அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமூகவியலுக்கு அடிகோலியவர்களுள் எட்வர்டு இராசும் (Edward Ross) ஒருவராவர். இவர் சமூகத்தைச் சீர்திருத்தும் சமூகவியலை உருவாக்கியவர் என்றும் கருதப்படுகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள இல்லினாய் (Illinois) என்னும் மாநிலத்தில் பிறந்தார்; இந்தியானா, கார்னல் போன்ற பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய பின்பு, இசுடான்போர்டு பல்கலைக் கழகத்தில் நிருவாகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இதன் பிறகு விசுகான்சின் (Wisconsin) பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஓய்வு பெறும் வரை அங்குப் பணியாற்றினார். இவர் தமது சமூகவியலின் அடிப்படை (Foundation of Sociology) என்ற நூலில் பிற்போக்குத்தன்மை கொண்ட சமூகப் படிமுறை வளர்ச்சிக் (Evolution) கருத்துகளை வன்மையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்கச் சமூகத்தைச் சீர்திருத்தியமைக்கக் கூடிய சமூகவியல் கருத்துகளை உருவாக்க முயற்சி செய்தார். இதன் காரணமாகவே இவர் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்பட்டார். சமூகவியலின் அடிப்படை என்னும் நூல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டதற்குக் காரணம், சமூகவியல் இயங்குமுறைகளை இவர் பல்வேறு வகைகளாகப் பிரித்துள்ளமையேயாகும். இராசின் சிறப்பான சமூகலியல்சார் கருத்துகள் யாவும் ‘சமூகக் கட்டுப்பாடு’ (Social Control) என்னும் நூலில் காணப்படுகின்றன. இந்நூலே இவருக்கு அனைத்துலகப் புகழைப் பெற்றுத் தந்தது. சமூக விதி முறைகளைப் (Social Order) பற்றி விளக்குவதற்கு எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியே இந்நூலாகும். சம்னர் (Sumner) விளக்கிய பண்பாட்டு அமைப்பு, கூலே விளக்கிய மனிதனைச் சமூகவயமாக்கக் கூடிய முறை அதாவது உளவியல் சார் அமைப்பு முறை ஆகிய இரண்டினையும் ஒருங்கிணைத்துச் செம்மைப்படுத்திச் ‘சமூக அமைப்பு’ (Social System) என்ற கருத்தை இவர் உருவாக்கினார். இவர் மனிதனைச் சமூகத்துடன் உடன்படச் செய்யும் முறைகளையும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தும் வழிமுறைகளையும் விளக்குகிறார். ஆனால், சமூகக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமானது என்றும் இவர் கருதினார். சமூக உளவியல் என்ற நூலை இவர் 1908–ஆம் ஆண்டில் இயற்றினார். அது தார்டியன் (Tardean) என்பவரின் பார்த்துச் செய்தல் – அறிவுறுத்தல் கோட்பாடு போன்றவற்றைப் பின்பற்றியதாகும். இரான் சமூகக் கட்டுப்பாடு என்னும் நூல் குறிப்பாகத் தனிமனித உரிமைக்குப் பாதுகாப்பு, சமூகத்தின் உறுதிநிலை (Social Stability) ஆகியவை பற்றி விளக்குகிறது. பழைமையான பண்பாடுகள், சடங்குகள், இயல் கடந்த சமயக் கருத்துக்கள் ஆகியவை சிதைவதால் சமூகத்தின் உறுதிநிலை பாதிக்கப்படுவதில்லை என்று இவர் கருதினார். மேலும், இவர் சமூகக் கொடுமைகளை அழிப்பதற்குப் பல்வேறு வழிகளையும் இந்நூல்களிற் குறிப்பிடுகிறார். மேற்கூறிய மூன்று நூல்கள் தவிர, தீவினையும் சமூகமும் (Sin and Society), மாறிவரும் அமெரிக்கா, அமெரிக்கா என்றால் என்ன, சமூகவியல் கோட்பாடுகள், புது உலகச் சமூகவியல் போன்ற பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.