ஒவ்வொரு குற்றத்திற்கும் இன்னின்ன அளவு தண்டனை விதிக்க வேண்டுமென்று இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code) கூறுகிறது. சிறு குற்றங்களுக்குக் குறைந்த அளவு தண்டனையும் கொடுங் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனையும் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளன. மரண தண்டனை ஆயுள் தண்டனை, ஓராண்டிற்கு மிகுதியாகச் சிறைத்தண்டனை ஆகியவை பெருங்குற்றத்திற்குரிய தண்டனைகளாகும். குறைந்த தண்டனையுடைய குற்றங்கள் பற்றிய வழக்குகள் “சிறு குற்ற வழக்குகள்” (Summon Cases) எனப்படும். ஒரு நீதிமன்றத்தின் முன் நேரில் வந்து சாட்சியம் கூறுமாறோ குற்ற முறையீட்டிற்குப் பதிலுரை கூறுமாறோ நீதிமன்றத்தால் ஒருவருக்கு இடப்படும் ஆணை “அழைப்பாணை” (Summons) எனப்படும். ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தின்முன் கொண்டு வந்து நிறுத்தும்படி நீதிமன்றம் ஆணையிடுவது உண்டு. அந்த ஆணை காவல் அதிகாரிக்கோ வேறு பொது அதிகாரிக்கோ இடப்படலாம். இந்த ஆணைக்குப் பெயர் ‘பிடியாணை’ (Warrant) என்பதாகும். ஒருவரைப் பிடித்துக் கொண்டு வரும்படி இடப்படும் ஆணையாதலின் இது ‘பிடியாணை’ எனப்படும். பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்பும் முறை: வழக்கு நிறுவப்பட்டு எல்லா வகையிலும் சரியாக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு – அதாவது காலவரையறைக்குட்பட்டுத் தகுந்த நீதிமன்றக் கட்டணத்தைச் (Court Fees) செலுத்துதல், நடப்புச் சட்டப்படி அமைதல் போன்றவற்றிற்குப்பின் பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்பப்படும். அதற்கிணங்கப் பிரதிவாதி நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் வரவும், வந்து வழக்குரையில் கூறப்பட்டவற்றிற்கு மாற்றம் கொடுக்கவும் வேண்டும். இந்த அழைப்பாணை நீதிமன்றத்தில் அதற்கென்று அமர்த்தப்பட்டுள்ள அலுவலர் மூலமோ பதிவு அஞ்சல் மூலமோ வழக்கில் உள்ளபடி, பிரதிவாதிக்குச் சார்பு செய்யப்படும். அந்த அழைப்பாணையோடு வழக்குரையின் படியும் அனுப்பப்படும். அந்த அழைப்பாணைப்படி பிரதிவாதி நீதிமன்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து வழக்குக்கு மாற்றந்தர வேண்டும்; அல்லது அவருக்குப் பதிலாக அவரால் நியமிக்கப்பட்டு வழக்குத் தொடர்பாகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலுரைக்கத் தகுந்தவர் வந்து பதில் கூறவேண்டும். வழக்குத் தொடர்பான அழைப்பாணை பிரதிவாதிக்குச் சார்பு செய்யப்பட்டிருந்து, அதுபற்றிய சான்றுக் குறிப்பு வழக்கேட்டில் (Bundle) இருந்தால், பிரதிவாதியோ அவரது பேராளரோ அவரது வழக்குரைஞரோ நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் இருக்கத் தவறினால் நீதிமன்றம், பிரதிவாதியில்லாமல் வாதியை மட்டும் விசாரித்து அவருடைய வாக்குமூலத்தின் மீது வாதிக்குச் சார்பான தீர்ப்பு வழங்கலாம். அழைப்பாணை சாதாரணமாய்ப் பிரதிவாதிக்குச் சார்வு செய்யப்படவேண்டும். பிரதிவாதியில்லாதபோது அவருடைய முகவரிடம் சார்பு செய்தால் போதுமானது ஆகும். அழைப்பாணை பற்றிய செய்திகள் 1973–ஆம் ஆண்டு குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் ஆறாம் பகுதியில் 61 முதல் 69 வரையில் உள்ள பிரிவுகளில் கூறப்பட்டுள்ளன. அழைப்பாணையின் வடிவம்: குற்ற விசாரணை முறைச் சட்டத்தின்படி ஒரு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஒவ்வோர் அழைப்பாணையும் எழுத்து வடிவினதாக, இரட்டைப் படிகளில், அந்த நீதிமன்றத்தில் தலைமை வகிக்கும் அலுவலராலோ உயர் நீதிமன்றம் அவ்வப்போது விதி மூலமாக உத்திரவிடலாகும் வேறு அலுவலராலோ கையொப்பமிடப்பட்டு, அந்நீதிமன்றத்தில் முத்திரையைக் கொண்டதாக இருக்க வேண்டும். அழைப்பாணை சார்வு செய்தல்: ஒவ்வோர் அழைப்பாணையும் ஒரு காவல் அலுவலரால் அல்லது இதன்பொருட்டு மாநில அரசு இயற்றப்படும் விதிகளுக்குட்பட்டு அவ்வாணையைப் பிறப்பிக்கும் நீதிமன்றத்தின் ஓர் அலுவவரால் அல்லது வேறு பொது ஊழியரால் சார்வு செய்யப்படுதல் வேண்டும். அழைப்பாணையின்படி கட்டளையிடப்பட்டவருக்குக் கூடுமானவரை நேர்முகமாகவே சார்வு செய்யப்பட வேண்டும். அழைப்பாணை சார்வு செய்யும் அலுவலர் வேண்டிக் கொண்டால், படியின் பின்பக்கத்தில் அதைப் பெற்றுக் கொண்டதற்காகக் கையொப்பமிடுதல் வேண்டும். வழக்கு நிறுவப்பட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் பிரதிவாதி வசிப்பவரானால் அவரிடமோ அவருடைய முகவர் அழைப்பாணை ஏற்றுக் கொள்ளும் அதிகாரம் பெற்றிருந்தால் அவரிடமோ அழைப்பாணையைச் சார்வு செய்யலாம். அதற்கென்று அமர்த்தப்பட்ட அலுவலரோ, அவருடைய துணையாளோ அழைப்பாணையைச் சார்வு செய்ய வேண்டும். பிரதிவாதி இந்தியாவில் எப்பகுதியில் இருந்தாலும் அல்லது வழக்கு நிறுவப்பட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள்ளிருந்தாலும் அவருக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு அதற்கென்றுள்ள அலுவலரை நீதிமன்றம், அவ்வழைப்பாணையை அனுப்பும்படி கோரும். அதன்படி அழைப்பாணை சார்வு செய்யப்படலாம், அல்லது பதிவு அஞ்சல் வாயிலாகவும் அழைப்பாணையை அனுப்பும்படி ஆணையிடலாம். ஒப்புகை பிரதிவாதியினால் கையெழுத்திடப் பெற்றுத் திரும்ப வருமானால், மேற்படி ஒப்புகை, அழைப்பாணை சார்வு செய்யப்பட்டமைக்குப் போதிய சான்றாகும். அழைப்பாணையில் நீதிபதியோ அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரியோ கையெழுத்திட வேண்டும். அதனோடு அதில் நீதிமன்றத்தின் முத்திரை (Seal)யும் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்படி அழைப்பாணை பிரதிவாதிக்கு நேரடியாகவும் சார்வு செய்யப்படலாம் (ஆ. 5. வி. 10). ஒன்றுக்கு மேற்பட்ட பல பிரதிவாதிகள் இருப்பின் ஒவ்வொருவருக்கும் அழைப்பாணை சார்வு செய்யப்படல் வேண்டும். கூட்டு நிறுவனங்கள் அல்லது கழகங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பாணைகள், அச்செயலகங்களின் செயலாளர், வட்டார மேலாளர் அல்லது வேறு முதன்மை அலுவலர் ஆகியோருக்கு அனுப்புவதன் மூலமாகவோ, இந்தியாவில் உள்ள அக்கூட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலருக்கு முகவரியிட்டுப் பதிவு அஞ்சல் வாயிலாக அனுப்பப்படும் கடிதத்தின் மூலமாகவோ சார்வு செய்யப்படலாம். அவ்வாறு கடிதம் அனுப்புவதாயிருந்தால், அக்கடிதம் சாதாரண அஞ்சல் முறையில் எப்போது போய்ச்சேருமோ அப்போது சார்வு செய்யப்பட்டதாகக் கொள்ளுதல் வேண்டும். மேற்குறிப்பிட்ட விதிப்படி, ஒரு கப்பலின் தலைவன், அந்தக் கப்பலின் சொந்தக்காரர் சார்பில் அழைப்பாணை பெற்றால் அது சரியான சார்வாகும். பிரதிவாதி அழைப்பாணையைப் பெற்றுக் கொள்ளாதபடி ஏமாற்றுவாரானால், நீதிமன்றம் அழைப்பாணையைச் சார்வு செய்யக் கீழ்க்காணும் முறையைக் கையாளலாம். பிரதிவாதிக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையின் நகலை நீதிமன்றத்தில் பெரும்பாலானவர் பார்வை படும் இடத்தில் ஒட்டவும், அதனோடு அவர் இறுதியாக வாழ்ந்ததாகக் கருதப்படும் இடத்திலோ அவர் தொழில் புரிந்த இடத்திலோ அவர் வேலை செய்த இடத்திலோ அழைப்பாணையின் நகலை எளிதாகக் கண்ணுக்குப் புலப்படும் இடத்தில் ஒட்டவும் உத்தர விடவாம். அல்லது வேறுவகையில் அழைப்பாணை சார்வு செய்யக்கூடுமானால், அந்த வகையிலும் சார்வு செய்ய உத்தரவிடலாம். இவ்வாறு சார்வு செய்யப்பட்ட அழைப்பாணையை நேரடியாகச் சார்வு செய்யப்பட்டதாக நீதிமன்றம் கருதும். பிரதிவாதி இருக்குமிடம் சொந்த மாநிலத்திலோ வேறு மாநிலத்திலோவென்றால் அவர் எந்த நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் இருக்கிறாரோ அந்த நீதிமன்றம் மூலமாகவோ பதிவுத் தபால் மூலமாகவோ அவருக்கு அவ்வழைப்பாணையை அனுப்பலாம். ஆனால் உயர்நீதிமன்றத்தின் மூலமாக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்படக்கூடாது. சென்னை, பம்பாய், கல்கத்தா முதலிய மாநிலத் தலைநகரங்களில் பிரதிவாதி இருப்பாரானால், மேற்படி அழைப்பாணை அந்தத் தலைநகரங்களில் உள்ள சிறு வழக்கு நீதிமன்றம் (Small Cause Court) மூலமாகச் சார்வு செய்யப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட நீதிமன்றங்கள், அழைப்பாணையைச் சார்வு செய்யக் கோரிய நீதிமன்றத்திற்கு அதைத் திரும்ப அனுப்ப வேண்டும். சிறையில் இருக்கும் பிரதிவாதிக்கு அழைப்பாணை சிறை அதிகாரி மூலமாக அனுப்பப்படும். அரசு அலுவலர்களுக்கு (இராணுவம், கப்பற்படை, விமானப்படை அதிகாரிகள் நீங்கலாக) அவருடைய தலைமை அலுவலர் மூலமாகச் சார்வு செய்யப்பட வேண்டும்.