சிதை கார்பன் அமிலங்கள்
citai kārpaṉ amilaṅkaḷ
இவற்றைச் சிதை கார்பன் பொருள்கள் (ketone bodies) எனவும் வழங்குவர்.
இவற்றைச் சிதை கார்பன் பொருள்கள் (ketone bodies) எனவும் வழங்குவர். இயல்பாகத் திசுக்களும், உறுப்புகளும் இயங்க ஆற்றல் தேவை. உடலில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச் சத்து ஆகியவை எரிக்கப்பட்டு, ஆற்றல் வெளிப்படுவதுடன், கார்பன் டைஆக்சைடும் நீரும் பெறப்படும். கார்பன் டைஆக்சைடு நீருடன் கலந்து, கார்பானிக் அமிலமாக மாறி, நுரையீரல் வழியாகக் கார்பன் டைஆக்சைடாக வெளியேறுகிறது. நிலைத்த அமிலங்களாகிய அசெட்டோ அசெட்டிக் அமிலம், சந்தக அமிலம் முதலியன சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன.
கொழுப்பு அமிலங்கள் எரிக்கப்படுவதால், உற்பத்தியாகும் சிதை கார்பன் அமிலங்கள் உடல் நலமுடையோரிடையே மிகையாகச் சேர்வதில்லை. மாறாகத் தொடர்ந்து, உண்ணாமலிருப்போரிடையே மூளைக்குத் தேவையான 90% ஆற்றலைச் சிதை கார்பன் அமிலங்களே தருகின்றன. குளுக்கோஸ் (glucose) குறைந்த நிலையில் உடலில் உண்டாகும் குளுக்கோஸ் பாதி, சிறுநீரகங்களால் புத்தாக்க முறையில் உருவாக்கப்படும் இன்சுலின் ஈரலின் குளுக்கோஸ் புத்தாக்க ஆற்றலைக் குறைக்கிறது. குளுக்ககான் நேர் மாறாக, சிதை கார்பன் அமில உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், தொடர் வாந்தி, சிறார்களிடையே கடுமையான வாந்தி, சூலுற்றோரின் கடும் வாந்தி, அறுவைக்குப் பின் ஏற்படும் வாந்தி, உண்ணா நிலை போன்றவற்றின் போது சிதை கார்பன் அமில மிகை ஏற்படலாம்.
நீரிழிவு நோயும் சிதை கார்பன் அமில மிகையும். நோய்களில் சில காலமாக இனிமக் கட்டுப்பாடு குறைந்து கொண்டே வந்து, இச்சிக்கல் உருவாகலாம். மிகுதியான நீர்ப் போக்கால் (diuresis) விளையும் உடல் நீர்க் குறைவு (hypovolaemia) நேரடியாகக் குளுக்ககானின் செறிவை அதிகப்படுத்தி, அதனுடன் கேட்டகாலமைன் போன்ற இடர் ஹார்மோன்களையும் (stress hormones) ஊக்குவிப்பதால், இன்சுலின் எதிர்ப்பு மிகைப்பட்டு அமில மிகை ஏற்படுகிறது.
பெருவாந்தி நிலைகளில் எதிர் விளைவுகள் சேர்ந்து இருப்பதைக் காணலாம். வாந்தியால் ஹைட்ரோகுளோரிக் அமிலம் குறையவும், கீட்டோ அமிலமாகிய சிதை கார்பன் அமிலங்களால், அமிலச் சத்து மிகைப்படவும் செய்யும். அப்போது, சிதை கார்பன் மிகை, அமில மிகையின்றி விளங்குவதையும் காணலாம். சிறுநீரில் சிதை கார்பன் அமிலம் மிகைப்பட்டால், உடலில் அமில மிகை இருக்க வேண்டும் எனக் கொள்ளலாகாது. உடல் அமில மிகையை உறுதி செய்வதற்கு pH அல்லது பைகார்பனேட்டு அளவீடு செய்ய வேண்டும்.
எதிரயனிக் (anion) குறை, அமில மிகை என்னும் நிலைகளில் அளவீடு செய்யப்படாத, எதிர் அயனிகளின் பகுதி 16 மி. லிட்டருக்கு மிகைப்படுகிறது. இத்தகைய எதிரயனி குறை, அமில மிகை ஆகியன நீரிழிவுச் சிதை கார்பன் அமில மிகை, மது சார் சிதை கார்பன் அமில மிகை, லாக்டிக் அமில மிகை, நீரகச் செயலிழப்பு, நஞ்சு மிகை (எத்திலீன் கிளைக்கால், மெத்தில் ஆல்கஹால்) ஆகியவற்றால் நிகழும்.
குருதியில் சோடியம், பொட்டாசியம் இவற்றின் கூட்டளவிலிருந்து குளோரைடு, பைகார்பனேட் இவற்றின் கூட்டளவைக் கழித்தால், எதிரயனிக் குறை நிலை (anion gap) புலப்படும். தொடர்ந்த உண்ணா நிலைகளிலும், குருதியில் மொத்தச் சிதை கார்பன் பொருள்களின் அளவு 4—6 மில்லிமோல் அளவைத் தாண்டுவதில்லை.
முது நிலை நீரிழிவு நோயாளரிடையே பெரு ஊடு நிலை, சிதை கார்பன் பொருளில்லா நீரிழிவு—மயக்க நிலை (hyper osmolar nonketotic diabetic coma) காணப்படலாம். இனிமம் மிகவும் உயர்ந்து காணப்படும். இவர்களிடையே சிதை கார்பன் அமில மிகை தவிர்க்கப்படும் விதம் புலனாகவில்லை.
தணிப்பு முறைகள். உடல் நீர்க் குறை, அதன்காரணமாக ஏற்படும் குருதி மண்டல அதிர்வு (vascular collapse) இறப்பின் முதல் காரணமாக அமையும். எனவே, இந்நோய் கண்டோருக்கு, விரைவாக உப்பு நீர் (5%), பைகார்பனேட் இவற்றைச் சிரை வழியாகச் செலுத்த வேண்டும். கடுமையற்ற நிலையில் நாளொன்றுக்கு 4 லி வரை கடும் நிலையில் 6—8லி வரை உப்பு நீரும், பைகார்பனேட்டும் தேவைப்படும். மிக வேகமாகப் பைகார்பனேட்டைச் செலுத்தினால், ஆக்சிஜன் பகுப்பு நிலை இடப் பக்கமாக நகரும். அதனால், செல்களில் ஆக்சிஜன் ஏற்புக் குறையலாம். pH 7.2 வந்தவுடன், பைகார்பனேட் நிறுத்தப்பட்டு உப்பு நீரை மட்டுமே தொடர வேண்டும். நீரிழிவு நோயினருக்கு இன்சுலின் மிகத் தேவை. இந்நோயாளிகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் குறைவதால், இவ்வுயிரிகள் விளைவிக்கும் நோய்கள் வாரா வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும். —செ.நெ.தெய்வநாயகம் நூலோதி. Williams, Text Book of Endocrinology, Seventh Edition, W.B. Saunders and Co., Philadelphia, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 231)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntc9m7pb/
தமிழ்“சிதை கார்பன் அமிலங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ntc9m7pb/APA
Oliyon Research. (2026). சிதை கார்பன் அமிலங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ntc9m7pb/MLA
"சிதை கார்பன் அமிலங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ntc9m7pb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment