இந்திய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மாநிலம். வடக்கே, பூடான், அருணாசலப் பிரதேசம், கிழக்கே, நாகாலாந்து, மணிபுரி, தெற்கே, மிசோரம், திரிபுரா, பங்களாதேசம், மேகாலயா, மேற்கே, மேற்கு வங்காள மாநிலம் இவற்றால் சூழப்பட்டதே அசாம் மாநிலமாகும். அசாம் அசாம் மாநிலம் அசாம் மாநிலம் 78,523 ச.கி.மீ. பரப்பளவு உள்ளது. இதன் தலைநகர் திசுபூர் (Dispur) ஆகும். புதிய தலைநகர் பிராக்சோதிசுபூர் (Pagjyotishpur). அசாம் மாநிலத்துக்கு இமய மலைத் தொடர்களான பாட்காய்புர், நாகர்மலை–பராய் தொடர், காசி, சயிந்திய மமைத்தொடர் போன்றவை எல்லைப்புறங்களாக அமைந்துள்ளன. மாநிலத்தின் நடுவே வெள்ளம் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்திராவும் அதன் கிளை ஆறுகளும் பாய்கின்றன. அதிக அளவில் மழை பெய்யும் இந்திய மாநிலங்களுள் அசாம் சிறப்பானதாகும். அசாம் என்ற பெயர் வடமொழியில் ‘அசமம்’ - சமமானதன்று என்று பொருள்தரும். மலையும் சமவெளியும் பள்ளத்தாக்குகளும் கொண்ட இம்மாநிலத்திற்கு இப்பெயர் பொருத்தமே. மேலும், ‘அசம்’ என்றால் நிகரற்றது என்றும் பொருள் உண்டு. அசாம் என்ற பெயர் அகோம் மொழியில் உள்ள அசம் என்ற சொல்லிலிருந்து வந்தது என்பர். இதன் பொருள் ‘வெல்லுதற்கரியவர்’ என்பதாம். இச்சொல் ஆசாம் – ஆசம் – ஆகம் – அகோம் என்று மருவி வந்தது. பிறகு ஆங்கிலேயரால் அசாம் என்று உச்சரிக்கப்பட்டுள்ளது. இராமாயண காலத்தில், அசாம் பரத கண்டத்தின் பகுதியான பிராக்சோதிச அரசாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு விசுவாமித்திரரின் பாட்டனாரான அமிருதராசர் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. மகாபாரதத்தில் இப்பகுதியை நரகாசுரன் ஆண்டுவந்ததாகக் குறிப்பு உள்ளது. இதனைக் காமரூபம் என்றும் இங்கு வாழ்ந்தவர்களைக் கிரீடர்கள் என்றும் அழைத்தனர். யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பும், கவி வாணர் எழுதிய அர்ச சரித (Harsha Charita) நாடகமும், கல்வெட்டுகளும் அசாம் பற்றி அறிய உதவியாக உள்ளன. இவற்றிலிருந்து, இப்பகுதி காமரூபம் என்று அழைக்கப்பட்டது என்றும், கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியை வர்மன் மரபினைச் சேர்ந்த மன்னர்கள் ஆண்டுவந்தனர் என்றும், இவர்கள் நரகாசுரன் வழிவந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது. வர்மன் மரபிற்குப் பின், அசாம் பகுதியைச் சலசுதம்ப மரபினர், பாலர், கென் மரபினர் போன்றோர் ஆண்டனர். கென் மரபினரின் காலத்தில்தான் முகம்மது கோரியின் படைத்தலைவரான பக்தியார் கில்சி இப்பகுதியை வென்றார் ஆனால், மீண்டும் கென் வமிசத்தினர் அசாமைத் தங்கள் ஆட்சியில் கீழ்க் கொண்டு வந்தனர். கி.பி. 1515-இல் கோரி வமிசத்தினர் அசாமைக் கைப்பற்றினர். விரைவிலேயே அகோம் மரபினர் மீண்டும் அசாமைக் கைப்பற்றிக் கிழக்கிந்தியக் கம்பெனியார் காலம் வரை ஆண்டுவந்தனர். கி.பி. 1819-ஆம் ஆண்டு பர்மியர் இப்பகுதியைக் கைப்பற்றினர். பர்மியரிடமிருந்து ஆங்கிலேயர் அசாம் பகுதியை வென்றனர். பின்னர் அது பிரிட்டீசு இந்தியாவின் (British India) ஒரு பகுதியாக மாறியது. இந்தியா 1947-ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபொழுது பிரிவினை செய்யப்பட்டது. அதனையொட்டி அசாம் பிரதேசத்தின் பகுதியான சில்கட் மாவட்டம் பாகிசுத்தான் பகுதியான கிழக்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. எஞ்சிய அசாம் பகுதி 2,23,590 ச.கி.மீ. பரப்புடையது. ஆயினும், கடந்த சில ஆண்டுகளாக அசாம் பகுதியிலிருந்து வேறு சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இன்றைய அசாமின் பரப்பளவு 78,523 ச.கி.மீ. அசாமிலிருந்து வடகிழக்கு எல்லைப் பகுதி என்ற அமைப்பு 1948-இல் பிரிக்கப்பட்டது. இப்போது அது அருணாசலப் பிரதேசம் என்றழைக்கப்படுகிறது. 1957-ஆம் ஆண்டு நாகர்மலை மாவட்டம் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. 1963-ஆம் ஆண்டு இப்பகுதி, நாகாலாந்து என்ற தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. 1970-ஆம் ஆண்டு அசாமின் மற்றொரு பகுதியான மேகாலயா மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. 1972-ஆம் ஆண்டு காசி, சயிந்தியா, காரோமலெ மாவட்டங்களைக் கொண்ட இப்பகுதி மேகாலயா என்ற தனி மாநிலமாக மாறியது. அவ்வாண்டே மிசோ மலைப்பகுதி மாவட்டம் அசாமிலிருந்து பிரிக்கப்பட்டு மிசோரம் என்ற பெயரில் மத்திய அரசின் ஆளுகையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. 1962-ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தின் வடக்கில் உள்ள இமாலயப் பகுதிகள் சீனப்படைகளால் தாக்கப்பட்டன. மலைவாழ் மக்களில் பலர் அசாம் மாநிலத்தின் மலைகளிலும் சமவெளிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். நாகூர், நாக்டர், காசி கூட்டத்தினர், சயிந்தியா கூட்டத்தினர், மிசிரியர்கர்பி கூட்டத்தினர், கூகி பிரிவினர், போரே-போடோ பிரிவினர், மிசோலுசாயி பிரிவினர், இலலுங்கு கூட்டத்தினர். சுத்தியா பிரிவினர், மிரி அல்லது மிசிங் பிரிவினர், அகா பிரிவினர், மோரோ அல்லது மடகா பிரிவினர், கம்மதியர், நாரா பிரிவினர், பகியால் பிரிவினர், ஐதன்யர், துருங் பிரிவினர், காம்சங் பிரிவினர் என்னும் பல மலைவாழ்மக்கள் அசாம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர், மற்றும் பார்ப்பனர் காயசுதர், கலிக, கோச், கியோட், கனகா, கைபர்டா, குமாரா, அரி என்ற சாதிப் பிரிவுகளும் உள்ளன. அசாமிய மக்களிடையே ஆவினத்தைப் போற்றும் மரபு உள்ளது. ஆலினம் போற்றும் விழாவாகப் பிகு பண்டிகை அங்குக் கொண்டாடப்படுகிறது. மக்கள் எண்ணிக்கைச் செறிவு, இந்தியா முழுவதன் செறிவை விடக் குறைவு, நாகாலாந்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 31 பேரும், மேகாலயாப் பகுதியில் 45 பேரும் உள்ளனர். அசாமின் சில பகுதிகளில் கல்வி அறிவுத் தரம், இந்திய நாட்டின் பொதுத்தரத்தைவிட உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் மேகாலயாப் பகுதியில் 30 விழுக்காடும், நாகாலாந்துப் பகுதியில் 27 விழுக்காடும் எழுத்தறிவு பெற்றவர்கள். ஆனால், அசாமில் பொதுவாக 29 விழுக்காடு மக்களே எழுத்தறிவு பெற்றுள்ளார்கள். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து அண்டை மாநிலங்களிலிருந்தும் அயல் நாடுகளில் இருந்தும் மக்கள் குடியேற்றம் அசாமில் நடந்து வருகிறது. அதனால் பெரும் அரசியல் கொதிப்பு உருவாகியுள்ளது. வங்காளத்திலிருந்தும் பீகாரிலிருந்தும் பங்களாதேசத்திலிருந்தும் மக்கள் அசாமில் கடந்த 70 ஆண்டுகளாகக் குடியேறியும் ஊடுருவல் செய்தும் வருகின்றனர். 1951-ஆம் ஆண்டு மக்களின் எண்ணிக்கையையும், 1981-ஆம் ஆண்டு மக்கள் எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது 30 ஆண்டுகளில் 35 விழுக்காடு அளவிற்கு இப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இது இந்திய நாட்டின் பொதுமக்கள் எண்ணிக்கைப் பெருக்கத்தைவிட ஒன்றரை மடங்காகும். 1911-ஆம் ஆண்டு அசாமில் இசுலாமியர் 9.4 விழுக்காட்டினராயிருந்தனர். 1974-ஆம் ஆண்டில் அவர்கள் எண்ணிக்கை 34.5 விழுக்காடாக உயர்ந்துள்ளதால் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. காசிப் பிரிவினர் போன்ற மலைவாழ் மக்களிடையே தாய் வழி அதிகாரம் குடும்பத்திடையே உள்ளது. அசாம் மாநிலத்தில் மலைப் பகுதிகளில் கிறித்தவ சமயத்தினரும், சமவெளிப் பகுதிகளில் இந்து சமயத்தினரும், இசுலாமிய சமயத்தினரும் வாழ்கின்றனர். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை விவரப்படி அசாமில் இந்துக்கள் 71 விழுக்காடும், இசுலாமியர் 24 விழுக்காடும் இருந்தனர். மலைவாழ்மக்களிடையே கிறித்தவ சமயத்தினர் எண்ணிக்கை 51 விழுக்காடாகும். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மிசோரம் பகுதியில் 27 விழுக்காடு கிறித்தவர்கள் இருந்தனர். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி அங்குக் கிறித்தவ சமயத்தினர் 98.09 விழுக்காடாக உள்ளனர். இங்குள்ள இந்துக்கள் வைணவ, சைவ, சக்தி வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். வைணவ வழிபாட்டு முறை பெரிதளவு இங்குப் பரவுவதற்குக் காரணமாய் இருந்தவர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரதேவர் என்னும் அடியாராவார். மகாபாரதக் கதைகள், கண்ணன் வழிபாடு, பாகவத நூல் போன்றவை இந்துக்களிடையே பெரிதும் இடம் பெற்றுள்ளன. பட்டிதொட்டிதோறும் உள்ள மக்கள் கண்ணன் பெயரைப் போற்றும் மரபினர். சங்கர தேவர் வைணவ வழிபாட்டு முறையை நாமதர்மமாக அறிமுகப்படுத்தி மக்கள் மன்றங்களை அமைத்துள்ளார். சைவ வழிபாடும் அசாமிய இந்துக்களிடம் சிறப்பாக உள்ளது. பண்டைக்கால அசாமிய இந்துக்களில் பலர் சைவ சமயத்தினர். தேசுபூரில் உள்ள மகா பைரவர் ஆலயம் மற்றும் உமாநாதர் ஆலயம் சிறப்பானவை. சக்தி அல்லது தேவி வழிபாடும் அசாமிய இந்துக்களிடம் உள்ளது. இங்குள்ள காமாக்யா ஆலயம் சிறப்பான சக்தி பீடமாகும். தாந்தரீக முறையில் தேவியை வழிபடும் முறையும் அசாமில் தொன்றியதே. அசாமில் ஆலயங்களும் தான் என்ற வழிபாட்டு மன்றங்களும் நூற்றுக்கணக்கில் உள்ளன. சிவன், துர்க்கை, திருமால் போன்ற தெய்வங்களுக்கு இவ்வாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை சிவ ஆலயங்கள். அசோ (Hajo) என்ற ஊரில் பெயர்பெற்ற பௌத்த ஆலயம் உள்ளது. பூடான் நாட்டிலிருந்தும் பௌத்தர் இங்கு வந்து வழிபடுகின்றனர். பிகு அல்லது பைகாச விழா அசாமில் மிகச் சிறப்பான விழா, இது அசாமியப் புத்தாண்டு விழா. இது இளவேனிற் காலத்தில் சித்திரை மாதத் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. கோமாதா-கோலட்சுமி என்ற முறையில் ஆவினத்திற்கு வழிபாடு செய்யப்படுகிறது. மற்றும், தியல் திருவிழா-கண்ணனைப் பற்றிய விழா, அம்பு பசிநோன்பு, சிவராத்திரி போன்றவையும் சிறப்பான விழாக்களாகும். சிவசாகரில் நடத்தப்படும் சிவராத்திரி விழா மிகவும் போற்றத்தக்கதாகும். அசாம் நீர்வளம், நிலவளம், வனவளம், கனிவளம் மிக்க மாநிலம். அங்குள்ள மலைச்சாரல் பகுதியில், 756 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அவை 26.3 கோடி கிராம் தேயிலையை உற்பத்தி செய்கின்றன. அதன் மதிப்பு ஏறத்தாழ 400 கோடி உருபாய் ஆகும். இங்கு மழை மிகுதியாகப் பெய்கிறது. இதனால், இம்மாநிலத்தில் அடர்ந்த பசுமை இலைக் காடுகள் மிகுதி. மரம் அறுக்கும் தொழிலுக்கு இவை அடித்தளமாகும். இங்குள்ள மூங்கில் காடுகள் செழிப்பானவை. அவை காகித உற்பத்திக்குப் பயன்படுகின்றன. உலகிலேயே பல வண்ணங்களோடு கூடிய சிறியதும் பெரியதுமானதுமான மலர்கள் மலிந்துள்ளன. நெல் விளைச்சலும் பிரம்மபுத்திர வடிகால் நிலத்தில் சணலும் மிகுதியாக விளைகின்றன. ஆண்டுதோறும் இம்மாநிலம் பிரம்மபுத்திரா ஆறும் அதன் கிளை ஆறுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. இங்குப் பருத்தி, பழவகை, எண்ணெய் விதைகள், கரும்பு, கோதுமை, தேயிலை போன்றவை பயிராகின்றன. கனிவளத்திற்கும் இம்மாநிலம் பெயர் பெற்றது. நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக் கல், பெட்ரோல், எரிவாயு போன்றவை இங்குக் கிடைக்கின்றன. ஓலை முடைதல், கம்பள ஆடை நெய்தல் போன்ற குடிசைத் தொழில்களுடன் உரச் சாலை, காகிதம், பெட்ரோல், மரப்பலகை வெட்டுதல், சர்க்கரை, தேயிலை உற்பத்தி ஆலைத் தொழில்களும் உள்ளன. இரா.சீ.