அகநிலைக் கொள்கை
akanilaik koḷkai
ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விளைவாக அறிவுமுதற் கொள்கையின் (Rationalism) பின்னணியில் எழுந்ததாகும்.
ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விளைவாக அறிவுமுதற் கொள்கையின் (Rationalism) பின்னணியில் எழுந்ததாகும். ஐரோப்பிய மறுமலர்ச்சி, இதுகாறும் இறைமையமாக (Theo–centric) இருந்த பண்பாட்டை, மனித மையம் கொண்டதாக (Anthropo–centric) மாற்றியது. தேக்கார்ட்டின் (Descartes) அறிவுமுதற் கொள்கை இந்த மாற்றத்திற்குத் தத்துவ வடிவம் கொடுத்தது. தேக்கார்டின் சிந்தனை, இந்த உலகம் அனைத்துமே ஒரு மாயக் கனவாக இருக்கக்கூடும் என்னும் ஐயப்பாட்டில் தொடங்கியது. ஆனால், அது தன்னையே இத்தகைய ஓர் ஐயத்தின் மையப் பொருளாகக் கொள்ளத் துணிவின்றி, அகத்தின் எல்லையில் நின்று ‘நான் சிந்திக்கிறேன், எனவே, நான் இருக்கிறேன்’ என்று கொண்டது.
மறுமலர்ச்சியில் பிறந்த, பகுத்தறிவின்பாற் பட்ட இத்தகைய சிந்தனை, புற உலகப் புரட்சிக்கு வித்திட்டது. அறிவியலும் பொறியியலும் அவற்றின் வழி வந்த தொழிற் புரட்சியும் மனிதனின் புற உலகச் சூழலை விரைவில் மாற்றி அமைத்தன. ஆனால், தேக்கார்டு இறைமைய உலக நோக்கை முற்றிலும் விட்டுவிடவில்லை. இறைவன் உலகை அறிவு வழி இயங்குமாறு படைத்தான் என்பது அவரது கொள்கை.
மனிதனின் புற உலகக் சூழலில் நிகழ்ந்த இம்மாறுதல்கள், அவனது சமூக அமைப்பையும் அகச் சூழலையும் தொடவில்லை. வால்டேர், உரூசோ, போன்ற சமூகச் சிந்தனையாளர்கள், மனிதனை மையமாகக் கொண்ட உலகில் அறிவுமுதற் கொள்கையின் துணைகொண்டு, சமுதாய அமைப்பைத் திறனாயும் போக்கிற்கு வித்திட்டனர். அது பிரெஞ்சுப் புரட்சியாக மலர்ந்தது.
செருமானியத் தத்துவ அறிஞர் ஏகல் (Hegel), தேக்கார்டின் இறை எச்சக் கருத்தைப் புறக்கணித்தார். அவரது அறிவுமுதற் கொள்கையைப் புரட்சியின் துணைக் கருவியாக்காமல், அதனை மனிதன் தன் இன வரலாற்றை அறிந்து உலகத்தோடு ஒட்ட ஒழுக மாந்தர்க்கு உதவும் வழிகாட்டியாகக் கொண்டார். ஒவ்வொரு தனி மனிதனும், தன் இனம் கண்டு கடந்த நிலைகளைத் தானும் கண்டு கடந்து, தன் காலத்தோடு நிலைபெறுத்த வேண்டும் என்பது இவர் கொள்கை.
ஏகலின் தத்துவத்தில் அகநிலையானது (Subjectivism) அறிவுமுதற் கொள்கையின் வன்மையால் வரலாற்றில் கரைந்து மறைந்தது. தேக்கார்டு தமது அறிவுமுதற் கொள்கையமைப்பில் இறைவனையும் மனிதனின் அகநிலையையும் விட்டுவைத்தார், ஆனால், அவர் வரலாற்றின் போக்கிற்கு வழி வகுக்கவில்லை. ஏகல் வரலாற்றை வலியுறுத்தி இறைவனையும் அகநிலையையும் அறிவுமுதற் கொள்கையின் துணையால் வரலாற்றின் போக்கில் கரைத்து விட்டார். ஆனால், ஏகல், வரலாற்றுக்குத் தன் காலத்தோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
பாயர்பாகு (Feuerbach). அகநிலை இழத்தலையே அயன்மையாகிவிட்ட நிலையாகக் காட்டி அகநிலைக்கு வலியூட்ட முயன்றார். ஆனால், அவரது அகநிலை இறை மைய எதிர்ப்பில் தோன்றியது. பாயர்பாகு, ஏகலைப்போல் வரலாற்றுப் போக்குக்கு ஒரு வழி வகுக்கவில்லை.
காரல் மார்க்சு, வரலாற்றின் போக்கில் அகநிலை இழத்தலை அயன்மையுற்ற நிலையாகக் காட்டிப் புரட்சிக் கொள்கை மூலம் தேங்கி நிற்கும் வரலாற்றுக்கு வழிவகுக்க முனைந்தார், இதற்கு அவர் அறிவுமுதற் கொள்கையைக் கருவியாகக் கொண்டார். ஆனாலும், மார்க்சின் தத்துவத்தில் அகநிலைக்கு உரிய இடம் அளிக்கப்பெறவில்லை.
வரலாற்றின் போக்கிற்குள் புகுத்தி, அறிவுமுதற் கொள்கையால் ஏகல் அழித்து விட்ட அகநிலையைத் தென்மார்க்குசமயச் சிந்தளையாளர் கீர்க்கிகார்டு (Kierkegaard) முற்றிலும் உயிர்த்தெழச் செய்தார். உண்மை, சத்தியம் என்பவை வெறும் அறிவினால் இல்லை; வரலாற்றின் போக்கிலும் இல்லை; அகநிலையில் மட்டுமே உய்த்துணரக் கிடக்கின்றன என்று இவர் அறிவித்தார். ஏகல், அறிவுமுதற் கொள்கையால் மறைத்துவிட்ட இறைவனையும் ‘உயிர்த்தெழச்’ செய்த இவர், அகநிலைக் கொள்கையால் தேக்கார்டையும் விஞ்சினார். தேக்கார்டின் ஐயப்பாட்டு முறை அகநிலையின் எல்லைக் கோட்டைத் தொட்டவுடன் புறவுலகிற்கு நேராக முகம்திரும்பி அறிவுமுதற் கொள்கையைப் பற்றிக் கொண்டுவிட்டது. கீர்க்கிகார்டு அகநிலையின் எல்லைக் கோட்டை ஊடுருவி, உள்ளே சென்று அதன் மையத்தில் நிலை கொண்டார். ஆனால், கீர்க்கிகார்டு வரலாற்றின் போக்கிற்கு உரியவழி வகுக்கவில்லை.
மார்ட்டின் எய்டெகர் (Martin Heideggar) என்ற செருமானிய அறிஞர், கீர்க்கிகார்டின் அகநிலைக் கொள்கையைத் தழுவி, இறைக் கொள்கையை மறுத்தார். ஆனால், இவரும் வரலாற்றுப் போக்கிற்கு உரிய வழி வகுக்கவில்லை.
சான்பால் சார்த்தரே (Jean Paul Sartre) என்னும் பிரெஞ்சு அறிஞர், எய்டெகரைப் பின்பற்றி இறைக் கொள்கையை மறுத்து, அகநிலைக் கொள்கையை மேற்கொண்டார். சார்த்தரே, கீர்க்கிகார்டும் எய்டெகரும் புறக்கணித்த வரலாற்றுப் பாதையைக் கார்ல் மார்க்சிடம் கண்டார். அதேசமயம் மார்க்சின் தத்துவத்தில் அகநிலைக் கொள்கைக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பதை சார்த்தரே வலியுறுத்தினார்; மனிதர்கள், குழந்தைகளாக அன்றி வயது வந்த தொழிலாளர்களாக, இன உணர்வுடன் பிறப்பதாகக் கொள்ளும் பாங்கில் மார்க்சின் சிந்தனை செல்வதை அவர் சுட்டிக் காட்டினார். புற உலகப் புரட்சிக்கு மக்களை அறைகூவி அழைத்த காரல் மார்க்சு அவர்தம் அகநிலையைப் பண்படுத்த வேண்டியதன் இன்றியமையாமையை மறந்துவிட்டார்.
சார்த்தரே ஒருபுறம் மனிதரின் அகநிலையை இளமையிலிருந்தே முறையாகப் பண்படுத்த வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்து பாரம்பரிய வழிக்கல்விக் கொள்கையை முன் வைத்தார். மறுபுறம், மார்க்சிய வரலாற்றுப் புரட்சியால் முற்றிலும் புதிய ஓர் உலகத்தைச் சமைத்துவிட முடியாது என்பதைக் கண்கூடாக அறிந்திருந்தும்கூட, சார்த்தரே புற உலகப் புரட்சியைத் தூண்ட விழைந்தார்.
ஏகலின் சிந்தனையில், தனி மனிதன் பரம்பரை வழி, தன் இனவரலாறு கண்டு வளர்ந்து நிலை பெறும் கல்விக் கொள்கை பொதிந்து உள்ளது; ஆனால் அவன் அகநிலையில் ஆழ்ந்து, மீண்டு, வரலாற்றில் புதுமை சமைக்கும் வாய்ப்பு இல்லை. வரலாறு சமைக்க வாய்ப்பு அளிக்கவேண்டுமென்றால், வரலாற்றின் திசை குறிக்கவேண்டும். வரலாற்றின் திசையை முன்னரே குறிப்பிட்டால் தனிமனிதன் அகநிலை பறிமுதலாகி, மனிதன், வரலாற்றின் – வரலாற்றைக் குறிக்கும் மனிதக் கும்பலின் – கைப்பாவை ஆகிவிடுவான். திசை குறிப்பிடாவிட்டால், பல்வேறு வகுப்பினர், பல்வேறு திசையில் வரலாற்றை இழுக்க அது நகராமல் நின்று விடும்; அல்லது யாரும் விழையாத இடைப்பட்ட திசைகளின் ஊடே நழுவிச் செல்லும்.
இத்தகைய நிலையில், கல்விதான் பழைமைக்கும் புதுமைக்கும் பாரம்பரியத்திற்கும் புரட்சிக்கும் அகநிலைக்கும் புறச் சூழலுக்கும் பாலமாக விளங்க வேண்டும். கல்வி, வளரும் தனி மனிதன் தன் இனம் கடந்து வந்த பாதையைப் புரிந்து, உணர்ந்து, அகவயப்படுத்திக்கொள்ள உதவ வேண்டும். இந்தக் கொள்கை ஏகலின் சிந்தனையில் பொதிந்து உள்ளது. ஆனால், கல்வியானது மனித இனம் கடந்து வந்த பாதையை இன்றைய மனிதனின் அகத்தில் இட்டு நிரப்பி, இன்றைய சமூக வரலாற்று அமைப்பின் எல்லையோடு அவனை நிறுத்திவிடக் கூடாது. இதையும் விஞ்சிய அகநிலைச் சுதந்திரத்தை அவன் கண்டுகொள்ளக் கல்வி உதவ வேண்டும். பின், இந்தச் சுதந்திரத்தால் அவன் புதிய வரலாறு படைக்க அது ஊக்கம் அளிக்க வேண்டும். இந்த முயற்சியின் திசையில் உலகம் விரைந்து செல்லாமல், நின்ற நிலையில் உழலும்போது அல்லது திசைமயங்கி நழுவும்போது, இதுவும் உலகின் இயற்கை என்று அவன் உணர்ந்து அகநிலையில் ஆற்றி இருக்கக் கல்வி உதவ வேண்டும். இன்றேல், அவன் அகநிலையினின்றும் பிறழ்ந்து, புரட்சிவெறி கொண்டுஅழிவான்.
பண்டைய இந்தியத் தத்துவங்கள், வரலாறு கடந்த அகநிலையை மனித வாழ்வின் முத்தி நிலையாக முன்வைக்கின்றன. புற உலக வரலாறு மனிதனின் வாழ்க்கைக்கு – பிறவிக்கு - எல்லை ஆகாது; வரலாறு என்பது ஒரு முடிவற்ற தொடுவானக் கானல் நீர்; இதனைத் தேடிப் புறஉலகில் அலைவதில் மனிதனுக்கு முத்தி இல்லை; புற உலக வரலாறு என்பது இத்தகைய தொடுவானக் கானல் நீர் என்பதை ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாகத் தன் அகநிலையில் கண்டு உணர்ந்து நிலைபெறுவதுதான் பிறவியின் பேறு என்பது பண்டைய இந்தியத் தத்துவங்களின் துணிந்த முடிபு.
இது கல்வியின் வழி அமையும் அகநிலைப் பண்பாடாகும். எனவே, கல்வி அகநிலையில் தொடங்கிப் புற உலகில் இயங்கி, மீண்டும் அகநிலையில் முடிவதாகும். இரா.க.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 84)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p8yjntuk/
தமிழ்“அகநிலைக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/p8yjntuk/APA
Oliyon Research. (2026). அகநிலைக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p8yjntuk/MLA
"அகநிலைக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/p8yjntuk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment