அணிவகுப்பு
aṇivakuppu
அணிவகுப்பு என்பது போரில் ஈடுபடுவோர் தம் படைகளை வகுத்தும் தொகுத்தும் ஒழுங்குபடுத்திப் போர் நிலைக்கு ஏற்றவாறு அவற்றை ஈடுபடச் செய்யும் அமைப்பு நிலையாகும்.
அணிவகுப்பு என்பது போரில் ஈடுபடுவோர் தம் படைகளை வகுத்தும் தொகுத்தும் ஒழுங்குபடுத்திப் போர் நிலைக்கு ஏற்றவாறு அவற்றை ஈடுபடச் செய்யும் அமைப்பு நிலையாகும். யானைகள் பத்தும், குதிரைகள் நூறும், தேர்கள் மூன்றும், காலாள் ஆயிரமும் கொண்ட அமைப்பு பதாதி எனப்படும். 82 பதாதி கொண்டது ஒரு தண்டு என்றும், 100 தண்டு கொண்டது ஒரு அக்குரோணி என்றும் கூறப்படும். யானை ஒன்றும் குதிரை மூன்றும், தேர் ஒன்றும் காலாள் ஐந்தும் கொண்டது ஒரு பத்தி; மூன்று பத்திகள் கொண்டது ஒரு சேனாமுகம்; மூன்று சேனாமுகம் கொண்டது ஒரு குமுதம்; மூன்று குமுதம் கொண்டது ஒரு கணம்; மூன்று கணம் கொண்டது ஒரு வாகினி; மூன்று வாகினி கொண்டது ஒரு பிரளயம்; மூன்று பிரளயம் கொண்டது ஒரு சமுத்திரம்; மூன்று சமுத்திரம் கொண்டது ஒரு அநீகினி; பத்து அநீகினி கொண்டது ஒரு அச்சோகினி என்று கூறப்படும்.
இவ்வாறமையும் படைப் பகுதிகளை வகுத்து நிறுத்தும் முறை தண்டம், போகம், மண்டலம் என மூவகைப்படும். தண்டம் படையைக் குறுக்கே நிறுத்துதல் என்றும், போகம் நால்வகைப் படைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்துதல் என்றும், மண்டலம் அவற்றை வட்டமாக நிறுத்துதல் என்றும் கூறப்படுகிறது.
வேறுவகையாகவும் படையமைப்பு கூறப்படும். அது 3 சமுத்திரம் ஒரு சங்கம்; 3 சங்கம் ஒரு அநீகம்; 3 அநீகம் ஒரு அக்குரோணி; 8 அக்குரோணி ஒரு ஏகம்; 8 ஏகம் ஒரு கோடி; 8 கோடி ஒரு மகாசங்கம்; 8 மகாசங்கம் ஒரு விந்தம்; 8 விந்தம் ஒரு குமுதம்; 8 குமுதம் ஒரு பதுமம்; 8 பதுமம் ஒரு நாடு; 8 நாடு ஒரு வெள்ளம் என்பதாகும்.
போரில் இப்படைப் பத்திகளை அனுப்பும் அமைப்பு வியூகம் எனப்படும். அது தெண்டவியூகம், சகடவியூகம், வராக வியூகம் மச்ச வியூகம், சூசிகா வியூகம், காருட வியூகம் முதலிய பல வகைப்படும். தக்க வியூக அமைப்பினைத் தேர்ந்து தம் படைகளை அணிவகுத்துச் சென்றுசெயல்படுமாறு அனுப்புவதும் எதிரி அனுப்பிய படை வியூகங்களை அறிந்து அதற்குத் தகுந்தாற்போலத் தம் படை வியூகத்தை அமைத்துத் தடுத்தும் முன்னேறியும் போரினை வெல்வதும் சிறந்த போர் உத்தியாகும். பழந்தமிழ்ப் படையமைப்புப் பற்றிய செய்திகள் புறநானூறு போன்ற சங்கவிலக்கியங்களில் காணப்படுகின்றன. யானை முதலிய நால்வகைப்படைகள் அக்காலத்தில் இருந்தன. போரின் போது முன்னணியில் நிற்கும் வீரர்களைத் தார்ப்படை அல்லது தூசிப்படை என்றும், பின்னணியில் நிற்போரைக் கூழைப் படை என்றும் கூறுவர்.காண்க: போர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 310)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q8ejv9tw/
தமிழ்“அணிவகுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q8ejv9tw/APA
Oliyon Research. (2026). அணிவகுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q8ejv9tw/MLA
"அணிவகுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q8ejv9tw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment