உலகுக்கெல்லாம் அடிப்படை மூலகாரணமான ஒரு பரம்பொருள் உண்டு என்றும், அதுவே மேலான மெய்ப்பொருள் என்றும் நிலைநாட்டும் கோட்பாடு இறைக் கொள்கை எனப்படும். இப்பரம்பொருள் மூலகாரணம் என்பதால் அதற்கு மேலான ஒரு காரணம் இல்லை என்பதாகும். இம்முழு முதற்காரணத்தைத் தான் கடவுள் என்று பல மதத்தினரும் கூறுகின்றனர். இறைக் கொள்கைக்கு (Theism) எதிராக எழுப்பப்படும் ஒரு கேள்வி, விருப்பு வெறுப்பற்றவனாகவும் உயிர்களிடத்தில் இரக்கம் உடையவனாகவும் உள்ள கடவுள் ஏன் உயிர்களை ஏற்றத் தாழ்வுடன் கூடிய இன்பதுன்பங்களுக்கு ஆளாக்க வேண்டும் என்பது. இதற்குத் தரப்படும் விடை, இறைவன் அந்தந்த உயிருக்கு அவை செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்பவே அவற்றை அருளுகிறான்; சொந்த விருப்பு வெறுப்புகளால் அல்ல என்பதாகும். அத்துவைதம், விசிட்டாத்துவைதம் முதலான வேதாந்த மதங்கள் பரம்பொருள் உண்டு என்பதைக் காட்சி, கருதல் அளவைகளால் உறுதியாக நிறுவுதற்கு இயலாமையால், வேதம் முதலான உரை அளவையால் நிறுவுகின்றன. நியாய நெறியாளர் உலகம் தோன்றிய பொருளாதலால் அதனைத் தோற்றுவிக்கக் கருத்தா ஒருவன் வேண்டும்; அவனே இறைவன் என்று கருதளலவையால் கடவுள் உண்மையை நிலைநாட்டுவர். வைசேடிகரும் யோக நெறியாளரும் கருதல், உரை ஆகிய இரு அளவைகளாலும் இக்கருத்தை நிலைநாட்டுவர். யோக நெறியாளர் ஆளும் அளவை முறை வருமாறு; உயிர்களுக்கிடையே அறிவு, அழகு, ஆற்றல் முதலானவற்றுள் ஏற்றத்தாழ்வுடன் கூடிய படி நிலைகள் காணப்படுகின்றன. இவற்றை ஆராய்ந்தால் அனைத்து நிலைகளிலும் குறைவிலா நிறைவாகிய ஒரு பொருள் இருத்தல் வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. அப்பொருளே கடவுள் என்பர். சைவசித்தாந்திகள் கடவுள் உண்டு என்பதை நிலை நிறுத்துவதற்கு ஆகமங்களைச் சான்று காட்டுவதோடு கருதலளவையையும் மேற்கொண்டனர். பானை தானாகத் தோன்றிவிடாது. அதைச் செய்கின்றவன் ஒருவன் வேண்டும். குயவன் களிமண்ணை மூலப் பொருளாகக் கொண்டு சக்கரம் தண்டம் ஆகியவற்றைக் கருவிகளாகக் கொண்டு பானையை உண்டாக்குவது போல, பல்வேறுபட்ட இவ்வுலகைப் படைப்பதற்கு அது பற்றிய முற்றறிவைக் கொண்ட பேராற்றல் படைத்த ஒருவன் இருத்தல் வேண்டும். அவனே கடவுள், அவன் மாயையை மூலப் பொருளாகவும் சக்தியைத் துணையாகவும் கொண்டு உலகைப் படைக்கிறான். மேலும், உயிர்கள் பல பிறவிகளில் இன்ப துன்பங்களைத் தத்தம் வினைப் பயனுக்கேற்ப நுகர்கின்றன. அந்தந்த உயிர் செய்த வினைப் பயன்கள் அறிவற்ற பொருளாதலால் தாமே சென்று அந்தந்த உயிரோடு பொருந்த மாட்டா. அப்படிப் பொருந்துமாறு செய்வதற்குப் பேராற்றலும் பேரறிவும் கொண்ட ஒரு பொருள் வேண்டும். அதுவே கடவுள் என்பர் சைவசித்தாந்திகள். பெ.தி.