நிலையான அரசியல் அமைப்பு, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. வளம் நிறைத்த நாடுகளில் கூடப் பொருளாதார முன்னேற்றத்திட்டங்கள், அரசின் கண்காணிப்பில் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன. அரசு தனக்குப் போதுமான அதிகாரத்தைப் பெற்றிருக்கும்போது, இத்திட்டங்களை விரைவில் செயற்படுத்துகிறது. இயற்கை வளங்கள் அரிதாகவும் பற்றாக்குறை மிருதியாகவும் உள்ள வளர்ச்சி குன்றிய நாடுகளிலும் அரசே பொருளாதாரத் திட்டங்களை வகுத்து, அவற்றை நிறைவேற்றி வருகிறது. வரலாற்றைப் படித்தால் வலிமையும் நிலைபேறும் மிக்க அரசு மட்டுமே நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாயிருந்தமை புலப்படும். நிலையான அரசியல் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதி அளிக்கிறது. முன்னேற்றமடைந்த நாடுகளில், முதலாளித்துவ நாடானாலும் பொதுவுடைமை நாடானாலும், சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் முதலிடம் அளிக்கப்படுகிறது. மக்கள் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சிக்கும் நிலைபேற்றுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. ஏனெனில், மக்கள் ஆட்சியில் அரசியல் கட்சி தன்னுடைய பெரும்பான்மையை இழந்துவிட்டால், எதிர்க்கட்சி ஆட்சிக்கு வருவதை முழுமையாக மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். எதிர்க் கட்சிகள் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும்வரையிலும், தங்களுடைய தாழ்ந்த நிலையினை ஏற்றுக் கொள்ளும். தேர்தலுக்குப் பிறகு, பெரும்பான்மை வாக்குகள் பெற்ற கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. இங்குச் சட்டமும் ஒழுங்கும் ஒரு பெரும் சிக்கலாக இல்லை. கட்சித் தலைவர்கள் அரசுத் தலைவர்களாகப் பொறுப்பேற்றவுடன் பொருளாதார முன்னேற்றம் பற்றிய கவனத்தை மேற்கொள்ளுகின்றனர். கட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அவர்களின் அணுகுமுறைகள் வேறுபடலாம். அவர்களது கொள்கை வேறுபட்டதாக அமையலாம். ஆனால், முடிவான குறிக்கோள், மக்களின் உயர்ந்த வாழ்க்கை, மிகுதியான வேலைவாய்ப்புகள், மிகுதியான பொருள் உற்பத்தி, நிறைந்த பணிகள், நல்வாழ்வு முறைகள் ஆகியவற்றைப் பெற வேண்டுமென்பதே. பொதுவுடைமை நாட்டில் அரசியல் நிலை பேறு என்பது, எப்பொழுதும் சில முறைகளோடு இணைந்து இருக்கும். இந்தியாவில் உள்ள பொருளாதார முன்னேற்றம், சிறப்பாக அரசியல் நிலைபேற்றால் ஏற்பட்டதாகும் அண்மைக் காலத்தில் அண்டை நாடான இலங்கையில் அஞ்சத்தக்க இனப் போர் மூண்டது. அந்த இனப் போர் அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைப் பெருமளவு பாதித்தது. அங்கு ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சியின் காரணமாகப் பல தொழிற்சாலைகள் மிகக் கடுமையான நலிவுக்குள்ளாயின. சிரீலங்கையின் நிதி அமைச்சர் கூற்றுப்படி, “சிரீலங்கா தனது முன்னைய பொருளாதார நிலையை மீண்டும் அடைவதற்குப் பல ஆண்டுகள் ஆகும்”. இது, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றின் தேவையையும், முழுமையான பாதுகாப்பின் இன்றியமையாமையையும் மனத்தில் தெளிவாகப் பதியச் செய்கிறது; அன்றியும் சட்டமும் ஒழுங்கும் முழுமையான பாதுகாப்பும் இல்லையானால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படாது என்பதையும் உணர்த்துகிறது. அடிக்கடி ஏற்படும் ஆட்சி மாற்றங்களும் இராணுவப் புரட்சிகளும் பொருளாதார முன்னேற்றத்தின் வழிமுறைகளுக்கு முட்டுக்கட்டையாய் அமைதல் கூடும். இந்தியாவின் இரண்டு அண்டை நாடுகளான பாகிசுத்தானும், பங்களாதேசமும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டத் தங்களால் இயன்ற அளவு முயன்று கொண்டிருக்கின்றன. அந்நாடுகளில் அரசியல் சுதந்திரம், தனி மனிதன் உரிமைகள் ஆகியவை கெட்டுப் பெரும் கிளர்ச்சிகள் திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பாகிசுத்தானிலும், பங்களாதேசத்திலும் முழுமையான அரசியல் நிலைபேற்றினை ஓர் இராணுவ ஆட்சியால் கூட நிலை நிறுத்த முடியவில்லை. மத்திய அமெரிக்காவில் உள்ள நிலைமை, இதற்குப் பெரிதும் மாறுபட்டதன்று. எல் சல்வேடாரில் (El Salvador) ஏற்பட்ட உள்நாட்டுக் கலகம் அளவிறந்த உயிர்களின் அழிவுக்குக் காரணமாயுள்ளது. இதற்கு அண்டை மாநிலமான நிக்கரா குவாயில் உள்ள அரசு, அமெரிக்கர்களின் உதவிபெற்ற கலகக்காரர்களால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகிறது. அமெரிக்கர்களின் உதவிபெற்ற இந்தக் கலகக்காரர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஏனைய அரசாங்கச் சொத்துக்களுக்கும் மிகப் பெரும் அழிவுக்குக் காரணமாக உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் பொருளாதாரம், பாதுகாப்புத் தேவையை அடிப்படையாகக் கொண்டதாகத் திட்டமிடப்படுகிறது. மேற்கு ஆசியாவில் உள்ள இலெபனான் (Lebanon) ஒரு காலத்தில் (1960) வங்கிகளின் வளர்ச்சி, சுற்றுலா, ஏனைய தொழில்துறை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டிருந்தது. இலெபனான் நாட்டில் உள்நாட்டுக் கலகம் அந்நாட்டுப் பொருளாதாரத்தைக் கடுமையான இழப்பிற்கு உள்ளாக்கியது. சின் சட்டத்தால் பெய்ரூட்டு (Beirut) நகரம் கூடத் தன்னுடைய ஆணையைச் செலுத்த முடியவில்லை. இசுலாமியர், கிறித்துவர், படைப் பிரிவினர் ஆகியவர்களுக்கு இடையில் நாடு பிளவுண்டு காணப்படுகிறது. இலெபனானில் அரசியல் நிலைபேறும் இல்லை; பாதுகாப்பும் இல்லை, அரசு நிலைபேறாக இல்லாவிட்டால் அரசியல் பாதுகாப்பும் பொருளாதார முன்னேற்றமும் இருக்க முடியா. இது ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளுக்கும் பொருந்தும். முன்னர், பெல்சியம் காங்கோ என்று சொல்லப்பட்ட சயரெ (Zaire) போன்ற நாடுகளை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அங்கே தோன்றிய அஞ்சத்தக்க அரசியல், நிலையற்ற தன்மையை உருவாக்கியது. இப்பொழுது அங்கு அமைதியின் சாயல் காணப்படுகிறது. 1960–ஆம் ஆண்டில் இந்த நாடு விடுதலை பெற்ற நேரத்தில், 680000 மைல் தூரத்திற்கு நல்ல சாலைகள் இருந்தன. ஆனால் இன்று, வெறும் 6200 மைல் தூரத்திற்கு மட்டுமே பயணம் செய்யத்தக்க சாலைகள் உள்ளன. அரசியல் நிலைபேறில்லாமை, இலட்சக்கணக்கான மக்களை நாடற்றோர்களாக மாற்றுகிறது. எத்தியோப்பிய நாட்டோடு ஏற்பட்ட போரின் காரணமாக, 7 இலட்சம் சோமாலியர்கள் நாடற்றோர்களாகத் தங்கள் பொருளாதார ஆதரவை இழந்து வாழ்கிறார்கள். அங்கோலா, உருவாண்டா (Ruanda) ஆகியவற்றிலிருந்து துரத்தப்பட்ட 335000த்துக்கும் மிகுதியான மக்கள் இப்பொழுது சயரெவில் (Zaire) வாழ்கின்றனர். தென் ஆப்பிரிக்காவின் அரசியல் நிலை இனவெறியாக மாறியதால் அந்நாட்டுப் பழங்குடி மக்கள் பொருளாதார அடிப்படையின்றி வாழ்கின்றனர். இயற்கை வளம் நிறைந்த ஆப்பிரிக்காவின் அரசியல் நிலைபேறற்ற தன்மை, பழங்குடி மக்களின் பூசல்- களினால் மேலும் சீர்கேடு அடைந்துள்ளது. சிம்பாபே (Zimbabwe) என்ற நாடு இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். அங்குள்ள இரண்டு பழங்குடி மக்களான சோனா இனத்தவரும் மாட்டபெல் (Matahele) இனத்தவரும், எப்பொழுதும் மோதிக் கொண்டே இருக்கின்றனர். இப்பொழுது சோனா இனத்தவர் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றனர். ஆகவே, அந்தப் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இராபர்ட்டு முகாபே என்பவர், சிம்பாபே என்னும் நாட்டின் தலைமை அமைச்சராக உள்ளார். இது மாட்டாபெல் இனத்தவரிடையே அமைதியின்மையை உண்டு பண்ணியுள்ளது. சமூகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கே நாட்டின் வளமும் அரசியல் வலிமையும் வீணாகிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பழங்குடி மக்களின் சிக்கல் காணப்படுகிறது. கென்யா போன்ற சகிப்புத் தன்மை கொண்ட நாட்டில் கூடப் பழங்குடி மக்களின் அமைதியின்மை காரணமாகக் கடந்த காலத்தில் கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் தோன்றியுள்ளன. அரசியல் நிலைபேறு இல்லாமற் போனால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவே முடியாது. பல்வேறு சாதி, இனம், மத வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், நாட்டின் பொருளாதார முன்னேற்ற நோக்கில் நன்கு புரிந்து கொள்ளும் ஒற்றுமைத் தன்மை காணப்படுகிற நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளும் தன்மையானது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவியுள்ளது. பின்தங்கிய நாடுகளில் அரசியல் நிலைபேறு அற்ற தன்மை, மக்களைப் பின்தங்கிய நிலைக்கும் வறுமைக்கும் இழுத்துச் சென்று வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் மேலும் பெருக்குகிறது; மேலும் முறைகேடற்ற ஊழல்களுக்கும் காரணமாக உள்ளது. ஆப்பிரிக்காவிலும் இந்தியத் துணைக் கண்டத்திலும் கையூட்டு (Bribery), அளவு கடந்து காணப்படுகிறது. குடிமக்களுடைய உணர்வு நிலையின் அடிப்படையிலும் அப்பழுக்கில்லாத நேர்மையின் அடிப்படையிலும் அரசின் அடிப்படை வலிமை அமைய வேண்டும். இது மிக நீண்ட பாதையாகத் தென்படலாம். ஆனால், இந்தப் பாதையைக் கடக்காத வரையில் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவருதல் என்பது முடியாத காரியம். நிலைபேறில்லாத சமுதாயம் முன்னேற்றம் இல்லாத சமுதாயம், அரசியல் நிலைபேற்றினால் ஏற்படும் பயன்களை மிகுந்த உற்பத்தியிலும் நிறைந்த வேலை வாய்ப்புகளிலும், மிகுதியான அளவு உயர்ந்துள்ள தனிப்பட்டவர் வருவாயிலும் தெளிவாகக் காணலாம். அரசியல் குழப்பங்கள் மனிதனைச் சீர்கேடு அடையச் செய்கின்றன. ஒழுங்கான அரசு அமைய அரசியல் நிலைபேறு முதன்மையாகத் தேவைப்படுகிறது. ஓர் ஒழுங்கான அரசு படிப்படியாகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. அந்தக் கட்டுப்பாடே வெற்றிக்குரிய திறவுகோலாகும். கட்டுப்பாட்டோடு கூடிய சமுதாயமே நிலையான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இந்தக் கட்டுப்பாட்டோடு கூடிய சமுதாயமே எல்லா மனித இனமும் விரும்புகின்ற குறிக்கோளும் ஆகும். அரசியல் நிலைபேறில்லாவிட்டால் நாட்டிற்கு ஒருவித மதிப்பும் உலக நாடுகளிடையே இராது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, மேற்கு ஐரோப்பா, உருசியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் எப்பொழுதும் அரசியல் நிலைபேறு நிலவி வருகிறது. ஆகவே, இந்நாடுகள் உலக நாடுகளின் மத்தியில் எப்பொழுதும் ஒரு தனி மதிப்பைப் பெறுகின்றன. இவ்வண்ணமே இந்தியா, சீனா போன்ற நாடுகளும் நிலையான அரசியல் அமைப்பதில் வெற்றி கண்டிருக்கின்றன. இதனால் பொருளாதார முன்னேற்றமும் எல்லாத் துறை வளர்ச்சியும் இந்நாடுகள் பெற்றுள்ளன. முன்னோட்டமான பொருளாதார வளர்ச்சிக்கு அரசியல் பொறுப்புணர்ச்சியுடன் பொருளாதாரத் திட்டங்கள் செயற்பட வேண்டும். இந்திய அரசு மக்கள் தேவைகளைப் பெரிதும் தெரிந்துகொண்டு செயற்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பலவகைச் சிக்கல்களின் மத்தியிலும் பற்றாக்குறையிலும் மத்திய அரசு மக்கள் தேவைகளையும் குறைகளையும் உற்றுக் கவனித்து வேண்டிய பணிகளைச் செய்து வருகிறது. பல மாநிலங்களில் அவ்வப்போது சிக்கல்கள் வராமலில்லை. ஆப்பிரிக்காவையோ தென் அமெரிக்காவையோ ஆராய்வோமானால், இந்தியாவில் ஒரு நிலைபேறான அரசு இருக்கிறது என்பது மறுக்க முடியாத செய்தியாகும். நிலைபேறான அரசே பொருளாதார முன்னேற்றத்திற்குச் சிறந்த காரணம், இந்தியர்கள் இயற்கையாகவே நிலைபேற்றினை விரும்புகிறவர்கள். எங்கே நிலைபேறில்லையோ அங்கே சிக்கல்கள் காணப்படுகின்றன. அதைத் தீர்க்க ஆவன செய்வதற்கும் பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கும் அரசியற் தலைவர்கள் ஒருபோதும் தயங்கினதில்லை. இவ்வித மனப்பான்மையால் இந்தியாவில் ஒரு நல்ல அரசியல் சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாவதற்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. மரபைத் தழுவி நிற்கும் மக்களாட்சியுள்ள எந்த நாடும் காலப் போக்கில் பொருளாதார முன்னேற்றம் காணும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.டி.கே.சா.சு.