அல்லது விருப்புறுதி ஆவணம் என்பது ஒருவர் தம் மறைவிற்குப் பின், தம் சொத்தை என்ன செய்ய வேண்டுமென்பது பற்றிய தம் கருத்தைச் சட்டப்படி தெரிவித்தலாகும். உயில் (Will) எழுதியவர் உயிலிலோ உயிலிணைப்பிலோ (Codicil) முன்னர் எழுதப்பட்ட ஒர் ஆவணத்தைக் குறிப்பிட்டு, அது அவர்தம் எண்ணத்தினைத் தெரிவிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அத்தகைய உயில் உயிலிணைப்பு ஆவணம் எனப்படும். உயிலின் நோக்கம் ::1. உயிலினை எழுதியவர் தாம் இறந்தபின் தம் சொத்துகளைப் பங்கிடவும் தம் விருப்பத்தினை நிறைவேற்றுபவரை நியமிக்கவும்; ::2. உயில்வழிக் காப்பாளரை நியமிக்கவும்; ::3. அடுத்த வாரிசினை நியமிக்கும் அதிகாரத்தினைச் செயற்படுத்தவும்; ::4. முன்பு எழுதிய உயிலினைத் தள்ளுபடி செய்யவும் அல்லது மாற்றவும் செய்யலாம். உயிலின் தன்மைகள் ::1. உயில் எழுதியவரின் உள்எண்ணத்தினைச் சட்டப்படி அறிவிப்பதாக இருக்கவேண்டும். ::2. அவ்வறிவிப்பு உயில் எழுதியவரின் சொத்தினைப் பற்றியதாக இருக்கவேண்டும். ::3. அவ்வறிவிப்பு உயில் எழுதியவர் இறந்தபிறகு செயற்படுத்தப்பட வேண்டியதாக இருக்கவேண்டும். இம்மூன்று தேவைகளுள் ஒன்று குறைவுபட்டாலும் அந்த ஆவணத்தினை உயில் என்று கருத முடியாது. உயிலின் வகைகள் ::1. சிறப்புரிமை உயில் (Privileged Will) ::2. சிறப்புரிமையற்ற உயில் (Unprivileged Will) ::3. வாய்மொழி உயில் (Nuncupative or Oral Will) ::4. கைப்பட எழுதிய உயில் (Holograph Will) ::5. ஒத்திசைவு உயில் (Mutual Will) ::6. கூட்டு உயில் (Joint Will) ::7. நிபந்தனையில் அமைந்த உயில் (Conditional Will) ::8. செயலற்ற உயில் (Inofficious Will) 1. சிறப்புரிமை உயிலைப் போரில் ஈடுபட்டிருக்கும் பதினெட்டு வயதடைந்த முப்படை வீரர்கள் மட்டுமே எழுதமுடியும், இவ்வீரர் ஒருவர் தம் உயிலினை வாய்மொழியாகவோ எழுத்துவடிவிலோ அமைக்கலாம். வாய்மொழியாக இருக்கும்போது, அவர்தம் விருப்பத்தினைப் போதிய சாட்சிகளின் முன்னிலையில் தெரிவிக்க வேண்டும். அதனை ஏற்படுத்தியவர் அதனை உருவாக்கியதற்குப் பின்னர் ஒரு மாதத்துக்கு மேல் உயிருடன் இருந்தால் அதனைச் செயற்படுத்த முடியாது. இவ்வகை உயில் எழுத்து வடிவிலிருந்து, 1) உருவாக்கியவர் தாமே முழுவதும் எழுதியிருந்தால் அவர் அதில் கையொப்பமிட வேண்டியதில்லை; அது சான்றளிக்கப்படவும் வேண்டியதில்லை. 2) உயில் பகுதியளவோ முழுமையாகவோ வேறொருவரால் எழுதப்பட்டிருக்குமிடத்து உயிலை உருவாக்கியவர் கையெழுத்திட வேண்டும்; ஆனால் சான்றளிக்க வேண்டியதில்லை. உருவாக்கியவர் கையொப்பமிடாவிட்டால், அவ்வுயில் உருவாக்கியவரின் கட்டளையின்படி உருவாக்கப்பட்டது எனக் காட்டப்படல் வேண்டும் அல்லது அவர் அவ்வுயிலினைத் தம்முடையது என ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கவேண்டும். 3) வீரர் ஒருவர் உயில் எழுதுவதற்கான அறிவுரைகளை எழுதிக் கொடுத்திருந்து அதனை உருவாக்கிச் செயற்படுத்துமுன் இறந்துவிட்டால், அவ்வறிவுரைகளை உயிலாகக் கொள்ளலாம். 4) இவ்வீரர் உயிலை எழுத வாய்மொழி அறிவுரைகளை இரு சாட்சிகளின் முன்னிலையில் கொடுத்திருந்து, அவை அவர்தம் வாழ்நாளிலேயே எழுதப்பட்டிருந்து, உயிலினை உருவாக்கிச் செயற்படுத்துமுன் இறந்துவிட்டால் அவற்றை உயிலாகக் கொள்ளலாம். 2. சிறப்புரிமையற்ற உயில் முப்படை வீரர்களல்லாத யாரும் சட்டத்தின்படி உருவாக்கலாம். இவ்வுயில் எழுத்தால் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். வாய்மொழி உயில் செல்லாது. இவ்வகை உயிலினை எழுத்தால் உருவாக்கியவர் அல்லது அதனை வழங்கியவர் அதில் கையெழுத்திட்டிருக்கவேண்டும். கையெழுத்திட இயலாதவரானால் அதில் அவர் தம் பெருவிரல் இரேகையினைப் பதித்திருக்க வேண்டும். கையெழுத்திட முடியாதவர் என்பது கல்வி அறிவு இல்லாதவரையும் வயதினால் மூப்பு எய்தினவரையும் ஊனத்தினாலும் படித்தறிந்து கையெழுத்துப் போட முடியாதவரையும் குறிக்கும். மேலும், அவ்வாறு பெருவிரல் இரேகையைப் பதிப்பதில் அவர்தம் விரலினைப் பிடித்துப் பதித்துக் குறியிட மற்றவர்கள் உதவலாம். உயிலில் கையொப்பம் அல்லது பெருவிரல் குறி அல்லது அவருக்காகக் கையொப்பமிடுபவரின் கையொப்பம் உயிலின் தொடக்கத்திலோ இறுதியிலோ இருக்கலாம். ஆனால், அவ்வாவணம் உயிலெ- னக் கொண்டு செயற்படுத்தப்பட வேண்டுமென்ற எண்ணத்தோடு உருவாக்கப்பட்டது என்று தெளிவுறும் வகையில் கையெழுத்துப் போடப்பட்டிருக்க வேண்டும். உயிலினை எழுதியவரின் கையெழுத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாட்சிகள் சான்றளித்திருக்க வேண்டும். ஒவ்வொரு சாட்சியும் உயிலினை எழுதியவரின் கையெழுத்தினை அல்லது பெருவிரல் இரேகையினைக் கண்டிருத்தல் வேண்டும்; அல்லது அவர்தம் ஆணையின்பேரில் அவர்தம் முன்னிலையில் அவருக்காக வேறொருவர் உயிலில் கையெழுத்திட்டதை ஒவ்வொரு சாட்சியும் கண்டிருத்தல் வேண்டும்; அல்லது உயில் முன்னரே கையொப்பமிடப்பட்டிருத்தால் அக்கையொப்பம் அல்லது இரேகைப்பதிப்பு தம்முடையதுதான் என்றோ தமக்காக வேறொருவர் இட்ட கையெழுத்து என்றோ ஒவ்வொரு சாட்சியும் உயிலினை எழுதியவரின் சொந்த ஏற்பளிப்பினைப் பெற்றிருக்க வேண்டும். இரு சாட்சிகளும் ஒரே சமயத்தில் பார்த்திருக்க வேண்டியதில்லை; ஒரு சாட்சியின் முன்னிலையில் கையொப்பமிட்டு, மற்றொரு சாட்சியினிடம் தம்முடைய கையொப்பத்தினை விருப்பாவணம் அளிப்பவர் ஒப்புக்கொண்டிருக்கலாம். ஒவ்வொரு சாட்சியும் விருப்பாவணம் வழங்கியவரின் முன்னிலையில் உயிலில் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும். வேறெந்தத் தனிப்பட்ட சான்றளிப்புகளும் வேண்டியதில்லை. 3. வாய்மொழி உயில் என்பது சொத்திற்குரியவர் அல்லது ஆவணத்தைத் தந்தவர் போதிய எண்ணிக்கையுள்ள சாட்சிகளின் முன்னிலையில், சொத்தினைப் பற்றிய எண்ணத்தைத் தெரிவித்தல் ஆகும். இந்தியாவில் இந்திய வாரிசுரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் வாய்மொழி உயில் எழுதமுடியாது. இசுலாமியர்களின் சட்டப்படி, ஓர் இசுலாமியர் வாய்மொழி உயில் அமைக்க இயலும், வாய்மொழி உயிலினைச் சான்றுகாட்டி நிலைநிறுத்தப் பொறுப்பு மிகவும் தேவைப்படும். 4. கைப்பட எழுதிய உயில் என்பது முழுவதும் சொத்துக்குரியவர் தம் கையினாலேயே எழுதப்படும் சிறப்புரிமையற்ற உயில் ஆகும். 5. ஒத்திசைவு உயில் என்பது இருவர் உயில் எழுத உடன்பட்டு, ஒருவருக்கு ஒருவர் தம் சொத்தின்பேரில் மற்றவருக்கு உரிமை ஏற்படுத்தி எழுதிக் கொடுக்கும் ஆவணமாகும். இவ்வகை இனக்கூறுகள் ஒன்றோடொன்று ஒத்ததாக ஒரே நாளில் எழுதப்பட்ட இரு உயில்களாகும். இவற்றின் தன்மையாதெனில், வாழ்ந்துக்கொண்டிருக்கும் இருவருள் ஒருவர் மற்றவருக்குத் தெரிவித்துவிட்டு ஒத்திசைவு உயிலினை மாற்றிவிடலாம். இருவருள் ஒருவர் இறந்த பின்னர், உயிரோடிருப்பவர் இறந்தவரின் உயில் வழியாகப் பயனையடைந்த பின்னர், உயில்களை மாற்றிவிட இயலாது. ஒத்திசைவு உயில்கள் எழுதிய இருவருள் ஒருவர் இறந்த பின்னர், அவ்வுயில்கள் மூலமாக இறந்தவரின் சொத்திலிருந்து உயிரோடிருக்கும் மற்றவர் பயனடைந்திருக்க வேண்டும். உயிலினை உருவாக்குகிறவர்கள் அவற்றினை மாற்றக்கூடாது என்ற உடன்பாட்டின் பேரில்தான் ஒத்திசைவு உயில்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும். இவ்விரு கட்டுப்பாடுகளும் ஒரே சமயத்தில் நிறைவேற்றப்பட்டால், ஒத்திசைவு உயிலினை மாற்றியமைக்கவியலாது. எனினும், ஒரு புதிய உயிலினை ஏற்படுத்துவதன்மூலம், உயிருடனிருக்கிற உரிமையாளர் முன்பு ஏற்படுத்திய உடன்படிக்கையினை மீறி ஒத்திசைவு உயிலினை மாற்றியமைத்தால், உயிருடனிருக்கிற உரிமையாளரின் சொந்தச் சொத்துகள் வரையில்தான் புதிய உயிலுக்கு உயில் மெய்ப்பிதழ் அனுமதிக்கப்படும். 6. கூட்டு உயில் என்பது ஒருவருக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் ஒரே ஆவணத்தை அனைவரும் இணைந்து உருவாக்குவதன் மூலம், தங்கள் தனிச் சொத்துகளுக்கோ பொதுச் சொத்துகளுக்கோ வகை செய்து கொள்ளுவதாகும். இவ்வகை உயில் மூலம் ஒருவருக்கு மேற்பட்டோர் ஒரே ஆவணத்தின் வழித் தம் விருப்பத்தைச் செயற்படுத்த இயலும். இதனோடு உரிமையுடைய ஒவ்வொருவருக்கும் இதனை நீக்கவோ மாற்றியமைக்கவோ இயலும். இரு இந்துக்கள் சேர்ந்து ஒரு கூட்டு உயிலினை ஏற்படுத்த முடியும். ஆனால், இந்தக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட்டுக் குடும்பச் சொத்தில் தம் பங்கினைப் பொறுத்த மட்டில் ஓர் உயிலினை எழுத முடியாது. குடும்பப் பங்குரிமையாளர் அனைவராலும் உடன்பட்டு எழுதப்பட்ட உயிலினை ஒரு குடும்ப ஏற்பாடாகக் கொண்டு செயற்படுத்தலாம். 7. நிபந்தனையில் அமைந்த உயில் உறுதியற்ற ‘குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியினை’ நிபந்தனையாகக் கொண்டு எழுதப்படும். அந்திகழ்ச்சி நடைபெறாவிட்டால் அவ்வுயிலிலைச் செயற்படுத்த முடியாது. செயலற்ற உயில் என்பது உயிலினை உருவாக்கியவர் இயற்கையான அன்பிற்கும் நீதி நெறிக் கட- மைக்கும் ஒவ்வாத விதத்தில் உருவாக்கியதாகும். இது பணிக்கடனற்ற உயில் எனவும் கூறப் பெறும். உயில் எழுதத் தகுதி 18 வயதிற்கு மேற்பட்ட உறுதியான உள்ளம் உடைய எவரும் உயில்வழித் தன் சொத்துகளுக்கு வழி செய்யலாம், எழுதியவர் திடசித்தமும் நினைவு ஆற்றலும் புரிந்துகொள்ளும் ஆற்றலும் உடையவராக இருக்க வேண்டும். நீதிமன்றத்தால் காப்பாளர் நியமிக்கப்பெற்றவர் 21 வயதினை அடைந்த பின்னரே உயிலினை எழுதும் தகுதியினைப் பெறுகிறார். இசுலாமியர் ஒருவர் தம் நிகரச் சொத்துகளில் ⅓ பங்கை மட்டுமே உயில் எழுதலாம். அவர் உயில்வழிக் கொடையாகத் தம் வாரிசுகளுக்குக் கொடுக்க இயலாது. உயில் வழியாக ½ பங்கிற்கு மிகுதியாக் கொடுத்தாலும், கொடையாக வாரிசுகளுக்கே கொடுத்தாலும் அவர் இறந்தபின் ஏனைய வாரிசுகள் இசைவளிக்காவிட்டால் அவ்வுயில் செல்லுபடியாகாது. திருமணமான ஒரு பெண் தன் வாழ்நாளில் கணவனின் விருப்பத்தைப் பெறாமல் எந்தச் சொத்தினையும் உயில்வழிக் கொடுக்கத் தகுதியுடையவராவர். பித்துநிலையர் பித்துத் தெளிந்த இடைவேளையில் உயிலை ஏற்படுத்தலாம். குடிபோதையினாலோ நோயின் கொடுமையினாலோ வயதின் முதிர்ச்சியினாலோ தாம் செய்வது இன்னதென்று அறியாத மனநிலையிலிருக்கும் போது ஒருவர் உயிலை ஏற்படுத்த முடியாது. உயில் எழுதத் தகுதியற்றவர் 18 வயது நிரம்பாதவர் (வயது வராதவர்) உயில் வழியாகத் தம் சொத்தினை வகுத்தமைக்கத் தகுதியற்றவர். நீதிமன்றத்தால் காப்பாளர் நியமிக்கப்பெற்றவர் 21 வயதை அடைந்தபின்னரே வயது வந்தவராகக் கருதப்படுவார். காப்பாளர் மற்றும் காப்பிலுள்ளோர் சட்டத்தின் கீழ்வரும் ஒரு காப்பாளர், நீதிமன்றத்தின் இசையின்றித் தம் சொத்துகளை உயில்வழியாக வகுத்தமைக்கத் தகுதி பெற்றவரல்லர். உயிலின் பொருள் விளக்கம் உயிலை எழுதுகின்றவர் தம் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்திலோ சாவினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நேரத்திலோதான் உயில் எழுத முற்படுவார். முன்எச்சரிக்கையாக உயிலினை எழுதி வைத்திருப்பவர் மிகச் சிலரே. தம் பரம்பரைச் சொத்துகள் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியில் சென்றுவிடக் கூடாது என்ற எண்ணம் உடையவர்கள், சாகும் நிலையில் உயில் எழுதுவதற்கு ஒரு சட்ட வல்லுநரைத் தேடிச் செல்வது இயலாது. விருப்பாவணமளித்தவர் தமக்குத் தெரிந்த வழக்கத்திலிருக்கும் சொற்களைக் கொண்டு உயிலினை உருவாக்கியிருப்பார். அவ்வாறு உருவாக்கப்பட்ட உயிலின் பொருள் விளக்கத்தினை நன்கறிந்த பின்னர், உயிலில் கண்டுள்ளபடி சொத்துகளைப் பிரிப்பது மிகவும் சிறப்புடையது ஆகும். உயில் எழுதுவதற்குக் குறிப்பிட்ட அல்லது தனிப்பட்ட சொற்களைத் தாம் பயன்படுத்த வேண்டும் என்னும் வரையறை இல்லை. எந்த மொழியிலும் எந்தப் படிவத்திலும் உருவாக்கலாம். உயிலினை உருவாக்கச் சட்ட நுணுக்கச் சொற்களையும் கலை நுட்பமான சொற்களையும்தாம் பயன்படுத்த வேண்டுமென்றில்லை. உயிலினை உருவாக்கியவரின் எண்ணங்களை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ அறிய இயலாத பொழுது, பொருள் விளக்க விதிகளை நீதிமன்றம் என்ன செய்யவேண்டுமென்று சுட்டிக்காட்டும். உருவாக்கியவரின் எண்ணங்கள் வேறாக இருந்தபோதிலும், குறிப்பிட்ட சூழ்நிலையில் சட்டதிட்டங்கள் செயற்படும். உயிலில் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ தெரிவித்திருக்கும் எண்ணங்களை மட்டுமே நீதிமன்றம் செயற்படுத்தவியலும். விருப்பாவணமளித்தவரின் எண்ணங்களையறிந்த பின்னர், உயிலில் பயன்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்டு, யார் யாருக்கு என்னென்ன சொத்துகளைக் கொடுக்க விரும்பினார் எனத் தெளிதல் வேண்டும். உயிலின் சொற்களைக் கொண்டு விருப்பாவணமளித்தவரின் குடும்பச் சூழ்நிலையையும் உறவினர்களையும் சொத்துகளின் மதிப்பீட்டினையும் உயிலினை எழுதியபோது அவர் மனத்திற்கொண்ட கருத்துகளையும் நீதிமன்றம் தெரிந்துகொள்ள வேண்டும். பொருள் விளக்கங் காணும்போது உயில் வழியாகப் பயனடைவோரைப் பற்றியாவது சொத்துகளைப் பற்றியாவது ஐயம் ஏற்படின், புறம்பான சாட்சியங்களை ஏற்றுக் கொள்ளலாம். 1) உயிலில் குறிப்பிட்ட சொற்களை அறிந்து கொள்வதற்குப் புறம்பான சாட்சியங்களை ஏற்றுக் கொள்ளலாம். 2) கொடுக்கப்பட்ட விவரங்கள் சரியாகவிருந்து, பெயர் சரியில்லை என்றால் பெயரைத் தள்ளிவிட வேண்டும். 3) ஒரு சாராரை அல்லது வகுப்பினரை இத்தனை பேர் எனக் குறிப்பிட்டு அவர்களுக்குக் கொடையளிக்கப்பட்டிருந்த உயில் எழுதிய நாளன்று அவர்கள் எண்ணிக்கையில் குறைந்திருந்தால், நீதிமன்றம் எண்ணிக்கையினைத் தவறான யூகமெனக் கொண்டு, உயில் எழுதிய நாளன்று உயிரோடிருப்பவர்கள் கொடையினைப் பெறத் தகுதி பெற்றவர் கண் என முடிவெடுக்கும். 4) உயிலினைப் பொருள் கொள்ள மிகத் தேவையான சில சொற்கள் விடுபட்டதால் ஏற்படும் ஐயப்பாடுகளைக் களைவதற்கு அச்சொற்களைப் புகுத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. 5) விருப்பாவணமளித்தவர் உயில்வழிக் கொடையாகக் கொடுக்க எண்ணிய பொருளினை, உயிலில் அவர் கொடுத்துள்ள விவரங்களைக் கொண்டு இயன்ற அளவிற்குக் கண்டு பிடிக்க முடியாதபோது, அவர் கொடுத்த ஒவ்வாத வியரங்களைத் தள்ளி விட்டு, உயில்வழிக் கொடைவினைக் கொடுத்து விட வேண்டும். 6) விருப்பாவணமளித்தவருக்குப் பல சொத்துகள் இருந்து, அவர் உயில்வழிக் கொடையாகக் கொடுக்க எண்ணி விவரித்த பெரும்பான்மையான விவரங்கள் பொருந்துகிற சொத்தினை மட்டுமே உயில்வழிக் கொடையாகக் கொடுத்து, ஏனைய சொத்துகளை அதிலிருந்து விலக்கிவிட வேண்டும். 7) உயிலினைப் பொருள் கொள்ள விழையுங்கால், சில சமயம் பொருள் மயக்கம் அல்லது ஐயப்பாடுகள் தோன்றலாம். பொருள் மயக்கம் சொத்துகளையோ உயில்வழி உரிமையாளரையோ குறித்ததாக இருக்கலாம். உயிலினைப் படித்துப் பார்க்கும்போது எவ்வித ஐயமுமின்றித் தெளிவாகத் தோன்றும். ஆனால், அதனை நிறைவேற்றச் செல்லும்பொழுது அதில் பொருள் மயக்கம் அல்லது ஐயப்பாடு தோன்றும். இதனையே உட்கிடைப் பொருள் மயக்கம் அல்லது மறைமுக ஐயப்பாடு என்பர். அப்போது நீதிமன்றம் புறம்பான சாட்சியங்களை ஏற்றுக்கொண்டு உயிலினை நிறைவேற்ற விழைய வேண்டும். விருப்பாவணமளித்தவர் உயிலில் இடைவெளி விட்டிருந்தால் அதனைச் சாட்சிகளின் விளக்கத்தைக் கொண்டு நிரப்ப முடியாது. ஆனால், உயிலின் பகுதியில் கூறப்பட்டவற்றைக் கொண்டு இடைவெளியினை நிரப்பக்கூடுமானால், அதற்கு மட்டும் வாய்மொழிச் சாட்சியங்களை அனுமதிக்கலாம். 8) உயிலுக்குப் பொருள் விளக்கம் காணும்போது உயில் முழுவதையும் படித்துச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களுக்குப் பொருள் கண்டு, விருப்பாவணமளித்தவரின் உள் நோக்கத்தினை உணர்ந்து, சட்டம் அனுமதிக்கும் வரை, இயன்றவரை நிறைவேற்ற வேண்டும். உயிலின் பொதுவான நோக்கமென்னவென்று அறியவேண்டும். 9) உயிலினை முழுமையாகப் படிக்கும்போது இருபொருள் கொடுக்குமானால், இரண்டில் மிக நியாயமானதெனக் கருதப்படும் பொருளையே மேற்கொள்ளவேண்டும். அப்பொருள் உயிலைச் செல்லுபடியாக்கத் துணையாக உள்ள இயல்பான முடிவாக விருத்தல் வேண்டும். 10) உயிலில் கூறப்பட்டுள்ள சொற்களில் ஒன்றையும் தள்ளிவிடாமல் அவற்றிற்கான இயல்பான பொருள்களைக் கொண்டு, உயிலுக்குப் பொருள் விளக்கம் காணவேண்டும். பொருள் முன்னுக்குப்பின் முரணானது என்று கண்டாலொழிய, உயிலின் ஒவ்வொரு பகுதியையும் செயற்படுத்தாமல் இருக்கக் கூடாது. 11) உயிலின் ஒரு பகுதியில் தெளிவான குறிப்பான பொருளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் வேறு பகுதியில் வருமானால் அவை அதே பொருளில் பயன்படுத்தப்பட்டதாகக் கொள்ள வேண்டும். 12) உயில் முழுவதையும் படிப்பதன் மூலம் விருப்பாவணமளித்தவரின் நோக்கத்தினை அறிய முடியும். 13) ஓர் உயிலில் ஒரே சொத்தினை இருமுறை இருவருக்குக் கொடுத்திருந்து, இரு கொடைகளும் ஒன்றோடன்று இணைத்து செல்லாமல் முரண்பட்டிருந்து முடிவெடுக்கவியலாதபோது, கடைசியாகக் கூறப்பட்ட சொற்களே விருப்பாவணமளித்தவரின் கடைசி விருப்பமாக மேலோங்கி நிற்கும். 14) உயிலில் கொடைப் பொருள் யாதென்று கூறப்படாவிட்டால் தெளிவின்மையால் உயில் செல்லுபடியாகாது. 15) உயிலில் கூறப்பட்ட கொடைச் சொத்துகள் என்பவை உயிலினை உருவாக்கியவர் இறந்தபோது அவருக்குச் சொந்தமாக இருந்த சொத்துகளையே குறிக்கும். ஓர் உயிலில் இரண்டு தேதிகள் இருக்குமானால், உயிலினை எழுதியவர் எந்தத் தேதியிலிருந்து உயில் செயற்படவேண்டுமென்று விரும்பினாரோ அந்தந் தேதியினின்றும் செயற்படும். 16) உயிலில் குறிப்பிட்டுள்ள ‘உயிரோடிக்கிறவர்’ என்பது உயில் உருவாக்கப்பட்ட நாளன்று உயிரோடிருக்கிறவர்களையே உயில் குறிக்கும்; உயிலினை எழுதியவர் இறந்த நாளன்று உயிரோடிருப்பவர்களையன்று. பதிலாள் நியமன அதிகாரம் பெற்ற கொடை பெறுநரின் உயில் ஒரு சொத்தின் பேரில் எந்தவித உரிமையுமில்லாத ஒருவருக்கு, அச்சொத்தினை அவர் விரும்பிய யாருக்கு வேண்டுமானாலும் பிரித்துக் கொடுக்கும் அதிகாரத்தினைக் கொடுத்தலே பதிலாள் நியமன அதிகாரம். பதிலாள் நியமன அதிகாரம் இருவகைப்படும். ஒன்று பொதுவான அதிகாரம்; மற்றது சிறப்பு அதிகாரம். உயிலினை நீக்குதல் ஓர் உயிலினை உருவாக்கிய பின்னர் அதனை மாற்றியமைக்கவியலும். இத்தன்மையே உயிலினை வேறு ஆவணங்களின்று வேறுபடுத்திக் காட்டுகிறது. ஓர் உயில் உருவாக்கப்பட்டவுடன் ஏற்படுத்தியவரின் வாழ்நாளில் அது செயற்படுவதில்லை; அவர் இறந்த பின்னர்த்தான் செயற்படுகிறது. அதனால், ஏற்படுத்தியவரின் வாழ்நாளில் ஓர் உயில் நிலையற்ற அல்லது மாற்றியமைக்கும் தன்மையைக் கொண்டது. உயிலினை ஏற்படுத்தியவர் தம் வாழ்நாளில் எப்போது வேண்டுமானாலும் அதை மாற்றியமைக்கலாம். உயிலினை இருவிதத்தில் மாற்றியமைக்கலாம். 1. சட்டத்தின் நடைமுறையில் விலக்குதல்; 2. ஆவணத்தில் ஈடுபாடு உடையோர் செயல்முறையில் விலக்குதல். இரண்டாம் வகை இரு உட்பிரிவுகளைக் கொண்டது. (1) புதியதோர் உயில்வழி விலக்குதல்; (2) அழித்தலின் மூலம் விலக்குதல். ஒருவரால் உருவாக்கப்பட்ட எவ்வகை உயிலும் சிறப்புரிமை உயிலானாலும் சிறப்புரிமையற்ற உயிலானாலும் எழுதிவைத்தவருக்குத் திருமணம் ஆனவுடன் அழிந்துவிடும்; அவருக்கு மறுமணம் ஆனாலும் அவ்வுயில் அழிந்துவிடும். புதியதோர் உயில்வழிப் பழைய உயிலை நீக்குதல் பின்னர் உருவாக்கும் புதிய உயில் மூலமாக முன்னர் உருவாக்கிய உயிலினை மாற்றியமைக்கலாம்; அல்லது செயற்படாமல் அழிக்கலாம். புதிய உயில் பழைய உயிலினை மாற்றியமைக்கிறது என்பது தெளிவாகவும் குறிப்பிட்டும் காட்டப்பட்டிருத்தல் வேண்டும். அழித்தலின் மூலம் உயிலை நீக்குதல் உயிலினை அழிக்கும் எண்ணத்தோடு அதனை உருவாக்கியவரோ அவர் ஆணையின்படி அவர் முன்னிலையில் வேறொருவரோ உயிலினைத் தீயிட்டுக் கொளுத்தினாலோ கிழித்தாலோ அவ்வுயில் அழிந்துவிடும். தீயிட்டுக் கொளுத்துவது என்றால் உயில் முழுவதும் எரிந்து விட வேண்டுமென்பதில்லை. உண்மையிலேயே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது என்பதற்காக ஓரளவு எரிந்திருக்க வேண்டும். உயிலினை உருவாக்கியவர் அதனை அழிக்கும் நோக்கத்தோடு கையெழுத்தையோ சாட்சிகளின் கையெழுத்தையோ வெட்டி எடுத்தால் உயில் முழுவதும் அழிக்கப்பட்டதாகக் கருதவேண்டும். வெட்டுதலும் கிழித்தலுக்குச் சமமாகும். உயிலினை அழிக்கும் நோக்கத்தோடு சிறிது கிழித்தாலும் போதும், உயிலினை ஏற்படுத்தியவரின் உத்தரவுப்படி மூன்றாமவரும் அவ்வாறு செய்யலாம். ஆனால், அவர் முன்னிலையில் செயற்பட வேண்டும். உயிலின் குறுக்கே கோடுகள் இட்டு அதனை நீக்குதல் மூலம் உயிலினை அழிக்க முடியாது. உயிலினைப் புதுப்பித்தல் நீக்கம் செய்யப்பட்ட உயிலினை மறுபடியும் உருவாக்கி அதில் விருப்பாவணமளித்தவர் கையொப்பமிட்டு, சாட்சிகள் சான்றொப்பமிடுவதன் மூலம் புதுப்பிக்கலாம். குறிப்பிட்ட வழிவழி வழக்கப்படிதான் மறு உருவாக்கம் இயலும். உயிலினை அளித்தவர் தம் கையொப்பத்தை வெட்டியெடுத்துச் சிதைத்த பின்னர், அக்கையெழுத்தினை அதே இடத்தில் ஒட்டி வைப்பதன் மூலம் மீண்டும் அவ்வுயிலினைப் புதுப்பிக்க முடியாது. நீக்கம் செய்த உயிலினைப் புதுப்பிக்கும் எண்ணத்தை ஓர் உயிலிணைப்பினை உருவாக்குவதன் மூலம் தெரிவித்தால் அதுவே புதுப்பித்தல் என்று கூறப்படுகிறது. உயிலிணைப்பு என்பது உயிலின் முடிவுகளை விளக்குவதற்காகவோ மாற்றுவதற்காகவோ மேலும் சேர்ப்பதற்காகவோ குறைப்பதற்காகவோ உயிலுடன் இணைக்கப்படும் பிற்சேர்க்கையாகும். இது உயிலின் பகுதியாகவே கருதப்படும். சென்னை மாநகரில் உள்ளவர்கள் சென்னை நகரத்தில் உள்ள சொத்துகளைக் குறித்தும் இம்மாநகரத்தில் இறந்தவர்களைக் குறித்தும் உள்ள உயில்களை நீதிமன்றம் மூலமாக உறுதிசெய்ய வேண்டிய இன்றியமையாமை உண்டு. அவ்வாறு உறுதி செய்ய இயலவில்லையெனில், உயிலுக்கு எந்தவித மதிப்பும் இல்லாமல் போய்விடும். இதற்கான மனுவைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயிலில் கூறப்பட்டுள்ள சொத்துகளை நிருவகிக்கச் செயலர்களை நியமிப்பது வழக்கம். இவர்கள் காப்பாளர்களாக இருந்து இறந்தவர்களின் சொத்துகளை நிருவகித்து, உயிலின்படி உரியவர்களுக்குச் சொத்துகளைச் சேர்க்க வேண்டும். இதற்கான மேற்பார்வை நீதிமன்றத்தாரிடம் உண்டு. இறந்த ஒரு மனிதருக்கு வெளியாரிடமிருந்து பணமோ பணமதிப்புக் கொண்ட பங்குகளோ வரவேண்டி இருந்தால் அவற்றிற்கும் பிற அனைத்துக் காப்புகளுக்கும் இறந்தவரின் வாரிசுகள் வாரிசுச் சான்றிதழ் பெற்றால்தான் அவற்றைப் பெறமுடியும். இதற்கான வழிமுறைகளை இத்தச் சட்டம் வகுத்துக் கொடுத்துள்ளது. உயில் ஏதும் எழுதவில்லை என்றால்தான் இதுபோன்ற சான்றிதழ் பெறலாம். அதுவும் வரவேண்டிய கடன் தொகைகளுக்கும் பிற காப்புப் பணங்களுக்குந்தான் பெறமுடியும். இந்த வாரிசுச் சான்றிதழ்கள் பெறவேண்டுமாயின் மாநகரத்திலுள்ள உயர்நீதி மன்றங்களில் விண்ணப்பம் கொடுத்து, அவற்றிற்கான ஆணைகளைப் பெற வேண்டும்.