நேர் குடல் வழி உணர்வகற்றல்
nēr kuṭal vaḻi uṇarvakaṟṟal
துயிலூட்டி அல்லது உணர்விழப்பு மருந்தை நேர் குடலில் செலுத்துவதன் மூலம் மறதி, உறக்கம் அல்லது உணர்விழப்பு நிலையை ஏற்படுத்தும் முறை, நேர் குடல் வழி உணர்வகற்றல் (rectal anaesthesia) எனப் படுகிறது.
துயிலூட்டி அல்லது உணர்விழப்பு மருந்தை நேர் குடலில் செலுத்துவதன் மூலம் மறதி, உறக்கம் அல்லது உணர்விழப்பு நிலையை ஏற்படுத்தும் முறை, நேர் குடல் வழி உணர்வகற்றல் (rectal anaesthesia) எனப் படுகிறது. பொதுவாக, இம்முறை உணர்விழப்பு முன் மருத்துவம் (anaesthetic premedication), அடிப்படை உணர்வகற்றல் (basal anaesthesia), போன்ற நிலைகளை உண்டாக்கப் பயன் படுகிறது. அதாவது, உணர்விழப்பிற்கு முன், மருத்துவத்திற்கு உட்பட்டவர் சலனமற்ற வலி உணர்ச்சி குறைந்த நிலையில், அறுவை அரங்குக்குள் கொண்டு செல்ல ஆயத்த நிலையில் இருப்பார். அடிப்படை உணர்வகற்றலுக்கு உட்பட்டவர் ஆழ்ந்த மயக்க நிலையில் இருப்பார்.
நேர் குடல் வழி உணர்வகற்றல் முறை 1847–1884இல் மிகவும் புகழ் பெற்று இருந்தது. அக்காலத்தில் ஈதர் என்னும் எளிதில் ஆவியாகும் நீர்ம மருந்தை, 50°C வெப்பத்திற்கு உட்படுத்தி, நேர் குடலில் செலுத்தி, உணர்விழப்பை உண்டாக்கினர். நாளடைவில் குடல் வெடிப்பு, குருதி பேதி போன்ற பல தீய விளைவகள் ஏற்பட்டதையொட்டி, இம்முறையைக் கை விட்டு விட்டனர். காத்மி என்பார், ஈதருடன் காரன் எண்ணெய்க் (Carron oil) கலந்து, அறை வெப்ப நிலையில் நேர் குடலில் செலுத்தி, உணர்விழப்பை ஏற்படுத்தினால், வேண்டா விளைவுகள் ஏற்படா என்று காட்டினார். பிறகு, நாளடைவில் அவெர்ட்டின், பாரால்டிஹைடு, தயோபெண்டோன் போன்றவற்றை நேர் குடலில் செலுத்தி, அடிப்படை உணர்வகற்றலை ஏற்படுத்தினர்.
பயன். மிரட்சியுற்ற நோயாளிகளை ஊக்கப் படுத்தல் (எ–டு: தைராய்டு மிகு இயக்க நிலையால் (hyperthyroidism) மன நிலை பாதிக்கப் பட்டோர்), குழந்தைகளின் வலிப்பைக் கட்டுப் படுத்ததுதல், ஆழ்ந்த உறக்கத்தை உண்டாக்கிப் படிப் படியாக விழிப்புணர்வு பெறுதல், பொது உணர்விழப்பு, மருந்துகளின் கூடுதல் தேவையைக் குறைத்தல் ஆகியவை இவ்வகை உணர்வகற்றலால் ஏற்படும் பயன்களாகும். மேலும், தலை அறுவை, முற்றிய ஆஸ்துமா ஆகிய நிலைகளிலும் இம்முறை பயன் பட்டது.
குறைகள். உணர்விழப்புக்கு உட்படல் ஒருவருக்கொருவர் மாறு படுவதால், தேவையான மருந்தளவைத் துல்லியமாக வரையறுத்தல் எளிதன்று. பொதுவாக, இம்முறையில் விரைவாக மருந்து உட்கவரப் படுவதால், தவறுதலாக மிகையளவில் கொடுக்க நேர்ந்தால், மருந்தை வெளியேற்றப் போதுமான நேரம் கிடைக்காது. இவ்வகை உணர்விழப்பு முறையில் ஏற்படும் உறக்க நேர அளவு மாறுபாடு கொண்டு இருக்கும்.
சில சமயங்களில், இதய குருதிக் குழாய் மண்டலம், சுவாச மண்டலம் சில முக்கிய உடல் இயங்கியல் வினைகள் ஆகியவை பாதிப்பிற்குள்ளாகலாம். இவ்வகை உணர்வகற்றல் முறையில் நோயாளி சுய நினைவு அடைவது, படிப் படியாக நிகழ இருப்பதால், முழு நேரக் கண்காணிப்புத் தேவைப் படும். இம்முறையில், மருந்து உட்கவர்தலைப் பாதிக்கப் பல காரணங்கள் இருக்கலாம். எனவே, சில சமயம் சரியான உணர்விழப்பு நிலையை ஏற்படுத்த, நச்சு அளவில் மருந்து தேவைப் படும்.
நேர்குடல் வழி உணர்வகற்றும் முறை. உணர்விழப்பு மருந்தைச் செலுத்துவதற்கு, 6 மணி நேரத்திற்கு முன், நேர் குடலைக் கழிவுப் பொருள் இன்றித் தூய்மைப் படுத்தும் எனீமா தர வேண்டும். (அவசர நிலைகளில், எனீமா கட்டாயமாகும்). பிறகு குருதி அழுத்தம், நாடித் துடிப்பு, மூச்சு ஆகியவற்றின் விவரங்களை அறிந்து கொண்டு, நோயாளியை அடிப் புறத்தில் ஒருக்களித்து, இடுப்பைச் சற்றே மடக்கிப் படுக்க வைக்க வேண்டும். பிறகு, ஆசன வாய் வழியாக, ஒரு சிறிய ரப்பர்க் குழாயை நேர் குடலில் நுழைத்துத் தேவையான மருந்தை மெதுவாகப் பீச்சான் மூலம் செலுத்த வேண்டும். பிறகு, ஒட்டு நாடா கொண்டு, ரப்பர்க் குழாய் இடம் நகராமல் இருக்குமாறு ஒட்ட வேண்டும். நோயாளி தேவைப்பட்ட அளவுக்கு உணர்விழந்த பிறகே, ரப்பர்க் குழாயை வெளியே எடுக்க வேண்டும். அதற்கு முன் எடுத்து விட்டால், குடலுக்கு உள்ளே இருக்கும் மருந்து வெளி வரக் கூடும்; மாறாக, மருந்தளவு மிகுந்து விட்டாலும், ரப்பர்க் குழாய் மூலம் வெளியே எடுக்க அது உதவும்.
ஆக்சிஜன் செயற்கைச் சுவாச முறைக்குத் தேவையான கருவிகள், தேர்ந்த மயக்குநர் ஆகிய வாய்ப்பு இராத நிலையில், இவ்வகை உணர்வகற்றல் முறையைக் கையாளக் கூடாது. பிறகு, நோயாளி உணர்வகன்ற நிலையின் தொடக்கம் முதல் நன்கு நினைவு திரும்பும் வரை, அவருடைய இன்றியமையா உடலியல் வினைகளை (எ–டு: இதயக் குருதிக் குழாய் மண்டலப் பணி, சுவாச இயக்கம்) குறுகிய இடைவெளிகளில் கவனித்தவாறே இருக்க வேண்டும்.
நோயாளிக்கு நன்கு அறிமுகமான மருத்துவப் பணியாளர் ஒருவரால், நோயாளியின் அறையிலேயே இம்முறையைக் கையாளலாம். எனவே, நோயாளி அச்சமின்றி மயக்க நிலைக்கு உள்ளாவதால், அறுவை அரங்குக்குக் கொண்டு செல்ல வசதியாக உள்ளது. குறிப்பாகக் குழந்தைகளிடத்தில் ஒத்துழைப்பை எதிர் பாக்க இயலாத நிலையில், இவ்வகை உணர்வகற்றல் முறையைப் பயன் படுத்தி, அவர்களை அறுவை அரங்குக்குக் கொண்டு செல்லலாம். இம்முறையைக் கொண்டு, நாளக் குழல் ஆய்வு (catheterisation), குருதி நாள வரை படத் தயாரிப்புப் (angiography) போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவ்வகை உணர்வகற்றப் பட்ட நோயாளியை மிகுந்த வலி ஏற்படுத்தக் கூடிய அறுவைக்கு அப்படியே உட்படுத்தி விட முடியாது. ஆனால், கூடுதல் உணர்விழப்பு மருந்துகளைக் கொடுப்பதன் மூலம் (எ–டு:பகுதி உணர்விழப்பு மருந்து அல்லது மூச்சு வழிப் பொது உணர்விழப்பு மருந்து) வேண்டிய அறுவை முறையை மேற்கொள்ளலாம்.
தற்போது நோய் குடல் வழி உணர்வகற்றல் முறையை அரிதாகவே பயன் படுத்துகின்றனர். முக்கியமாகக் குழந்தைகளுக்கு இம்முறையைச் சில சமயங்களில் மேற்கொள்வர். தற்போது கேட்டமின், தயோபெண்டால், பாரால்டிஹைடு போன்றவை நேர் குடல் வழி உணர்விழப்பு முன் மருந்தாகவோ, அடிப்படை உணர்வகற்று மருந்தாகவோ பயன் படுகின்றன. மூச்சுப் பாதை அடைப்பு, மூச்சு ஒடுக்கம், குருதி மிகு அழுத்தம், குருதிக் குறை அழுத்தம், இதயச் செயல் திறன் குன்றல், கடும் குருதிச் சோகை, கல்லீரல் மற்றும் சிறுநீரகத் திறன் குன்றல், நேர் குடல் பாதிப்பு போன்ற நிலைகளில் நேர் குடல் வழி உணர்வகற்றல் முறையைக் கையாளக் கூடாது. —கு. சிவஞானம் துணை நூல். D.E. Hale, Anaesthesiology, Second Edition, F.A.Dravis Do., Philadelphia, 1963: V.J. Collins, Principles of Anaesthesiology, Kothari Book Depot, Bombay, 1972.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 220)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pmbm4kkh/
தமிழ்“நேர் குடல் வழி உணர்வகற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pmbm4kkh/APA
Oliyon Research. (2026). நேர் குடல் வழி உணர்வகற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pmbm4kkh/MLA
"நேர் குடல் வழி உணர்வகற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pmbm4kkh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment