உதயகிரி
utayakiri
மத்திய பிரதேச மாநில விதிசா (Vidisa) மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர்.
மத்திய பிரதேச மாநில விதிசா (Vidisa) மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். வரலாற்றுப் புகழ்வாய்ந்த சாஞ்சி என்ற இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ. வடகிழக்கில் சென்றால் இவ்வூரை அடையலாம். இவ்வூர் கி.பி. 5–ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் உயர்ந்த நிலையில் இருந்தது. இங்கு இந்துக் கடவுள்களுக்கும் சமண தீர்த்தங்கரர்களுக்கும் கோயில்கள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 20க்கும் மேற்பட்ட குகைக் கோயில்கள் இங்கு உள்ளன. இயற்கையாக அமைந்த பாறைகளைக் குடைந்து இக்குகைக் கோயில்களை அமைத்துள்ளனர்.
இங்குள்ள குகைக் கோயில்களுள் சில முழுமையாகவும் சில முற்றுப் பெறாமலும் காட்சியளிக்கின்றன. பாறைகளை முழுமையாகக் குடைந்து குகைக்கோயில்களை அமைத்துள்ளனர். இக்குகைக் கோயில்களில் கருவறை செவ்வகமாக விளங்க அதற்கு முன் தூண்களுடன் கூடிய மண்டபங்கள் உள்ளன. பிற்காலத்தில் கற்களால் சில பகுதிகளைக் கட்டியுள்ளனர். குகைக் கோயிலின் முன்பகுதியில் நான்கு தூண்கள் காணப்படுகின்றன. இவை குப்தர் காலத்திய கலை நுணுக்கத்தை எடுத்துக் கூறுகின்றன. இத்தூண்களின் அடிப்பாகம் சதுரமாகவும் அதற்கு மேற்பகுதி எண்கோணமாகவும் மேற்பாகம் 16 முனை முகடுகளைக் கொண்டும் அமைந்துள்ளன. இவற்றிற்கு மேல் கும்பவாளி (குடம்) காணப்படுகிறது. கருவறையின் உள்ளே செல்லும் வழி மிகுந்த வேலைப்பாடுடன் அணிவகை செய்யப்பட்டுள்ளது.
உதயகிரி குகைக்கோயில்
பிற்காலத்தில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வாயிலின் மேற்பாகத்தில் பலவகையான சிற்பங்கள் உள்ளன. ஆற்றுத் தெய்வங்களான கங்கையும் யமுனையும் இருபுறங்களிலும் காணப்படுகின்றன. முதலை, ஆமை ஆகிய வாகனங்கள் தெளிவான முறையின் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குக் கீழ் வாயில்காப்போர் (துவாரபாலகர்கள்) இருவர் புடைப்புச் சிற்பமாக உள்ளனர். இவற்றைத் தவிர மண்டபங்களின் சுவரிலும் பல வகையான புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. கருவறையின் உட்பகுதி சாதாரணமாக அமைக்கப்பட்டுள்ளது. மூலவரை வைக்கக் கருவறையின் நடுப்பகுதியில் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்குள்ள மிகப் பெரிய குகைக் கோயில் சமண சமயத்தைச் சார்ந்தது. இக்குகையின் உள்பாகத்தில் பல அறைகள் உள்ளன. இங்கும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பகுதிகள் உள்ளன. ‘தாவா குகை’ (Tawa Cave) என்பது மிக முக்கியமான குடைவரைக் கோயில் ஆகும். இதனுடைய அமைப்பு ஏறக்குறைய வட்டமானது. பெரிய பாறையைக் குடைந்து இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் காணப்படும் கல்வெட்டில் சந்திரகுப்தரின் அமைச்சர் இக்குடைவரையைக் குடைவித்தார் என்பது கூறப்பட்டுள்ளது.
இங்கு கி.பி. 400–இல் செதுக்கப்பட்டுள்ள வராகி அவதாரம் குறிப்பிடத்தக்கது. திருமாலின் பத்து அவதாரங்களுள் பல குகைக் கோயில்களில் செதுக்கப்பட்டுள்ளன. இதன் கம்பீரமான தோற்றமும் வனப்பும் கண்களைக் கவர்வன. திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் காட்சியும் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.
குப்த மன்னரான இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. 375–414) காலத்தில் இவ்வூர் பெரிய கலைக் கூடமாக மாற்றப்பட்டிருந்தது. குப்தர்களின் கட்டடக் கலைக்கு இக்குகைக் கோயில்கள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 899)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pqscmprn/
தமிழ்“உதயகிரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pqscmprn/APA
Oliyon Research. (2026). உதயகிரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pqscmprn/MLA
"உதயகிரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pqscmprn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment