இலெசோத்தோ
ilecōttō
ஆப்பிரிக்காக் கண்ட நாடுகளுள் ஒன்று.
ஆப்பிரிக்காக் கண்ட நாடுகளுள் ஒன்று. முன்னர், இதனைப் பசுட்டோலாந்து என்று குறிப்பிட்டனர். இந்நாடு உயர்ந்த மலைகளையும், அமைதியான பள்ளத்தாக்குகளையும் கொண்டது. இலெசோத்தோ (Lesotho) ஒரு முடியாட்சி நாடு, மசேரு (Maseru) என்னும் நகரம் இந்நாட்டின் தலைநகர்.
இருப்பிடம்
இது தென் ஆப்பிரிக்கக் குடியரசில் கிழக்கில் நடுவே அமைந்துள்ளது. இந்நாட்டின் மேற்குப் பகுதி தாழ்நிலமாகும். இப்பகுதியின் உயரம் 1500 முதல் 1800 மீ. வரை உள்ளது. இந்நாட்டின் வேளாண்மைத் தொழில் இங்குத்தான் நடைபெறுகிறது.
இலெசோத்தோ
தட்பவெப்பநிலை
இந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் 100 செ.மீ. மழையைப் பெறுகின்றன. அக்டோபர் முதல் ஏப்பிரல் வரை மழைக்காலம், மழை எல்லா மாதங்களிலும் பெய்கிறது. ஆயினும், பெய்யும் மழைநீர் இந்நாட்டிற்குப் பயன்படாமல் ஓடிவிடுகிறது. தாழ்நிலப் பகுதிகளில் வெப்ப நிலை சீராக அமையாமல் கோடைக்காலத்தில் 32 பாகை செல்சியசு வரையிலும், குளிர் காலத்தில் 7 பாகை செல்சியசு வரையிலும் குறைந்து காணப்படும். குளிர்கால வெப்பநிலை 0 பாகையை விடத் தாழ்ந்தும் காணப்படுகிறது.
பயிர் பச்சைகள்
மரங்களற்ற இந்நாட்டில் தாழ்நிலப் பரப்புகளில் புல்வெளிகளையும், உயரம் மிகுந்த மலைப்பாங்கான பகுதிகளில் மேய்ச்சற்றரைகளையும் காணலாம். இந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மேய்ச்சல் நிலங்களே; உயரம் மிகுந்த பகுதிகள் கோடைக்காலத்தில் மட்டும் பயன்படுகின்றன. மேற்குக் கரையையடுத்துத் தாழ்நில விளிம்புகளில் ஓரளவு வேளாண்மை நடைபெறுகிறது. மக்காச்சோளம் உணவுப் பயிர்களுள் சிறப்பானது. சிறிதளவு சோள வகைப் பயிர்களும் பயிரிடப்படுகின்றன. உழுது பயிரிடத் தகுதி வாய்ந்த நிலங்களும், மேய்ச்சல் தரைகளைக் கொண்ட நிலங்களும் மண் அரிப்பால் பேரிழப்பிற்கு ஆளாகின்றன.
பரப்பு
இலெசோத்தோலின் பரப்பு 30,340 ச.கி.மீ.
மக்கள்தொகை
இந்நாட்டின் மக்கள்தொகை 13 இலட்சம் (1980). இந்நாட்டின் மக்களுள் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் ஆப்பிரிக்கர்களே. சிலர் ஐரோப்பிய வழி வந்தவர்கள். அவர்கள் பெரும்பாலும், அரசாங்கப் பணியாளர்களாகவும், வணிகர்களாகவும். கிறித்தவச் சமயப் போதகர்களாகவும் கைவினைஞர்களாகவும் உள்ளனர். இந்நாட்டின் மக்களுள் பெரும்பாலோர் பாசோத்தோ எனப்படுவர். அவர்கள் பண்டு இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் பேசும் மொழியைச் செசோத்தோ என்பர். இந்நாட்டின் ஆட்சிமொழியாக ஆங்கிலமும் செசோத்தோவும் விளங்குகின்றன. உயர்நிலைப் பள்ளிகளுக்கு மேற்பட்ட கல்வி நிலையங்களில் ஆங்கிலமும் தொடக்கப்பள்ளிகளில் செசோத்தோவும் கற்றுத் தரப்படுகின்றன.
இந்நாட்டில் நூற்றுக்கு அறுபது விழுக்காடு மக்கள் ஆங்கிலத்தையோ செசோத்தோவையோ எழுதவும் படிக்கவும் அறிந்துள்ளமையால் இந்நாட்டின் கற்றோர் வீதம் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே உயர்ந்ததாகக் காணப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பள்ளிகள் சமயக்குழுக்களால் நடத்தப்பெறுவதால், அரசாங்க உதவியைப் பெறுவதில்லை. போட்சுவானா, இலெசோத்தோ, சுவாசிலாந்து நாடுகளின் பல்கலைக் கழகம் உரோமா என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்நகரம் தலைநகரான மசேருலிருந்து 35 கி.மீ தொலைவிலுள்ளது. மூன்று அரசுகளும் இப்பல்கலைக் கழகத்திற்குப் பொருளுதவி செய்கின்றன.
மக்கள் வாழ்க்கை
இந்நாட்டு மக்களுள் பெரும்பாலோர் உழவர்களாகவோ இடையர்களாகவோ இருக்கின்றனர். நிலம் யாவும் மரபு வழியாக இனத்தலைவர்களுக்குச் சொந்தமானவை. இக்காலத்தில் தலைவர்களுக்கெல்லாம் தலைவராக அரசர் விளங்குகிறார். அவர்களும் நிலத்தில் உழுது பயிரிடலாமே யன்றிச் சொந்தம் கொண்டாட முடியாது. குடும்பத்தின் எண்ணிக்கைக்குத் தகவும், தேவைக்கேற்பவும் நிலம் வழங்கப்படுகிறது.
மரபு வழிக் கலைகள் அண்மைக்காலத்தில் வளர்க்க ஊக்கப்படுத்தப்படுகின்றன. இவர்கள் கூம்பு போன்றதொரு தலைக்குல்லாயை உருவாக்குகிறார்கள் அதை இவர்கள் புல்லினால் பின்னுவர். அது இந்நாட்டின் தேசிய கொடியிலும் சின்னமாக அமைக்கப்பெற்றுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் வண்ணப் போர்வைகளைத்தாம் அவர்கள் உடுத்தும் மேலைநாட்டு ஆடைகளுக்கு மேல் அணிந்து கொள்வர். கோடையையும் குளிரையும் காக்க இப்போர்வைகள் உதவுகின்றன.
பொருளாதாரம்
உரோமமும், ஆட்டுரோமத்தால் செய்யப்படும் மோகேர் (Mohair) என்னும் துணிவகையும் இலெசோத்தின் தலைசிறந்த செய்பொருள்களாம். மோகட்லாங்கு என்னும் ஊருக்கு வடக்கேயுள்ள சுரங்கங்களில் வைரம் வெட்டியெடுக்கப்படுகிறது. உரோமம், மோகேர் துணிவகைகள், வைரம், கால்நடைகள் போன்றவை சிறப்பான ஏற்றுமதிப் பொருள்கள், இலெசோத்தோ, போட்சுவானா, சுவாசிலாந்து நாடுகள், தென் ஆப்பிரிக்கக் குடியரசுடன் பொதுவான சுங்கவரி ஆயத்துறைத் தீர்வைகளைக் கொண்டுள்ளன.
வரலாறு
பாசோத்தோ மக்கள் ஒருங்கிணைந்து உருப்பெற்றது கி.பி. 1818–ஆம் ஆண்டிலிருந்துதான். அக்காலத்தில் தலைவராயிருந்த மோசூசூ (Moshoeshoe) பிரிந்து வாழ்ந்த மக்களை ஒன்றாக இணைத்துத் தம்மாட்சியின் கீழ் ஒன்றுபடுத்தினார். பாசோத்தோ மக்களுக்கும் ஆரஞ்சுச் சுதந்திர நாட்டு மக்களான போயர்களுக்குமிடையே கி.பி. 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் போர்கள் மூண்டன. இப்போர்களின் விளைவாகப் பாசோத்தோ மக்கள் தம் நாட்டின் பெரும் பகுதியை இழந்தார்கள். போயர் குடியரசினால் தம் நாட்டிற்கு ஏற்படும் தொல்லைகளைக் கூர்ந்து கவனித்த மோசூசூ ஆங்கிலேயரின் உதவியை நாடினார். பல கலவரங்களுக்குப் பின்னர். இந்நாடு ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிக்குட்- படுத்தப்பட்டது. இலெசோத்தோவின் சட்டமன்ற, நிருவாக அதிகாரங்களை கி.பி. 1884 முதல் 1959 வரை ஆங்கில உயர் ஆணையர் ஒருவர் கவனித்து வந்தார். இந்நாட்டுக்கு அதன் முதல் அரசியல் உரிமைச் சட்டம் 1959 இல் கொடுக்கப்பட்டது. தேசிய உணர்வு எழுந்ததே இதற்குக் காரணமாகும். இந்நாடு 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4–ஆம் நாள் சுதந்திர நாடாயிற்று.
இலெசோத்தோ, அரசியல் அமைப்புக்குட்பட்ட அரசருடைய ஆட்சியைக் கொண்டுள்ளது. இதன் அரசர் இரண்டாம் மோசூசூ என்பார் அங்கு 1970–இல் ஏற்பட்ட நெருக்கடியால் நாட்டை விட்டு வெளியேறினார். அவ்வாண்டின் இறுதியில் அவர் மீண்டும் நாடு திரும்பினார். புதிய அரசியலமைப்புத் திட்டப்படி தலைமை அமைச்சரை அரசர் நியமிக்கிறார். தேசிய சட்டமன்றம், அமைச்சரவை ஆகியவை உண்டு. நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டது. இலெசோத்தோ நாட்டின் நாணயம் மாலாட்டி (Maloti) எனப்படும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 434)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/phkn6avq/
தமிழ்“இலெசோத்தோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/phkn6avq/APA
Oliyon Research. (2026). இலெசோத்தோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/phkn6avq/MLA
"இலெசோத்தோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/phkn6avq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment