அடுக்குநிலை மொழியியல்
aṭukkunilai moḻiyiyal
சிட்னிலேம்பு என்பவரால் உருவாக்கப்பெற்ற புதிய வகை மொழியியற் கொள்கையாகும்.
சிட்னிலேம்பு என்பவரால் உருவாக்கப்பெற்ற புதிய வகை மொழியியற் கொள்கையாகும். மொழி என்பது மனிதன் தன் கருத்துகளைப் பிறகுடன் பரிமாறிக் கொள்வதற்குப் பயன்படுத்தும் ஒரு கருவியாகும். கருத்துகள் ஒலிகளின் வாயிலாகப் புலப்படுத்தப்படுகின்றன. எனவே, கருத்துகள், ஒலிகள் ஆகியவற்றைத் தொடர்புபடுத்தும் அமைப்புகளின் தொகுதியாக மொழியைக் கருதலாம். மொழி என்பது இத்தகைய தொடர்பு அமைப்புகள்தாம் என்பது, அடுக்குநிலை மொழியியலாளர்கள் கருத்து.
அமெரிக்காவில் புளும்பீல்டு தோற்றுவித்த கட்டமைப்பு மொழியியலின் ஒரு வகையாக இந்த அடுக்குநிலை மொழியியலைக் (Stratificational Linguistics) கருதலாம். இதனை உருவாக்கியவர் சிட்னி லேம்பு (Sydney Lamb) ஆவார். ஐரோப்பாவில் கோபன்கேசன் மொழியியற் கொள்கையை நாட்டிய இலூயி எம்சுலேங் என்பவரின் தாக்கம், அடுக்குநிலை மொழியியலில் அமைந்து விளங்கக் காணலாம்.
மொழியின் கூறுகள் ஒன்றோடொன்று தொடர்புபட்டுப் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன என்றும், இந்தத் தொடர்புகளின் அடிப்படையில்தான் மொழியில் அமைந்து கிடக்கும் பல்வேறு வகையான கூறுகளை விளக்கி வேறுபடுத்திக் காணமுடியும் என்றும் சிட்னிலேம்பு கருதுகிறாார். சொற்களைக் கோவைப்படுத்தினால் அது மொழியாகாது. எனவே, சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு மொழிக்கு இலக்கணம் படைக்க முடியாது. இச்சொற்களுக்கிடையேயான தொடர்புகள் மிகவும் இன்றியமையாதனவாகும்.
மொழியின் பணி, கருத்துகளையும் ஒலிகளையும் தொடர்புபடுத்துவது ஆகும். இந்த மொழியமைப்பில் பல்வேறு அடுக்குநிலைகள் உள்ளன என்று அடுக்குநிலை மொழியியலாளர் கருதுகின்றனர். இவற்றில் ஓர் அடுக்குநிலை, கருத்து அமைப்போடு தொடர்புடையது; இன்னொன்று, ஒலியமைப்போடு தொடர்புடையது. இந்த இரண்டு அடுக்குநிலைகளுக்கும் இடையில் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குநிலைகள் உள்ளனவாகக் கருதலாம். ஒவ்வோர் அடுக்கு நிலைக்கும் ஒரு தொடரமைப்பு உண்டு. தொடரமைப்பு மட்டுமல்லாமல் மற்ற வகை அமைப்புகளும் ஒவ்வோர் அடுக்குநிலையிலும் உண்டு. ஒரு மொழியில் குறைந்தது மூன்று அடுக்குநிலைகளாவது இருக்க வேண்டும் என்று அடுக்குநிலை மொழியியலாளர் கருதுகின்றனர்.
தமிழ் மொழியில் ‘கினம்’ என்றோ ‘க்னம்’ என்றோ சொல் இல்லை. முன்னது தமிழ்ச்சொல் அன்று என்றாலும், அதனை ஓரளவுக்குச் சொல் என்று ஏற்றுக் கொள்ளலாம். பின்னதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதற்குக் காரணம் மொழி முதல் மெய்யெழுத்தின் பின்னர் ஓர் உயிரெழுத்து வரவேண்டும் என்ற தமிழ் ஒலியியல் விதியாகும். இவை வடிவாக்கத் தொடர்புகள் என்று கூறப்படும். ஒவ்வொரு அடுக்கு நிலையிலும் உள்ள மொழிக் கூறுகளுக்கிடையேயான பிணைப்புத் தொடர்புகள், தொடராக்கத் தொடர்புகள் என்று கூறப்படும். கருத்துகளையும் ஒலிகளையும் மேலும் கீழும் இருப்பனவாகக் கருதுவோமேயானால், வடிவாக்கத் தொடர்புகள் செங்குத்தாகவும், தொடராக்கத் தொடர்புகள் கிடையாகவும் அமைந்து விளங்கக் காணலாம்.
உருபன்கள் ஒலிகளால் ஆனவை அல்ல; ஒலியன்களால் ஆனவை என்பது இக்கால மொழியியலாளர் கருத்து. ஒலியன் என்பது ஒரு கற்பிதம். இந்த ஒலியன் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் குறிப்பிட்டஒலி வடிவம் பெறும். ஒலியனுக்கும் ஒலிக்கும் இடையேயான தொடர்பு, வடிவாக்கத் தொடர்பு ஆகும். உருபன்களுக்கும் ஒலியன்களுக்கும் இடையேயான தொடர்பு சேர்க்கைத் தொடர்பு ஆகும். புளும்பீல்டு தம் நூலில் உருபன்கள் ஒலியன்களால் ஆனவை என்று கூறுகிறார். ஆனால் இந்த உருபன்களுக்கு மாற்றுவடிவங்கள் உண்டு என்னும் அவரே கூறுகிறார். ஒலியன்களால் ஆனவை மாற்றுருபுகள் தாம். உருபன்களுக்கும் மாற்றுருபுகளுக்கும் இடையேயான தொடர்பு வடிவாக்கத் தொடர்பு.
சிட்னிலேம்பின் நான்கு அடுக்குநிலை இலக்கணத்தில், குறிப்பிட விரும்பும் கருத்துகள், பொருளன்கள் ஆகும். இப்பொருளன்கள் பொருள் துகள்களால் ஆனவை. பொருள் துகள்கள் கிளவியன்கள் ஆகும். இக்கிளவியன்கள் கிளவித் துகள்களால் ஆனவை. கிளவித் துகள்கள் உருபன்கள் ஆகும். இவ்வுருபன்கள் உருபுத் துகள்களால் ஆனவை. உருபுத் துகள்கள் ஒலியன்கள் ஆகும். இவ்வொலியன்கள் ஒலித்துகள்களால் ஆனவை. ஒலித் துகள்கள்தாம் கேட்கும் ஒலியலைகள் ஆகும். ஒவ்வொரு அடுக்கு நிலையிலும் தனித்தனித் தொடராக்கத் தொடர்பு உண்டு, ஒலியன் தொடராக்கத்தில் எந்தெந்த ஒலியன்கள் இணைந்து செயல்படும் என்பதும், உருபன் தொடராக்கத்தில் எந்தெந்த உருபன்கள் இணைந்து செயல்படும் என்பதும், கிளவியன் தொடராக்கத்தில் எந்தெந்தக் கிளவியன்கள் இணைந்து செயல்படும் என்பதும் பொருளன் தொடராக்கத்தில் எந்தெந்தப் பொருளன்கள் இணைந்து செயல்படும் என்பதும் தெளிவுறும்.என்.கு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 265)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p8rdnscp/
தமிழ்“அடுக்குநிலை மொழியியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/p8rdnscp/APA
Oliyon Research. (2026). அடுக்குநிலை மொழியியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p8rdnscp/MLA
"அடுக்குநிலை மொழியியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/p8rdnscp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment