சிம்மண்டு கூட்டியம்
cimmaṇṭu kūṭṭiyam
மகப்பேற்றிற்குப் பிறகு மிகு குருதி இழப்பால் உண்டாகும் நோயை, சிம்மண்டு என்பார் 1914 இல் விவரித்தார்.
மகப்பேற்றிற்குப் பிறகு மிகு குருதி இழப்பால் உண்டாகும் நோயை, சிம்மண்டு என்பார் 1914 இல் விவரித்தார். எனவே, இவர் பெயராலேயே இது சிம்மண்டு கூட்டியம் எனப்படுகிறது. மிகு குருதி இழப்பால், பிட்யூட்டரி நாளங்களில் அடைப்புகள் உண்டாகி, செயலிழப்பு ஏற்படுகிறது என இவர் கருதினார். ஆனால், இப்போது இந்நோய்க்கு, பிட்யூட்டரிச் சுரப்பியில் ஏற்படும் செயலிழப்பே காரணம் எனத் தெரிகிறது. இந்நோயால், பிட்யூட்டரி மிகவும் சிறுத்து எடை குறைந்து விடுகிறது. புறணி வளர்ப்பு ஹார்மோன் இல்லாமையால், முன் பிட்யூட்டரி வளர்ச்சி குன்றி, இயல் அளவில் பாதியாகிறது. இதே போன்று முன் பிட்யூட்டரியில் புறணி வளர்ப்பு ஹார்மோன் இல்லாமையால், அண்ணீரகச் சுரப்பிகளின் புறணி வளர்ச்சியும் குறைகிறது.
செனிப்பக வளர்ப்பு ஹார்மோன் சுரக்கப்படாமையால் சினையகங்கள் வளர்ச்சி குன்றுகின்றன. ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரோன் ஆகியன உண்டாவதில்லை. கருப்பையின் உடல், கழுத்து, யோனி, உபத்தம் ஆகியவையும் வளர்வதில்லை. யோனியின் மேலணித் திசுவில் கிளைக்கோஜன் மறைந்து விடுகிறது. டோடர்லின் பாக்டீரியா வளராமையால், யோனி காரத் தன்மை பெறுகிறது.
இந்நோயின் முதல் அறிகுறி பால் சுரப்பின்மை, மார்பகம் வற்றி விரைவில் சுருங்கி விடுதல் ஆகியவை. நோய் முற்றிய நிலையில் குறை சர்க்கரைக் குருதி உண்டாகிறது. உடல் தளர்ந்து. நரம்புச் சோர்வு ஏற்படுகிறது. நோயினின்று மீளப் பல ஆண்டுகள் ஆகும்.
தீவிரம் குறைந்திருந்தால், நீண்ட இடைவெளியில் மாத விலக்கு ஏற்படும். தீவிர நோயில் சூதகம் தடைப்படும். கருப்பையும், புற இனவுறுப்புகளும் சிறுத்து விடும். பிறப்புறுப்பு, அக்குள் மயிர் உதிர்ந்து விடும். கலவி விருப்பு அறவே ஒழிந்து விடுகிறது. பொதுவாக, குருதி அழுத்தம் குறைகிறது. தைராய்டு வளர்ச்சிக் குறைவால், நோயாளியால் குளிரைத் தாங்க முடிவதில்லை. அடிப்படை ஆக்கச் சிதை வீதம் 25% ஆகி, குருதிக் கொலஸ்ட்ரால் மிகுகிறது. ஒரு சிலரில் சேத்தும வீக்கம் (myxoedema) ஏற்படுகிறது. அண்ணீரகச் சுரப்பிச் செயலிழப்பால், சிறுநீரில் 17 கீட்டோ ஸ்டீராய்டுகள் இருப்பதில்லை. குருதிச் சோகையுடன், இயோசினோஃபிலியாவும் ஏற்படுகிறது. நாளடைவில், நோயாளி எடையும், வலிமையும் குறைந்து காணப்படுவர்.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 245)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p3musq5a/
தமிழ்“சிம்மண்டு கூட்டியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/p3musq5a/APA
Oliyon Research. (2026). சிம்மண்டு கூட்டியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p3musq5a/MLA
"சிம்மண்டு கூட்டியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/p3musq5a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment