சாலை உருளை
cālai uruḷai
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> சாலைகளை உருவாக்கும் போது, மண், கல் ஆகிய சாலைப் பொருள்களைப் பிணைத்து இறுக்கம் அடையச் செய்யச் சாலை உருளை (road roller) பயன்படுகிறது. இது அதிக எடை உள்ள கல் அல்லது இரும்பு உருளை கொண்ட எந்திரம் ஆகும். சாலைப் பொருள்களுக்கு இடையே உள்ள காற்றுக் குமிழ்கள், இறுக்கம் அடைவதற்கு வெளியேற்றப்பட வேண்டும். சாலைப் பொருள்களின் இடையே உள்ள நீர் அளவு, மண்ணின் குணம், கற்களின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தே இறுக்கம் மாறுபடும். மீண்டும், மீண்டும் சாலை உருளையை உருட்டுவதன் மூலம், சாலைப் பிணைப்பு நன்முறையில் அமையும். சாலை உருளையைப் பயன்படுத்துவதால், சாலையின் உலர் அடர்த்தி (dry density), வெட்டு வலிமை ஆகியவை அதிகரிக்கும்.
சாலை உருளையைப் பயன்படுத்தி, இறுக்கமடையச் செய்யா விட்டால், மண் அதிக உயரத்திற்கு இருக்கும் போது, உயரத்திற்கேற்றவாறு சுமை அதிகரிப்பதால், மண் தரையுள் அமிழ்ந்து தாழ்வடையும். முதலிலேயே, சாலை உருளையைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து, அடுக்கடுக்காகச் சாலைப் பொருள்களை அமைத்தால், தேவையான உயரத்திற்குச் சாலை இறுக்கமாக அழுத்தமடையும். இவ்வாறு அழுத்தத்துடன் உருவாக்கப்படும் சாலைகளின் இடையே நீர்க் கசிவும், நீரினால் ஏற்படும் தீய விளைவுகளும் ஏற்படா.
சாலைப் பொருள்களின் ஒவ்வோர் அடுக்கும் சாலை உருளையைப் பயன்படுத்தி, அழுத்தம் கொடுத்து இறுக்கம் அடைந்த பின்னரே, அடுத்த அடுக்கிற்கான சாலைப் பொருள்களை இட வேண்டும். இறுக்கம் அடையத் தேவையான திரை மட்டுமே சாலைப் பொருள்களுடன் கலக்க வேண்டும். நீரின் அளவு மிகுதியாக இருந்தால், சாலைப் பொருள்கள் இணைந்து இறுக்கமடைவதற்குப் பதிலாக, நீருடன் இணைந்து சகதியாகச் சாலையின் பக்கவாட்டில் வழியக் கூடும்.
மண் சாலை, கற்சாலைகள் அமைக்கும் போது, அவற்றை இறுக்கமடையச் செய்யப் பல வழி முறைகள் கையாளப்படுகின்றன. அவற்றில் முதன்மையான முறை, சாலை உருளையைப் பல முறை உருப்படுவது ஆகும். இம்முறையில் எடை மிகுந்துள்ள கல் அல்லது இரும்பு உருளை மீண்டும், மீண்டும் உருட்டப்படுவதால் இறுக்கம் ஏற்படும். பிசைதல் என்னும் முறையில் சாலைப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப நீர் சேர்த்துப் பிசையும் போதே, அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இம்முறையில் சாலை அமைக்க, சாலை உருளையின் வெளிப்புறத்தில் வரிசையாக ஆட்டுக் கால் போன்ற இணைப்புகள் இணைந்திருக்கும்.
இதில் உருளை அழுத்தத்தையும், ஆட்டுக்கால் இணைப்புப் பிசைதலையும் ஏற்படுத்தும். அதிர்வு உருளைகளைப் பயன்படுத்திச் சாலைப் பொருள்களின் மீது அதிர்வும், அழுத்தமும் ஏற்படுத்துவது மற்றொரு முறையாகும். கெட்டித்தல் மூலம் இறுக்கமடையச் செய்யும் முறையில் சாலைப் பொருள்கள் இடித்து இணைக்கப்படும். இரும்பு, கல் முதலியவற்றால் செய்யப்பட்ட திமிசுகள் கெட்டிக்கப் பயன்படும். எந்திரத் திமிசுகளும் பயன்படும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ---->
சாலை உருளைகள் பல வகைப்படும். அவை சீரான வழவழப்பான மேற்பரப்புள்ள சக்கர உருளைகள், ஆட்டுக் கால் போன்ற அமைப்பு இணைந்த உருளைகள், அடுக்குச் சக்கர உருளைகள் என்பனவாம். முதல் வகைச் சக்கர உருளை, மூன்று சக்கரங்கள் உடையது. மூன்று சக்கரங்களும் மிகுந்த எடையுடையவை. பின்புறம் உள்ள இரு சக்கரங்களை விட, முன்புறம் உள்ள சந்தரம் மிகப் பெரிய உருளையாக இருக்கும். சில வண்டிகளில் முன்புற உருளை மட்டும் மிகப் பெரிய கல் உருளையாக இணைக்கப்பட்டிருக்கும். உருளைகள், சமப்படுத்தும் உருளைகள் எனப்படும். சில வண்டிகளில் இரண்டு
அல்லது மூன்று உருளைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்கும். சில சாலை உருளைகளில் முன்புறம் இணைக்கப்பட்டுள்ள இரும்பு உருளை உட்புறம் வெற்றிடம் கொண்டிருக்கும். இந்த இரும்பு உருளையின் உட்புறமும் நீர் அல்லது ஈர மணலைத் தேவையான அளவு நிரப்பிப் பயன்படுத்தலாம்.
நொறுங்கும் தன்மை தேவைப்படும் கூழாங்கல், மணல் சாலைகள் அமைக்க இவ்வகையான சாலை உருளைகள் பயன்படுகின்றன. சாதாரணமாக 15 செ மீ கனத்திற்கு மிகாமல் சாலைப் பொருள்கள் பரவலாக்கப்பட்ட பின்னர், சாலை உருளைகள் உருட்டப்பட வேண்டும். இரண்டாம் வகைச் சாலை உருளைகளில், இரும்பு உருளையின் மேற்பரப்பில், பல இரும்புக் கால்கள் நீட்டிக் கொண்டிருக்கும். இவ்வகை உருளைகள் தனியாக ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இதைக் கன ரக ஊர்திகளுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். இவை கிடை மட்டத்திலும், செங்குத்துத் திசையிலும் ஒரே நேரத்தில் அழுத்தம் கொடுத்து, இறுக்கமடையச் செய்யும் உருளைகளாகும். களிமண், குறுமணல் சாலைகள் அமைக்க இந்த உருளைகள் தகுந்தவை. ஆனால், காற்றுக் குமிழிகள் உருவாகும் வாய்ப்பும் உண்டு. பல முறைகள் உருட்டிய பின்னரே, அடர்த்தி அதிகரிக்கும்.
அடுக்குச் சக்கர உருளைகளில், பெரிய பெட்டிகள் இரு அச்சுகளின் மீதும் இணைக்கப்பட்டிருக்கும். முன் பக்க அச்சு, பின் பக்க அச்சை விடத் தாழ்வாக இருக்கும். இது மூன்று வகையாகப் பிரிக்கப்படும். நடுத்தரம், மிகு சுமையுடையது, நடுத்தரச் சுமை உள்ளது. நடுத்தரச் சுமை உள்ளது 13 டன் எடை உள்ள உருளை ஆகும். இவ்வகை உருளைகள் தனியாகப் பிரித்து ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால், பலர் சேர்ந்தே இதை உருட்ட முடியும். அல்லது ஊர்திகளில் இணைத்து உருட்டலாம். இவ்வகை உருளைகள் பிசைதல்,அழுத்தம் கொடுத்தல் ஆகிய இரு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்ய வல்லவை. கூழாங்கல், குறுமணல், களிமண், மணல் இவற்றாலான சாலைகள் அமைக்க இவ்வகை உருளைகள் ஏற்றவை.
மண் சாலை அமைக்கும் போது, இயற்கையாக உள்ள தரையின் மீது 8—10 டன் எடையுள்ள சாலை உருளை குறைந்தது 6 முறை உருட்டப்பட்டு, இறுக்கமடைந்த பின்னரே, சாலைப் பொருள்களை இட வேண்டும். 25 செ.மீ கனத்திற்கு மிகாமல், சாலைப் பொருள்களை அடுக்காக அமைத்த பின்னர், மீண்டும் உருளைகளை உருட்டி, இறுக்கமடையச் செய்ய வேண்டும். கூழாங்கல் சாலை அமைக்கும் போதும், இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.
கூழாங்கல் சாலை அமைக்கும் போது, கற்கள் பரப்பப்பட்ட பின்னர், முதல் வகைச் சக்கர உருளைகள் பயன்படுத்தப்படும். சாலைகளின் ஓரப் பகுதியிலிருந்து நடுப் பகுதி வரை உருளைகள் உருட்டப்பட்டும் சாலை ஓரங்களில் உருளைகள் முன்னும், பின்னுமாக உருட்டப்பட்டும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். பின்னர், நடுக் கோட்டிற்கு இணையாக உருளைகள் உட்புறமாக முன்னும், பின்னும் உருட்டப்பட்டு நடுப் பகுதிக்கு வர வேண்டும். பாதி அகலம், பாதி அகலமாக நகர்ந்து வர வேண்டும். உருளை ஒவ்வொரு முறையும் உருட்டப்படும் போது, தேவையான நீர் சேர்த்து இறுக்கமடையச் செய்ய வேண்டும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> நீர் இணைப்புக் கற்சாலைகள் அமைக்கும் போது, மூன்று சக்கர உருளைகளைப் பயன்படுத்தி இறுக்கம் அடையச் செய்யலாம். அதிர்வு உருளைகளையும் பயன்படுத்தலாம். இதிலும் சாலை உருளைகளை ஓரப் பகுதியிலிருந்து நடுப்பகுதியை நோக்கி முன்னும், பின்னுமாக உருட்ட வேண்டும். நீர் தெளித்த பின்னர், மீண்டும் உருட்ட வேண்டும். சாலை உருளையின் மீது நீரைத் தெளித்து உருட்டினால், உருளையின் மீது ஒட்டிக் கொண்டுள்ள பொருள்கள் நீருடன் வழிந்து சாலையில் விழுந்து உருளையால் அழுத்தப்படும். தார்ச்சாலைகள் அமைக்கும் போது, உருளைகளின் மீது நீர் தெளித்து உருட்ட வேண்டும். அப்போதுதான் சாலைப் பொருள்களான தார், நுண் கல் துகள் முதலியவை உருளையில் ஒட்டாமல் இருக்கும். —ஏ. எஸ்.எஸ். சேகர் நூலோதி. Kenneth B. Woods, Highway Engineering Hand Book,.First Edition, McGraw-Hill Book Company, New York, 1960.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 144)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qk4mg47j/
தமிழ்“சாலை உருளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qk4mg47j/APA
Oliyon Research. (2026). சாலை உருளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qk4mg47j/MLA
"சாலை உருளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qk4mg47j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment