வடமொழியிலுள்ள மநுவிஞ்ஞானேசுரம் என்னும் அறநூலினைத் தமிழ்ச் செய்யுள் நூலாக மொழியாக்கம் செய்த புலவர். இவர் தந்தையார் சிரீகிருட்டிணை என்னும் ஊரைச் சார்ந்த சங்கரதேசிகர் ஆவார். அழகின் பெருமான் தம் தந்தையாரைக் குருவாகக் கொண்டு கல்வி பயின்றார். வடமொழியிலிருந்த மநுவிஞ்ஞானேசுரம் என்னும் நூலினைத் திருநெல்வேலியில் வாழ்ந்த செல்வரும் வேதியர் குவத்தில் பரத்துவாச கோத்திரத்தில் ஆபத்தம்ப சூத்திரத்தில் தோன்றியவருமான வேங்கட குருநாத சோதிடர் தமிழிற் கூற, அழகின் பெருமாள் விருத்தப்பாவினால் இந்நூலினைச் செய்துள்ளார். தமிழில் இதன் பெயர் மநுவிஞ்ஞானேசுவரீயம் என்பதாகும். வடமொழியிலுள்ள மூல நூலாசிரியரான விஞ்ஞானேசுவரர், மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்கிரமாதித்தன் காலத்தில் வாழ்ந்தவர் (கி.பி. 1070–1100) என்று கருதப்படுகிறார். வடமொழியில் கி.பி. 11–ஆம் நூற்றாண்டில் தோன்றிய மநுவிஞ்ஞானேசுரம் என்னும் நூல் கி.பி. 1485–ஆம் ஆண்டளவில் தமிழில் மொழி பெயர்த்தமைக்கப்பட்டுள்ளது. இந்நூல் செய்யுள் வடிவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட வடமொழி அற நூல்களுள் காலத்தால் முற்பட்டது ஆகும். வடமொழியிலுள்ள இதன் மூல நூலுக்கு மிதாட்சரம் என்னும் வேறு பெயருமுண்டு. தமிழிலமைத்துள்ள இந்த அறநூல், வடமொழி மிதாட்சரத்தின் நேர் மொழிபெயர்ப்பு ஆகாது. மூல நூலின் கருத்துகளைப் பெற்று அங்குக் கூறப்படும் மேற்கோள்களைத் தவிர்த்துச் சுருக்கமாகவும் செறிவாகவும் அமைக்கப்பட்டது இந்நூலாகும். இந்நூல், காப்பு, பாயிரம், அவையடக்கம், நூலின் வரலாறு என்னும் நான்கு பகுதி கொண்ட முன்னுரையோடு இராச லட்சணம் முதலான 49 இலட்சணங்களைக் கொண்டமைந்துள்ளது. ‘கொடுத்த சம்பளத்தை வாங்குகிற இலட்சணம்’ என்னும் 41–ஆம் பகுதியோடு, இந்நூலின் செய்யுட் பகுதி முடிந்துவிடுகிறது. இதில் 859 விருத்தங்கள் உள்ளன. எஞ்சிய இலட்சணங்களின் சுருக்கம் உரைநடையில் பதிப்பித்தோரால் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தமிழ் நூல் மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடுகளுள் ஒன்றாகும்.