சுழலக முறை நூற்பு
cuḻalaka muṟai nūṟpu
விரைவாகச் சுழலும் உருளைகளால், இழைகளை முறுக்கி நூலாக்கும் முறை சுழலக நூற்பு முறை (rotor spinning) ஆகும்.
விரைவாகச் சுழலும் உருளைகளால், இழைகளை முறுக்கி நூலாக்கும் முறை சுழலக நூற்பு முறை (rotor spinning) ஆகும். திறந்த முனை நூற்பு (open-end spinning), புரி ஒட்டா நூற்பு (break spinning) என்றும் இம்முறையைக் குறிப்பிடுவதுண்டு.
நீட்டி இணையாக்கப்பட்ட (carded) இழைப் புரியை, ஒற்றை முள் பதித்த உருளைகளின் மீது செலுத்த வேண்டும். இந்த உருளை வரிசையில் ஒவ்வோர் உருளையும், அதற்கு முந்தைய உருளையை விடக் கூடுதலான விரைவுடன் சுழலுகிறது. இதன் விளைவாக இழைப் புரியின் உட்கூறான இழைகள் தனித் தனியே பிரிக்கப்பட்டு, நூற்பு அமைப்பில் தனித்த நிலையில் நுழைகின்றன. இவ்விழைகள் ஒரு காற்றோட்டத்தால் எடுத்துச் செல்லப்பட்டு, புனல் வடிவிலான சுழலியின் உள்பரப்பில் அமைந்த காடியின் மீது (groove) மெல்லிய படலமாகப் படியும். சுழலியின் மைய விலக்கு விசையால், இழைப் பரப்பின் தடிமன் கூடும் போதே, இழைகள் முறுக்கப்பட்டு, நூலாக மாறி, காடியிலிருந்து நூல் விடுபட்டு வெளியே இழுக்கப்படுகிறது.
பழைய மரபு முறையான வளைய நூற்பு முறையிலிருந்து ஒரு முதன்மையான வகையில், இம்முறை மாறுபடுகிறது. நூலை முறுக்குவதற்கு நூல் சுற்றப் படும் காடி உருளையைச் (spool) சுழற்ற வேண்டிய தேவை சுழலக முறையில் இல்லை. பெரிய காடி உருளையையும் ஈடுபடுத்த முடியுமாதலால், இம்முறையில் முடிச்சு விழாத நீண்ட நூலைப் பெறலாம். இதன் கிளை விளைவாகக் காடி உருளைகளை மாற்றும் தேவையும், நெடிய கால இடைவெளிகளில் மட்டுமே நேருகிறது. மரபு வழி நூற்பில் கிட்டுவதைப் போன்று, 3—5 மடங்கு வரை, விரைவாக இம்முறையில் நூலைப் பெறலாம். பளிச்சிடும் நிறங்களில் சாயமேற்றுவதற்கு ஏற்ற நூலைத் தயாரிக்க, இம்முறை உதவும். பல வகை இழைகளைக் கலந்து ஓரினமாக்குவதற்கு இம்முறை பரிந்துரைக்கப்படுகிறது.
சுழலக முறையின் குறைபாடுகள். ரேயான் தவிர்த்த பிற செயற்கை வகை வெட்டிழைகளை இம்முறையில் நூற்றல் கடினம். செயற்கை இழையின் தீர்வுப் பக்குவம் (finish) காரணமாக இழை, சுழலியின் பரப்பில் ஒட்டி அடைத்து விடும். வாரப்பட்ட (combed) இழை புரிகளை இம்முறையின் வாயிலாக நூற்க முடியாது. இந்நூற்றலில் விளையும் நூல் கரடு முரடாகவும், தொடுகையில் மணற் பரப்பைப் போலக் கடினமாகவும் இருக்கும். நூலின் இழைச் சிணுக்கு எண் பொதுவாகக் குறைவாகவே (14.8 டெக்ஸ்) உள்ளமையால், இந்நூல் முரட்டுத் துணிகளான டெனிம் (denim), துவாலைகள், சில பாப்ளின்கள், இடையீட்டுத் தடுப்புகள் (inter linings) ஆகியவற்றின் தயாரிப்புக்கு மட்டுமே ஏற்றது.
மரபு வழி நூல்களை விட 20% கூடுதலான முறுக் கேற்றம் கொண்டிருப்பினும், இந்நூல் அதன் சன்னக் குறைவால், 20% வலிமை குறைந்துள்ளது. முறுக் கேற்றத்தால் இயல்பு மாற்றம் கொண்ட இந்நூல், ஏனைய நூல்களுடன் கலப்பதற்கு ஏற்றதன்று. இம்முறையில் ஈடுபடுத்தப்படும் இழைப் புரிகள் மாசுப் பொருள் கலப்பற்றிருத்தல் வேண்டும். நூலின் இழைச் சிணுக்கு எண்ணிக்கை உயர உயர, செயல் முறையின் மின்னாற்றல் தேவையும் உயருகிறது. வெட்டிழையின் நீளம் கூடக் கூடச் சுழலியின் அளவும் கூடுதலாக்கப் பட வேண்டும். இதன் தொடர் விளை வாகச் சுழலியின் சுழற்சி விரைவு குறைய, தயாரிப்புத் திறனும் குறையும். —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P.Corbman, Textiles-Fibre to Fabric, Sixth Edition, McGraw Hill Book Company, Singapore, 1985; Norma Hollen et. al., Textiles, Fifth Edition, Collier Macmillan Publishing Co., London 1979.
எந்திரம் (ஆ) BD 200எந்திரத்தின் சுழலும் தலைப் பகுதியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 560)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nffrznyh/
தமிழ்“சுழலக முறை நூற்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nffrznyh/APA
Oliyon Research. (2026). சுழலக முறை நூற்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nffrznyh/MLA
"சுழலக முறை நூற்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nffrznyh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment