வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்ப உலகில், கல்வி ஆராய்ச்சித் துறைகளில், இந்திய நாடும் விரைந்து முன்னேறத் துணை செய்யும் நோக்குடன், சென்னையில் இயங்கிவந்த பழம் பெருமை வாய்ந்த பொறியியற் கல்லூரி, அழகப்பர் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னைத் தொழில் நுட்பக் கல்லூரி ஆகிய நிறுவனங்களையும் இணைத்து, தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு சி.என். அண்ணாதுரை அவர்களின் நினைவாக, 1978 செப்டம்பரில் பேரறிஞர் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் (Perarignar Anna University of Technology) தொடங்கப் பெற்றது. அது 1982-இல் அண்ணா பல்கலைக்கழகம் என்று சுருக்கமாகப் பெயரிடப்பட்டு வழங்கி வருகிறது. அண்ணா பல்கலைக் கழகம் பல்கலைக் கழகத்தின் தலையாய குறிக்கோள்கள், பொறியியல், தொழில் நுட்பம் ஆகியவை தொடர்பான துறைகளில் உயர் கல்வி, ஆராய்ச்சி, நடைமுறைப் பயிற்சிகளுக்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கல்; சமுதாயத்தின் இன்றைய, வருங்காலத் தேவைகளுக்கேற்ற புதிய கல்வித் திட்டங்களை உருவாக்கல்; புதிய ஆராய்ச்சிகளின் வாயிலாக நாட்டின் வளர்ச்சிக்குத் துணை செய்வதோடு, வளர்ந்துவரும் அறிவுத் துறைகளின் பயன், சமூகத்தின் பல்வேறு நிலையிலுள்ளோருக்கும் ஏற்ற நிலையில் பரவிட வழி செய்தல்; கல்வி நிறுவனங்களுக்கும் நாட்டின் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்குமிடையே கூட்டு உழைப்பின் வாயிலாகப் பயனுள்ள திட்டங்களில் ஈடுபட வழிசெய்தல் முதலியன ஆகும். பொறியியற் கல்லூரி வளாகத்தில் 100 எக்டேர் (Hectare), குரோம்பேட்டையில் 20 எக்டேர், தரமனிப் பகுதியில் 80 எக்டேர் ஆக 200 எக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், பொறியியல், பயன்பாட்டுப் பொறியியல் ஆகிய இவை ஒவ்வொன்றிலும் பல்வேறு துறைகளும் மையங்களும் பிரிவுகளும் அமைந்துள்ளன. இளநிலைப் பட்டம் முதுநிலைப் பட்டம், முதுநிலைக் கல்விச் சான்றிதழ் இளநிலை ஆய்வுப்பட்டம் ஆகிய பல நிலைகளில் தொழில் நுணுக்கக் கல்வி இங்கு அளிக்கப்படுகிறது. முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சித் திட்டங்களும் தொழில் துறை நிறுவனங்களுக்கான செயல் திட்டங்களும் நடைபெறுகின்றன. இப்பல்வேறு படிப்பு வகைகளிலும் இப்போது பயிலும் 4735 மாணவர்களுள் 3740 பேர் பட்டக் கல்விப் படிப்புகளிலும் 835 பேர் பட்ட மேற்கல்விப் படிப்புகளிலும் 160 பேர் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுள் 9% (426 பேர்) மகளிர் என்பதும் 79 பேர் வெளிநாட்டவர் என்பதும் குறிப்பிடற்குரியன. ஐ.பி.எம் 360144 என்னும் பெரிய கணிப்புப்பொறி (Computer) நிறுவப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக் கழகம் தொடங்கியபின், பழைய துறைகள் செழுமை பெறுவதுடன் பல புதிய துறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் நீர்வள ஆய்விவியல் மையம் (Centre for Water Resources), சூழல் ஆய்வியல் மையம் (Centre for Environmental Studies), தொலை உணர்வு நிறுவனம் (Institute of Remote Sensing), உகந்த தொழில் நுட்ப மையம் (Centre for Appropriate Technology), தொடர்கல்வி வளர்ச்சி மையம் (Centre for Continuing and Development Education), கடல் நிருவாகச் செய்தி மையம் (Ocean Data Centre), ஆற்றல் ஆய்வு மையம் (Centre for Energy Studies), படிக வளர்ச்சி மையம் (Centre for Crystal Growth), மானிட வாழ்குடி மையம் (Centre for Human Settlement), உயிரியல் தொழில் நுட்ப மையம் (Centre for Bio–technology) ஆசியன குறிப்பிடத் தக்கனவாகும். மேலும், அச்சுத் தொழில் நுட்பம், தொலை உணர்வு (Remote Sensing) முதலான புதிய துறைகளில் கல்வித் திட்டங்கள் வகுக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு குறுகிய காலப் பயிற்சிகளின் வழியாகப் பணியில் உள்ள பொறியாளர்களுக்குப் பொறியியல் துறைகளின் புதிய வளர்ச்சிகளை அறிமுகப்படுத்திப் பொறியியல், தொழில் நுட்பக் கல்வியை, நடைமுறை வளர்ச்சிப் பணிகளோடு இணைத்து அவை சிறக்கப் பல்கலைக் கழகம் பணியாற்றி வருகிறது. துறையறிவு, தாய்மொழியில் வளர்த்திடும் பணிகளை மேற்கொள்ள ‘வளர் தமிழ் மன்றம்’ என்னும் புதிய அமைப்பு உருவாகி வருகிறது. அண்ணா பல்கலைக் கழகம் தொழிற் கல்வி, தொழிற் பயிற்சி, அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு, தொழில் நுட்ப அறிவு ஆகிய பணிகளில், தேசிய அளவிலும் அனைத்து நாடுகள் அளவிலும் சிறந்த மையமாக உருப்பெற்று வருகிறது. இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் திரு. பி. சிவலிங்கம். இன்றைய துணைவேந்தர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி.வா.செ.கு.