உபேயம் என்பது அடையப்படும் பேறு. இறைவழிபாட்டின் பயனாகக் கிட்டும் பேறுகள் மூன்று. அவை பொருட்பேறு, உயிர்ப்பேறு, இறைப்பேறு என்பன. பொருள்கள் நிலையற்றவை; எப்பொழுதும் விகாரப்பாட்டுக்கு இருப்பிடமாய் இருப்பவை; மிகவும் இழிந்தவை; அறிவு இல்லாதவை. அவற்றால் வரும் இன்பம் அறிவு நீக்கத்திற்குக் காரணமாகவும், துயரம் நிறைந்ததாகவும் உள்ளது; அழிவினை விளைவிப்பதும் ஆகும். பொருட்பேற்றினை விழைவோர் ‘பொருள் விரும்பி’ என்று குறிக்கப் பெறுவர். அவர்கள் ‘இழந்த பொருள் விரும்பி’, ‘புதிய பொருள் விரும்பி’ என்று இருவகைப்படுவர். உயிர்ப்பேறு தன் உயிரினையே நுகரும் நுகர்ச்சி ஆகும். இது கைவல்யம் என்று சொல்லப்படும். இப்பேற்றினால் துன்பநீக்கம் உண்டாகிறது. இதனால் கிட்டும் இன்பம் அளவுபட்டது. இது மக்களால் அறிய முடியாததாய், பொருள்தரும் இன்பத்தை விடப் பெருத்தும், இறைநுகர்ச்சியால் கிட்டும் இன்பத்தைப் பார்க்கும்போது மிகவும் புல்லியதாகவும் இருப்பது. இப்பேற்றில் இறங்கியவர் இதலிருந்து மீள்வதில்லை. அவர்களுக்கு இறை நுகர்ச்சி கிட்டாமல் போகிறது. இப்பேற்றினை நுகரும் இடம் நான்முகன் முதலானோர் உலகத்திற்கு மேலேயும் திருநாட்டிற்கு வெளியேயும் இருப்பதாகக் கூறுவர். இப்பேற்றினை விரும்புவோர். ‘உயிர் விரும்பி’ (கேவலர்) என்று குறிக்கப் பெறுவர். பொருட்பேறும் உயிர்ப்பேறும் ‘எனது’ என்னும் பற்று ‘யான்’ என்னும் செருக்கு ஆகியவற்றின் விளைவுகளாகும். இறைநுகர்ச்சியே ஒப்பற்ற பேறாகும். இறைவனிடம் செய்யும் நற்செயல்களே மேலானவையாகும். திருமகளோடு கூடியிருக்கும் பெருமானாகிய இரட்டையே (மிதுனமே) அடையத்தக்க பேறு. மனிதப் பிறவிக்குப் பயன் இறைவனைச் சார்தலே ஆகும். இவ்வுலகில் இறைநுகர்ச்சி உண்டானால் அது ஒவ்வொரு காலத்தில் மட்டுமே கிட்டுவதாகும். இவ்வுலக வாழ்வு நீங்கப்பெற்ற பின்பே முழுமையாக இறைவனுக்குத் தொண்டு புரிதல் வாய்க்கும். அத்தொண்டு இறைவனை அடையும் நெறியினை மேற்கொண்டு, பிறப்பொழிந்து, செயற்கை கடந்த திருமேனியைப் பெற்றுத் திருநாட்டில் நிலைத்துறைபவர்களோடும் (நித்தியர்) வீடுற்றவர்களோடும் (முக்தர்) கூடிச் செய்யப்படுவதாகும். இறைவனுக்குத் தொண்டு செய்வது பேற்றின் தொடக்கமாகவும், இறையடியார்க்குத் தொண்டு செய்வது பேற்றின் எல்லையாகவும் அமைகின்றன. இறைவனுக்கு அடிமையாய் இருத்தல் என்பது இறையடியார்க்கும் அடிமையாய் இருத்தலையும் உட்கொண்டது என்பர். இறைவனைத் தவிர ஏனைய பேறுகளை விழைவோரைப் ‘பிற பயன் வேண்டுமவர்’ என்றும், இறைவனையே விழைவோரைப் ‘பிற பயன் வேண்டாதார்’ என்றும் குறித்தல் மரபு. தெ.ஞா.