தஞ்சை நகரின் ஒரு பகுதியான கருந்திட்டைக்குடியில் (கரந்தை) வேம்பப்பிள்னைக்கும் காமாட்சி அம்மையார்க்கும் மகனாக 7.5.1883–இல் பிறந்தார். இவர் தம் 12–ஆம் வயதில் அன்னையை இழந்ததால், சிற்றன்னை பெரியநாயகத்தம்மையாரால் வளர்க்கப்பெற்றார். தஞ்சைத் தூய பேதுரு கல்லூரியில் இளங்கலை (B.A.) பட்டம் பெற்றபின், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது காலம் எழுத்தர் பணியிலிருந்தார். பின்னர், சென்னைச் சட்டக் கல்லூரியிற்பயின்று, சட்டத்தேர்வில் (B.L.) தேர்ச்சிபெற்றார். தஞ்சையில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் தமிழறிஞராகவும் திகழ்ந்த கே. சீனிவாசப்பிள்ளையிடம் வழக்குப் பயிற்சி பெற்று, பின்னர்த் தாமாகவே வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். திருச்சி அரங்கசாமிப்பிள்ளையின் மகள் உலக நாயகியைத் தம் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டார். இவர்களுக்கு மூன்று புதல்வர்கள் பிறந்தனர். மூன்றாம் மகவு பிறந்த நான்காம் திங்களில் உலக நாயகி இறந்துவிட்டார். உமாமகேசுவரம்பிள்ளை தம் தம்பி இராதா கிருட்டிணப்பிள்ளையால் 14.5.1911–இல் நிறுவப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, அதன் வளர்ச்சிக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பணி புரிந்தார். இவர்தம் சீரிய முயற்சியின் பயனாகச் சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வுகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டது. இவர் தலைமையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் பல அரிய பணிகளை நிறைவேற்றியது. நூல்நிலை- யம், செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரி, திக்கற்ற மாணவர் இல்லம், இலவச மருத்துவமனை, இலவசப் படிப்பகம் தமிழ் பொழில் என்னும் திங்களிதழ், கரந்தைப் புலவர் கல்லூரி, இராதாகிருட்டிணர் உயர் தொடக்கப்பள்ளி முதலியன நிறுவப்பட்டன. தமிழ்ப் பொழில் சங்கம் நிறுவப்பட்ட 4–ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்று, சீரிய தமிழாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இவர் உயர்நிலைப் பள்ளி ஒன்று தொடங்குவதற்கு முயன்று அரசினரின் ஒப்புதலைப் பெற்றார். ஆனால் அப்பள்ளி செயற்படுமுன் இவர் காலமாகிவிட்டமையால், சங்கத்தினர் அதற்கு ‘உமாமகேசுவரர் உயர்நிலைப்பள்ளி’ எனப் பெயரிட்டு இவரைப் பெருமைப்படுத்தினர். இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக அதன் தொடக்க காலமுதல் பணியாற்றினார். மேலும், தஞ்சை வட்டக் கழகம் (Taluk Board), திராவிடக் கூட்டுறவு வங்கி, கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றின் தலைவராகவும் தஞ்சை மாவட்டக் கழகம் (District Board), நகரவை, அர்பன் வங்கி, நிக்கல்சன் நகர வங்கி, உயர்நிலைப்பள்ளிக் கல்விக்குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தஞ்சை மாவட்டக் கழகத்தின் இடைக்காலத் தலைவராகவும் சிறிது காலம் பணிபுரிந்ததுண்டு. இவர் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவராக விளங்கியதோடு, 1936, 37–ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். உமாமகேசுவரம்பிள்ளை உமாமகேசுவரம்பிள்ளை தமிழர் வாழ்வும் மொழியும் வளமுற வேண்டுமென்னும் நோக்குடையவர். வடநாட்டுக் கலைக் கழகங்களில் நாட்டு மொழிகள் எங்ஙனம் போற்றப்படுகின்றன, எவ்வெவ்வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பவற்றை நேரிற் கண்டு நேரியவாயின் அவற்றைத் தம் சங்க வளர்ச்சியிலும் கைக்கொள்ளலாம் என்ற நோக்கத்துடன், நண்பர் கணபதிப் பிள்ளையை உடனழைத்துக் கொண்டு வடபுலப் பயணத்தை மேற்கொண்ட இவர், அயோத்தி அருகே பைசாபாது என்னும் ஊரில் கடுங்காய்ச்சலால் 9.5.1941–இல் காலமானார். ச.சா.