திருமன்யு என்பவரின் மகன். இவருக்கு ஐந்து வயது வரை தாய்ப்பால் இல்லாமையால் அரிசிமாவினைக் கரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து தாய் ஊட்டி வளர்த்தாள். இந்நிலையில் தாய் தன் உடன் பிறந்தவராகிய வசிட்டரின் வீட்டிற்குச் சென்று ஒரு மாதம் குழந்தையுடன் தங்கியிருந்தாள். அப்பொழுது வசிட்டரின் மனைவி அருந்ததி வேள்வி செய்து காமதேனுவின் பாலைக் கொடுத்து வந்தாள். பின்னர்த் தன் வீட்டிற்கு வந்ததும் தாய் முன் போலவே மாவின் பால் கொடுத்தாள். குழந்தை அந்தப் பாலே (காமதேனுவின் பால்) தனக்கு வேண்டும் என்று கூறிற்று. அத்தகைய வளமெல்லாம் சிவபூசை செய்தார்க்கே உண்டு; நமக்கெல்லாம் உண்டாகாது என்று கூறித் தாய் புலம்பினாள். அது கேட்ட சிறுவன் சிவமென்பதென்ன? அதனை வணங்கும் வழிமுறையாது? என்று வினவினான். தாய் அதனைத் தந்தையிடம் கேட்டறியுமாறு கூறினாள். தந்தைபால் தீட்சை பெற்ற உபமன்யு தவமேற்கொண்டு திரிகூட மலையில் சிவோபாசனை செய்தார். அப்பொழுது சிவபெருமான் எழுந்தருளி என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். இவர் தமக்குக் காமதேனுவின் இனிய பால் வேண்டுமென்று கேட்கச் சிவபெருமான் திருப்பாற்கடலை அளித்து எல்லோருக்கும் ஆசிரியராம் பதமும் அருளினார். அவற்றைப் பெற்ற உபமன்யு பின்னர்த் தம் பெற்றோரை அடைந்தார்.