இந்தியாவின் இருபத்திரண்டு மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலம் 1966–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள் அமைக்கப்பட்டது. முந்தைய பஞ்சாபு மாநிலம் அரியானாவையும் சேர்த்தேயிருந்தது. அதனை இரண்டாகப் பிரித்ததன் விளைவாகப் பஞ்சாபு, அரியானா (Haryana) என்னும் பெயரில் இரு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பஞ்சாபு மாநிலத்தில் இந்தி பேசும் மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து உருவானதுதான் இம்மாநிலம். அரியானாவின் வடக்கில் இமாசலப் பிரதேசமும் தெற்கில் இராசசுத்தானமும், கிழக்கில் உத்தரப் பிரதேசமும், மேற்கில் பஞ்சாபும் எல்லைகளாக உள்ளன. இந்தியக் குடியரசின் நேராட்சிப் பகுதியான தில்லி மாநகரை முப்பக்கங்களில் அரியானா சூழ்ந்துள்ளது. அரியானாவை இமயமலையின் பகுதியான தராய், இந்திய கங்கைச் சமவெளி என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இச்சமவெளி செழுமையானது. கடல் மட்டத்திற்கு மேல் 230 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை வடக்கிலிருந்து தெற்காகச் சரிந்துள்ளது. அரியானாவின் தென் மேற்குப் பகுதி வறண்டு மணற்பாங்கானதும் தரிசானதுமாய் அமைந்துள்ளது. இம்மாநிலத்தில் ஆண்டு முழுதும் நீர் வரத்தினைக் கொண்ட வற்றா ஆறுகள் இல்லை. காகர் (Ghaggar) என்னும் ஒரேயாறு இம்மாநிலத்தின் வடகோடியில் பாய்கிறது. மழையும் குறைவாகவே பெய்கிறது. எனவே ஆற்று நீர்ப்பாசனம் மிகக் குறைவு. பெய்யும் மழையை நிலம் உறிஞ்சிக் கொள்வதால் நிலத்தடி நீரைக் குழாய்க் கிணறுகள் மூலம் அரியானா மாநிலம் சிறப்பாகப் பயன்படுத்துகிறது. ஏறத்தாழ மூன்றிலொரு பங்கு நீர்ப்பாசனம் குழாய்க் கிணறுகள் மூலமே நடைபெறுகிறது. பெரு மழை பெய்யும்போது சில வேளைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுண்டு. அரியானா அரியானாவின் தட்பவெப்ப நிலை பெரும்பாலும் ஆண்டு முழுதும் குறிப்பிட்ட ஒரு முறையிலேயே அமைந்துள்ளதெனலாம். கோடையில் மிகுந்த வெப்பத்தையும் குளிர்காலத்தில் கடுங்குளிரையும் கொண்டிலங்கும் அரியானாவில் மே மாத வெப்பத்தின் அளவு 46° செண்டிகிரேடு வரை உயருவதுண்டு. சனவரியில் வெப்பத்தின் அளவு மிகக் குறைவு, பருவக் காற்று மழை சூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் குளிர்கால மழை திசம்பர் முதல் பிப்பிரவரி வரையிலுமாக இரு பருவங்கலிள் நன்கு பொழிகிறது. அரியானா மாநிலத்தின் பரப்பளவு 44,222 ச.கி.மீ. 1981–ஆம் ஆண்டுக் கணக்கின்படி மக்கள்தொகை 1,28,50,902. அரியானா மாநிலத்தில் பன்னிரண்டு மாவட்டங்கள் உள்ளன. அவை அம்பாலா, இசார் (Hissar), கர்னால் (Karnal), குர்காம், குருச்சேத்திரம், செண்டு (Zind), சிர்சா, சோன்பத்து, பரிதாபாத்து, பிவானி, மகேந்திரகார், இரோடக்கு என்பனவாம். அம்மாவட்டங்களில் பிவானியின் தலைநகர் நார்நாலாகும் (Narnal). ஏனைய மாவட்டங்களின் தலைமையிடங்கள் மாவட்டத்தின் பெயராலேயே வழங்கப்படுகின்றன. சண்டிகர் அரியானாவுக்கும் பஞ்சாபுக்கும் சேர்ந்த தலைநகரமாகும். அது அம்பாலா மாவட்டத்தின் வடகோடியில் பஞ்சாபிற்கும் அரியானாவிற்கும் இடையிலுள்ள புது நகரமாகும். 1966–இல் இம்மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி மிகக் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது இம்மாநிலம் தொழில் வளர்ச்சி மிகுந்த மாநிலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. முறையான திட்டங்களினால் தொழில் முனைவர்கள் ஆக்கமும் ஊக்கமும் பெற்றுப் பல தொழிற்சாலைகளை நிறுவியுள்ளனர். அரியானா மாநிலத்திலுள்ள–பரிதாபாத்துவல்லபகர் தொழிற்சாலை வளாகம் இந்திய நாட்டிலேயே தலைசிறந்த தொழிற்சாலை மையமாக உருவாகியுள்ளது. குர்காம், சோன்பத்து, இரோடக்கு, பகதூர்கர், இசார், சகதாரி, பானிப்பட்டு, அம்பாலா போன்ற நகரங்கள் தொழிற்சாலை நகரங்களாகும். இன்று அரியானா தொழில்வளர்ச்சிக்கான சீரிய அடிப்படை கொண்டுள்ளது எனில் மிகையாகாது. இந்த மாநிலத்தில் 1966–இல், 4500 ஆக இருந்த சிறு தொழிற்சாலை எண்ணிக்கை 1981–இல் 42,000 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஏற்றுமதியும் உரூ. 4.55 கோடியிலிருந்து, 1981–இல் உரூ. 152 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் இழுவை உந்துகளில் (Tractors) மூன்றில் இரண்டு பகுதி அரியானாவில் செய்யப்பட்டனவாகும். அதேபோல் இந்தியாவில் உருவாகும் ஒவ்வொரு ஐந்து மிதிவண்டிகளுள்ளும் (Bicycles) ஒன்று இம்மாநிலத்தில் உருவாகின்றது. இந்தியாவில் உண்டாக்கப்படும் அறிவியல் தொடர்பான கருவிகளுள் 35 விழுக்காடு கருவிகள் இம்மாநிலத்திலுள்ள அம்பாலாவில் செய்யப்படுகின்றன. இந்தியாவின் இராணுவத் தளவாடங்களில் 60 விழுக்காடு இம்மாநிலத்தைச் சார்ந்த இயமுனா நகரிலும். இராணுவத்தினர் பயன்படுத்தும் உரோமக் கம்பளங்களுள் 75 விழுக்காடு பானிப்பட்டிலும் உருவாக்கப்படுகின்றன. பானிப்பட்டு நகரினை ‘இந்தியாவின் நெசவாளர் நகர்’ என்பர். சண்டிகருக்கருகில் பஞ்சகுலாவில், “பாரத எலக்டிரானிக்சு நிறுவனம்” பெரிய தொழிற்சாலையொன்றை அண்மையில் கட்டி முடித்துள்ளது. இம்மாநிலத்திலுள்ள 309 பெரியதும் நடுத்தரமானதுமான தொழிற்சாலைகளில் ரூ. 1150 கோடி மதிப்புள்ள பொருள்கள் உற்பத்தியாகின்றன. தொழிற்சாலைகள் இடங்களிலேயே குவிந்து விடாமல் அவற்றை இப்போது நாட்டுப்புறங்களில் அமைத்துப் பரவலாக்கும் பணியில் இம்மாநிலம் முற்பட்டுள்ளது. தனியார் துறையினரும் தொழிற்சாலைகளை அமைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். அரியானாவில் கைத்தறி நெசவாலைகள் சீரிய நிலையிலுள்ளன. உற்பத்தியாகும் ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழிற் பயிற்சி நிலையங்கள் நிலைநாட்டப்பெற்று மாணவர்க்குத் தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரியானா மாநிலம் அமைக்கப்பட்ட நாளில் இது உணவுப்பொருள் விளைச்சலில் பற்றாக்குறை மாநிலமாக இருந்தது. ஆனால் இன்று தேவைக்கு மிகுதியாக விளைவிக்கும் மாநிலமாகித் தலைநிமிர்ந்து நிற்கிறது. மத்திய அரசின் உணவுப் பொருள் சேமிப்பிற்குச் கணிசமான அளவு பொருள்களைக் கொடுக்கும் இரண்டு மாநிலங்களில் அரியானாவும் ஒன்று. 1966–இல் 25.92 இலட்ச டன் விளைந்த உணவுப்பொருள்கள் 1983–84-இல் 75.25 டன்னாக உயர்ந்துள்ளன. வீரீய விதைகளைப் பயன்படுத்திக் கோதுமை, சாகுபடியாகும் நிலத்தில் 90 விழுக்காடும், நெல், பயிரிடப்படும் நிலத்தில் 85 விழுக்காடும் பயிராகின்றன. அறிவியல் முறைப்படி புதுமைப்படுத்தப்பட்டுள்ள செய்முறைகளை வேளாண்மையிலும் பயன்படுத்தி அரியானா சிறப்பிடம் பெறுகிறது. செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதும் மிகுதியாக உயர்ந்துள்ளது. இழுவை உந்துகள் 4800லிருந்து 62,892 வரை உயர்ந்துள்ளன. அதேபோல் அரியானா மக்கள் புதிய முறைகளைப் பயன்படுத்தி விதைத்தல், அறுத்தல், தாளடித்தல் போன்ற பணிகளைச் செய்தும் வழி காட்டுகிறார்கள். இசாரில் இருக்கும் வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆய்வுப்பணிகளில் முதலிடம் பெற்று விளங்குகிறது. அரியானா இந்தியாவிலேயே முதன்முதலாகப் பயிர்க் காப்பீடு முறையை உருவாக்கியுள்ளது. இரும்புத் தாது, சுண்ணாம்புக்கல், சீனக்களிமண், பளிங்குக்கல் போன்றவை அரியானாவின் கனிப் பொருள்களாம். அரியானாவின் வரலாறு வேத காலந்தொட்டு வருவதாகும். பரத மரபினர் இப்பகுதியை ஆண்டதாகப் பண்டைய வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. பரத மரபினர் ஆண்டமையால்தான் நம் நாட்டிற்கும் பாரதம் என்று பெயர் வந்தது. மகாபாரதத்தில் அரியானாப் பகுதி சீரிய இடத்தைப் பெற்றுள்ளது. பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்த பாரதப்போர் இங்குள்ள குருச்சேத்திரத்தில் நடைபெற்றது. குருச்சேத்திரத்தைத் தருமச் சேத்திரம் என்று பகவத்கீதை பேசுகிறது. இன்று பாரதப் போர் நடைபெற்றதாகக் கருதப்படும் இடத்தில் காஞ்சி காமகோடிப்பீடச் செயேந்திர சரசுவதி சங்கராசாரியார் அவர்கள் நினைவுச் சின்னம் ஒன்றை அமைந்துள்ளார்கள். இந்நினைவுச் சின்னம், வீடுமர் முன்படுக்கையில் படுத்திருந்தபோது, அர்ச்சுனனின் அம்பினால் தோண்டப்பட்டதாகக் கருதப்படும் வீடுமகுண்டம் என்னும் நீர்ச்சுனைக்கு அருகில் உள்ளது. அர்சவருத்தனர் அரசாண்ட தானேசுவரம் குருச்சேத்திரத்திற்கு அருகில்தான் உள்ளது. முசுலிம் அரசர்கள் ஆண்ட காலத்திலும் இப்பகுதி சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. பானிப்பட்டு என்னுமிடத்தில் நடைபெற்ற மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் இம்மாநிலத்துள்ள பானிப்பட்டு என்னுமிடத்தில் நடந்ததாக வரலாறு கூறும். இன்று பானிப்பட்டு சிறந்த தொழிற்சாலை நகரமாக உருவாகியுள்ளது. கி.பி. 1857–ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதல் சுதந்திரப் போரிலும் இப்பகுதி மக்கள் பெரும்பங்காற்றினர். ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்த சசார் (Jhajjar), பகதூர்கர் நவாபுகளும், வல்லபகர் (Vallabhgarh) அரசரும், இரிவாரியைச் (Riwari) சார்ந்த இராவ் துலாராம் என்பாரும் இப்பகுதியைச் சேர்ந்தவர்களே. போருக்குப் பின்னர் இவர்களுடைய பகுதிகளை ஆங்கில அரசே எடுத்துக்கொண்டு சிலவற்றைப் பாட்டியாலா, நாபா, சிண்டு அரசர்களின் ஆளுகைக்கு விட்டது. பின்னர் அரியானா, பஞ்சாபு மாநிலத்தின் பகுதியாயிற்று. பஞ்சாபுடன் இணைந்திருந்தபோது இப்பகுதி புறக்கணிக்கப்பட்டது. நாடு பிரிவினையின்போது பாகிசுதானின் மேற்கு பஞ்சாபு மாநிலத்திலிருந்து ஏதுமிலிகளாக ஓடி வந்தவர்கள் அரியானாப் பகுதியில் குடியமர்ந்து இதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டனர். 1966–ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் பஞ்சாபுப் புனரமைப்புச் சட்டத்தின்படி இந்தி மொழி பேசும் பகுதி- களைப் பஞ்சாபிலிருந்து பிரித்து, அரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இம்மாநிலத்தின் ஆட்சிமொழியும் பேச்சு மொழியும் இந்தியாகும். சுற்றுலா வளர்ச்சியிலும் அரியானா சிறப்பிடம் பெற்றுள்ளது. சண்டிகர், குருச்சேத்திரம், அம்பாலா, பானிப்பட்டு போன்ற இடங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. சண்டிகர் புதுமையான நகர். பிரெஞ்சுக் கட்டிடக் கலை வல்லுநரின் கருத்துப்படி கட்டப்பெற்ற இந்நகரம் இந்தியாவின் அழகிய நகரங்களுள் ஒன்றாகும். சுராசுகுண்டு (Surajkund) மற்றோர் அழகான சுற்றுலா மையம். இங்குள்ள இராச அன்சு (Raj Hans) என்னும் உணவகம் சிறப்புப் பெற்றது. காசுமீரப்பள்ளத்தாக்கு, சிம்லா, அமிர்தசரசு, பாக்ரா நங்கல் அணை போன்றவற்றைக் காண அரியானா மாநிலத்தின் வழியாகத்தான் பயணம் செய்யவேண்டும்.