இருவர் போட்டி
iruvar pōṭṭi
போட்டி அடிப்படையில் வகைப்படுத்தப்படும் அங்காடிகளுள் இதுவும் ஒன்று.
போட்டி அடிப்படையில் வகைப்படுத்தப்படும் அங்காடிகளுள் இதுவும் ஒன்று. சில்லோர் போட்டி (Oligopoly) யினின்று சற்றே வேறுபட்டு, இருவரை மட்டும் கொண்டு அமையும் அங்காடி இருவர் போட்டி (Duopoly) யாகும். பொருளியல் வல்லுநர்களான அகசுதின் கோர்னேயும் (Augustin Cournot) எட்சுவோர்த்தும் (Edge–worth) இதனை முழுமையாக ஆராய்ந்துள்ளனர். நடைமுறை உலகில் இத்தகைய அங்காடி அமைவது அரிதாயினும் பிற அங்காடிகளின் செயற்பாட்டை விளக்கவும், சில அடிப்படை அங்காடிப் பொருளியல் கோட்பாடுகளை உருவாக்கவும் இதன் ஆய்வு பயனுள்ளதாயிருக்கிறது.
இருவர் போட்டியில் இரு விற்பனையாளர்களே இருப்பர். இவர்கள் இரு உற்பத்தியாளர்களாகவோ இரு தொழிற்கூடத்தினராகவோ (Firm) இருக்கலாம். இவ்விருவருக்கிடையில் மட்டுமே போட்டியிருக்குமாகையால் ஒருவர் நடவடிக்கையால் மற்றவர் பாதிக்கப்படுவார். ஒருவர் எடுக்கும் நடவடிக்கைகளைக் கண்காணித்து அடுத்தவர் செயற்படுவார். பின்னர்த் தொடர்ந்து மாறி மாறிக் கருத்துடன் செயற்பட்டுத் தங்கள் விற்பனையைப் பெருக்குவதன் மூலமோ விலையை உயர்த்துவதன் மூலமோ ஆதாயத்தைப் பெருக்குவதில் அக்கறை காட்டுவர். விற்பனைக்கான பொருள்களின் அளவைக் கூட்டியும், குறைத்தும், விலையில் மாற்றங்கள் செய்தும், அங்காடியை இருவரும் தம்பக்கம் இழுப்பர். விளம்பரம் போன்ற பிற வாணிக நுட்பங்களையும் பின்பற்றுவர். ஊகத்தின் அடிப்படையில் எத்தகைய முறைகளை ஒருவர் பின்பற்றக்கூடும் என ஊகித்துப் போட்டியை மேற்கொள்ள முயல்வர்.
இருவருக்கிடையிலும் போட்டி கடுமையாகத் தொடர்ந்து நிகழும். ஆனால், ஒரு கட்டத்தில் போட்டியினால் ஒருவருக்கொருவர் தீங்கையே பெறுவதாக உணரும் நிலை வரும். விற்பனையிலும் ஆதாயத்திலும் முன்னேற்றமின்றி இருவரும் இழப்பை அனுபவிக்கவும் நேரிடும். எனவே அவற்றைத் தவிர்த்து, இருவரும் அழிந்து போகாமல் பயன்பெறும் நோக்குடன் ஒத்துழைப்பு, ஏற்பு (Acceptance), ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் செயற்பட முன் வருவர்; விலை வரையறையிலும் விற்கும் பொருளின் அளவிலும் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை மேற்கொள்ள இசைவர்; விற்பனை இடங்களையும் பங்கிட்டுக் கொள்வர்; விளம்பரத்தின் மூலம் தங்களை வேறுபடுத்தி அங்காடியில் தங்கள் ஆதாயத்தை மிகுதியாக்க முயல்வர். நுகர்வோரைத் தம் பக்கம் இழுப்பது அவரவருடைய விளம்பரத் திறமையில் ஏற்படும் போட்டியைப் பொறுத்து அமையும். எனினும் இத்தகைய இருவர் போட்டியின் உண்மை நிலையை அறிவது கடினம்.
கோர்னே கோட்பாடு
பிரஞ்சு நாட்டு அகசுதின் கோர்னே கி.பி. 1838–ஆம் ஆண்டு வெளியிட்ட இருவர் போட்டிப் பகுத்தாய்வு இரு எடுகோள்களைக் (Assumptions) கொண்டது. (1) இருவர் போட்டியிலுள்ள இரு விற்பனையாளர்களுக்கும் விற்பனைக்கு அளிக்கப்படும் பொருளின் அளவு எவ்வளவு என்பது தெரியும். (2) விற்பனையில் இந்த அளவு மாறாதிருக்கும் என இருவரும் எதிர்பார்க்கின்றனர். இவ்விரு எடுகோள்களின் அடிப்படையில் இருவர் போட்டி செயற்படுவதைக் கோர்னே விளக்குகிறார். எடுத்துக்காட்டாக, இருவர் போட்டியில் இரண்டு கனிம ஊற்றுகளை (Mineral Springs) இருவர் (A&B) சொந்தமாக வைத்துள்ளனர். ஊற்றுகள் ஒன்றுக்கொன்று அருகிலுள்ளன. அவற்றிற்கு உற்பத்திச் செலவு எதுவும் இல்லாமையால் சராசரிச் செலவும் {Average Cost - AC), இறுதிநிலை உற்பத்திச் செலவும் (Marginal Cost of Production - MC) பூச்சியம் அல்லது வெறுமை (Zero).
வரைபடத்தில் உள்ளவாறு ஊற்றுக்கான தேவை அளவு DD, அதற்கான இறுதிநிலை வருவாய் வளைகோடு DD. தொடக்கத்தில் A மட்டுமே அங்காடியிலிருந்த விற்பனையாளர். எனவே ‘A’ உச்ச ஆதாயம் விலையில் பெறும் வகையில் PQ உற்பத்தி செய்த அளவு OQ மட்டுமே. OQ இல் இறுதி நிலை வருவாயும் இறுதிநிலைச் செலவும் சீராகவுள்ளது (MR=MC). A–இன் உச்ச வருவாய் OQPR. B அங்காடியில் நுழைந்தவுடன், A–இன் உற்பத்தி OQ அளவிலேயேயிருக்கும் என எதிர்பார்க்கிறான் (இது கோர்னேயின் எடுகோள்). அவனுடைய, தேவைக்கோடு PD என இயல்பாகவே எண்ணி, தன்னுடைய உற்பத்தி அளவு OQ என முடிவு செய்கிறான். அதன்படி B, OQ அளவு உற்பத்தி செய்து P Q என்ற விலையில் QQ PM மதிப்பு உச்ச ஆதாயத்தைப் பெற முயற்சி செய்கிறான்.
படம் 1
B யின் விலை PQ என்பதால், A யும் இப்போது அதே விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. B உற்பத்தி செய்த OQ அளவிலேயே B யின் உற்பத்தி அளவு இருக்கும் கருதுகிறான். தன்னுடைய அங்காடித் தேவையும் இப்போது OD இலிருந்து OQ ஆக மாற்றமடைந்திருப்பதை உணருகிறான். வரைபடம் 2–இல் உள்ளவாறு தன்னுடைய புதுத் தேவைக்கோடும் இறுதி நிலை வருவாய் வளை கோடும் (Marginal Revenue Curve) DQ, DD என்று கருதிச் செயற்படுகிறான்.
படம் 2
A உச்ச ஆதாயம் பெற முடிவு செய்யும் உற்பத்தியின் அளவு OQ ஆகக் குறைகிறது. இது OQ இல் பாதி அளவாகும். இவ்வுற்பத்தி அளவில் இறுதிநிலை வருவாயும் இறுதிநிலைச் செலவும் சீராக உள்ளது (MR=MC). A வரையறுக்கும் விலை OR ஆகவும் ஆதாயம் OQ NR ஆகவும் உள்ளன. இப்போது B அங்காடி நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நோக்குகிறான். அங்காடியில் தன் பங்கு ஏற்றமடைந்து Q D அளவாக உள்ளதை அறிகிறான். உடனே தன்னுடைய உற்பத்தி அளவை QD இல் பாதியாக வரையறுக்கிறான். இவ்வகையில் A இன் அங்காடி பாதிக்கப்பட்டு B க்குத் துணையான நிலை அமைகிறது. இருவரும் மாறி மாறித் தங்கள் உற்பத்தி அளவையும் விலையையும் மாற்றி, இருவர் பங்கும் சீராகும் (Equal share) வரை போட்டி நடவடிக்கையில் ஈடுபடுவர்.
படம் 3
வரைபடம்-3–இல் உள்ளபடி இறுதியில் OR விலையில் A, OQ அளவு உற்பத்தி செய்தும், B QO அளவு உற்பத்தி செய்தும் சமன்பாட்டு நிலையை (Equilibrium level) அடைவர்; OQ = Q Q. இருவருடைய வருவாயும் சீரானதாக அமையும். A இன் வருவாய் OQ LR ஆகவும், B இன் வருவாய் Q Q P L ஆகவும் நிலைபெறும். இருவர் போட்டி அங்காடியின் உற்பத்தி அளவு OQ ஆகும். இது போட்டி உற்பத்தியின் (Competitive Output) அளவு OD–ஐ விடக்குறைவானதாக இருந்தாலும், முற்றுரிமை உற்பத்தி OQ-வைவிட மிகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எட்சுவோர்த்துக் கோட்பாடு
எட்சுவோர்த்தின் கோட்பாடு இருவர் போட்டி அங்காடியிலுள்ள இரு விற்பனையாளர்களின் விலையும் நிலையானது என்ற எடுகோளின் அடிப்படையில் அமைந்துள்ளது. வரை படம்–4 மூலம் எட்சுவோர்த்தின் கருத்தை விளக்கலாம். இரு படங்கள் இங்கு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
படம் 4
படம்–4–இல் உள்ளபடி A, B என்போரின் இருவர் அங்காடியில் A–இன் தேவைக்கோடு DD ஆகும்; B இன் தேவைக்கோடு DD ஆகும். இரு தேவை வளைகோடுகளும் சீராக அமைவது மொத்த அங்காடித் தேவையை இருவரும் சீராகப் பங்கிட்டுக் கொள்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. இருவரும் ஒரே அளவான OQ, OQ (OQ = OQ) அளவுப் பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். A முதலில் அங்காடியிலிருந்தால் முற்றுரிமை அளவான OM அளவு உற்பத்தி செய்து OP விலையில் விற்பான். அதனால் அவன் பெறும் உச்ச அளவு ஆதாயம் OMRP ஆகும். B அங்காடியில் நுழையும்போது A தன் விலையை மாற்றமாட்டான் எனக் கருதிச் செயற்படுவான். இது எட்சுவோர்த்தின் எடுகோள். B விலையைக் குறைத்து OQ அளவு உற்பத்தி செய்து விற்பான். A–இன் அங்காடி பாதிக்கப்படுவதை A அறிந்து B தன் விலையை மாற்றமாட்டான் எனக் கருதித்தன் விலையைக் குறைத்து OQ அளவு உற்பத்தி செய்து விற்பான், B–இன் அங்காடி பாதிக்கப்படுவதை B அறிந்து முன்போல் மீண்டும் தன் விலையைக் குறைப்பான். இவ்வாறு இருவராலும் விலைக் குறைப்பு (Price cutting) நடவடிக்கை மாறி மாறி, விலை OP நிலையை அடையும்வரை நடைபெறும். OP விலையில் இருவரும் உச்ச அளவு உற்பத்தி செய்து விற்பனை செய்வதையும், ஒரே சீரான ஆதாயத்தைப் பெறும் கட்டத்தையும் அடைவர். A–இன் ஆதாயப் பங்கு OQ SP ஆகவும், B–இன் ஆதாயப்பங்கு OQ SP ஆகவும் சமன்பாட்டு நிலையை (OQ SP = OQ S P) அடையும்.
எட்சுவோர்த்தின் ஆய்வு விலைகளின் ஏற்ற இறக்கங்களினால் ஏற்படும் நிலையற்ற தன்மையையும், கோர்னேயின் ஆய்வு உற்பத்தியின் அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டுள்ளமையால் அவை நடைமுறைக்குகந்த கோட்பாடுகளாக அமையவில்லை. மேலும் இருவரின் கோட்பாடுகளும் நடைமுறைக்கப்பாற்பட்ட (Unrealistic) எடுகோள்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளன. பின்னர் வந்த பொருளியல் வல்லுநர்களான எரால்டு (Herold), சேம்பர்லின் (Chamberlin), சுவீசி (Sweezy) போன்றோர் நடைமுறைக்குகந்த நிலையான இருவர் போட்டி, சில்லோர் போட்டி ஆகிய அங்காடிக் கோட்பாடுகளை உருவாக்க முற்பட்டனர். எனினும் இருவர் போட்டி அங்காடியின் எளிதான அடிப்படைத் தத்துவ விளக்கத்திற்குக் கோர்னே, எட்சவோர்த்து ஆகியோரின் கோட்பாடுகளே சிறந்ததாகக் கருதப்படுகின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 244)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qp6h9wfp/
தமிழ்“இருவர் போட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qp6h9wfp/APA
Oliyon Research. (2026). இருவர் போட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qp6h9wfp/MLA
"இருவர் போட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qp6h9wfp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment