உடற்கூற்று வண்ணம்
uṭaṟkūṟṟu vaṇṇam
பட்டினத்தடிகளால் பாடப்பட்டது; சந்தப் பாடலாக அமைந்தது; ‘தனதன தான தனதன தான’ என்னும் வண்ணத்தில் தொடங்குவது; மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை கூறுவது.
பட்டினத்தடிகளால் பாடப்பட்டது; சந்தப் பாடலாக அமைந்தது; ‘தனதன தான தனதன தான’ என்னும் வண்ணத்தில் தொடங்குவது; மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை கூறுவது. ‘ஒரு மடமாதும் ஒருவனுமாகி’ என்று தொடங்கி, ‘ஓர் பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே’ என்று முடிவது. அருணகிரிநாதரின் ‘அறுகு நுனி பனியனைய’ எனத் தொடங்கும் திருவிடை மருதூர்த் திருப்புகழும் இது போன்ற கருத்துடைய ஒன்றாகும்.
கணவன், மனைவி ஆகிய இருவரின் இன்ப சுகத்தால் விந்துவும் சுரோணிதமும் கலந்து ஒரு துளியாகிப் பெண்ணின் கருப்பையுள் இடம் பெற்றுக் கண், வாய், செவி, கால், கை முதலியன பெற்று அத்துளி உடம்பாகி வளர்கிறது. பத்துத் திங்கள் நிறைவுற்று அது மகவாய்ப் புவியிடைப் பிறக்கிறது. அக்குழந்தை மண்ணிடைக் கவிழ்ந்தும் உந்தியும் விளையாடுகிறது; கொஞ்சம் கொஞ்சமாக ஓர் அறிவு, ஈரறிவு என அறிவு பெறுகிறது. தாய் மடியில் அமர்ந்து மழலை பேசி மகிழ்விக்கிறது. மேலும், வளர்ந்து உடைமணி அணிந்து, ஐந்து வயதில் தெருவிடை விளையாடுகிறது. பிறகு நல்லாசிரியனிடம் கலைபயிலச் சென்று முத்தமிழ்க் கலைகளைக் கற்றுப் பதினாறு வயதினை எய்துகிறது. தலையலங்காரம் முதலியவற்றுள் விருப்பம் கொண்டு, மணிபல பூண்டு பிறர் வணங்கிப் பெருமை செய்ய, இவன் மன்மதன் என மங்கையர் கண்டு மருண்டு நிற்கத் தோற்றம் காட்டுகிறது.
மயிலனைய மடமாதர் அழகு கண்டு, அவர்பின் சென்று, இதழமுது உண்டு, தேடிய செல்வத்தை அவர் வசம் தந்து நிற்கிறது வாலிபக் கோலம். அது கலையும்போது வளமையும் இளமையும் மாறுகின்றன. பல் விழுந்துவிட கண் இருண்டுவிட நரை திரை வர வாதம் முதலிய நோய்கள் மண்டுகின்றன. கையினில் தடியுடன் நடை பயில்கிறது. மந்தி என்னும்படிக் குந்தி நடந்து, துயில் வரும் காலம் இருமல் முதலிய நோய்களால் துன்புறுகிறது. கலகல என மல சலம் வரத் தெளிவின்றித் தடுமாறுகிறது. தனக்கினி ஆதரவு ஏது என்று நோகும் வேளை வேதன் எழுதிய காலம் வந்துவிட்டதென உணர்கிறது. சுவாசம் தடுமாறும் அவ்வேளை கொடிய வடிவங் கொண்ட எம தூதுவர் வலை வீசி நிற்க, மனைவி மடியில் வீழ்ந்தலற அயலவர்கள் வருத்தமுற உயிர் பிரிகிறது. வாசலில் பந்தலிட்டும் பறைகொட்டியும் பிணத்தினைக் கழுவி எடுத்தும் மாலைகளணிவித்தும், நாறுமுடம்பைச் சுடலைக்கு எடுத்துச் சென்று விறகிடை மூடித்தழல் கொண்டு மூட்ட வெந்து எலும்பும் கருகி ஓர்பிடி சாம்பலும் ஆகாமல் போய் விடுகிறது. இத்தகைய உடம்பை நம்பும் அடியேனை இறைவனே இனியாவது நீ ஆள வேண்டும் என வேண்டுவது பட்டினத்தடிகள் இயற்றிய உடற் கூற்றுவண்ணத்தில் கூறப்படும் கருத்தாகும்.ஜி.ஆர்.கி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 804)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q4tzey7n/
தமிழ்“உடற்கூற்று வண்ணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q4tzey7n/APA
Oliyon Research. (2026). உடற்கூற்று வண்ணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q4tzey7n/MLA
"உடற்கூற்று வண்ணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q4tzey7n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment