிப்பாக இருத்தல் வேண்டும். மேலும், அயல்நாட்டு உதவியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டங்களை இந்நாடுகள் உருவாக்க வேண்டும். பொதுவாகப் பொருளாதார வளர்ச்சி அடையாத நாடுகளில் நிலையான அரசியல் அமைப்பினைக் காண முடியாது. எனவே, இவ்வுதவியை நிலையான அரசியல் அமைப்புள்ள நாடுகளும், சட்டமும் ஒழுங்கும் நன்றாகக் காப்பாற்றப்படும் நாடுகளுமே பெற முடியும். அந்நாடுகளில் பணவீக்கமும் மிகுதியாக இருக்கக்கூடாது. மேலும், அந்நாடுகளின் ஏற்றுமதி மிகுதியாகவும் இறக்குமதி குறைவாகவும் வளர்ச்சிக் காலங்களில் இருந்தால், மிகையான அயல்நாட்டு உதவியைப் பெற முடியும்.
நர்சுகு (Nurske) என்ற பொருளாதார வல்லுநரின் கருத்துப்படி, வீட்டில்தான் மூலதனம் உருவாக்கப்படுகிறது என்பதற்குத் தகுந்தாற்போல், அந்நாட்டு மக்கள் திறமைசாலிகளாகவும் உழைப்பாளிகளாகவும் வலுவுள்ளவர்களாகவும் இருந்தால், அயல்நாட்டு உதவியைப் பெருமளவில் அடையமுடியும். பொருளாதார, சமூக, அரசியல் காரணிகள் அயல்நாட்டு உதவியை உறுதிப்படுத்துகின்றன. அயல்நாட்டு உதவி அளிக்கும் நிறுவனங்கள் 1. பன்னாட்டு வளர்ச்சி மறு சீரமைப்பு வங்கி, 2. பன்னாட்டு நிதி நிறுவனம். 3. பன்னாட்டு வளர்ச்சிக் குழு. 4. ஆசிய வளர்ச்சி வங்கி முதலியனவாகும்.
இந்தியா 1949–ஆம் ஆண்டில் பன்னாட்டு வளர்ச்சி மறுசீரமைப்பு வங்கியில் உறுப்பினராகச் சேர்ந்தது. அவ்வங்கியின் வாயிலாக 1970 சூன் 30 வரை இந்தியாவுக்கு உரு. 18418.52 மிலியன் கடனுதவியாகக் கிடைத்துள்ளது. இதனால், இந்தியாவில் தொழிற்சாலைகளும் போக்குவரத்தும் பெரிதும் பயனடைந்தன. மேலும், தொடர் வண்டிப் போக்குவரத்து, உரத் தொழிற்சாலை, வேளாண்மை, நிலக்கரிச் சுரங்கங்கள் ஆகியவை நல்ல பலனை அடைந்தன. கூட்டுறவுத் துறையில் உள்ள புல்புர் உரத் தொழிற்சாலைக்கு மட்டும் உரூ. 1,253.5 மிலியன் கடனுதவியாகக் கிடைத்தது.
இந்தியாவில் கடுமையான அயற் செலாவணித் தட்டுப்பாடு ஏற்பட்டதன் விளைவாக, இந்திய நிதி உதவிக் கூட்டிணைப்பு (Indian Consortium) 1957–58–இல் நிறுவப்பட்டது. இதன் சிறப்பு நோக்கம், பல்வேறு மூலங்களிலிருந்து கிடைக்கும் அயல்நாட்டு உதவியை ஒன்று திரட்டி நாட்டிற்கு அளிப்பதாகும். இக்கூட்டிணைப்பின் சிறப்பு உறுப்பு நாடுகளாக இருப்பவை உலக வங்கி, பன்னாட்டு வளர்ச்சிக் கழகம், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சப்பான், ஐரோப்பியக் கழகம் ஆகியவையாம். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து அயற் செலாவணியும் பெட்ரோலும் (கல்லெண்ணெய்) அயல்நாட்டு உதவியாக இந்தியாவுக்கு வழங்கப்படுகின்றன. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து 1974–75, 1975–76–ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்குப் பெருமளவு அயல்நாட்டு உதவி கிடைத்துள்ளது. இந்திய நிதி உதவிக் கூட்டிணைப்பு உறுப்பினர்களிடமிருந்து 1982–83–ஆம் ஆண்டுவரை 90 விழுக்காடு அயல்நாட்டு உதவி கிடைத்துள்ளது. கடன்கள், கொடைகள், பொருள்கள் மூலமாக இவ்வுதவி கிடைத்துள்ளது.
பன்னாட்டு வளர்ச்சிக் கழகத்திலிருந்து 40 விழுக்காடு அளவுக் கடன் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 1976 சூன் 30 வரை உரூ. 47457.05, மிலியன் உதவி இந்தியாவுக்கு அளிக்கப்பட்டது. இதில் உரூ. 15,295 மிலியன் அயல்நாட்டிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது. மேலும் இக்கழகத்தினால் வேளாண்மை, நீர்ப் பாசனம், உரத் தொழிற்சாலை, இரயில் தொடர்வண்டிப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து ஆகியன முன்னேற்றம் அடைந்தன.
பொதுவுடைமை நாடுகளில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதன்மை இடம் பெறுகின்றன. எடுத்துக் காட்டாக இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் சோவியத் உருசியா உரூ. 6,470 மிலியன் கடனாக அளித்துள்ளது. செக்கோசுலவேகியா, போலந்து, யூகோசுலேவியா போன்ற நாடுகள் 1981–82 ஆண்டு வரை உரூ. 14,230 மிலியன் கடனாக அளித்துள்ளது. இதில் உரூ. 61 மிலியன் கொடைகளாகும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளால் அளிக்கப்படும் கடன்கள் மற்ற நாட்டுக் கடன்களிலிருந்து மாறுபடுகின்றன. ஏனென்றால், இக்கடன்கள் குறுகிய காலக் கடன்களேயாகும். இக்கடன் கொடுக்கப்பட்ட ஓராண்டிற்குள் முதல் தவணையைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். மேலும், இவை கட்டுப்பட்ட கடன்களாகவே இந்தியாவுக்கு அளிக்கப்படுகின்றன. இக்கடன்களுக்கு வட்டி வீதம் 2.5 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடு வரை விதிக்கப்படுகிறது. இந்தியச் செலாவணியில் வட்டியும் முதலும் கடன் அளித்த நாடுகளுக்குத் திருப்பிச் செலுத்தப்படுகின்றன. இச்செலாவணியை அந்நாடுகள் இந்தியாவிலிருந்து பொருள்கள் வாங்குவதற்குப் பயன்படுத்துகின்றன.
மேலும், ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் இந்தியாவுக்குக் கொடைகள் வாயிலாக உதவி புரிகின்றன. இதில், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், தனிப்பட்ட நிதி (Special Fund), அபுதாபி நிதி (Abudhabi Fund), சௌதி அரேபியா நிதி (Saudi Arabia Fund), குவைத்து நிதி (Kuwait Fund) ஆகியவற்றின் வாயிலாக இந்தியாவிற்குப் பெரும் உதவி அளித்துள்ளன. இதுவரை, இந்நாடுகள் உரூ. 17,104 மிலியன் மதிப்புள்ள கடனுதவி இந்தியாவுக்கு அளித்துள்ளன.
அயல்நாட்டு உதவியின் பங்கு
அயல்நாட்டு உதவி உள்நாட்டு மூலதனத்தை மிகுதியாக்குவதற்குத் தேவைப்படுகிறது. முன்னேற்றம் அடைந்து வரும் நாடுகளில் உள்நாட்டு வளங்கள் குறைவாகக் காணப்படுவதால், தேசிய வருவாயும் குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் 1951–ஆம் ஆண்டு தேசிய வருமானம் 5 விழுக்காடாக இருந்தது. மேலும், ஆள் வருமானம் (Per Capita Income) குறைவாகவும், வாங்கும் திறன் மிகுதியாகவும் இருப்பதால், சேமிப்பையும் முதலீட்டையும் மிகுதிப்படுத்த முடியாது. உள்நாட்டு மூலதனத்தை மிகுதிப்படுத்த வேண்டுமானால் அயல்நாட்டு உதவி கண்டிப்பாக வேண்டும். இத்திட்டங்கள் நீண்ட காலத் திட்டங்களாக இருப்பதாலும், பெரும் முதலீடு வேண்டியிருப்பதாலும், உள்நாட்டு மூலதனத்தைக் கொண்டு இவற்றை நிறைவேற்ற முடியாது இதனால், உள்நாட்டு முதலீடு வீணாக்கப்பட்டு, இன்றியமையாத் திட்டங்களில் பயன்படுத்தப்படாமல் போய்விடும். அயல்நாட்டு உதவியையும் உள்நாட்டு மூலதனத்தில் சேர்த்துக் கொண்டால், திட்டமிட்டபடி அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் செயற்படுத்த முடியும். மேலும், அயல்நாட்டு மூலதனம் வாயிலாக நாட்டில் முதலீடு செய்யும் போது, உள்நாட்டில் மிகுதியாகச் சேமிப்பு வைத்துள்ளவர்களும், தங்கள் சேமிப்பை அதே துறையில் முதலீடு செய்து மிகுந்த ஆதாயத்தைப் பெறமுடியும்.
ஒருநாடு பொருளாதார முன்னேற்றத்தில் தொடக்க நிலையில் இருக்கும்பொழுது, அயல்நாட்டிலிருந்து தொழில் நுணுக்கங்களையும் எந்திரங்கள் போன்ற பொருள்களையும் இறக்குமதி செய்ய நேரிடுகிறது. இத்தகைய தொழில் நுணுக்கத்தையும் எந்திரங்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ள நீண்டகாலம் பிடிக்கும். இந்தியா போன்ற பொருளாதார முன்னேற்றம் அடைந்து வரும் நாடுகளில் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அயற் செலாவணியும் தங்கமும் தேவைப்படுகின்றன. ஆனால், இந்நாடுகளில் இவை போதுமான அளவு கிடைப்பதில்லை. எனவே, இந்நாடுகளுக்கு அயல் நாட்டு உதவி கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.
ஏற்றுமதியை மிகுதிப்படுத்தலின் மூலம் நாட்டில் அயற் செலாவணியைப் பெருக்கலாம். இந்நாடுகளில் பொருள்களை ஏற்றுமதி செய்வதில் பல இடர்ப்பாடுகள் உள்ளன. முதலாவதாக, இந்நாடுகள் பெரும்பாலும் வேளாண்மை நாடுகளாகவே இருப்பதால், தொழில்துறையில் இன்னும் முழுமையான முன்னேற்றம் அடையவில்லை. அதனால், இவற்றின் ஏற்றுமதிப் பொருள்கள் பெரும்பாலும் மூலப் பொருள்களாகவே உள்ளன. அயற் செலாவணியைப் பெருக்க வேண்டுமானால் உற்பத்திப் பொருள்களை மிகுதியாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும், மேலும், ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் உலக அங்காடியில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மூலப் பொருள்களின் விலை நெகிழ்ச்சியும் வருவாய் நெகிழ்ச்சியும் மிகவும் குறைவாக இருப்பதால், இப்பொருள்களின் விலை குறைந்தாலும், இவற்றின் தேவை பெருகுவதில்லை. பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளின் வருவாய் பெருகினாலும் இப்பொருள்களின் தேவை பெருகுவதில்லை. அந்நாடுகள் இப்பொருள்களைத் தங்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்வதோடு, அயல்நாடுகளுக்கும் இவற்றை ஏற்றுமதி செய்கின்றன. இதனால், இந்தியா போன்ற நாடுகள் உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு அயல்நாட்டு உதவி வேண்டும். இல்லாவிடில் நாட்டின் ஏற்றுமதியைப் பெருக்க முடியாது.
இவ்வாறு, தொடக்க நிலையில் தொழில் துறையை முன்னேற்றம் அடையச் செய்யும்பொழுது, செலுத்து நிலையிலும் (Balance of Payments) உள்நாட்டு விலைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். முன்னேற்றம் என்பது உற்பத்திக் காரணிகளை முதலீட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யும் துறைக்குப் பயன்படுத்துவதாகும். இதனால், நுகர்வுப் பொருள்களை உற்பத்தி செய்யும் துறைக்கு, உற்பத்திக் காரணிகள் மிகவும் குறைந்த அளவு பயன்படுத்தப்படுகின்றன. நுகர்வுப் பொருள்களின் உற்பத்தி குறைகிறது. உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபடுபவர்களின் வருவாய் உயரும். இவர்களின் வருவாய் உயர்வதனால் நுகர்வுப் பொருள்களை வாங்க முற்படுவார்கள். ஆனால், நுகர்வுப் பொருள்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால், அங்காடியில் இதன் அளிப்பு குறைகிறது. இப்பொருள்களின் விலைகள் உயர்கின்றன. மக்கள் தங்கள் வருமானத்தில் பாதியை அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நுகர்வுப் பொருள்கள் மீதும், எஞ்சிய வருமானத்தை அயல்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மீதும் செலவிடுகிறார்கள். இதனால், நாடு பொருளாதார முன்னேற்றம் அடையும் காலத்தில் மூலதனப் பொருள்களின் தேவை மிகையாவதோடு, நுகர்வுப் பொருள்களின் தேவையும் மிகுதியாகிறது. மேலும், இந்த நுகர்வுப் பொருள்கள் உணவுப் பொருள்களாக இருந்தால், இந்தியா போன்ற நாடுகள் கட்டாயமாக அயல்நாட்டு உதவியை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். இவ்வாறு அல்லாமல் நுகர்வுப் பொருள்களின் பற்றாக்குறை நாட்டில் மிகுதியாகிச் கொண்டே சென்றால், பொருள்களின் விலையும் உற்பத்திச் செலவும் மிகுதியாகிக்கொண்டே வந்து, இறுதியில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையே பாதித்துவிடும். அமெரிக்கா, கனடா, பிரான்சு போன்ற பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகள், தங்கள் முன்னேற்றத்தின் தொடக்க நிலையில் அயல்நாட்டு உதவியையே எதிர்பார்த்திருந்தன. அயல்நாட்டு உதவி, பொருளாதார முன்னேற்றம் அடையாத நாடுகளில், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்கும் தொழில் துறையை முன்னேற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பொருளாதார முன்னேற்றம் அடைந்து வரும் நாடுகளில் அயல்நாட்டு உதவி தேவைப்பட்டாலும், அவ்வுதவி பாதுகாப்பான நிலையில் அந்நாடுகளுக்கு அளிக்கப்பட வேண்டும். சில வேளைகளில் அளவுக்கு மிகுந்த உதவியைப் பெறுவது அரசியல் குழப்பங்களும் வேறு பல சிக்கல்களும் ஏற்படுத்துவதற்குக் காரணமாய் இருக்கும். உதவியை அளிக்கும் நாடு போர்க் காலங்களில் தன் உதவியை நிறுத்திக் கொள்ளலாம். உதவியைப் பெறும் நாட்டின் கடன் சுமை மிகுந்து கொண்டே செல்லும். இதனால், உதவியைப் பெறும் நாடு, முடிந்த அளவு உள்நாட்டு மூலதனத்தையும் உற்பத்திக் காரணிகளையும் கொண்டே பொருளாதார வளர்ச்சியை அடைய முற்படவேண்டும். மற்ற நாட்டின் உதவியைப் பெற்றாலும் எந்த நோக்கத்திற்காகக் கடன் வாங்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கே செலவிட வேண்டும்.
அயல்நாட்டு உதவியைப் பெருமளவில் பயன்படுத்திய துறை இந்தியப் போக்குவரத்துத் துறையேயாகும். இதனால், இரயில் போக்குவரத்து வளர்ச்சி அடைந்தது. மேலும், தொழில் துறை முன்னேற்றம், தொழில் நுணுக்க முன்னேற்றம் ஆகியன அயல்நாட்டு உதவியால் பெருமளவு இந்தியாவில் வளர்ச்சி அடைந்தன. இரும்பு, எஃகுத் தொழிற்சாலை, கனரக இரசாயனத் தொழிற்சாலை, எந்திரங்கள் செய்தல் போன்றவைகளின் வளர்ச்சி இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும். அரசாங்கத்தின் பொதுத் துறையை வலுப்படுத்துவதற்கும் நாட்டின் உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்கும் இவ்வுதவி பயன்படுகிறது.
சிக்கல்களும் இடையூறுகளும்
அயல்நாட்டு உதவியைப் பெறுவதால் நாட்டில் கடன் சுமை மிகுகிறது. பெற்ற கடனை வட்டியும் முதலுமாகத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இரண்டாம், மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்களில், இவ்வகையான கடன்கள் (15, 25 ஆண்டுக் கடன்கள்) முடிவு பெற்றுச் செலுத்தப்படும் நிலையில் உள்ளன. முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 23.8 கோடியாக இருந்த அயல்நாட்டுக் கடன், இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 119.4 கோடியாகவும், மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ, 542.6 கோடியாகவும் நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 2455 கோடியாகவும், ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 3770 கோடியாகவும், ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உரூ. 2733 கோடியாகவும் ஆகியுள்ளது. அயல்நாட்டு உதவி, அரசியலையும் சார்ந்துள்ளது. உதவி அளிக்கும் நாட்டிற்கும் உதவிபெறும் நாட்டிற்- கும் ஏதாவது அரசியல் குழப்பங்கள் நேரிட்டால், உதவி அளிக்கும் நாடு உடனே உதவியை நிறுத்திவிடும். எடுத்துக்காட்டாக, இந்தியாவிற்கு 1965, 1971–ஆம் ஆண்டுகளில் அயல் நாட்டு உதவி தடையுற்றதால், அயற்செலாவணித் தட்டுப்பாடு மிகுதியாக உண்டாகியது. இதனால் இந்தியா யாரையும் எதிர்பாராமல் தானே தன்னிறைவை உண்டாக்க வேண்டும் என்று கருதியது.
இந்தியா போன்ற பொருளாதார முன்னேற்றம் அடைந்து வரும் நாடுகளில் அயல்நாட்டு உதவி, கட்டுப்பட்ட உதவியாகவே கருதப்படுகிறது. அதனால், சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டுமே அவ்வுதவியைப் பயன்படுத்த முடியும். ஆகையால், இந்நாடுகள் தங்களுக்குப் பயன்தரும் திட்டங்களில் ஈடுபடமுடியாது; தாம் விரும்பிய தொழில் நுணுக்கங்களையும் உற்பத்தியில் புகுத்த முடியாது. எடுத்துக் காட்டாக, அமெரிக்க நாடு அளிக்கும் உதவி யாவும் கட்டுப்பட்ட கடன்களாகவே இருப்பதால், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் விலை, பன்னாட்டு அங்காடிகளின் விலையை விட மிகவும் கூடுதலாகவே இருக்கிறது. இதனால், நாட்டின் உற்பத்திச் செலவு மிகுந்து ஆதாயம் குறைகிறது. கட்டுப்பட்ட கடனால் குறிப்பிட்ட மூலப் பொருள்களின் இறக்குமதி தாமதப்பட்டால், அம்மூலப் பொருள்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள், தங்கள் திறமைக்குக் குறைவாகவே பணி செய்ய நேரிடுகிறது. இதனால், கட்டுப்பட்ட கடனை விடக் கட்டுப்படாத கடனே சிறந்ததாகக் கருதப்படுகிறது.
மொத்த அயல்தாட்டு உதவியான உரு. 27,055 கோடியிலிருந்து 1981–82–ஆம் ஆண்டுகளில் உரூ. 20,020 கோடியை இந்தியா பயன்படுத்தியது. இதில், 74 விழுக்காட்டுக் கடனை அயற்செலாவணியால் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. இந்தியாவில் 1972–73–ஆம் ஆண்டு நடந்த பொருளாதார ஆய்வுகள் (Economic Survey) வாயிலாகக் கடன் சுமையை அயற் செலாவணியில் திருப்பிக் கொடுத்தால், கடன் வாங்கப்பட்ட தொகையின் நுகர்ச்சித் திறன் குறைந்து விடும் என்பதும், மிக்க பலன் கிடைக்காது என்பதும், தெரியவந்தன. மேலும், வளர்ச்சி அடைந்த நாடுகள், தனியார் துறைக்கே அதிகச் சிறப்பிடம் கொடுப்பதால், பொதுத் துறைக்குச் சிறப்பிடம் கொடுக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு உதவி அளிக்கத் தயங்குகின்றன. அயல்நாட்டு உதவியைப் பெறும் நாடு எப்பொழுதும் உதவி கொடுக்கும் நாட்டின் ஆணையைப் பின்பற்றியே நடக்க வேண்டும். அன்றியும், அளிக்கப்பட்ட உதவியால் அதைப் பெற்ற நாடு வளர்ச்சி அடைகின்றதா என்பதை நன்கு அறிந்த பிறகே உதவி நல்கும் நாடுகள் மேலும் உதவியை அளிக்க முன்வரும்.
அயல்நாட்டு உதவி சில வேளைகளில் குறிப்பிட்ட காலத்தில் கிடைப்பதில்லை. இதனால், பொருளாதார முன்னேற்றம் அடையாத நாடுகள், தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காகத் திட்டமிட்டபடி செயல்களில் ஈடுபட முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தில், அயல்நாடுகள் குறிப்பிட்டபடி தங்கள் உதவியை அளிக்காததால், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்குச் சிறிது கால தாமதம் ஏற்பட்டது. மேலும், இந்தியாவுக்குக் கிடைக்கும் கடன்களில் பாதிக்கு மேல் கட்டுப்பட்ட கடன்களாக இருப்பதால், குறிப்பிட்ட திட்டத்திற்கு மட்டும்தான் அக்கடனைப் பயன்படுத்த முடிகிறது. கட்டுப்படாத கடன்கள் இந்தியாவிற்கு மிகவும் குறைந்த அளவே கிடைக்கின்றன.
அடுத்த பக்கத்தின் அட்டவணையில் இந்தியாவுக்குக் கிடைத்த கொடைகளும் கட்டுப்பாடற்ற கடன்களும், குறிக்கப்பட்டுள்ளன.
அயல்நாட்டு உதவி நாட்டின் தொழில் நுணுக்க வளர்ச்சியையும், வேளாண்மை, தொழில்துறை முன்னேற்றத்தையும் பாதிக்கவல்லது. எப்பொழுதும் அயல்நாட்டுத் தொழில் நுணுக்கத்தை நம்பி இருந்தால், நாட்டில் திறமையான தொழில் நுணுக்க வல்லுநர்களை உருவாக்க முடியாது. இந்தியா 1965–66 வரை வேளாண்மைப் பொருள்களுக்குப் பெரிதும் அயல்நாட்டு உதவியையே நம்பி இருந்ததால், நாட்டில் வேளாண்மை வளர்ச்சி அடையவில்லை.
முடிவாக, அயல்நாட்டு உதவியை முழுவதும் பயன்படுத்துவதற்குச் சில தடைகள் உள்ளன. ஏனெனில் ஓர் அரசாங்கத்திலிருந்து வேறு அரசாங்கத்திற்கு உதவி மாற்றப்படும்போது குறித்த காலத்தில் அது கிடைப்பதில்லை. மேலும், ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியில் தொடக்க நிலையில் இருக்கும் பொழுது அயல்நாட்டு உதவியை முழுமையாகப் பயன்படுத்தவும் முடியாது. ஆனால், பின் சிறிது சிறிதாக இதன் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ளலாம் எடுத்துக் காட்டாக, இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் அயல்நாட்டு உதவி 53 விழுக்காடும், இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 56 விழுக்காடும், மூன்றாம் ஐந்தாண்டுத்திட்டத்தில் 100 விழுக்காடும் பெற்றது. 1964–ஆம் ஆண்டு வி.கே.ஆர்.வி ராவ் தலைமையில் அயல் நாட்டு உதவியைப் பயன்படுத்துவதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது. இவர் கருத்து, பயன்படுத்தும் வீதத்தை உயர்த்த வேண்டும் என்பதாகும். அயல்நாட்டு உதவியைக் கடன் வாயிலாக அடைந்தால் நாட்டில் கடன் சுமை மிகுந்து
கடன் (உரூபாய் கோடியில்) !! !! மொத்த உதவியில் கட்டுப்பாடற்ற கடனின் அளவு (விழுக்காட்டில்) !! !! கொடைகள் (உரூபாய் கோடியில்) !! !! மொத்த உதவியில் கொடைகளின் அளவு (விழுக்காட்டில்)
திட்டம் வரை || || 1761.6 || || 39.1 || || 336.9 || || 7.5
கொண்டே செல்லும். இதனால், சில வேளைகளில் கடனை வட்டியும் முதலுமாகச் சேர்த்து அடைப்பதற்கு அயல்நாட்டு உதவியையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு செய்வதால், பொருளாதார வளர்ச்சிக்காக வாங்கப்பட்ட கடன், கடனை அடைப்பதற்காகவே பயன்படுத்தப்படும் நிலை ஏற்படுகிறது; நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதில்லை. இவ்வாறு அயல்நாட்டுக் கடனைப் பெறுவதிலும் அதனைப் பயன்படுத்துவதிலும் சில சிக்கல்களும் இடையூறுகளும் உண்டாகின்றன.டி.கா
துணை நூல்கள்
Benjamin lliggins., “Economic Development, Principles, Problems and Policies”, University Press, Allahabad, 1959.
Taneja, M.L., & Chopra, P.N., “Economics of Development and Planning” (With Special reference to India), S. Neigin & Co., Jullender, 1980.
Alak Ghosh., “Indian Economy Its Nature and Problem”, East End Printers, Calcutta, 1957.
Agarwal, A.N., “Indian Economy, Problems of Development and Planning”, Vikas Publishing House, New Delhi, 1975.
இராக்னர் நர்க்சு, (தமிழாக்கம் மா. குமாரசுவாமி), “வளர்ச்சி குறைந்த நாடுகளின் முதலாக்கம் பற்றிய சிக்கல்கள்”, தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1974.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 553)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qsjnwwtf/
தமிழ்“அயல்நாட்டு உதவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qsjnwwtf/APA
Oliyon Research. (2026). அயல்நாட்டு உதவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qsjnwwtf/MLA
"அயல்நாட்டு உதவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qsjnwwtf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment