பிறப்புகளின் குறை வளர்ச்சி, கருச் சிதைவுக்குக் காரணமாக முன்பு கருதப் பட்டது. பொதுவாக, இது சூலகக் குறைபாடுடன் காணப் படுகிறது. இந்நோயுடையோர் மலடியாகவே இருப்பர். இரு கொம்புக் கருப்பை, வளை கருப்பை, அரை வட்டக் கருப்பை போன்ற பிறவி ஊனங்கள் கருச் சிதைவுக்குக் காரணமாகலாம். செனிப்புத் தட மாறுபாடுகளில் (malformations of the female genital tract) முக்கியமானது, பின்னோக்கி வளைந்த கருப்பை ஆகும். ஃபைப்ரோமையோமாக் கட்டிகள், தொங்கு தசை ஆகியவையும் இம்மாறுபாட்டில் அடங்கும். உடலுக்கு ஏற்படும் காயங்கள், இடுக்கி உதவியால் மகப் பேறு, கருப்பைக் கழுத்தை விரித்துச் சுரண்டியெடுக்கும் முறை, கருப்பைக் கழுத்தை அகற்றி எடுத்தல் ஆகியவை கருப்பைக் கழுத்தில் கேடுகளை உண்டாக்கிச் செயலிழக்கச் செய்கின்றன. இது பிறவி ஊனமாகவும் தோன்றலாம். இரண்டு முல்லேரியன் குழல்களிலிருந்து உருவாகும் செனிப்புத் தடம் பல மாறுபாடுகளை உண்டாக்கும். சூலகம், கருவகக் குழல், கருப்பை, யோனி ஆகியவை முழுமையாகவே வளர்ச்சியடையாமல் இருக்கலாம். சில போது குறை வளர்ச்சியுடனும் காணப்படலாம். கன்னிச் சவ்வின் வளர்ச்சியின்மையால் கருப்பையில் குருதித் தேக்கம், கருவகத் தசையில் (myometrium) குருதித் தேக்கம் ஆகியவை தோன்றுகின்றன. இவ்விதமே கருவகக் குழலும் பாதிக்கப் படலாம். இரண்டு கருப்பைகள், இரண்டு கொம்புகள், தடுப்புச் சுவர்கள் ஆகியவை காணப் படலாம். சில சமயம் ஆண், பெண் இரு பாலரின் பிறப்புறுப்புகளும் ஒரே மனிதரில் காணப் படலாம். சில போது ஒரு பகுதி சூலகமாகவும், ஒரு பகுதி விதையாகவும் காணப் படும், சிறுநீர்ப் புறவெளித் துளை உரிய இடத்தில் காணப் படாமல் மேலேயோ, கீழேயோ காணப் படலாம். சிறுநீர்ப் பையே வெளியே தெரியும்படிக் காணப்படும். —அ. கதிரேசன் நூலோதி. Gordon Bourne, Text Book of Gynaecology, Ninth Edition, Churchill Livingstone, London, 1976.