கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் மேலைநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்து கிறித்தவச் சமய ஊழியம் புரிந்த கிறித்தவத் தொண்டர்களுள் ஒருவர். இவர் அன்றைய செருமனி நாட்டிலிருந்த பிரசியா பகுதியைச் சேர்ந்த கிராவுடென்சு கோட்டை என்னுமிடத்தில் 1790–ஆம் ஆண்டில் பிறந்தவர், இராணுவத்தில் பணிபுரிந்த இவர் தந்தையார், இவரது இளமைப் பருவத்திலேயே காலமானார். இரேனியசு ஐயர் இளமையில் தாய்மொழிக் கல்வி கற்றார். அதில் நல்ல தேர்ச்சி பெற்று, அரசுப் பணியில் ஈடுபட்டார். எனினும் இவரது உள்ளம் சமயப் பணி புரிவதிலேயே நாட்டம் மிகக் கொண்டிருந்தது. எனவே, அரசுப் பணியை விடுத்துப் பெர்லின் நகரில் கிறித்தவச் சமய ஊழியப் பயிற்சி பெற்றார். தம் 22–ஆம் அகவையில் அத்துறையில் குருப்பட்டம் பெற்றார். பிறகு இங்கிலாந்து சென்று ஒன்றரை ஆண்டுக் காலம், சமய ஊழியத் தொண்டில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்வுற்றார். இவர்தம் 24–ஆம் அகவையில் (கி.பி. 1814) வெளிநாடுகளில் சமய ஊழியம் புரியப் பணிக்கப் பெற்றுச் சென்னை வந்தடைந்தார். வெளியீடுகள் பலவற்றை சென்று, தமிழ் நாட்டில் ஐயர் தரங்கம்பாடிக்குச் சமய ஊழியத்தை மேற்கொள்ள உதவும் தமிழ் மொழியினைப் பயின்றார். மீண்டும் சென்னை திரும்பிக் கிறித்தவச் சமய ஊழியச் சங்கச் சார்பில் அச்சமயத் தொண்டு புரியத் தொடங்கினார். இவர் கி.பி. 1820–இல் பாளையங்கோட்டையை அடைந்து, அங்கிருந்து நெல்லை மாவட்டத்திலுள்ள பல ஊர்களுக்கும் சென்று சமய ஊழியம் புரிந்தார். அப்போது பல இந்துக்களைக் கிறித்தவராக்கினார். இரேனியசு ஐயர் திருநெல்வேலித் திருப்பாற்கடல் நாதன் கவிராயரிடமும் சென்னையிலிருந்த முகவை இராமானுசக் கவிராயரிடமும் பல ஆண்டுகள் தமிழ் இலக்கண இலக்கியங் கற்றார். இவரது தமிழ்ப் புலமையை, மற்றொரு தமிழ் வல்ல கிறித்தவச் சமய ஊழியராகிய டாக்டர் போப்பையரவர்கள் சிறப்பாகப் பாராட்டியுள்ளார். இரேனியசு ஐயர் தம்மால் மதமாற்றம் செய்யப்பட்ட மக்கள் வாழ்வதற்காகப் புதிய ஊர்கள் பலவற்றை உருவாக்கினார். பாளையங்கோட்டைக்குத் தெற்கே 25 கல் தொலைவில் விளங்கும் தோனாவூர் (Donavur) இவரால் உருவாக்கப்பட்டதே. தோனா என்னும் செருமானியச் செல்வர் அளித்த பெரும் பொருளுதவியால் இவ்வூரை உருவாக்கி, அப்புரவலரின் நினைவாகத் தோனாவூர் என்று பெயரிட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் சாந்தபுரம், சந்தோடபுரம் போன்ற பன்னிரண்டு ஊர்களைப் புதிதாகத் தோற்றுவித்தார். பாளையங்கோட்டையில் மகளிர் பள்ளி ஒன்றினை நிறுவினார். விதவையர் நலங் காக்கச் சங்கம் ஒன்று அமைத்தார். தரும சங்கம் என ஒரு சங்கம் நிறுவி, அதன் வாயிலாகப் பள்ளிகள், வீடுகள், கோயில்கள் போல்வன கட்டுதற்கு நிலங்கள் வாங்கிக் கொடுத்தார். நூல் இயற்றும் சங்கம் ஒன்றை உருவாக்கினார். பல நூல்கள் அதன் வழி வெளியாயின. இவர் தம் 48–ஆம் அகவையில் காலமானார். இவரது நல்லுடல் முருகன் குறிச்சியில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் இயற்றிய நூல்கள் வருமாறு:– ஞான போசன விளக்கம் (1825), வேதப்பொருள் (1832), பூமி சாத்திரம் (1832), இலக்கண நூற் சுருக்கம் (1832), மோட்ச மார்க்கம் (1834), வேத உதாரணத் திரட்டு (1835), வேத சாத்திரச் சுருக்கம் (1825), பலவகைத் திருட்டாந்தம். பெப்பிரீசியசு என்பார் தமிழில் எழுதிய ‘புதிய ஏற்பாடு’ என்னும் கிறித்தவ வேதாகம நூலைச் செப்பம் செய்து அச்சிட்டு வெளியிட்டார். மேலும் சமயச் கிறித்தவ சார்பான வெளியீடுகள் பலவற்ரை வெளியிட்டார். இவர் புதுக்கி அமைத்த ‘புதிய ஏற்பாடு’ நூலின் மொழி பெயர்ப்பு உள்ளவாறமையாமல் கூட்டியும் குறைத்தும் இருப்பதாக உணர்ந்த சென்னை விவிலிய சங்கம், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.