சாய்வுகோணம்
cāyvukōṇam
படலங்களாக (அடுக்குகளாக) உள்ள பாறைகள் கிடைமட்டத்திலிருந்து சாய்ந்திருக்கும் கோணத்திற்குச் சாய்வுகோணம் (dip) என்று பெயர்.
படலங்களாக (அடுக்குகளாக) உள்ள பாறைகள் கிடைமட்டத்திலிருந்து சாய்ந்திருக்கும் கோணத்திற்குச் சாய்வுகோணம் (dip) என்று பெயர். செங்குத்தாக அமைந்திருக்கும் பாறைப் படலத்தின் சாய்வு கோணம் 90° ஆகவும், கிடைமட்டத்திலிருக்கும் படலத்தின் சாய்வுகோணம் 0° ஆகவும் கருதப்படுகிறது. எனவே, சாய்வுகோணம் இவ்விரண்டிற்குமிடையே இருக்கும்.
ஒரு பலகையை, சாய்ந்திருக்கும் வகையிலும், நீரில் ஒரு பகுதி மூழ்கி இருக்கும் வகையிலும் வைத்தால், அப்பலகையில் நீர்மட்டம், ஒரு கோடு போல் இருக்கக் காணலாம். இதனைக் கிடைமட்டமான நீர் மட்டமும், சாய்ந்திருக்கும் பலகையின் தளமும் சந்திக்கும் கோடு எனக் கூறலாம். இந்தக் கோட்டை பாறைப் படலத்தின் கிடைமட்டம் (strike) என்பர். சாய்வு கோணம் இந்தக் கிடை நீட்டத் திசைக்கு 90° குறுக்காக உள்ள திசையில் அமைந்துள்ள செங்குத்தான தளத்தில் அளக்கப்படுகிறது. இதை நிறை (முழு) சாய்வுகோணம் என்பர். வேறு திசைகளில் அளந்தால், அப்படலத்தின் சாய்வு கோணம் முன் அளந்த திசையில் இருந்ததை விடக் குறைவாகவே இருக்கும். கிடை நீட்டத்தின் திசைக்கு மிக நெருக்கமான திசையில் அளந்தால் இது 0°க்கு ஏறக்குறைய சமமாக இருக்கக் காணலாம். ஆகையால் கிடைநீட்டத் திசைக்கு 90" குறுக்காக அமையாத பிற திசைகளில் அளக்கப்பட்ட சாய்வுகோணம் குறை-சாய்வுகோணம் என்று பிரித்துக் கூறப்படும். பொதுவாக, சாய்வுகோணம் என்பது நிறை சாய்வு கோணத்தையே குறிப்பதாகக் கொள்ளப்படும்.
சாய்வுகோணத்தின் அளவை இத்தனை பாகை என்று குறிப்பிடுவதோடு, அது சாய்ந்திருக்கும் திசையையும் குறிப்பிடுவது மிகவும் இன்றியமையாதது. ஆகவே, சாய்வு கோணம் எனும் போது பாறைப் படலம் சாய்வாகவுள்ள கோண அளவையும், அது கீழ் நோக்கிச் சாய்ந்துள்ள திசையையும் குறிக்கிறது என்பது தெளிவாகும். எனவே, சாய்வு கோணம் எனும் சொல் இரண்டு பகுதிகள் அல்லது கூறுகளை உடையது.
சாய்வுகோணம் பல வகைகளில் அளவிடப்படுகிறது. நிலப்பரப்பில் காணப்படும் பாறைகளின் சாய்வு கோணத்தைச் சரிவளவி திசைக்காட்டி என்னும் கருவியைப் பயன்படுத்தி அளக்கலாம். நில மட்டத்திற்குக் கீழே புதைந்து மறைந்து கிடக்கும் பாறைகளின் சாய்வு கோணத்தைச் சோதனைத் துளை இட்டு, அந்தத் துளைகளில் ஒரு குறிப்பிட்ட பாறை இருக்கும் ஆழங்களை அறிந்து சாய்வு கோணத்தைக் கணக்கிட முடியும். இவ்வாறு கணக்கிட, குறைந்தது மூன்று துளைகளிலிருந்து ஒரு பாறை உள்ள ஆழத்தை அறிதல் வேண்டும்.
சில சூழ்நிலைகளில் பாறைப் படலங்களைக் கண்ணால் நேரடியாகக் காண முடியும். ஆனால், சாய்வுகோணம் என்று கூறி விட
படம் 1. சாய்வு கோணத்தை அளத்தல் படம் 2. கிடைநிலை, செங்குத்து, சாய்ந்த நிலப்பகுதிகளுக்குப் பயன்படும் சாய்வு கோணக் குறியீடுகள் (அ)சாய்ந்த நிலப் பகுதி (ஆ) கிடைநிலை, நிலப்பகுதி (இ) செங்குத்து நிலப் பகுதி
இயலாது. அது குறை சாய்வு கோணமாக இருக்கக் கூடும். குறைந்தது இரண்டு அல்லது இரண்டிற்கு அதிகமான திசைகளில் ஒரு பாறையின் குறை-சாய்வு கோணங்களை அளந்து அறிந்து விட்டால், அவற்றைக் கொண்டு அப்பாறையின் நிறை சாய்வு கோணத்தைக் கணக்கிட்டு விடலாம். இவ்வாறு கணக்கிட, முக்கோண அளவை முறை (trignometrical method) அல்லது வரைபட முறை (geometrical method) பயன்படுகிறது.
சாய்வு கோணத்தை ஓரிடத்தின் நிலப்பொதியியல் படத்திலிருந்தும் கணக்கிட முடியும். நிலப்பொதியியல் படத்திலிருந்து முதலில் பாறைகளில் கிடை நீட்டம் வரையப்படும். பின்னர் கிடை நீட்டக் கோடுகளுக்கு இடையேயுள்ள தொலைவை அளந்து கணக்கிட்டு, அங்குள்ள பாறைகளின் சாய்வு கோணம் கணக்கிடப்படும்.
நிலத்தின் கீழ் புதைந்து கிடைக்கும் கனிமத் தாரைகள், நிலக்கரி, தங்கம், செம்பு போன்ற தாதுக்களின் அளவைக் கணக்கிடவும். அவை ஓரிடத்தில் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன என்பதை அறிவதற்கும் சாய்வு கோணம் பயன்படுகிறது.
நூலோதி . Marland P. Billings, Structural Geology. Third Edition, Prentice Hall of India Private Ltd., New Delhi, 1987.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 64)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pz2cdwdw/
தமிழ்“சாய்வுகோணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pz2cdwdw/APA
Oliyon Research. (2026). சாய்வுகோணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pz2cdwdw/MLA
"சாய்வுகோணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pz2cdwdw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment