அகத்தியர் மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதி பொதிகை மலை, அகத்தியர் மலை, தமிழ் மலை, தென் மலை, மலையமா மலை, மலையம் போன்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இலக்கியங்களால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பெருமையை உடையது இம்மலையாகும். தமிழ்க்குன்று, தமிழ்மலை என்று புலனர் பெருமக்களால் பெருமளவு இது பாராட்டப்படுகிறது. இம்மலையைத் தமிழின் பிறப்பிடமாகவும் அகத்திய முனிவர் வாழ்ந்த இடமாகவும் வழங்குவர். எனவே அகத்தியரைத் ‘தமிழ் முனிவர்’ என்றும், இம்மலையை ‘அகத்தியர் மலை’ என்றும் கூறுகின்றனர். இந்த மலையில் தென்றல் காற்று பிறந்தது எனக் கூறும் வகையில் “தென்றல்வரை” என்றும், “தென்றல் பிறந்த மலையில் தேன் தமிழும் பிறந்தது” என்றும் பல்வேறு வகையில் இதனைச் சிறப்பித்துக் கூறுவர். அகத்தியர் மலை இமய மலையையும் பொதியை மலையையும் ஒருங்கு வைத்துப் புலவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சேர மன்னனைப் புகழும் புலவர் “பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நடுக்கு இன்றி வாழ்க” என்று வாழ்த்தியுள்ளார். இம்மலையின் மழைச் சிறப்பு, “மழை தவழ் பொதியில்” என்றும் “ஆடுமழை தவழும் கோடு உயர் பொதியில்” என்றும் கூறப்படுகிறது. சேரநாட்டின் வழியாகப் பொதிகை மலையைக் கடந்து கொற்கைத் துறைமுகம் வந்த மேனாட்டு அறிஞர் பலர், இதன் சிறப்பைப் புகழ்ந்துள்ளனர். “பெரிப்புளுசு-ஆப்-எரித்திரியன் சீ” (Periplus of the Erythrean Sea) என்னும் நூலாசிரியர், இம்மலையைச் ‘செம்மலை’ என்று சிறப்பித்துக் கூறுகின்றார். யுவான்சுவாங் என்ற சீனப் பயணி, இம்மலையை மோ-லோ-யா மலை (மலையமலை), பு-டா-லோ-கா (பொதிகை) மலை என்று குறிப்பிடுகிறார். மேலும் தமது குறிப்புகளில் இதன் அமைப்பு, சிறப்புகள் போன்றவற்றையும் அவர் எழுதியுள்ளார். பல வளங்களையுடைய இம்மலையில் பல சிற்றாறுகளும் ஆறுகளும் அருவிகளும் தொடங்குகின்றன. ஏலம், காப்பி, தேயிலை, சந்தனம், அகில், தேக்கு போன்றவற்றோடு மிகுதியான மூலிகைகளைத் தன்னகத்தேயுடையது இம்மலை. இம்மலையைப் பற்றிய ஆய்வு 1982-ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறையால் நடத்தப்பட்டது. பாபநாசம் என்ற இடத்தில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதிகளையும் குன்றுகளையும் பள்ளத்தாக்குகளையும் புயல், காற்று, மழை, மூடுபனி, யானை, காட்டுப் பன்றி, புலி, அட்டைகள் போன்றவற்றையும் மிகுதியாக உடைய இம்மலையை ஒருவரும் எளிதில் நெருங்க இயலாது. கால்நடையாகச் சென்றால் இச்சிகரத்தை அடைய இரண்டு நாட்கள் ஆகின்றன. ஏப்பிரல், மே மாதங்களில் மட்டுமே மழை, மூடுபனி, அட்டைகள் போன்ற இடையூறுகள் குறைவாக இருக்கும். இம்மலையின் உச்சி, தமிழ்நாடு–கேரள மாநிலங்களின் எல்லைகட்கிடையே அமைந்துள்ளது. இதன் மேல்பகுதி தட்டையாக இல்லாமல் கிழக்கு மேற்குப் புறங்களில் ஓரளவு சரிந்து காணப்படுகிறது. ஆங்காங்கே குட்டையான செடிகளையும், புல்லையும் கொண்ட மண் பகுதியைத் தவிர ஏறத்தாழ 2000 ச.மீ. பரப்புடைய இப்பகுதியில் பெருமளவு பாறைகளே உள்ளன. இம்மலையின் உச்சி பெரும்பாலும் அடர்ந்த மூடுபனியால் மூடப்படுவதால் மூன்று மீட்டருக்கு எதிரில் உள்ள பொருள்களைக்கூடப் பார்க்க இயலாது. மேல் அணைப்பகுதியில் ஒரு சில கருப்பு சிவப்பு வண்ணப்பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாண்டியன் கோட்டை என்று சொல்லப்படும் இடிந்த பெரிய மதில் சுவரின் அடிப்பகுதி, மிகவும் பரந்த அளவில் இங்குள்ள சிகரங்களுள் ஒன்றின்மேல் காணப்படுகிறது. இந்தக் கோட்டை மிகவும் பாதுகாப்பானதாகக் காணப்படுகிறது. இதில் பகைவருக்கு அஞ்சிய பாண்டிய அரசன் ஒருவன் பதுங்கி வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கீழ் அணைக்கு அருகில் உள்ள கல்யாணி தீர்த்தம் என்று செல்லப்படும் சுனைப் பகுதியில் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தனவாகக் கருதப்படும் நடராசர், உமையவள், முருகன், வள்ளி, தேவயானை, கணபதி, கண்ணன், அனுமன், அகத்தியர் போன்ற புடைப்புச் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. முண்டன் துறையில் இருந்து செல்லும் மற்றொரு பகுதியில் குத்தாலப் புடை என்றோர் இடமுண்டு. அதன் அருகில் உள்ள குகை ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள வகை வகையான குறியீடுகள் குறிப்பிடத்தக்கனவாம். இங்குள்ள பழங்குடி மக்களான கணிக்கர்களின் பழக்கவழக்கங்களும் குறிப்பிடத்தக்கனவாம். அகத்தியர் மலை இன்றும் தமிழ் நாட்டவராலும் கேரள மாநிலத்தவராலும் மலைவாழ் பழங்குடியினராலும் தூய்மையான இடமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. பொ.அ.