செம்பருத்தி
cemparutti
இதன் தாவரவியல் பெயர் ஹைபிஸ்கஸ் ரோசாசைனன்சிஸ் (Hibiscus rosasinensis).
இதன் தாவரவியல் பெயர் ஹைபிஸ்கஸ் ரோசாசைனன்சிஸ் (Hibiscus rosasinensis). செம்பருத்தி மால்வேசி என்னும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.ஹைபிஸ்கஸ் இனத்தில் ஏறத் தாழ, 300 சிற்றினங்களுண்டு. அவை சிறு செடிகள், செடிகள் அல்லது மரங்களாக இருக்கும். பெரும்பான்மையானவை, பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தவை.
தோற்றம். இது சீனாவைத் தாயகமாகக் கொண்டதாகும். இப்போது உலகில் வெப்ப, மித வெப்ப நாடுகளில் இதைத் தன்னிச்சையாகக் காண்பதரிது. இந்தியாவில், வீட்டுத் தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகுக்கு மட்டுமன்றி, வேலிச் செடியாகவும் வளர்க்கப்படுகிறது. பெரிய பூங்காக்களில், புல்வெளிகளின் நடுவில் கூட்டமாகப் புதர் போல் இதை வளர்ப்பர்.
செம்பருத்தி, சிவப்பு நிற மலர்களைக் கொண்டிருந்த போதும், மஞ்சள், வெள்ளை, மஜந்தா, வண்ண வரிகளுடன் கூடிய மலர்களும் காணப்படும். ஆற்றுப் பூவரசு எனப்படும் ஹை.டிலியேஷியஸ் (H.tiliaceous) குஞ்சலச் செம்பருத்தி எனப்படும் ஹை.சைஷோபெடாலஸ் (H. Schizopetalous) முதலியவற்றுடன் கலப்பு நடத்திய பின், இன்றைய செம்பருத்தி தோன்றியிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
செம்பருத்திப் பூவைச் சீன ரோஜா, காலணிப் பூ என்றும் கூறுவர். இதன் தாயகமான சீனாவில் அக்காலத்திலிருந்தே, இம்மலர்களின் இதழ்களைக் கொண்டு, காலணிகளில் சாயம் ஏற்றும் வழக்கம் இருந்ததால், இப்பெயர்கள் வந்தன. தென்னாட்டில் சிவப்பு மலரோடு கூடிய பருத்திச் செடியையும், செம்பருத்தி என்று குறிப்பிடுவதுண்டு. அதிலிருந்து வேறு படுத்தும் வகையில், இதைச் செம்பரத்தை என்று கூறுவர்.
வளரியல்பு. செம்பருத்தி 2–3 மீ. உயரம் வளரக் கூடிய புதர்ச் செடியாகும். பொதுவாகக் கிளைகள் கீழிருந்தே தோன்றும்.
இலைகள். தனியிலை மாற்றிலையடுக்கு அமைப்பு, நீண்ட காம்பு கொண்டது. இலையடிச் செதில்கள் 2 சிறியவை. இலைப் பரப்பு முட்டை வடிவம். இலை ஓரங்கள் கீழ்ப் பக்கம் முழுமையாகவும், மேற்பக்கம் பற்கள் போன்றுமிருக்கும். 3 அல்லது 5 முக்கியமான நரம்புகள் கீழிருந்து தோன்றும்.
மலர்கள். இலைக்கோணத் தனி மஞ்சரி, மலர் பெரிதாகவும், பகட்டாகவும் அமைந்திருக்கும். மலரின் காம்பு இணைந்தது. அதாவது, மலர்க் காம்பின் நடுவில் ஒரு வளையத்தைக் காணலாம். அதன் மேற்பகுதியைப் பூக்காம்பு என்றும், கீழ்ப் பகுதியை மஞ்சரிக் காம்பு என்றும் தாவரவியலார் கூறுவர். மலர்கள், பூவடிச் செதில்கள் கொண்டவை. பூக்காம்புச் செதில்கள், 8–10 வரை புல்லி வட்டத்திற்கு வெளியே வட்டமாக அமைந்திருக்கும். இதையே புறப் புல்லி (epicalyx) என்பர்.
புல்லி வட்டம். 5 புல்லிகள் இணைந்து, கிண்ணம் போல் காணப்படும்.
அல்லி வட்டம். 5 அல்லிகள், தனித்துச் சிவப்பு வண்ணம் 'கொண்டிருக்கும். திருகு அமைப்பு.
மகரந்தத் தாள்கள். எண்ணற்றவை. மகரந்தத் தாள்கள் 10 என்றும், அவற்றில் புல்லிகளுக்கு எதிரிலுள்ள ஐந்தும் மலடாக மாறி, மகரந்தத் தாள் குழலைத் தோற்றுவிக்கின்றன என்றும், தாவரவியலார் கருதுவர். அல்லிகளுக்கு எதிரிலுள்ள ஐந்தும் தொடக்க நிலையில் பிளவு படுவதால், இன்றைய நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். மகரந்தத் தாள்களின் குழல் நுனியிலுள்ள 5 பற்கள் போன்ற அமைப்பே மலட்டு மகரந்தத் தாள்களாகும். மகரந்தப் பைகள் அவரை வடிவம் கொண்டவை. ஓரறை மகரந்தப் பை.
சூலகம். ஐந்து சூலிலைகள் இணைந்து, 5 சூலறை கொண்ட மேல் மட்டச் சூல் பை. எண்ணற்ற சூல்கள் அச்சு ஒட்டு முறையில் அமைந்துள்ளன. சூலகத் தண்டு மகரந்தக் குழல் மூலம் சென்று, நுனியில் வெளிப்படும். சூலக முடி ஐந்தாகக் கிளைத்திருக்கும்.
கனி. வளர்ப்புச் செடிகளில் கனிகள் தோன்றுவதில்லை.
சூழ்நிலை. எவ்வகை மண்ணிலும் வளரும் தன்மையுடையது. உரமிட்டுப் பண்படுத்தப்பட்ட நிலத்தில் நன்கு வளரும்.
சாகுபடி. பொதுவாகப் பயிரிடப்படும் செம்பருத்திச் செடி, விதைகளைத் தோற்றுவிக்காமையால், விதையில்லா இனப் பெருக்க முறையே கையாளப்படுகிறது. போத்து நடுதலே சிறந்த முறையாகும். கிளைகளிலிருந்து முதிர்ந்த குச்சிகளை வெட்டி நடுவது வழக்கம். குச்சிகளை I.A.A. எனப்படும் வளர்ச்சி ஊக்கிகளில் நனைத்து ஊன்றுவதால், வேர்கள் விரைவில் தோன்றும். செடிகள் பொதுவாக, ஆண்டு முழுதும் பூக்கும் தன்மை பெற்றும், மழைக் காலத்தில் மட்டும் கூடுதலாகப் பூக்குந் திறன் பெற்றும் காணப்படும்.
வகை. வீட்டுத் தோட்டம், பூங்கா, கோவில் நந்தவனம் ஆகியவற்றில் பயிரிடப்படும் செம்பருத்திச் செடி, 5 சிவப்பு அல்லிகளைக் கொண்டிருக்கும். இதை ஒற்றைப் பூ என்பர். இது அனைத்துத் தட்ப வெப்ப நிலைகளிலும் வளரக் கூடியது. சில வகை, செண்டு அல்லது அடுக்குப் பூக்களைக் கொடுக்க வல்லது. இச்செடிகள் அடர் பச்சை இலைகளோடு காணப்படும், மேலும், இப்பூக்களிலுள்ள மகரந்தத் தாள்களே அல்லிகளாக மாறுவதாகத் தாவரவியலார் கூறுவர்.
அண்மைக் காலங்களில் இந்தியத் தோட்டங்களில், ஒரு வகைச் செம்பருத்தி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதை ஹை.ரோ வகைக் கூப்பிரி (H.r.Var.Cooperi) என்பர். இதன் இலைகள் ஒழுங்கற்று வெள்ளை அல்லது இளம் சிவப்பு வண்ணத் தட்டுகளுடன் காணப்படும். இவ்வகையில், மலர்கள் சரியாக வளராத போதும், வேறுபட்ட இலைகளுக்காகவே, தோட்டங்களில் இவை வளர்க்கப்படுகின்றன. இவ்வினங்களில் பசுமைப் பகுதி குறைவாக உள்ளமையால், சூரியக் கதிர்களை நேராக ஏற்கும் ஆற்றல் இல்லை. அதனால், இவ்வகைகளைக் கண்ணாடித் தோட்டம் அல்லது நிழற்பாங்கான இடங்களில் வளர்ப்பர்.
பயன்கள். செம்பருத்தி மலர், இலை ஆகியன பயன் படுகின்றன. சீனா போன்ற நாடுகளில், இம்மலரிதழ் சாயத்தின் உதவியால் தலை முடி, புருவம், உணவுப் பொருள், குடி நீர், தோல் முதலியவற்றிற்கு வண்ணமேற்றுகின்றனர்.
இலை, மலர் ஆகியன மருத்துவத்தில் பயன் படுகின்றன. நாட்டு மருத்துவத்தில் வேர்கள் பயனாகின்றன. ஆல்தேயா (Althaea) எனப்படும் செடியின் வேர், மிகவும் சிறந்த மருந்துப் பொருளாகும். செம்பருத்திச் செடியின் வேரைக் கொண்டு, அதைக் கலப்படம் செய்வர். மலேயா நாட்டில் பால் வினை நோய்களுக்கு வேரைப் பயன்படுத்துகின்றனர்.
இச்செடியின் இலை, மலரிதழ் ஆகியன சிறந்த வெப்ப நீக்கியாகும். செம்பருத்தியிலையை நீருடன் சேர்த்தரைத்து, வழவழப்பாக மாறியவுடன், அதைத் தலையில் தேய்த்துக் குளிப்பது வழக்கம், இதனால், கண்ணுக்குக் குளர்ச்சியேற்படும் எனக் கருதப்படுகிறது. சிலர் இதை மென்று தின்பதுமுண்டு. இதனால், உடல் வெப்பம் தணியும், மலேயா நாட்டில் கருத்தரித்த பெண்மணிகள் நலமான மகப் பேறு பெறச் செம்பருத்தி அல்லது மூக்குத்திப் பூண்டு எனப்படும் வெர்னோனியா சீனிரா (Veronia cinera) செடியின் இலைச் சாற்றை உட்கொள்வர்.
செம்பருத்திப் பூவில் தங்கச் சத்து இருப்பதாகச் சித்தர்களின் நூல் கூறுகிறது. நாற்பது நெல்லிடைப் பூவைத் தின்பதால், ஒரு நெல்லிடைத் தங்கத்தை உட்கொண்ட பயன் கிடைக்கும் என ஆயுர்வேத மருத்துவ நூல்களால் அறியப்படுகிறது. இப்பூக்களிலிருந்து பானம், குல்கந்து போன்றவற்றைத் தயார் செய்து மருந்தாகப் பயன் படுத்துவர். இவற்றைக் கொண்டு, கணைச் சூடு, எலும்புருக்கி, இதயத் துடிப்பு, உடல் எரிச்சல், இருமல் வகை, தலைப் பொடுகு, வெள்ளை, வெட்டை, கல்லீரல் வீக்கம் முதலிய பல வகை நோய்களைக் குணப்படுத்தலாம். குழந்தைகளுக்குக் கல்லீரல் வீங்குவதால், காய்ச்சல் ஏற்படும் போது, செம்பருத்திப் பூவின் சாறு சிறந்த கை மருந்தாகச் செயல் படுகிறது. காம்பு நீக்கிய பூவைத் தின்பதால், வெள்ளை, வெட்டை போன்ற நோய்கள் நீங்குமெனச் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. பூக்களைக் கொண்டு, களிம்பு தயாரித்து வேனற் கட்டி, கொப்புளங்களுக்குப் போடுவதுண்டு. சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் பூக்களைப் பச்சையாகவும், ஊறுகாயாகவும் உண்பதுண்டு. இலைகளில் கரோட்டின் உள்ளமையால், இது சிறந்த கால் நடைத் தீவனமாகும்.
நோய்கள். கோனிஃபோரா இன்ஃபண்டிபுலிஃ பெரா என்னும் பூசணத்தால், பூக்கள், அழுகல் நோயால் பாதிக்கப்படலாம். —தி. ஸ்ரீகணேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 758)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p925gr2f/
தமிழ்“செம்பருத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/p925gr2f/APA
Oliyon Research. (2026). செம்பருத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p925gr2f/MLA
"செம்பருத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/p925gr2f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment