சிங்கம்
ciṅkam
வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக, மறைந்த உயிரினங்களில் சிங்கமும் ஒன்று.
வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக, மறைந்த உயிரினங்களில் சிங்கமும் ஒன்று. பூனைக் கூட்டத்தைச் சேர்ந்த ஆசியச் சிங்கம் முன்பு பாந்திரா (Panthera) என்னும் இனமாகப் பெயரிடப்பட்டது. தற்போது லியோ (Leo) என்று மாற்றப்பட்டுள்ளது.
உலகில் சிங்கங்கள் ஆஃப்ரிக்காவிலும், இந்தியாவிலுமே வாழ்கின்றன. ஆசியச் சிங்கம், கிர் சிங்கம் என்று பெயர் பெறும். குஜராத் மாநிலத்தில் கிர் காடுகளில் மட்டுமே இவை வசிக்கின்றன. ஒரு காலத்தில் குஜராத்திலிருந்து ஹரியானா வரை இந்தியாவிலும், இரான், இராக், துருக்கி, ஆஃப்கானிஸ்தான் முழுதும் இது பரவிஇருந்தது. முகலாய மன்னர்களும், அதற்குப் பின்னர் வந்த கிழக்கு இந்திய நிறுவனத்தாரும் சிங்கங்களின் அழிவிற்குப் பெரிதும் காரணம் ஆவர். நாளடைவில், இதன் தொகை அருகிக் கொண்டே வந்து, 1900இல் 15 சிங்கங்களே எஞ்சியிருந்தன. கர்சன்பிரபு காலத்தில்தான் சிங்கம் பாதுகாக்கப்பட்ட விலங்கானது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> அமைப்பு. ஆசியச் சிங்கம் 2.74 மீ. நீளமும் 1.07 மீ. உயரமும் உடையது. உடல் செம்பழுப்பு நிறமும், வால் அடர்த்தியான கறுப்பு மயிர்க் கற்றையும் கொண்டது. ஆண் சிங்கத்திற்கு அழகு தருவது, வெளிறிய கறுப்பு நிறப் பிடரி மயிராகும். சிங்கங்கள் கூட்டங்கூட்டமாக வாழ்வன. ஒன்று அல்லது 3 ஆண்களுடன், ஒன்றும் அதற்கு மேற்பட்ட பெண் சிங்கங்களும், குட்டிகளும் இடம் பெறும் தொகுதி ஒரு சிங்கக் கூட்டமாகும். ஏறத்தாழ,450 கி.கி எடையுள்ள சிங்கத்தின் கண்கள் மஞ்சள் நிறமானவை. கண்ணின் பாவை வட்ட வடிவமானது. தாடைகள் வலிவானவை. நாக்கின் மேல் உள்ள சிறு நீட்சிகள் இறைச்சியை நக்கி, உராய்ந்து உண்ண உதவுகின்றன. சிங்கம் மரங்களின் மேல் எளிதாக ஏறி விடும். கேட்கும் ஆற்றல், பார்வை, மோப்பப் புலன் ஆகியவை நன்கு வளர்ந்துள்ளன. நீண்ட தொலைவு சென்று வேட்டையாட வல்லது.
சிங்கக் குட்டி. ஆஃப்ரிக்கச் சிங்கத்தை விட, ஆசியச் சிங்கம் உருவில் சிறியது. சிங்கம் தனியாக இருக்கும் போது, அது தன் எல்லையை முடிவு செய்வதில்லை. கூட்டத்தோடு இருக்கும் போது, அருகிலுள்ள மரங்களில் சிறுநீரைப் பெய்து, தன் எல்லையை மற்றவற்றிற்குப் புலப்படுத்தும். நான்கு ஆண்டிற்கு முன்பே இனப் பெருக்கத்திற்குத் தயாராகி விடும். ஓர் ஆண் சிங்கம், பல பெண் சிங்கங்களுடன் உடலுறவு கொள்ளும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் புணர்ச்சி நிகழும். கருக்காலம் 92—113 நாள் ஆகும். ஓர் ஈற்றில், ஆறு குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். பிறந்த குட்டிகளின் உடலில் புள்ளிகள் காணப்படும். ஆனால், குட்டிகள் வளர, வளரப் புள்ளிகள் மறைந்து விடும். மூன்று மாதம் வரை தாய்ப் பாலைக் குடித்து வளரும். குட்டிகள் நன்கு வளர்ந்தவுடன் பெற்றோருடன் சேர்ந்து வேட்டையாடத் தொடங்கும்.
தாய் தந்தை வேட்டையாடும் போது, குட்டி தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருக்கும். பத்து மாதம் சென்ற பிறகு, தானாகவே வேட்டையாட முற்படும். அப்போது, தாய் தந்தைச் சிங்கங்கள் தொலைவில் நின்று கொண்டு கவனிக்கும். சிங்கக் குட்டி, தான் வேட்டையாடிய விலங்கின் சிறு குடலையே முதலில் தின்னும். இரைப்பையை விரும்புவதில்லை. இப்பகுதி மண்ணில் புதைக்கப்படுகிறது. குட்டி வளர வளர, தான் கொன்ற விலங்குகளை வால் புறத்திலிருந்து தலைப் புறமாகத் தின்னத் தொடங்கும்.
வேட்டையாடுதல். பெரும்பாலும், மேய்வனவற்றையே சிங்கங்கள் விரும்பி உண்கின்றன. இறந்து நாட்பட்ட உடல்களைக் கூட உண்ணும். மான் முதலிய கால் நடைகளைச் சுவைத்து உண்ணும். ஆசியச் சிங்கம், மனிதனைத் தின்னாது. இரையை நெருங்கி, ஒரே பாய்ச்சலில் பாய்ந்து கொன்று விடும். ஒரு காலை முதுகின் மேலும், மற்றொன்றை நெஞ்சின் மேலும் வைத்து அழுத்திக் கொண்டு, கழுத்தைக் கடித்துக் குதறும். சிங்கங்கள், குருதி வெறி பிடித்தவை அல்ல. ஏனைய இரை விலங்குகள் இல்லாத போதுதான் கால்நடைகளைத் தாக்குகின்றன. புலியைப் போலச் சிங்கங்கள் அஞ்சும் இயல்பு கொண்டவை அல்ல. அவை எதிரியைக் கண்டு அஞ்சி ஓடாமல், நேரிடையாகத் தாக்கி விடும். வேட்டைக்குச் செல்பவர்கள் சிங்கத்தை எளிதில் கொன்று விடுகிறார்கள். சிங்கம் ஒரு முழு மாட்டைத் தின்று விடும். இது 25—30 ஆண்டுகள் வரை வாழும்.
அழிவு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹரியானா மாநிலம் முழுதும் பரவி இருந்த சிங்கங்கள், இன்று குஜராத்தில் கத்தியவார் முந்நீரகத்தின் மத்திய பீடபூமியில் மட்டுமே வாழ்கின்றன. 1969இல் இக்காடுகளின் பரப்பு 1,412.12 ச.கி.மீ ஆகும். தொடக்க காலத்தில் இது 5000 ச.கி. மீட்டராக இருந்தது. கிழக்கு மேற்காக 180 கி.மீட்டரும் தெற்கு வடக்காக 40 கி. மீட்டரும் உள்ள இக்காடுகளில் பற்பல மரங்களும், உயர்ந்த குட்டையான மலைகளும் நிறைந்திருந்தன. வேளாண்மை, மேய்ச்சல் காடுகள், நீர் வளம் போன்ற காரணிகளே சிங்கத்தின் வாழ்க்கைக்குப் பெரும் ஊறு விளைவிப்பனவாகும்.
மால்தாரிகள் எனப்படும் மேய்ச்சல் நில மக்களால் பெரும் தொல்லை நிகழ்கிறது. கால்நடைகளைக் கிர் காடுகளில் ஓட்டி விடுவதும், விறகுக்காக மரங்களை வெட்டுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவர்கள் நஞ்சு வைத்தும் சிங்கங்களைக் கொல்கின்றனர். 1960இல் ஆசியச் சிங்கம், ஆஃப்ரிக்கச் சிங்கத்தை விட மிகுதியாக இருந்தது.
சுறறுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் பல செயற்கை முறைகளைக் கையாள்வதால், சிங்கங்களின் இயற்கையான வாழ்வில் இடையூறு ஏற்பட்டுள்ளது. கிர் காடுகளைச் சுற்றி, சுற்றுச் சுவர் எழுப்பும் பணியும் முடிவடையவில்லை. 1957இல் உத்தரப் பிரதேசத்தில் வாரணாசிக்கு அருகில் சந்திரப் பிரபா காட்டில் சில சிங்கங்களை விட்டு வளர்க்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியில் முடிந்தது. பிடிக்கவும், பழக்கவும் எளிதில் வயப்படும் சிங்கங்கள், காடுகளில் மறைந்தாலும், விலங்குக் காட்சியகங்களில் நன்கு வளர்ந்து வருகின்றன. —ஜி.எம். நடராசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 193)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q389n533/
தமிழ்“சிங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q389n533/APA
Oliyon Research. (2026). சிங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q389n533/MLA
"சிங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q389n533/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment