சூயஸ் கால்வாய்
cūyas kālvāy
மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் கால்வாய், சூயஸ் கால்வாய் ஆகும்.
மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் கால்வாய், சூயஸ் கால்வாய் ஆகும். இக்கால்வாய் 1869ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டுப் போக்கு வரத்துக்குத் திறந்து விடப்பட்டது. இக்கால்வாயின் நீளம் ஏறத்தாழ 170 கி.மீ. ஆகும். ஐரோப்பாவுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் இடையேயான தொலைவைக் கடக்க, சூயஸ் கால்வாய் தொலைவற்ற எளிதான வழியாகும்.
உலகின் முக்கியமான கடல் வழிகளில் ஒன்றான சூயஸ் கால்வாய், எகிப்திலுள்ள சூயஸ் சந்திக்குக் குறுக்கே சூயெஸ், செய்ட் ஆகிய நகரங்களுக்கிடையே கட்டப்பட்டுள்ள கடல் மட்டத்திலுள்ள நீர் வழியாகும். பிரான்ஸ் நாட்டுப் பொறியாளரான பெர்டினான்டு டிலெசப்ஸ் என்பாரின் மேற்பார்வையில் இக்கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது. அடைப்புகளற்ற இக்கால்வாயின் பெரும் பகுதி நேராக இருப்பினும், எட்டு முக்கிய வளைவுகள் காணப்படுகின்றன. மென்சாலா, டிம்சே, பெரும் பிட்டர், சிறிய பிட்டர் ஏரிகள் வழியாக இக்கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இக்கால்வாய் கட்டி முடிக்கப்படுவதற்கு முன், சூயஸ் நகரப் பகுதியில் மட்டுமே மக்கள் குடியேற்றம் காணப்பட்டது. இப்பகுதி பண்டைக் காலத்தில் கிளிஸ்மா எனப்பட்டது.
இக்கால்வாய் கட்டி முடிப்பதில் தொழில் நுட்பச் சிக்கல்கள் இருந்தன. மேலும், பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளுக்கிடையே அரசியல் சிக்கல்களும் இருந்தன. கால்வாய் கட்டுவதில், பொருளாதாரச் சிக்கல்களும் பெருமளவில் இருந்தன. இக்கால்வாய் கட்டி முடிக்க 41,860,000 டாலர் செலவாகலாம் என்று திட்டமிடப்பட்டது; ஆனால் 92,414,000 டாலர் செலவாயிற்று.
போக்குவரத்துக்கென்று முதலில் இக்கால்வாய் திறக்கப்பட்ட போது, 8மீ. ஆழத்தையும் 22 மீ. ஆழப் பகுதி அகலத்தையும், 58மீ. மேற்பரப்பு அகலத்தையும் கொண்டிருந்தது. இக்கால்வாய் மிகக் குறுகியதாக இருந்தமையால், 25 கி.மீ. இடைவெளியில் ஏறத்தாழ 300–400மீ. நீளத்தையும், 5 மீ. அகலத்தையும் கொண்ட சிறிய விரிகுடாக்கள் கட்டப்பட்டிருந்தன. எனினும், 1870-1884ஆம் ஆண்டு வரை 3000 கப்பல்கள் கரை கடந்தன. பின்னர், கால்வாயை ஆழப் படுத்தும் முயற்சி 1876ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாக, இக்கால்வாய் ஆழப்படுத்தப்பட்டமையால், 1967ஆம் ஆண்டில் இக்கால்வாய் குறைந்த அளவு அகலம் ஏறத்தாழ 50 மீட்டராகவும், ஆழம் 12 மீட்டராகவும் ஆக்கப் பட்டது. அரேபியருக்கும், இஸ்ரேலியருக்கும் இடையில் ஏற்பட்ட போரின் விளைவாக, இக்கால்வாய் 1967 ஜுன்–1975 ஜூன் வரை மூடப்பட்டிருந்தது.
1870ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு இரு கப்பல்கள் என நடை பெற்ற இக்கால்வாய்ப் போக்கு வரத்து 1966–67 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 56 ஆக அதிகரித்தது. அல்ஜீரியா, லிபியா, நைஜிரியா, வட கடல், மெக்சிகோ ஆகிய பகுதிகளில் எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு, இக்கால்வாயின் கப்பல் போக்குவரத்துப் பெருமளவில் குறைந்தது. இக்கால்வாய் வழியாக வடக்கே எடுத்துச் செல்லப் பட்ட எண்ணெய் அளவு 1913ஆம் ஆண்டில் 291,000 டன் ஆகவும், 1966இல் 166,000,000 டன் ஆகவும் இருந்தது. எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப் பட்ட நாடுகள், இக்கால்வாய்ப் பகுதியிலிருந்து நீண்ட தொலைவில் உள்ளமையாலும், சூயஸிலிருந்து அலெக்சாண்டிரியா வரை எண்ணெய் கடத்தும் குழாய்கள் அமைக்கப்பட்டமையாலும், 1978ஆம் ஆண்டில் இக்கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட எண்ணெய் அளவு 28,000,000 டன் ஆகக் குறைந்து விட்டது.
1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பயணிக் கப்பல்களின் எண்ணிக்கையும், விமானப் போக்குவரத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. மேலும், ஆஸ்திரேலிய, ஆசிய வணிகத்தை, ஐரோப்பாவிலிருந்து ஜப்பான். கிழக்கு ஆசியாவுக்கு மாற்றியதாலும், இக்கால்வாய்ப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டில், சோவியத் ஒன்றியக் குடியரசு மற்றும் கிரீஸிலிருந்து இந்தியாவிற்கு இக்கால்வாய் மூலம் எண்ணெய், தாதுப் பொருள்கள், உலோகம் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்குக் கப்பல் போக்குவரத்துச் சற்று அதிகரித்தது. அரபு நாட்டுத் துறைமுகங்களுக்கும், இக்கால்வாய் வழியாகக் கப்பல்கள் பெருமளவில் செல்லத் தொடங்கின. இன்றும், வட அமெரிக்காவிலிருந்து கோதுமை, மக்காச் சோளம், அரிசி போன்றவை இக்கால்வாய் வழியாகவே ஆசிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. 1960ஆம் ஆண்டில், இக்கால்வாய்ப் போக்கு வரத்தில் 80% வடக்கு நோக்கியதாகும். இதில் 70% எண்ணெய்க் கலங்களின் போக்கு வரத்தாகும். எகிப்தையும், சினாயையும் (Senai) இணைப்பதற்காக 1980ஆம் ஆண்டில் ஒரு சுரங்கச் சாலை கட்டப்பட்டது. ஏறத் தாழ 5 கி.மீ நீளமுள்ள அகமத் அம்டி (Ahmed Hamdi) என்னும் இந்தச் சுரங்கச் சாலையின் ஒரு பகுதி சூயஸ் கால்வாயின் அடியில் அமைக்கப் பட்டுள்ளது. —ம.அ. மோகன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 611)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q388p92r/
தமிழ்“சூயஸ் கால்வாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q388p92r/APA
Oliyon Research. (2026). சூயஸ் கால்வாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q388p92r/MLA
"சூயஸ் கால்வாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q388p92r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment