சின்கோனா
ciṉkōṉā
ரூபியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த சின்கோனா லெட்ஜெரினா உள்ளிட்ட 65 சிற்றினங்கள் ஆண்டெஸ் மலைப் பகுதிகளில் 800—2800 மீ, உயரத்தில் பெரு, பொலிவியா, கொலம்பியா, ஈக்குவேட்டார் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
ரூபியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த சின்கோனா லெட்ஜெரினா உள்ளிட்ட 65 சிற்றினங்கள் ஆண்டெஸ் மலைப் பகுதிகளில் 800—2800 மீ, உயரத்தில் பெரு, பொலிவியா, கொலம்பியா, ஈக்குவேட்டார் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் நீலமலைத் தொடரில் மிகுதியாகப் பயிரிடப் படுகிறது. கொயினா என்று தமிழில் வழங்கப்படும் சின்கோனா என்பது பெரு நாட்டில் வழங்கும் குயினா குயினா என்னும் பெயரின் மருவலே ஆகும். குயினா குயினா என்றால் பட்டைகளில் பட்டை என்று பெயர். ஐரோப்பாவிற்கு, ஜெசூயிட் பட்டையைப் பாதிரிமார்கள் எடுத்துச் சென்றமையால், இதற்கு ஜெசூயிட் பட்டை (jesuits bark) என்ற பெயர் உண்டாயிற்று, இதனை, மேனாட்டினர் தந்தனர் என்பதால், பறங்கிச் சக்கை எனக் குறிப்பிடுகின்றனர். இது மலேரியா என்னும் முறைக் காய்ச்சலுக்குப் புகழ் பெற்ற குவினைன் மருந்து தயாரிக்கும் மரப்பட்டையாகும். சின்கோனா மரப்பட்டை வணிக முறையில் கி. லெட்ஜெரியானா (C. ledgeriana), சி. அஃபிசினாலிஸ் (C. officinalis), சி. கேலிசாயா (C. calisaya), சி. சக்சிரூப்ரா ஆகிய மரங்களிலிருந்தும், அவற்றின் ஒட்டு வகையிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
குவினைன் மருந்து மலேரியா காய்ச்சலுக்கு மட்டுமல்லாமல், மென் குடி நீரின் (soft drinks) கசப்பானாகவும் (bitter) பயன்படுகிறது. தென்னிந்தியாவிலிருந்து 1860ஆம் ஆண்டில், சிறிதளவு விதையை எடுத்துச் சென்று, டார்ஜிலிங் மலையில் 1100 ஹெக்டேரில் பயிரிட்டனர். இந்தியா, இந்தோனேசியா, காங்கோ ஆகிய நாடுகளிலிருந்தே குவினைன் பொருள்கள் உலகச் சந்தைக்கு வருகின்றன. குவினைன் சல்ஃபேட், குவினைன் ஹைட்ரோகுளோரைடு, குவினிடின் சல்ஃபேட் முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதுடன், இந்தியாவிலும் பயன்படுகின்றன. சின்கோனா மரப் பட்டையில் 30 வகையான அல்கலாய்டுகள் உள்ளன. இவற்றுள் முக்கியமானது குவினைன் (quinine) ஆகும். இதைச் சின்கோனா பட்டையிலிருந்து 1820ஆம் ஆண்டில் பெல்லட்டையர்,, கேவிட்டன் என்போர் கண்டறிந்தனர். இப்பட்டையில் குவினிடின், ஹைட்ரோகுவினைன்,, ஹைட்ரோகுவினிடின், குப்ரைன், சின்கோனைன் முதலிய அல்கலாய்டுகள் உள்ளன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சி. லெட்ஜிரியானா, சி. கேலிசாயா, சி. அஃபிசினாலிஸ் முதலிய சிற்றினங்களில் குவினைன் அல்க- லாய்டும் சி. சக்சிரூப்ரா சிற்றினத்தில் சின்கோனைனும் மிகுந்த அளவில் உள்ளன. சி. கேலிசாயா, சி. லெட்ஜெரியானா ஆகியவற்றின் பட்டை 12—25 மி. மீ. விட்டமும் 2—5 மி.மீ. தடிப்பும் கொண்டிருக்கும். இவற்றின் பட்டையைப் பொடித்தால், பழுப்பு நிறத் தூள் கிடைக்கும். சி. அஃபிசினாலிஸ் பட்டை 12 மி. மீ. விட்டமும் 1.5 மி. மீ. தடிப்பும் கொண்டிருக்கும். பட்டைத் தூள் மஞ்சளாயிருக்கும். சி. சக்சிரூப்ரா பட்டை 20—40 மி. மீ .விட்டமும் 2—6 மி, மீ. தடிப்பும் கொண்டிருக்கும். இதன் பட்டைத் தூள் செம்பழுப்பு நிறமானது. இதிலுள்ள அல்கலாய்டுகள், மரச் சாறு கீழ் நோக்கிப் பாயும் போது, உற்பத்தியாகின்றன. எனவே நுனிக் கொப்புகளில் குறைவாகவும், தண்டு வேர்களில் மிகுதியாகவும் காணப்படும்.
தரைக்கருகிலுள்ள 30—40 செ. மீ கழுத்துப் பகுதியில்தான் அல்கலாய்டுகள் மிகுந்துள்ளன. அல்கலாய்டுகளின் அளவு 8—12 ஆண்டு வரை மிகுந்து கொண்டே வரும். 12 ஆண்டுகளுக்குப் பின்பு வளரும் மரங்களில் இச்சத்தின் அளவு குறைந்து கொண்டே வரும். மண்ணின் ஈரம் குறைவாக இருக்கும் போது, மரம் குட்டையாகவும், அல்கலாய்டு சத்தின் அளவு குறைவாகவும் காணப்படும். சி.லெட்ஜிரியானா மரத்தின் தண்டுப் பட்டையிலுள்ள அல்கலாய்டுகளில் 90% குவினைன் ஆகும். இதன் வேர்ப் பட்டையில் 60% குவினைன் உள்ளது. இலையில் 1% மொத்த அல்கலாய்டு உள்ளது, முதிர்ந்த இலைகளை விட, இளம் இலைகளில் மிகுதியான அல்கலாய்டு உள்ளது.
அல்கலாய்டு தவிர, சின்கோனா பட்டையில் ஆல்ஃபா குவினோசின், சின்கோஃபுல்விக் அமிலம், சின்கோ டேனிக் அமிலம், குவினிசிக் அமிலம், மணமுடைய பட்டை எண்ணெய், சிவப்பு நிறப் பொருள் முதலியவை உள்ளன. விதையில் எண்ணெய் அடங்கியுள்ளது. இந்த எண்ணெய் சி. ரொபஸ்டாவில் 0.5% சி.லெட்ஜெரியானாவில் 6.13% சி. அஃபிசினாவிஸ் சிற்றினத்தில் 13.3% உள்ளது. நீராவியால் காய்ச்சி, வடித்தல் முறையில் பூக்களிலிருந்து ஆவியாகும் எண்ணெய் தயாரிக்கலாம். மருந்திற்குப் பயன்படும் சி.சக்சிரூப்ரா பட்டையில் 1.8—2.0% குவினைன் இருக்க வேண்டும். பட்டைகள் 30 செ.மீ. அல்லது அதற்கு அதிகமான நீளமும் 1—8 செ.மீ. அகலமும் இருக்க வேண்டும். தடிமன் 2—6 மி.மீ. இருக்க வேண்டும். சந்தையில் பட்டைக்குரிய மதிப்பு அதன் நிறம், டேனின் முதலிய பொருள்கள் இருக்கும் அளவைப் பொறுத்து அமையும். தொழிற்சாலையில் சி. லெட்ஜெரியானா பட்டையிலிருந்து அல்கலாய்டு தயாரிக்கப்படுகிறது.
மரம். இது என்றும் இலையுதிராமல் பசுமையாக இருக்கும் மரமாகும். இதன் இலைகள், எதிரடுக்க முறையில் அமைந்திருக்கும். இலைகள் தடிப்பாக முட்டை வடிவில் இருக்கும். காம்பிடை இலையடிச் செதில்கள் விரைவில் உதிர்ந்து விடும். பூக்கள், கிளைகளின் நுனிகளில் கொத்தாகக் கலப்புக் கதிர் மஞ்சரிகளாகத் தோன்றும். இலைகள் நறுமணமுள்ளவை. பூக்கள் வெள்ளை, வெண் சிவப்பு, ஊதா கலந்த சிவப்பு நிறத்திலிருக்கும். இப்பூக்களில் தேனுண்ண ரீங்காரச் சிட்டு வரும். புல்லி இதழ்கள் சிறியவை, 5 பற்கள் உண்டு. உதிராமல். நிலைத்திருப்பவை. அல்லி இதழ்கள் நீண்ட குழாய் வடிவில் 5 குட்டையான பிரிவுகளாக இருக்கும். அரும்பில் இவை தொடு இதழ் ஒழுங்கில் அமைந்திருக்கும். இவற்றின் விளிம்புகளில் நுண் வளரிகள் காணப்படும். மகரந்தக் கேசரங்கள் ஐந்து அல்லி இதழ்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். சூல் பை 2 சூலிலைகளால் ஆனது. சூல்கள் பல உண்டு. பிரி சுவர் வெடி கனி கொண்டது.
சின்கோனா அஃபிசினாலிஸ். இதற்குச் சின்கோனா காண்டமினியா (Cinchona condaminea) என்ற பெயரும் உண்டு. இதன் பட்டைக்கு உச்சிப் பட்டை (crown bark) அல்லது லோக்சா பட்டை என்று பெயர். இதன் இலைகள் சிறியவை; வழவழப்பானவை; முட்டை—ஈட்டி வடிவானவை, இலைக் காம்பு சிவப்பாகவும், பூக்கள் ரோஜா நிறத்திலும் இருக்கும். கனி 17—20 மி.மீ. நீளமுடையது. இது முட்டை—நீள் சதுர வடிவிலிருக்கும். பட்டை சுரசுரப்பாக, பழுப்பு நிறத்திலும் உள்பக்கம் மஞ்சளாகவும், கறுப்பு மற்றும் வெள்ளை ஓரங்களைக் கொண்டும் இருக்கும். இது உறுதியற்ற மரமாகும். இம்மரம் ஏறக் குறைய 6—10 மீ, உயரப் பகுதியில் வளர்ந்துள்ளது. இது சிறிதளவு கூடுதலான வெப்பத்தையும் தாங்கும். மற்றொரு கலப்பின மரமான அஃபிசினாலிஸ் லெட்ஜெரியா, டார்ஜிலிங் மாவட்டத்திலுள்ள முங்க்பூ பகுதியில் வளர்க்கப்படுகிறது.
சின்கோனா கேலிசாயா. மஞ்சள் சின்கோனா எனப்படும் இதைப் பெருவியன் சன்கோனா என்றும் கூறுவர். இம்மரம் மிக உயரமாக வளரும். அடி மரம் 60 செ.மீ. விட்டத்திற்கு அதிகமாகவே இருக்கும், இலைகள் தலை கீழ் முட்டை அல்லது நீள் சதுர வடிவானவை; தடிப்பானவை. இலையடிச் செதில்கள் நீள் சதுரமானவை. பூக்கள் இளஞ்சிவப்பு நிறமானவை. புல்லி இதழ்களில் மெல்லிழைகள் உண்டு. முட்டை—நீள் சதுர வடிவமான வெடி கனி கொண்டது. இது 8—17 மி.மீ நீளமுடையது. பட்டை தடிமனாகவும் வெள்ளையாகவும், வெடிப்புடன் வழவழப்பாகவும் காணப்படும். இம்மரத்தை மிகுதியான குளிர்,, ஈரப் பசை உள்ள இடங்களில் வளர்க்க முடியாது. இது நீலகிரி மாவட்டத்தில் மோயர் பள்ளத்தாக்கில் 400—1000 மீ. உயரப் பகுதியில் வளர்க்கப்படுறெது. சிக்கிமிலும் இது வளர்கிறது. சி. ஹைபிரிடா, சி.சக்சிரூப்ரா ஆகிய சிற்றின மரங்களில் 16 ஆண்டுகளுக்குப் பின் பட்டை விளைச்சல் மிகுதியாகவுள்ளது. சி.ஹைபிரிடா உயரம் குறைவான இடங்களில் மிகுதியான பட்டையைத் தரும். சி. லெட்ஜெரியானா 1200 மீ. உயரப் பகுதிகளில் சிறந்த பட்டை விளைச்சலைத் தரும்.
சின்கோனா லெட்ஜெரியானா. இதை ஜாவா சின்கோனா, லெட்ஜர் பட்டை என்றும் கூறுவர். இச்சிற்றினம் இந்தியாவில் வளரும் மரம். இதன் இலைகள் தடிப்பாக முட்டை வடிவத்தில் இருக்கும். இலையடிப் பகுதி நீலம் கலந்த பச்சை நிறத்திலிருக்கும். இதில் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். முட்டை—ஈட்டி வடிவ வெடி கனி, 8—13 மி.மீ. நீளமுடையது. பட்டை தடிப்பானது. இம்மரம் தரமான மஞ்சள் நிறப் பட்டையைத் தருகிறது. இது பெரும்பாலும், மேற்கு வங்க மாநிலத்தில் 1000—1900 மீ. உயரத்திலுள்ள மலைப் பகுதியில் வளர்கிறது. இம்மரம் வளர இயலாத சூழ்நிலையில், சி. லெட்ஜெரியானா, சி. சக்சிரூப்ரா ஆகிய இரு சிற்றினங்களைக் கலப்பினம் செய்து உருவாக்கிய ஒட்டு வகைகள் நன்கு களைத்து வளரும். ஆனால் இவ்வொட்டு வகையில் உள்ள குவினைனின் அளவு குறைந்தே இருக்கும்.
சின்கோனா சக்சிரூப்ரா. இதை, சி. ரொட்டண்டிஃபோலியா (Cinchona Rotundifolia} என்றும் கூறுவர். இப்பட்டைக்குச் சிவப்புப் பட்டை என்று பெயர். அடி மரத் தண்டு நேராக இருக்கும், இம்மரம் 13—17 மீ. உயரம் வளரும். இலைகள் மெலிந்து, பெரியனவாக நொறுங்கும் தன்மையுடன் இருக்கும். பச்சை நிறமான இலையின் அடிப் பகுதி வெளுப்பாகவும், மெல்லிழைகளாகவும் இருக்கும். அல்லி இதழ்கள் ரோஜா நிறமானவை. 25—32 மி.மீ. நீளமான வெடி கனி கொண்டது. பட்டை பழுப்பு நிறத்திலும், வெள்ளை நிற விளிம்பைக் கொண்டும் இருக்கும். சி. லெட்ஜெரியானா மர ஓட்டுக்கு இதை ஜாவா நாட்டில் அடிக்கன்றாகப் பயன்படுத்துகின்றனர். இது காட்டு மரமாக வளர்கிறது. தமிழகத்தில் ஆனை மலைப் பகுதியில் 1200—2000 மீ. உயரப் பகுதியில் வளருகிறது. இச்சிற்றினம் வறட்சியைத் தாங்கி வளரும். மிகு ஈரப்பசை உள்ள பகுதியிலும், இது நன்கு வளர்கிறது.
வளர்ப்பு முறை. ஆழமான வடிகால் வசதியுள்ள வளமான களிச் சேற்று வண்டல் மண் அல்லது களி கலந்த மண், அமில நிலம் (கார—அமிலத் தன்மை 4.5—6.0) இதன் சாகுபடிக்கு ஏற்றது. மலைச் சரிவுகளில் நிழல் சார்ந்த பகுதிகளில் இது நன்கு வளரும். ஆண்டுக்கு 1500 மி.மீ. மழை பெய்யும் இடங்களில், இம்மரம் நன்கு வளர்ச்சியடைகிறது. நீர் தேங்கும் இடங்களில் எந்தச் சிற்றினமும் செழிப்பாக வளராது. பனி பெய்தால், இம்மரத்திற்குக் கெடுதல் உண்டாகும், சின்கோனா விதை மூலமாக இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. இதுவே இந்தியாவில் செயல் படுத்தப் படும் எளிய செலவு குறைவான முறையாகும். இதன் விதைகள் மிகவும் சிறியவை, எடை குறைந்தவை. ஒரு கிராம் நிறையில் 350—400 விதைகள் அடங்கியிருக்கும். விதைகள் விரைவில் முளைப்புத் திறனை இழந்து விடுகின்றன.
ஒரு சதுர மீட்டர் நாற்றங்காலில் பாத்திக்கு 50 கிராம் புதிய விதைகளை பிப்ரவரி—மே பருவத்தில் விதைக்க வேண்டும். கனியிலிருந்து எடுக்கப்பட்ட விதைகளையே விதைக்க வேண்டும். இதிலிருந்து 10,000 நாற்றுகளைப் பெறலாம். நாற்றங்காலை, களை இல்லாமல் வைத்திருக்க வேண்டும். பாத்திகளில் ஈரம் இருக்குமாறும், நாற்றுகளுக்கு நிழல் அமையுமாறும் அமைக்க வேண்டும். விதைகள் 25—40 நாளில் முளைத்து விடுகின்றன. விதைத்த 4—6 மாதங்களில், நாற்றுகளில் 4 இணை இலைகள் உண்டானதும், வேருடன் பிடுங்கி, அவற்றை நன்கு தயாரிக்கப்பட்ட நாற்றங்காலில் 10X10 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். இங்கு நாற்றுகள் 30—50 செ.மீ. உயரம் வளர்ந்ததும், அவற்றைப் பிடுங்கி குழிகளில் நட வேண்டும். குழிகளில் தொழு உரக் கலவையை நிரப்ப வேண்டும். நட்ட பின், மரக் கன்றுகளுக்கு (நாற்றுகளை) மரக் கொப்புகளை நட்டு, நிழல் அமைத்துத் தர வேண்டும். நட்ட 4-6 ஆம் ஆண்டில் 50% மரங்களைக் கலைத்து விட வேண்டும்.
வேருடன் அகற்றப்பட்ட மரங்களைத் துண்டுகளாக்கி, அவற்றிலிருந்து பட்டை உரிக்கப்படும். நட்ட 8ஆம் ஆண்டில் மிகுந்த அளவு பட்டை பெறப்படுகிறது. இறுதியாக, நிலத்திலுள்ள அனைத்து மரங்களையும் வேருடன் அகற்றிப் பட்டை உரிக்கப்படும். உரித்த பட்டைகளை உலர்த்த வேண்டும். உலர்த்தலால், 60—70% நீர் குறைகிறது, பட்டை சரியாக உலராமல், பூசணத் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடாது. நன்றாக உலர்ந்த பட்டைகளை நெடு நாள் சேமித்து வைக்கலாம்.
உலர்ந்த பட்டைகள் 45 கி.கி. அளவுகளில் கோணிப் பைகளில் நிரப்பப் படுகின்றன. இந்தோனேசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரியமான மரத்திலிருந்து வட்டப் பட்டை முறையிலும், கீற்று மொட்டு ஒட்டு (slit budding) முறையிலும், பதியன் முறையிலும் இனப் பெருக்கம் செய்து குவினைன் சத்தின் அளவை அதிகரித்துள்ளனர். இவற்றில் 4-7.5% குவினைன் உள்ளது. இவ்வினப் பெருக்க முறைகள் பெரும்பாலும், பருவ மழைக் காலத்தில் மேற்கொள்ளப் படுகின்றன. :
நோய்களும்,, பூச்சிகளும். நோய்களுள் இளஞ் செடிக் கருகல் (seedling blight), இளஞ்சிவப்பு நோய் (pink disease), பழுப்பு வேரழுகல் (brown root rot), நாற்றழுகல் (damping off), தண்டுச்சொறி (stem canker) தண்டுக் கருகல் (stem blight) முதலியவை குறிப்- பிடத் தக்கவை. இளஞ்செடிக் கருகல் நோயை முதன்முதலில் 1933ஆம் ஆண்டில் டார்ஜிலிங் மாவட்டத்தில் முங்க்பூ என்னுமிடத்தில், மெக்ரே என்பார் கண்டறிந்தார். இந்தியா தவிர, இந்தோனேஷியாவிலும் இந்நோய் காணப்படுகிறது,
ஃபைட்டோஃப்தோரா பாமிவோரா (Phytophthora palmivora} என்னும் பூசணத்தால் உண்டாகும் இந்நோயால் இளஞ்செடியின் கழுத்துப் பகுதியில் நிறம் மாறியிருக்கும். நிற மாற்றம் வித்திலைகள் உண்டாகியிருக்கும் பகுதி வரை பரவிய பின், கீழ் நோக்கிப் பரவுகிறது. இலைகள் மஞ்சளாக வாடி, கீழே விழுந்து விடுகின்றன. நிறம் மாறிய பகுதி அழுகி விடும். ஈரமுள்ள நிலையில், அழுகிய பகுதியில் பூசண இழைகளைக் காணலாம். இப்பூசண இழைகள் பெரும்பாலும் பட்டை, புறணி மரக் கட்டைகளில் காணப்படும். பூசண இழைகள் திசுவறைக்குள்ளேயும், திசுவறைகளுக்கிடையேயும் காணப்படுகின்றன. இப்பூசணத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற வெப்ப நிலை 24°C ஆகும். வெப்ப நிலை 35°C இருக்கும் போது, இப்பூசணம் வளராது. இளஞ்செடிக் கருகல் மறைந்து, உயிர் வாழும்.
காற்று மழைத் துளிகளின் சிதறல் மூலமும், வித்துப் பைகளும், இயங்கு வித்துகளும் பரவுகின்றன. குளோரோபிக்ரின் அல்லது டீ.டீ. கலவையை ஹெக்டேருக்கு 336 கி.கி. வீதம் 10-12 செ.மீ. ஆழத்தில் 20 செ.மீ. இடைவெளியில் இட்டு, இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். மண்ணுள் மருந்தைச் செலுத்தும் கருவியின் (soil injector) மூலம், ஒவ்வோர் இடத்திலும் 2 மி.லி. மருந்தை உட்செலுத்த வேண்டும். இதற்குப் பதிலாக, 40% அடர் திறனுள்ள ஃபார்மோலினை 5 கரண்டி எடுத்து, 340 லி. நீரில் கலந்து ச. மீட்டருக்கு 365 லி. அளவில் ஊற்றலாம். ஃபெர்மேட் என்னும் மருந்தைப் பயன்படுத்தியும், இதைக் கட்டுப்படுத்தலாம்.
இளஞ்சிவப்பு நோய்க்குப் பெல்லிக்குலேரியா சால்மோனிக்கலர் (Pellicularia salmonicolor) என்னும் பூசணம் காரணமாகிறது. இதற்கு, கார்ட்டிசியம் சால்மோனிக்கலர் (Corticium salmonicolor) என்ற பெயரும் உண்டு. மெக்ரே என்பவரால் 1930ஆம் ஆண்டில் டார்ஜிலிங் மாவட்டத்தில், முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்நோய், தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஜாவா முதலிய இடங்களில் காணப்படுகிறது. இந்தியாவில் இப்பூசணம் சின்கோனாவைத் தவிர, பலா, மா, கற்பூர மரம், ரப்பர், காஃபி போன்றவற்றையும் தாக்குகிறது. இதன் தாக்குதல் சன்கோனா லெட்ஜெரியானா மரத்தில் மிகுதியாகவும், சி.சக்சிரூப்ரா மரத்தில் குறைவாகவும் தோன்றுகிறது. சில சமயங்களில் இது பேரிழப்பை ஏற்படுத்தும்.
பெரும்பாலும் சிறு கிளைகளையும், குச்சிகளையுமே பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட மரப் பகுதிகள் பச்சை நிறத்தை இழந்து, மஞ்சளாக இலைகளை உதிர்க்கின்றன. ரோஜா நிறத்திலோ, வெள்ளை நிறத்திலோ, பூசணத்தின் வளர்ச்சியைக் காணலாம். நோயால் ஏற்படும் இழப்பு, மரத்தின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. நோயுற்ற குச்சிகள் பயனற்றும், வெடிப்புற்றும் விடுகின்றன. பட்டைகளில் பூசணம் இழைகளாகத் தேங்கியிருக்கும். குளிர் பருவத்தில் இப்பூசணம் செயலாற்றல் மிக்கதாக உள்ளது. இப்பூசணம் பெருகித் தொற்றி நோயுண்டாக்க காற்றின் ஈரப்பசை மிகுதியாயிருத்தலும், நிழல் இருத்தலும் வேண்டும்.
நோயுற்ற குச்சிகளையும், கிளைகளையும் வெட்டி அப்புறப்படுத்திய பின், போர்டோப் பசையை வெட்டப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். பழுப்பு வேரழுகல் நோயை ஃபோமெஸ் லமோயென்சிஸ் (Fomes lamaoensis) என்னும் பூசணம் தோற்றுவிக்கிறது. சின்கோனா தவிர, ரப்பர், காஃபி, கற்பூர மரம், பலா மரம் ஆகியவற்றையும் இது பாதிக்கிறது. இந்நோயால் வேர்கள் பாதிக்கப்பட்டு, மரம் சிறிது சிறிதாகக் காய்ந்து இறந்து விடும். நோயுற்ற மரத்தை வேருடன் அப்புறப்படுத்திய பின், அக்குழியில் சுண்ணாம்பை, மரத்திற்கு 2 கி.கி. வீதம் இட வேண்டும். இளஞ்செடிகள் இறந்து விடுவதற்கு ரோசெல்லினியா (Rosellinia) என்னும் பூசணம் காரணமாக உள்ளது.
நாற்றமுகலுக்குப் பித்தியம்வெக்சான்ஸ் (Pythium vexans) என்னும் பூசணம் காரணமாக உள்ளமை, 1949 ஆண்டில் ஆனைமலைப் பகுதியில் ஆய்ந்தறியப்பட்டது. இளஞ்செடியில் தரை மட்டத்திலுள்ள பகுதியில் நீரால் நனைந்தது போன்ற புள்ளி உண்டாகி ,அவ்விடம் அழுகத் தொடங்கும். இதன் வேர்களும் அழுகி விடும். ஒன்று முதல் மூன்றாண்டுகள் வயதுடைய செடிகளும் பாதிக்கப்படுகின்றன. இதன் வேர்கள் கறுத்து அழிந்து விடுகின்றன. புறணித் திசுக்களும் அழிந்து விடுகின்றன. பூசண இழைகளைப் புறணிப் பகுதியிலும் சில சமயம் கட்டைத் திசுவிலும் (xylem) காணலாம். இது வடிகால் வசதியில்லாத இடத்தில் மிகுதியாகத் தோன்றுகிறது. நாற்றங்காலை மேட்டுப் பகுதியில் அமைப்பதும், பாத்திகளில் 1% போர்டோ கலவையைத் தெளிப்பதும், சிறந்த கட்டுப்பாட்டு முறைகளாகும்.
தென்னிந்தியப் பகுதிகளில், ஹோலோட்ரைகா ராப்டிடா என்னும் வண்டு, இளஞ்செடிகளைப் பாதிக்கிறது. இளம் இலைகளில் காணப்படும் நாவாய்ப் பூச்சிகளில் டிஸ்ஃபிங்க்ட்டஸ் ஹியூமெராலிஸ் (Disphinctus humeralis) என்னும் பூச்சி முக்கியமானது. செரிகா நீலகிரியென்சிஸ் (Serica nilagiriensis) என்னும் பூச்சியும் சின்கோனாவைப் பாதிக்கிறது. இதைக் கையால் திரட்டி அழிக்கலாம்.
பயன்கள். இம்மரப்பட்டையைத் தூளாக்கி, மலேரியாவிற்கு மருந்தாக மூன்று நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாட்டினர் பயன்படுத்தி வருகின்றனர். மலேரியாவை விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கும் திறனே இதன் சிறப்பியல்பாகும். உடலின் வெப்ப நிலையைத் தணிக்கும் இயக்கு தசைகளை இது ஊக்குவதால், இதைச் சிறிய அளவில் உட்செலுத்தினால், உடல் வேலை செய்யும் திறனை மிகுதியாகப் பெறுகிறது. கொயினாவை அளவுக்கு மேல் உட்கொண்டால், நஞ்சாகும். இதனால், கண், காது முதலியவை பாதிக்கப்படும், கருப்பையின் நரம்பு அமைப்பைத் தூண்டும் இது பேறு கால மருந்தாகவும் ஓரளவு பயன்படுகிறது. 1944ஆம் ஆண்டில், ராபர்ட் எட்வர்டு, வில்லியம் டெரிங்கு என்னும் இரு அமெரிக்க வேதியியல் வல்லுநர் இதைச் செயற்கை முறையில் தயாரித்தனர்.
சின்கோனாவின் பட்டை வலிமை கொடுக்கும். கசப்பு டானிக்குகளிலும், பசியுண்டாக்கும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. இதன் பட்டைச் சாறு, தொண்டை, வாய், பல் நோய்களைக் குணமாக்கக் கொப்புளிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பட்டை, பூச்சி கொல்லிகளில் சேர்க்கப்பட்டு, இறகு துணி இவற்றின் பாதுகாப்பில் பயனாகிறது. இராப் பூச்சிகளை விரட்டும் மருந்துகளிலும், தலைமயிருக்குத் தடவும் எண்ணெய்களிலும் சேர்க்கப்படுகிறது. குவினைன் எடுக்கப்பட்ட பின், உள்ள பட்டையில் டானின் மிகுந்து காணப்படும். பட்டை உரித்த பின், உள்ள மரக்கிளைகள் கறையானால் பாதிக்கப் படுவதில்லை.
பட்டை, காய்ச்சலைப் போக்கும். நச்சுக் காய்ச்சலால் ஏற்பட்ட காய்ச்சல் கட்டிக்குப் பேதி மருந்தோடு கலந்து கொடுக்கலாம். வாயுப் பிடிப்பு, நரம்பு வலி ஆகியவற்றுக்குச் சில நாள் தொடர்ந்து கொடுக்கலாம். இது இரைப்பு, மூச்சுத் திணறல், கக்குவான், கொடிய கப வாதக் காய்ச்சல், நுரையீரல் தாபிதம், மார் அழிவிரணம், கண் நோய், கருவிழி அழற்சி ஆகியவற்றை நீக்கும். இது எலுமிச்சைப் பழச் சாறு, தேன் முதலியவற்றில் கொள்ளப்படும். வெறும் வயிற்றில் உட்கொள்வதே சிறந்தது. மலேரியா, இன்ஃபுளுயன்சா நோய்க்கு நல்ல மருந்து. இதிலிருந்து தயாரிக்கப்படும் குவினிடின் சல்ஃபேட் என்னும் உப்பு, இதய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சளி, இருமல் போன்ற நோய்களையும் குவினைன் வகை மருந்துகள் குணப்படுத்துகின்றன. —கோ. அர்ச்சுணன் நூலோதி. F.Hill Albert, Economic Botany, Tata McGraw Hill Publishing Co., New Delhi, 1976.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 383)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ptxbjeua/
தமிழ்“சின்கோனா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ptxbjeua/APA
Oliyon Research. (2026). சின்கோனா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ptxbjeua/MLA
"சின்கோனா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ptxbjeua/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment