‘ஆர்க்காடு இரட்டையர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்களுள் இளையவர். டாக்டர் இராமசாமி முதலியார் மூத்தவர். இவர் கர்நூல் மாவட்டத்தில் ஆர்க்காடு குப்புசாமி முதலியாருக்கும் சீத்தம்மாளுக்கும் 14.10.1887–இல் மகனாகப் பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்த இவர், நன்கு படித்துப் பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். சென்னைக் கிறித்தவக் சுல்லூரியில் எப்.ஏ., தேர்வில் வேற்றி பெற்றார். தமது 22–ஆம் வயதில் மாநில மருத்துவப் பணியில் சேர்ந்து பழநியில் மருத்துவப் பணியினைத் தொடங்கினார். பின்னர், 1914–ஆம் ஆண்டு பி.ஏ., பட்டத்தையும் 1922–ஆம் ஆண்டு எம்.டி., பட்டத்தையும் பெற்றார். டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் 1916–ஆம் ஆண்டு இராதாபாய் என்பவரை மணந்துகொண்டார். இவர் மக்கள் நால்வர். மூவர் ஆண்கள்; ஒருவா் பெண். சென்னையில் ஏழைகளுக்கென்று ஒதுக்கப்பட்டு, கஞ்சித் தொட்டி மருத்துவமனை என்று சொல்லப்பட்ட இராயபுரம் மருத்துவமனையில் இவர்தம் சீரிய பணி தொடங்கியது. எழும்பூர் அரசினர் பெண்கள் மருத்துவமனை, சென்னைப் பொது மருத்துவமனை ஆகியவற்றில் பணியாற்றினார். எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையின் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுச் சிறந்த பணிபுரிந்தார். சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வரானார். மகப்பேறு மருத்துவத்தில் உலக வல்லுநர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். இவர் எழுதிய மருத்துவ நூல்கள் இன்றும் போற்றப்படுகின்ற. இலட்சுமணசாமி முதலியார் கட்சிச் சார்பின்றி இவர் ஆற்றிய அரசியல் பணி குறிப்பிடத் தகுந்தது. சென்னை மேலவையில் 1946–ஆம் ஆண்டு முதல் இவர் உறுப்பினராக இருந்தார். எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது ஆளுங்கட்சியின் நிருவாகத்தை ஆக்க முறையில் இடித்தும் பாராட்டியம் வந்தார். ஆளுங்கட்சி இவருடைய நடுநிலையான கருத்துரைகளுக்கு மதிப்பளித்தது. இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 1942–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவியில் 27 ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்தார். இவருடைய நிருவாகத்தின்கீழ்ப் பல கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் போன்றவை தொடங்கப் பெற்றன. அழகப்பச் செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரரி, சிற்பம், நகர அமைப்பு ஆதியவற்றிற்கான கல்வி நிறுவனம், கணிக மேதை இராமானுசம் கணக்கியல் கழகம், அடிப்படை மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழகம், செருமானிய உதவியுடன் சென்னையில் இந்தியத் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னையில் அமைத்துள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் ஆகியன அவற்றுள் சில. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பெருஞ்சான்றிதழ் வகுப்புகளுக்குப் பல்வேறு புதிய துறைகள் தொடங்கப் பெற்றன. மனையியல், செவிலியர்துறை, வணிகவியல், தொழில் வணிக நிருவாக இயல், இசைக் கல்விக்கு உரிய பட்டப்படிப்பு, உளவியல், மானிடவியல், தொல்பொருளியல், உயிர்ப்பு வேதியியல், பிற வேதியியல், சட்டம், நூலகவியல், கட்டடவியல், சமூகவியல், இதழியல், இந்தி, உருசிய மொழி போன்றவை அவற்றுள் சில. இவர் பல்கலைக் கழக நிதி உதவிக் குழு ஏற்படப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். அக்குழு தொடங்கப்பெற்றபொழுது அதன் உறுப்பினராகக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருட்டிணனால் நியமிக்கப்பட்டார். பின்னர், உயர்நிலைப் பள்ளிக் குழுவின் தலைவராகவும் இருந்து நடைமுறைக்கு உகந்த பரிந்துரைகளைச் செய்தார். டாக்டர் இலட்சுமணசாமி முதலியாரை அரசு 1928–29–ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஜரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களையும் மருத்துவமனைகளையும் நேரில் பார்த்து வரும்படி அனுப்பி வைத்தது. மருத்துவக் கல்விக் குழுவின் துணைத்தலைவராக இலண்டன், சிகாகோ சென்று வந்தார். உலக உடல்நல அமைப்பிற்கு (World Health Organization) இந்தியாவின் பேராளராக 1948–ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1949–50–ஆம் ஆண்டில் அவ்வமைப்பின் நிருவாகக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றார். உலக நாடுகளின் கல்லி, கலை, அறிவியல் கழகத்தின் (UNESCO) நிருவாகக் குழு உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் இருந்த காலங்களில் கூட்டங்களில் கலந்துகொள்ளப் பாரிசு, செனிவா, தென் அமெரிக்கா, கனடா, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்று வந்தார். டாக்டர் இலட்சுமணசாமி முதலியாருக்கு வழங்கப்பட்ட மதிப்புப் பட்டங்களுள் எல்.எல்.டி.யை (L.L.D.) இலங்கைப் பல்கலைக் கழகம் (1942), கிளாசுகோப் பல்கலைக் கழகம் (1951), மெக்கில் பல்கலைக் கழகம், கனடா (1958), மைசூர்ப் பல்கலைக் கழகம் (1960), ஆங்காங்குப் பல்கலைக் கழகம் (1961), இலண்டன் பல்கலைக் கழகம் (1963), மதுரைப் பல்கலைக் கழகம் (1967) ஆகிய பல்கலைக் கழகங்கள் வழங்கின; டி.எஸ்சி. (DSc) பட்டத்தை ஆந்திரப் பல்கலைக் கழகம் (1943), இலக்னோப் பல்கலைக் கழகம் (1944), கல்கத்தாப் பல்கலைக் கழகம் (1957), சென்னைப் பல்கலைக் கழகம் (1961) ஆகிய பல்கலைக் கழகங்கள் வழங்கின; டி.சி.எல். (D.C.L.) என்ற பட்டத்தை ஆக்சுபோர்டு பல்கலைக் கழகமும் (1948), டி.லிட்., (D.Litt.) பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் வழங்கின. ஆங்கில அரசு இவருக்கு இராவ்பகதூர், திவான்பகதார், ‘சர்’ பட்டம் போன்றவற்றை அளித்தது. எடின்பரோ பல்கலைக் கழகத்தின் மருத்துவ நிலைக்கு (F.R.C.P.) 1966–ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசாங்கம், 1954–ஆம் ஆண்டு ‘பத்ம பூசன்’ விருதும், 1963–ஆம் ஆண்டு ‘பத்ம விபூசன்’ விருதும் அளித்துப் பெருமைப்படுத்தியது. இவர் 14.4.1974–இல் காலமானார். சி.பா.