அரபு நாடுகளின் அயற்செலாவணிச் சீரமைப்பின் ஒற்றுமைக்காக 1960–ஆம் ஆண்டில் ‘அரபு பணவாக்க நிதி’ (Arab Monetary Fund) ஒன்று உருவாக்கப்படும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசியல் நெருக்கடியும் எண்ணெய் விலைகளின் ஏற்றத்தினால் ஏற்பட்ட பணவீக்கச் சிக்கல்களும் இந்நிதியின் தேவையை 1974–இல் உறுதிப்படுத்தின. மொராக்கா நாட்டின் தலைநகரான இரபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் பல அடிப்படைக் கருத்துகள் குறித்துக் கலந்தாராயப்பட்டது. பின்னர் அரபுச் சங்க (Arab League) நாடுகளின் வெளி விவகார அமைச்சர் குழு, அதனை ஒப்புக்கொண்டு உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. அவ்வுடன்படிக்கையின் விளைவாக 1977–ஆம் ஆண்டு இறுதியில், அயற்செலாவணிச் சமநிலைக்கான முதல் துணைக்கடன் வழங்கப்பட்டது. இந்நிதியின் முக்கிய நோக்கங்கள் (1) உறுப்பு நாடுகளின் அயல்நாட்டுப் பண வழங்கீட்டில் ஏற்படும் சமநிலையில்லாத் தன்மையின் முட்டுக் கட்டைகளைத் தவிர்க்கத் திட்டமிட்டு உதவுதல், (2) அயற் செலாவணி வீதத்தை உறுதிப்படுத்தி, இறுதியில் ஒன்று- பட்ட அரபுச் செலாவணி ஒன்றை உருவாக்க வழி வகுத்தல். (3) பன்னாட்டுப் பொருளாதார வங்கியியல் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் ஒன்றுபடுத்திச் செயற்படத் தூண்டுதல். இந்நிதியின் மேலாண்மைக்குப் பொறுப்பான ஆளுநர் குழு உறுப்பினர்களில், உறுப்பு நாடுகளின் பேராளராக ஓர் ஆளுநரும் ஓர் உதவி ஆளுநரும் அமர்த்தப்படுகின்றனர். இயக்குநர் குழு, நிதியின் பொது இயக்குநரின் தலைமையின் கீழ்த் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 சிறப்பு வல்லுநர்களுடன் செயற்படுகிறது. ஈராக்கு நாட்டினரான டாக்டர் சவாட்அசீம் (Jawad Hashim) பொது இயக்குநராகவும், இயக்குநர் குழுத் தலைவராகவும் இப்போது பணியாற்றுகிறார். ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் இந்நிதியின் தலைமைச் செயலகம் நிறுவப்பட்டுள்ளது. எகிப்து, இசுரேல் நாட்டுடன் 1979–இல் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாக உறுப்பினர் தகுதியை இழந்தது. மற்றைய உறுப்பு நாடுகள் அல்சீரியா, பெகரின், ஈராக்கு, குவைத்து, இலெபனான், இலிபியா, மாரிடானியா, மொராக்கோ, ஓமான், பாலசுதீன விடுதலைக் கழகம், கட்டார், சவுதி அரேபியா, சோமாலியா, சூடான், துனீசியா, சிரியா, ஐக்கிய அரபுக் குடியரசுகள், ஏமன், அரபுக் குடியரசு, ஏமன் மக்கட் குடியரசு ஆகியன இதன் உறுப்பு நாடுகளாகும். ஆளுநர் குழுவின் 1981–ஆம் ஆண்டுக் கூட்ட முடிவின்படி உறுப்பு நாடுகளின் செலுத்தப்பட்ட பங்குத் தொகை (Paid up Contribution) 400 விழுக்காட்டில் இருந்து 500 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஐந்தில் ஒரு பங்கு நிதி, உறுப்பு நாடுகளின் எதிர்பாராத ஏற்றுமதி வருவாய் இழப்புகளை ஈடுசெய்யக் கடனாக வழங்கப்படுகிறது. உறுப்பு நாடுகள் 52 விழுக்காடு பங்குத் தொகை மட்டும் இதுவரை செலுத்தி வந்தன. ஆனால் முழுப் பங்குத் தொகையையும் அவை செலுத்த வேண்டும் என்று நிதி ஆளுநர்கள் இப்போது முடிவு செய்துள்ளார்கள்.