அண்ணா மாவட்டத்தைச் சேர்ந்த வத்தலக்குண்டு என்னும் ஊரில் 1905–இல் பிறந்தார். தந்தையார் ஆத்தூர் சுப்பண்ணா என்ற சுப்பிரமணிய ஐயர்; தாயார் மீனாட்சி அம்மாள். மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் கல்வி பயின்றார். ஒன்பதாம் வகுப்போடு படிப்பு முற்றுப் பெற்றது. 1921 முதல் 1930 வரை நிலையான வருவாய் தரும் ஏதேனும் ஒரு வேலையைத் தேடுவதே இவரது வேலையாயிற்று. எங்கும் நிலையின்றி அவ்வப்போது கிடைத்த அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டார். போராட்டம் மிக்க இவரது வறுமை வாழ்வு பல்வேறு வகையான அனுபவங்களை இவருக்கு வழங்கியது. அவ்வனுபவங்களின் சுவடுகளை இவர் தம் இலக்கியப் படைப்புகளில் நிறையக் காணலாம். துணிக் கடையில் வேலை பார்த்தல், சுங்கச் சாவடியில் கணக்கு எழுதுதல், இயந்திரங்களைப் பழுது பார்ப்போர்க்கு உதவுதல், உணவு விடுதியில் உணவு படைத்தல், வணிக நிலையத்தின் முகவராகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருதல், குதிரைப் பந்தயச் சூதாட்ட நிறுவனத்தில் வேலை செய்தல் போன்ற பலதரப்பட்ட அலுவல்களிலும் இவர் ஈடுபாடுபட்டார். இந்தியத் தேசிய இயக்கத்தின் எழுச்சியால் கவரப்பட்டுக் காந்தியடிகளின் கொள்கைகளிலும், போராட்டங்களிலும் ஈடுபாடு காட்டினார். வேதாரணிய உப்புச் சத்தியாக்கிரகத்தில் (1930) இவர் பங்கு கொண்டு ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்றார். விடுதலை பெற்றதும் கதர்த்துணி விற்பனையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். காந்தியடிகளின் நிருமாணத் திட்டத்தின் வெற்றிக்கு இவர் பாடுபட்டார். அரசியல் ஈடுபாடு இவருக்கு இருந்தாலும், அதனினும் மேலாக இலக்கியத் துறையே இவரை ஆட்கொண்டது. ‘ஆனந்த விகடன்’ 1930–ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டி ஒன்றின் வாயிலாக இவர் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் ஆனார். அப்போட்டியில் இவர் எழுதிய ‘மலரும் மணமும்’ என்னும் சிறுகதை இரண்டாம் பரிசைப் பெற்றது. சங்கு சுப்பிரமணியன் இவரைத் தூண்டியதாலேயே இவர் அப்போட்டியில் கலந்து கொண்டார். அதன் பின் ‘ஆனந்த விகடன்’ ‘கலைமகள்’ போன்ற இதழ்களில் இவர் படைப்புகள் வரத் தொடங்கின. கலைமகளில் வெளிவந்த ‘நட்சத்திரக் குழந்தைகள்’ என்னும் சிறுகதை அக்காலத்தில பலரையும் கவர்ந்த ஒப்பற்ற படைப்பாகும். வ.ரா., கே. சீனிவாசன், டி.எசு. சொக்கலிங்கம் ஆகிய மூவரும் சேர்ந்து 1933–ஆம் ஆண்டு ‘மணிக்கொடி’ என்னும் வார இதழைத் தொடங்கினர். பி.எஸ். இராமையா அவர்களுடன் சேர்ந்து தம் எழுத்துப் பணியைத் தொடங்கினார். சிறிது காலத்திற்குப் பின் பி.எஸ். இராமையாவே அவ்விதழின் முழுப் பொறுப்பையும் ஏற்றார். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் இது காரணமாயிற்று. அக்காலத்தே புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா போன்ற எழுத்தாளர் பலர் அவ்விதழில் எழுதி வந்தனர். ‘மணிக்கொடிக்குழு’ என்று பின்னாளில் அழைக்கப்பட்ட இலக்கியப் படைப்பாளர்கள் மணிக்கொடிப் பண்ணையில் வளர்ந்தவர்களே யாவர். இவர் 1937க்குப்பின் இலக்கியத் துறையிலிருந்து திரைப்படத் துறைக்குள் நுழைந்தார். ‘சித்திர வாணி’ என்னும் திரைப்பட இதழை இயக்குநர் முருகதாசாவுடன் இணைந்து தொடங்கினார். இதழ் பின்னர் சில காலமே வெளிவந்தது. ‘பூலோக ரம்பை’ என்னும் படத்திற்குக் கதை, உரையாடலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். ‘மதனகாம ராசன்’, ‘பக்த நாரதர்’ போன்ற படங்களைத் தயாரிக்கும் குழுவில் சில காலம் உதவியாளராகப் பணியாற்றினார். திரைப்படத் துறையில் இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக 1949–ஆம் ஆண்டு அதைவிட்டு வெளியேறினார்; மீண்டும் இலக்கியத் துறைக்கே வந்தார். இவர் 1949 முதல் 1956 வரை ‘தினமணிக்கதிர்’ ‘ஆனந்த விகடன்’ போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதினார். நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் ‘பிரேம ஆரம்’ போன்ற நாவல்களையும் இவர் எழுதினார். இவர் வாழ்வில் 1956–ஆம் ஆண்டில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. நடிகர் எசு.வி. சகசுரநாமத்தின் தொடர்பு இவருக்குக் கிட்டவே, ‘சேவா அரங்கு’ (Seva Stage) என்னும் அவரது அமைப்பின் மூலம் தம் நாடகங்களை அரங்கேற்ற விழைந்த இராமையா பற்பல நாடகங்களை விரைந்து படைத்தார். ‘பிரசிடெண்ட்டு பஞ்சாட்சரம்’, ‘மல்லியம் மங்களம்’, ‘தேரோட்டி மகன்’, ‘போலீசுக்காரன் மகள்’, ‘பூவிலங்கு’, ‘தளவாய் குமாரப்பிள்ளை’ முதலிய நாடகங்களை அவர் எழுதினார். அவற்றுள் பல நூல்வடிவிலும் வெளிவந்தன. நாடகத்துறை இவருக்குப் புகழையும் பொருளையும் தந்தது. தம் இலக்கிய உலக அனுபவங்களின் வெளிப்பாடாக இவர் எழுதிய ‘மணிக்கொடிக் காலம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு 1982–ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாடமி’ பரிசு கொடுத்துச் சிறப்பித்தது. இராமையா 1983–ஆம் ஆண்டு மறைந்தார்.மா.இரா.