இலியனார்டோ டா வின்சி என்பவர் கி.பி. 15, 16–ஆம் நூற்றாண்டுகளில் இத்தாலி நாட்டில் வாழ்ந்த தலைசிறந்த சிற்பி; ஓவியர்; கட்டடக் கலைஞர். இவர் பாலங்களுக்கும் நெடுஞ்சாலைகளுக்கும் ஆயுதங்களுக்கும் ஆடைகளுக்கும் அறிவியல் கருவிகளுக்கும் வடிவமைப்புச் செய்துகொடுத்த மாபெரும் வல்லுநர், இலியனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) கி.பி. 1452–ஆம் ஆண்டில் இத்தாலியைச் சார்ந்த வின்சி என்னும் ஊரில் பிறந்தார். இவர்தம் தந்தையார் ஓர் அரசு ஊழியர். இலியனார்டோ பிள்ளைப் பருவத்தைத் தம் குடும்பப் பண்ணையிலேயே கழித்தார். சுற்றியிருந்த கழனிகளையும் பாய்ந்தோடும் அருவிகளையும் சுதந்திரமாக ஆய்ந்த இவர், இயற்கைக் காட்சிகளைக் கண்டு அவற்றின் மேல் பெரும் ஈடுபாடு கொண்டார். பொருள்கள் எவ்வாறு இயங்குகி்ன்றன என்பதைக் கண்டறிவதில் இவர் கண்ணும் கருத்துமாயிருந்தார். கூடுகளில் அடைபட்டிருந்த பறவைகளைச் சந்தைகளில் விலை கொடுத்து வாங்கி, அப்பறவைகளைக் கூடுகளிலிருந்து வெளியே பறக்க விட்டுப் பார்த்து மகிழ்ந்தார். பறவைகள் கூடுகளில் அடைபட்டுக் கிடப்பதைக் காணப் பொறுக்காமையினாலும் பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதைக் கற்றுக் கொள்ளவும் இவர் அப்படிச் செய்தார் என்று கூறுவர். இலியனார்டோ கி.பி. 1469–ஆம் ஆண்டளவில் தம் தந்தையாருடன் பிளாரன்சு நகருக்குச் சென்றார். அங்கு ஆன்ரி தெல் வெராக்கியோ (Andrea del Verrocchio) என்பவரிடம் பயிற்சியாளராகச் சேர்ந்தார். வெராக்கியோ சிறந்த ஓவியரும் சிற்பியுமாவார். அவரிடம் இவர் ஏழாண்டுகள் கற்றார். அவருடைய கற்பனை வளம் மிக்க சிற்பங்கள் இவரை மிகவும் கவர்ந்தன. இவர் கி.பி. 1472–ஆம் ஆண்டளவில் ஓவியர் குழுவின் தலைமை ஓவியராகப் பொறுப்பேற்றார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் அழகுமிகு தேவதை ஒன்றின் ஓவியத்தை வரைந்தபோது ஓவியம் வரைவதில் இவரது இணையிலாத் திறமையைக் கண்டு வியந்து வெராக்கியோ ஓவியப் பணியையே கைவிட்டு விட்டார். இலியனார்டோ டா வின்சி தலைசிறந்த ஓவியர் என்று பாராட்டும்படி இவர் விளங்கினார். ‘அரசர்களைப் போற்றுதல்’ (Adoration of the Kings) என்னும் ஓவியத்தை இசுகோபடோ (Scopeto) விலிருந்து சமயக் குருமார்களுக்கென வரைந்தார். அவ்வோவியம் இளம் ஓவியக் கலைஞர்களுக்கு முன்னோடியாக இருந்தது. கன்னிமேரி ஓவியத்தை நீண்டதொரு இயற்கைக் காட்சியுடன் வரைந்தார். அந்த ஓவியத்தில் கன்னி மேரியும் மூன்று அரசர்களும் முதன்மையாகத் தெரியும்படி அழகாக வரைந்து, அதில் புதியதொரு முறையைக் கையாண்டார். இப்படம் முழுமை பெறாததொன்றாகவே கி.பி. 1481–இல் கைவிடப்பட்டது. இவர் கி.பி. 1482–ஆம் ஆண்டில் பிளாரன்சு நகரை விட்டு மிலான் சென்றார். அங்கு இவர் இலோடோவிகோ இசுபார்சா (Lodovico Sforza) என்பாரிடம் சேர்ந்தார். அங்கு இவர் அரண்மனைப் படங்களை வரைந்தும் விழாக் காட்சிகளைக் கண்காணித்தும். பல வண்ண உடைகளுக்கு வடிவம் கொடுத்தும், போர்க் கருவிகளை அமைப்பதற்கு வழி காட்டியும், மாளிகையில் மைய வெப்பமூட்டும் சாதனத்தை உருவாக்கியும் தம் அரிய காலத்தைச் செலவிட்டார். இவர் யாழ் போன்ற இசைக்கருவியை இசைத்ததாகவும், மிலான் பிரபுவையும் அவர்தம் நண்பர்களையும் இசையால் மகிழ்வித்ததாகவும் கூறுவர். மோனோலிசா மிலானில் வாழ்ந்தபோதுதான் இவர் தம்முடைய புகழ் மிக்க ஓவியமான ‘இறுதி இரவு உணவு’ (The Last Supper) என்னும் ஓவியத்தைத் தீட்டினார். இவ்வோவியத்தை இவர் மெல்ல மெல்ல ஈரமான சுவரில் வண்ணங்களில் வரைந்தார். இவ்வோவியம் மிகவும் சிதைந்த நிலையிலும் தலைசிறந்ததெனக் கருதப்படுகிறது. மனித உடலுறுப்புகளை ஆராய் இவர் மேற்கொண்ட ஆர்வத்தைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். தொடக்கத்தில் இவரும் ஏனைய கி.பி. 15–ஆம் நூற்றாண்டுக் கலைஞர்களைப் போல், உடலமைப்பின் புறத்தோற்றத்தையே நுட்பமாக ஆராய்ந்தார். பின்னர், உடலுறுப்புகளின் உள் தோற்றத்தின்பால் மிக்க ஆர்வம் கொண்டவராய், பிணங்களை அறுத்துப் பார்த்து உடலுறுப்புகள் எப்படி ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்வதில் கருத்தூன்றிச் செயற்பட்டார். இருதயத்தைப் பற்றிய இவருடைய ஆய்வுகள் மிகுந்த முற்போக்கானவை. மனிதனை எங்ஙனம் நோக்கினாரோ அதேபோல் செடி கொடிகளையும் விலங்குகளையும் இவர் ஆய்ந்தார். செடி கொடிகளின் வளர்ச்சி குறித்தும் இவர் பல கண்டு பிடிப்புகளைச் செய்தார். மிலான் வந்து குடியேறியதும், தம்மைக் கவர்ந்த பொருள்களைப் பற்றிய குறிப்புகளை இவர் எழுதத் தொடங்கினார். இவருடைய குறிப்புப் புத்தகங்களைப் படித்தால் அதில் இவர் பல்வேறுபட்ட பொருள்களைப் பற்றி, வேறு யாரும் கூறாத செய்திகளை அறிவியல் நோக்கத்துடன் குறித்துள்ளதைக் காணலாம். தாம் விளக்க முற்பட்ட கோட்பாடுகளுக்கு இவர் மிக அழகானதும் திட்டவட்டமுமான வரை படங்களை வரைந்து விளக்கிக் காட்டியுள்ளார். இயந்திரங்களைப் பற்றி இவர் எழுதிய வரைபடங்களை ஆய்ந்த இருபதாம் நூற்றாண்டுப் பொறியாளர்கள், இக்காலப் பொருள்களுக்கேற்ற திட்டவட்டமான முன்மாதிரிகளைச் சரியானபடி உருவாக்கியுள்ளார் என்று கூறியுள்ளனர். இவருடைய குறிப்புப் புத்தகங்களைப் படிப்பது கடினம். ஏனெனில் இவர் அதைத் தலைகீழாகவும், இடப் புறமிருந்து வலப் புறமாகவும் எழுதியுள்ளார். அதைக் கண்ணாடியில் பார்த்துத் தான் படிக்க வேண்டும். இதைக் கண்ணாடி எழுத்துமுறை (Mirror writing) என்பர். தம் கருத்துகளை ஒருவரும் திருடக்கூடாது என்னும் காரணத்திற்காக இவர் அம்முறையைக் கையாண்டார். பிரெஞ்சுப் படை கி.பி. 1499–ஆம் ஆண்டில் மிலான்மீது படையெடுத்ததால் இவரது மிலான் வாழ்க்கை இடையில் தடையுற்றது. இவரை ஆதரித்த புரவலரான இலோடோவிகோ சிறை செய்யப்பட்டார். ஆதலின் இவர் வெனிசுக்கு ஓடினார். அடுத்த ஆண்டு மீண்டும் இவர் பிளாரன்சுக்குத் திரும்பி வந்தார். அப்போதும் அந்நகரம் கலைகளுக்கான சீரிய மையமாக இருந்தது. அனன்சியாடா (Annunziata) என்னும் திருச்சபையின் பலிபீடத்தை அமைப்பதற்கான ஓவியத்தை வரைய இவர் பணிக்கப்பட்டார். கன்னிமேரியும் அவள் பெற்ற பிள்ளையும் முழு அளவில் ஓவியமாகத் தீட்டப்பட்டு அது மக்களின் பார்வைக்கு வந்தபோது மக்கள் அதைக் கண்டுகளித்துப் போற்றினர். சிறிது காலம் இவர் உரோமாபுரியில் சீசர் போர்சியா (Cesare Borgia) என்னும் இளவரசரின் இராணுவப் பொறியாளராகப் பணியாற்றினார். இவர் கி.பி. 1503–ஆம் ஆண்டில் பிளாரன்சு திரும்பினார். இக்காலகட்டத்தில் இவர் வரைந்ததுதான் மோனோலிசா என்னும் உலகப் புகழ்பெற்ற ஓவியமாகும். இவ்வோவியம் மென்மைக்கும் அழகான முகத்திற்கும் அதன் பின்னணியில் வரையப்பெற்ற மலைத் தோற்றத்திற்கும் பெரும்புகழ் பெற்றது. பிளாரன்சில் இருந்த காலத்தில் பேலசோ விக்கியோ (Palazzo Vecchio) விலுள்ள பெருமன்றத்தின் சுவரில் போராடும் காட்சியொன்றை வரையுமாறு பணிக்கப் பெற்றார். மீண்டும் இவர் புதிய பரிசோதனை ஒன்றை மேற்கொண்டார். இம்முறை இவர் மெழுகினால் ஓவியம் தீட்ட முற்பட்டார். இப்பணி நிறை- வேறுவதற்கு முன்னரே மெழுகு உருகத் தொடங்கி விட்டது. இதைக் கண்ணுற்ற மைக்கேலாஞ்சலோ கண்ணீர்விட்டுக் கதறினார். அந்த ஊர்ப் பெருமக்கள் துயரத்திலாழ்ந்தனர். இலியனார்டோவும் ஏக்கமுற்றார். அறிவியல் அறிஞரான இவர், பரிசோதனை வெற்றிபெறாமல் போவதுமுண்டு என்பதையும், பரிசோதனைகள் தோற்கக்கூடும் என்பதையும் மக்கள் அறியவேண்டுமென்று விரும்பினார். மெடிசி குடும்பத்தைச் சார்ந்த கியூலியானோ (Giuliano de Medici) என்பார் கி.பி. 1513–ஆம் ஆண்டு இவரை உரோமாபுரிக்கு அழைத்தார். கியூலியானோ அப்போது போப்பாண்டவராயிருந்த பத்தாம் இலியோ என்பாரின் சகோதரர். அங்கும் இவர் தம் பரிசோதனைகளைத் தொடர்ந்தார். இவர் கி.பி. 1516 – ஆம் ஆண்டளவில் இத்தாலியை விட்டுப் பிரான்சு மன்னரின் அழைப்பினையேற்று அம்மன்னரின் முதன்மை ஓவியராகவும் பொறியாளராகவும் பணியேற்றார். அப்போது பிரான்சின் முடி மன்னரான முதலாம் பிரான்சிசு என்பார், அம்பாய்சு (Ambosie) என்னுமிடத்திற்கருகில் மாளிகையொன்றைக் கொடுத்துச் சோதனைகளைத் தம் விழைவின் படி நடத்துமாறு வேண்டினார். பிரான்சில் வாழ்ந்த காலத்தில் இவர் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டு கி.பி. 1519–இல் காலமானார்.