இலிங்கன், ஆபிரகாம்
iliṅkaṉ, āpirakām
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பதினாறாம் குடியரசுத் தலைவர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பதினாறாம் குடியரசுத் தலைவர். இவர் கி.பி. 1809–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 12–ஆம் நாள் கெண்டகி (Kentucky) என்னும் ஊரில் பிறந்தார். இலிங்கனின் (Lincoln) தந்தையார் தாமசு (Thomas) என்பார் தச்சராகவும் உழவராகவும் தொழில்புரிந்தார். தாயார் நான்சி ஏங்சு இலிங்கன் (Nancy Hanks Lincoln) என்பவராவர். இலிங்கன் ஆபிரகாமின் தாயார் கி.பி. 1818–ஆம் ஆண்டு காலமானார். இலிங்கனின் தந்தையார்
இலிங்கன், ஆபிரகாம்
திருமதி சாரா புசுசான்சுட்டன் (Mrs. Sarah Bush Johnston) என்பவரை இரண்டாம் மனைவியாக மணந்து கொண்டார். இந்த அம்மையார் இலிங்கனையும் அவர்தம் தங்கையையும் அன்பாக நடத்தினார்.
ஆபிரகாம் இலிங்கனுக்குப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புக் குறைவாகவே கிட்டியது. இதற்குக் காரணம் இவர் பிறந்த கெண்டகியிலும், வளர்ந்த இந்தியானாவிலும் பள்ளிக்கூடங்கள் குறைவாக இருந்தமையேயாகும்.
தாமசு இலிங்கனின் குழந்தைகள் (ஆபிரகாம் உட்பட) கட்டணம் செலுத்திப் படித்தார்கள். உரக்கக் கத்திப் படிக்கும் பள்ளியொன்றில்தான் இவர் சேர்ந்து படித்தார். இத்தகைய படிப்புமுறை பழைய முறைகளுள் ஒன்று.
இவருக்கு 21 வயது நிரம்பியபோது, கி.பி. 1830–ஆம் ஆண்டின் இவர்தம் குடும்பத்தினர் இந்தியானாலிலிருந்து இல்லியனாய்க்குக் குடியேறினர். தாமசு ஆபிரகாம் அம்மாநிலத்தில் குடியேறியபோது ஆபிரகாம் இலிங்கள் நியூ ஆர்லியன்சு நகரில் தட்டைப் படகு ஒன்றைக் கட்டும் பணியில் சேர்ந்தார். அப்பணியை முடித்து ஊர் திரும்பியதும் இவர் இசுபிரிங்குபீல்டு (Springfield) என்னும் இடத்திற்கு அண்மையிலிருந்த நியூசேலம் (New Salem) என்னும் ஊரில் பணியில் சேர்ந்தார். சிறிது காலம் அஞ்சலகத் தலைவராகவும் சிறிது காலம் கண்காணிப்பாளராகவும் பணி புரிந்தார்.
இவர் கடின உழைப்பாளி; நேர்மையானவர்; அதன் விளைவாக இவர் விரைவாக எல்லோராலும் விரும்பப்பட்டார். இவர் 2 மீட்டருக்கு மேல் உயரமானவர்; உடற்கட்டுள்ளவர். இவருக்கு மற்போர் செய்வதில் பேரார்வமுண்டு. கோடரியைத் திறமையாகப் பயன்படுத்தவும் தெரிந்திருந்தார்.
இல்லறம்
நியூசேலம் என்னும் ஊரில், இளைஞரான இலிங்கன் இரு இளம் பெண்களுடன் தொடர்பு கொண்டார். ஆன் இரட்லட்சு (Ann Rutledge), மேரி ஓவன்சு (Mary Owens) ஆகிய இவ்விருவரும் இவரிடம் அன்பு பாராட்டினார்கள். ஆனால், ஆன் இரட்லட்சு கி.பி. 1835 ஆம் ஆண்டில் காலமானார். அவர் காலமான ஓராண்டுக்குப் பின்னர், இவர் மேரி ஓவன்சு மீது காதல் கொண்டாரெனினும் அப்பெண் இவரை மணக்க மறுத்துவிட்டாள்.
இவர் கி.பி. 1842–ஆம் ஆண்டு கெண்டகி, இலெக்சிங்டனைச் சார்ந்த மேரி ஆன் டாடு (Mary Ann Todd) என்ற பெண்ணை இசுபிரிங்குபீல்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண்மக்கள் பிறந்தனர். இராபர்ட்டு, எட்வர்டு, வில்லியம், தாமசு என்னும் பெயர் கொண்டவர்கள்.
வழக்கறிஞர்
நியூ சேலத்தில் இவர் சட்டம் பயின்று கி.பி. 1836–ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு இசுபிரிங்குபீல்டு சென்று அங்கு, சான் டி. இசுடூவர்ட்டு (John T. Stuart) என்பாருடன் இணைந்து வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் இல்லியனாயின் தலைசிறந்த வழக்கறிஞரான இசுடீபன் உலோகன் (Stephen T. Logan) என்பாருடன் இணைந்து பணியாற்றினார். அதன் பின்னர், கி.பி. 1844–ஆம் ஆண்டில் வில்லியம் எச். ஏர்ன்டன் (William H. Herndon) என்பவரைத் துணைவராகச் சேர்த்துக் கொண்டு சொந்தமாகச் சட்ட நிறுவனமொன்றைத் தொடங்கினார்.
இவர் பேச்சில் வல்லவர்; விரைந்து சட்டத்தைப் புரிந்து கொள்ளும் கலையை அறிந்தவர். எனவே, சட்டப்பணியில் சிறந்து, வாகை சூடினார். ஓய்ந்த வேளைகளில் இவர் அரசியல் பற்றியும் பேசலானார்.
இல்லியனாய் நடுவண் இருப்புப்பாதைக் குழு, ஏனைய இருப்புப்பாதை நிறுவனங்கள், வங்கிகள், ஆயுட்காப்பீட்டுக் குழுக்கள், செய்பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு வாதாடியதால் இவர் வழக்கறிஞர் பணி பெருகிவளர்ந்தது.
அரசியல் பங்கு
இவர் நியூசேலத்தில் வாழ்ந்த காலத்தில் (கி.பி. 1931–37) அரசியலில் ஈடுபாடு கொண்டு பொதுப்பணியில் இறங்கினார். இல்லியனாய்ச் சட்டமன்றத்தின் வேட்பாளராக கி.பி. 1832–இல் இவர் தேர்தலில் நின்றார். தேர்தலைக் கவனிக்காமல் வட இல்லியனாயிலும் விசுகான் சினிலும் நடைபெற்ற போரில் பங்கு கொண்டார். எனவே, தேர்தலில் தோற்றுவிட்டார். எனினும், போரில் ஈடுபட்டது பிற்காலத்தில் இவருக்குப் பலனளித்தது. இவர்தம் நண்பர்கள் இவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
இரண்டாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்றார். தொடர்ந்து மும்முறை தேர்ந்தெடுக்கப் பெற்ற இவர் மீண்டும் கி.பி. 1854–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்கள் அவைக்கும் கி.பி. 1847–49–ஆம் ஆண்டுகளில் விக்குக் கட்சியின் உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேலவைக்கும் (Senate) போட்டியிட்டுத் தோற்றார். இவர் மேலவைக்கு முதன் முறையாக கி.பி. 1854–55–ஆம் ஆண்டில் முயன்றார். ஆனால், வேறு ஒருவரை மாநிலச் சட்டமன்றம் தேர்ந்தெடுத்துவிட்டது.
இலிங்கனும் திரம்புல் (Trumbull) என்பாரும் அடிமை முறையை அமெரிக்க ஐக்கிய நாட்டில் விரிவுபடுத்துவதை எதிர்த்தார்கள். அதனால், இவ்விருவரும் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களாயினர். இல்லியனாய் மாநிலத்தில் இவ்வேளையில்தான் (கி.பி. 1856) இக்கட்சி அமைக்கப் பெற்றது. அடிமை முறையை எதிர்த்தவர்களுள் பெரும்பாலோர் இக்கட்சியின் ஆதரவாளர்களாயிருந்தனர். அவர்களுள் சிலர் அடிமை ஒழிப்பாளர்கள் எனக் கூறிக்கொண்டு, உடனடியாக அடிமை முறை அகற்றப்பட வேண்டுமெனக் கோரினர். இலிங்கணும் திரம்புல்லும் கூட்டாட்சி அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் பகுதிகளில் அடிமை முறையைப் பெருக விடாமல் தடுப்பதே சரியவழி என்று நம்பினர்.
இப்பகுதிகளில் கி.பி. 1857-ஆம் ஆண்டளவில் அடிமைமுறை பற்றிய சிக்கல் குழப்பமான நிலையில் இருந்தது. இச்சமயத்தில் நாட்டில் சட்டமன்றங்களான காங்கிரசு, நாட்டுப் பகுதிகளில் அடிமைகளை விலைக்கு வாங்குவதைத் தடுக்க முடியாதென அமெரிக்க ஐக்கிய நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருந்தது. நாட்டின் பகுதிகளில் அடிமை முறையைக் கட்டுப்படுத்தும் பொறுப்புக் காங்கிரசிடம் இருக்குமானால், உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பை மாற்றிக் கொள்ள வேண்டும்; இல்லையேல் அரசியல் அமைப்புத் திட்டத்தை உரிய முறையில் மாற்றியாக வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியிருந்தது.
மேலவைக்கு உறுப்பினராக இலிங்கன் கி.பி. 1855–ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக முயன்றார். அப்போது மக்களாட்சிக் கட்சியின் சார்பில் இசுடீபன் ஏ. தக்லசு (Stephen A. Douglas) என்பார் மூன்றாம் முறையும் தேர்தலில் நின்றார். இல்லியனாய்க் குடியரசுக் கட்சி மாநாடு இலிங்கனை வேட்பாளராக நியமித்தது. அம்மாநாட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இவர் உரை நிகழ்த்தினார். அடிமை முறையை ஆதரிக்கக்கூடாது என்பது இவருடைய அறிவுரையாகும். தக்லசு பேசிய போது மக்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். இவர் பேசிய கூட்டங்களில் பெருந்திரளாக மக்கள் கூடவில்லை. ஆயினும், தக்லசு பேசிச் சென்ற ஊர்களுக்கெல்லாம் இவரும் சென்று அடிமை முறைக்கெதிராகப் பேசி வந்தார். தக்லசின் செல்வாக்கைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் இலிங்கன் என்று பலர் குறை கூறினர்.
இச்சிக்கலைத் தீர்க்கத் தம்முடன் வாதமிடத் தக்லசு வரவேண்டுமென்று இவர் அறைகூவல் விடுத்தார். தக்லசு இவர் அறைகூவலை ஏற்றுக் கொண்டார். ஏழு ஊர்களில் இவ்விருவரும் இவ்விவாதக்தில் பேசுவதென முடிவாயிற்று. ஆட்டாவா, பிரிபோர்ட்டு, சோன்சுபரோ, சார்லசுடன், கேல்சுபர்க்கு, குவின்சி, அல்ட்டன் என்பன அவை. இவ்வூர்களில் பெருந்திரளான மக்கள் திரண்டு தேர்தல் பிரசாரத்தை விரும்பிக் கேட்டனர். இலிங்கன் 60 கூட்டங்களிலும் தக்லசு ஏறத்தாழ 100 கூட்டங்களிலும் பேசினார்கள்.
இலிங்கனும் தக்லசும் பெரும்பாலான சிக்கல்களைத் தீர்ப்பதில் ஒத்த கருத்துடையவர்களாகவே இருந்தனர். இருவரும் அடிமை முறைக்கெதிராகவும், அடிமை முறையை ஆதரிக்கும் மாநிலங்களை அமெரிக்க ஒன்றியத்தில் சேர்க்கக் கூடாதெனவும் கருதினார்கள். இப்பகுதிகளில் அடிமை முறையையே அனுமதிக்கக் கூடாதென்று இலிங்கன் கூறினார். அந்தந்தப் பகுதியில் வாழும் மக்களே அடிமைமுறை குறித்துத் தீர்மானிக்க வேண்டும் என்று தக்லசு கூறினார். இக்கருத்தறியும் முறையைத் தக்லசு ‘பொதுமக்கள் ஆளுமை’ (Popular Sovereignty) என்று குறிப்பிட்டார்.
அடிமை முறைக்கெதிராகப் பேச மறுத்துவிட்டார் தக்லசு. அவர் மக்களாட்சிக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவர். அக்காலத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் அமெரிக்க ஐக்கிய நாடு முழுவதிலும் பரவியிருந்தனர். அடிமை முறை ஒழிப்பிற்கெதிராகப் பேசினால் தேசியக் கட்சியான மக்களாட்சிக் கட்சி உடைந்துவிடுமோ என்று தக்லசு அஞ்சினார். ஏனெனில், குடியரசுக் கட்சி வடவரின் சுதந்திரநாடு வேண்டும் கட்சி; அடிமை நிலையை ஆதரிக்காத கட்சி. தென்பாகத்தில் இருந்த மாநிலங்கள் அடிமை முறையை ஆதரித்தன. எனவே, அவை குடியரசுக் கட்சியை வெறுத்ததுடன் அதனைக் கண்டு அஞ்சவும் செய்தன. தக்லசு குடியரசுத் தலைவராக வர விரும்பினார். ஆதலின், மக்களாட்சிக் கட்சி பிளவுபடாமல் இருப்பதே நலம் எனவும். பிளவுபட்டால் வெற்றிவாய்ப்புக் கிட்டாது எனவும் அவர் கருதினார்.
ஆனால், இலிங்கன் மக்களாட்சிக் கட்சிக்குள் நிலவிய கருத்து வேற்றுமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். தக்லசு தென் மாநிலங்களின் ஆதரவையிழந்ததுடன் மக்களாட்சிக் கட்சியும் பிளவுண்டது. இல்லியனாய்த் தேர்தல் பிரசராம் கி.பி. 1858–இல் மக்களாட்சிக் கட்சியின் வெற்றியில் முடிவுற்றது. தக்லசும் இதே மேலவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுக் கட்சியினர் பெருமளவு வாக்குகள் பெற்றனர். எனினும், மிகுதியான இடங்களைப் பெறவில்லை. மேற்கூறிய வாதவிவாத உரையாடல்களினால் இலிங்கன் அனைவருக்கும் தெரிந்தவரானார்; மக்கள் இவரை மதிக்கலாயினர். மேலவைக்கு கி.பி. 1858–இல் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாரேயாயின், கி.பி. 1860–ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கு இவர் போட்டியிடாமல் இருந்திருக்கச் கூடும். உண்மையிலேயே இவர் ஆசைப்பட்டதெல்லாம் மேலவை உறுப்பினராக வேண்டுமென்பதே. மேலவைக்கு வாய்ப்புக்கிட்டாமையான், இவர் வேறு வழிகளைப் பற்றிச் சிந்திக்கலானார்.
குடியரசுத் தலைவர்
இலிங்கன் கி.பி. 1859–ஆம் ஆண்டின் இறுதியில் ஒகையோ, விசுகான்சின் கான்சாசு, நியூயார்க்கு மாநகர். நியூ இங்கிலாந்து ஆகிய மாநிலங்களில் குடியரசுக் கட்சியின் சார்பாக அரசியல் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். நியூயார்க்கு மாநகரத்தில் கி.பி. 1860–ஆம் ஆண்டு பிப்பிரவரி 27-ஆம் நாள் இலிங்கன் ஆற்றிய சொற்பொழிவு குறிப்பிடத்தக்கது. நியூயார்க்கிலிருந்த பல முக்கியக் குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் இவருடைய சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டார்கள். இல்லியனாய் மாநிலம் இவரைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு நியமனம் செய்திருந்தது. நியூயார்க்குச் சொற்பொழிவினால் வடமாநிலத்தைச் சார்ந்த குடியரசுக் கட்சியினரும் இலிங்கனையே தம் கட்சியின் சார்பாக நிறுத்தலாம் என்று கருதினார்கள்.
இல்லியனாய்க் குடியரசுக் கட்சியினர் இவரைத் தம் கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு நியமனம் செய்தனர். குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு கி.பி. 1860–ஆம் ஆண்டு மே திங்கள் 18–ஆம் நாள் சிகாகோவில் கூடியது. வில்லியம் எச். சீவார்டு (William H. Seward) என்பாரும் இலிங்கனும் குடியரசுத் தலைவர் பதவிக்குக் குடியரசுக் கட்சியின் சார்பாக நின்றார்கள். முதற் சுற்று வாக்குகள் சீவார்டுக்கு இலிங்கனை விட மிகுதியாகக் கிடைத்தன. எனினும், அவரால் வெற்றிபெற முடியவில்லை. மூன்றாம் சுற்று வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக இலிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் கி.பி. 1860–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6–ஆம் நாள் நடைபெற்றது. தேர்தலில் நான்கு கட்சிகள் சார்பாக நால்வர் போட்டியிட்டனர். மக்களாட்சிக் கட்சி இரண்டாக உடைந்ததால் வடமாநில மக்களாட்சிக் கட்சிப் பிரிவினர் தக்லசைக் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தெரிந்தெடுத்தனர்; தென் மாநிலத்தவர்கள் கெண்டகியைச் சார்ந்த சான் சி. பிரக்கின்ரிட்சு (John C. Breckinridge) என்பாரைத் தெரிந்தெடுத்தனர். அரசியலமைப்பு ஒன்றியக் கட்சி (Constitutional Union Party) மேலவையாளர் சான் பெல் (John Bell) என்பாரை நிறுத்தியது. வாக்காளர்கள் பிரிந்திருந்த நிலையால் இலிங்கன் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். எனினும், இவருக்குப் பத்தில் நால்வரே வாக்களித்திருந்தனர் என்பதைக் குறிப்பிடல் வேண்டும். அடிமை வாணிக முறையை ஆதரித்த மாநிலங்களிலிருந்து இவருக்கு ஒருவரும் வாக்களிக்கவில்லை. ஆனால், சுதந்திர மாநிலங்கள் அனைத்தும் இவரை ஆதரித்தன. இலிங்கனுக்கு 180 தேர்தல் வாக்குகளும் (Electoral Votes) இவரை எதிர்த்த மூன்று வேட்பாளர்களுக்கும் கூட்டாக 123 வாக்குகளும் கிடைத்தன. குடியரசுத் தலைவருக்கு இலிங்கன் போட்டியிட்ட காலத்தில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் பழக்கம் இல்லை. இவர் இசுபிரிங்குபீல்டில் அப்போது தம் வீட்டில் தங்கியிருந்தார்; சொற்பொழிவு ஏதும் இவர் ஆற்றவில்லை. நாட்டைச் சூழ்ந்திருந்த சிக்கல்களைப் பற்றி இவரிடம் கேட்டபோது, தாம் குடியரசுக் கட்சியினை ஆதரிப்பதாக இவர் பதில் இறுத்தார்.
பகுதிகளில் அடிமை முறையை எதிர்த்தல், அமெரிக்காவின் தொழிற் சாலைகளுக்குப் பாதுகாப்பு, சுங்கவரிக்கு ஆதரவு, பொதுநிலங்களில் குடியேறியவர்களுக்கு இலவசப் பண்ணைகளுக்கு வகை செய்யும் சட்டமியற்றல், அரசு உதவியுடன் பசுபிக்குப் பெருங்கடல் கடற்கரை வரை இருப்புப் பாதைகள் அமைக்கும் திட்டம் போன்றவற்றிற்கு இலிங்கன் ஆதரவு நல்கினார். இவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் மேற்கூறிய கோரிக்கைகள் சட்டமாக்கப்பட்டன.
இலிங்கன் நவம்பரில் தேர்தெடுக்கப்பட்டாலும் அடுத்தாண்டு மார்ச்சு மாதம் 4–ஆம் நாள் அதாவது நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர்த் தான் பதவியேற்றார். இத்தகைய இடைவெளியினால் பல தொல்லைகள் நேர்ந்தன. அடுத்த பதவிக்கு வருகிறவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், இடைக்காலத்தில் குடியரசுத் தலைவராய் இருந்தவர் செய்யும் நடவடிக்கைகள் தமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்ளவேண்டியவரானார். இலிங்கன் இவ்வாறு காத்துக் கொண்டிருந்த இடைக்காலத்தில், சேம்சு புச்சானன் (James Buchanan) என்னும் பெயர் கொண்ட குடியரசுத் தலைவர் குடியரசுக் கட்சியின் வெற்றியால் பல சிக்கல்களைத் தாங்கமுடியாமல் தத்தளித்தார்.
தென்மாநிலங்கள் பிரிந்துபோதல்
இலிங்கனின் தேர்தலுக்குப் பின்னர் அடிமை முறை பற்றிய சிக்கல் தலைதூக்கியது. அடிமை முறையை ஆதரித்த தென்மாநிலங்கள் குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரேயாயின், ஒன்றியத்திலிருந்து பிரிந்து போய்விடுவதாக அச்சுறுத்தின. இலிங்கனும் ஏனைய குடியரசுக் கட்சித் தலைவர்களும் தென்மாநிலங்கள் வீணே பிதற்றுகின்றன என்றே நம்பினர். ஆனால், கி.பி. 1860–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 20 ஆம் நாள் தென்கரோலினா பிரிந்து சென்றபோது அமெரிக்க ஐக்கியத்திற்குப் பேராபத்து வந்துவிட்டதென்பது தெளிவாயிற்று. இலிங்கன் குடியரசுத் தலைவராக கி.பி. 1860–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4–ஆம் நாள் பதவியேற்கும் முன் ஏழு தென் மாநிலங்கள் பிரிந்து போய்விட்டன. அவை அமெரிக்கக் கூட்டிணைப்பு மாநிலங்கள் (Confederate States of America) என்னும் பெயருடன் தனி அரசினை அமைத்துக் கொண்டன. மிசிசிப்பியைச் சார்ந்த செபர்சன் தேவிசு (Jefferson Davis of Mississippi) என்பாரை அம்மாநிலங்கள் குடியரசுத் தலைவராக அறிவித்தன. தென் கரோலினா, மிசிசிப்பி, புளாரிடா, அலபாமா, சார்சியா, இலூசியானா, தெக்சாசு, என்பவை அமெரிக்கக் கூட்டிணைப்பு மாநிலங்களாகும்.
அமெரிக்க ஐக்கியத்தைப் பேணிக்காக்கவும், சிக்கலைத் தவிர்க்கவும் பல திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டன. கெண்டகியைச் சார்ந்த மேலவையாளர் சான் சே. கிரிட்டெண்டன் (John J. Crittenden) என்பார் தாம் கூறிய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுமானால், அமெரிக்க ஐக்கியம் பிரியாமல் நிலைத்திருக்கும் என்றார். அந்த நோக்குடன் அவர் கி.பி. 1860–ஆம் ஆண்டில் அரசியலமைப்புத் திட்டத்தைத் திருத்தப் பல திருத்தங்களைக் கூறி, இரண்டு கட்சிகளும் இணக்கத்திற்கு வர வழிகோலினார்.
1. 36,30 என்னும் குறுக்குக் கோட்டிற்கு வடக்கிலுள்ள பகுதிகளில் அடிமை முறையை விலக்கி விடவேண்டும். அக்கோட்டிற்குத் தெற்கிலுள்ள பகுதிகளில் அம்முறை பாதுகாக்கப்படவேண்டும். 2. அடிமை முறை நிலவும் மாநிலங்களில் இருக்கும். ஏனைய கூட்டாட்சிச் சொத்துகள் போன்றவற்றில் அடிமைத் தளையை அகற்றும் அதிகாரத்தைக் காங்கிரசு பெறக்கூடாது. 3. கொலம்பியா மாநிலத்தில் (வாசிங்டன் டி.சி) அடிமைத்தளையை நீக்கும் அதிகாரத்தைக் காங்கிரசு பெறக்கூடாது. அடிமை- களின் சொந்தக்காரர்களுக்குப் பணம் கொடுக்காமல் இதைச் செய்தல் கூடாது. அதேபோல் மேரிலாந்து, வர்சீனியா, கொலம்பியா போன்ற மாவட்டங்களைச் சார்ந்த மக்களின் இசைவில்லாமல் அடிமைத் தளை அகற்றப்படுதல் கூடாது. 4. அடிமைகள் இருக்கும் மாநிலங்களுக்கும் பகுதிகளுக்கும் இடையில் அடிமை வாணிகத்தைத் தடுக்கவோ தடைசெய்யவோ காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை. 5. திரும்பக் கைப்பற்ற முடியாமல் தப்பியோடிய அடிமைகளுக்குக் கூட்டாட்சி அரசு நட்ட ஈடாகப் பொருள் கொடுக்க வேண்டும்.
சுதந்திர மாநிலத்தின் மேலவை உறுப்பினர்களின் மேலவைக் குழுவும், அடிமை முறையைச் செயற்படுத்திய மாநிலங்களும், இரு அரசியல் கட்சிகளும் மேற்கூறிய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.
அடிமை முறையை விரிவாக்கும் எந்தவொரு திட்டத்தையும் தாம் அனுமதிக்கப் போவதில்லையென்றும், இதில் சமரசத்திற்கே வழிகிடையாது என்றும் இலிங்கன் நண்பர் ஒருவருக்குக் கடிதம் மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். கிரிட்டெண்டன் கோரிக்கைகளின் அடிப்படையில் சமரசம் வராவிட்டால் போர் மூளும் என்பதை இலிங்கனோ குடியரசுக் கட்சியினரோ உணரவில்லை.
குடியரசுத் தலைவர் பதவியேற்றல்
இசுபிரிங்கு பீல்டிலிருந்து வாசிங்டன் டி. சிக்கு இலிங்கன் கி.பி. 1861–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 11–ஆம் நாள் புறப்பட்டார். இவர் இசுபிரிங்குபீல்டு நண்பர்களிடம் பேசும்போது நாட்டைச் சூழ்ந்துள்ள பேரிடர்களைச் சுட்டிக் காட்டினார்.
வாசிங்டன் போய்ச் சேர இவருக்கு 12 நாள்கள் பிடித்தன. வழியெல்லாம் மக்கள் அமெரிக்காவின் ஐக்கியத்தை எதிர்நோக்கியிருந்த அச்சம் குறித்து என்ன பேசுகிறார்கள் என்பதை இலிங்கன் கவனிக்க இப்பயணம் வாய்ப்பளித்தது. புதிய குடியரசுத் தலைவரை நேருக்கு நேர் காணவும், அவர்தம் உரையைக் கேட்கவும் மக்களுக்கு இது பயன்பட்டது.
அமைச்சரவைக்குப் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொரு குடியரசுத் தலைவருக்கும் தொல்லைகள் இருந்தன. இலிங்கன் தம் அமைச்சரவை உறுப்பினர்களை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்தார். குடியரசுக் கட்சிக்குள் நிறைய நண்பர்களைக் கொண்டிருந்த ஆட்களையே இவர் அமைச்சராகத் தேர்ந்தெடுத்தார். அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எழுவருள் நால்வர் குடியரசுத் தலைவர் பதவிக்கே கட்சியின் நியமனத்தைப்பெற எதிர்பார்த்தவர்கள். உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்கள். இருவர் அடிமை முறையை ஆதரித்த தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் சிலர் குடியரசுக் கட்சிக்காரர்களாவர். முன்னர் விக்குக்கட்சியில் இருந்தவர்கள். சிலர் மக்களாட்சிக் கட்சிக்காரர்கள். ஒருவர் சுதந்திர நிலம் (Free Soiler) கோரும் குழுவினர்.
இலிங்கனின் அமைச்சரவைக் குழுவின் வெளியுறவு அமைச்சராக இருந்த வில்லியம் எச். சீவார்டு பொது வாழ்வில் இலிங்கனைவிட அனுபவம் மிக்கவர். குடியரசுத் தலைவரிடம் தம் செல்வாக்கு மிகுதியாக இருக்குமென்று அவர் எண்ணினார். புதிய நிருவாக அமைப்பில் எவற்றையெல்லாம் எப்படியெப்படிச் செய்யவேண்டுமென்னும் தம் கருத்துகளைச் சீவார்டு இலிங்கனிடம் கூறியதுடன், அதற்குத் தேவையான முடிவுகளையும் செய்வதெப்படி என்று அறிவித்தார். குடியரசுத் தலைவரான தமக்குச் செய்ய வேண்டுவனவற்றைத் தீர்மானிக்கத் தெரியும் என்று இலிங்கன் பதிலளித்தார். நிதி அமைச்சர் சால்மன் பி. சேசு (Salmon P. Chase), போர்த்துறை அமைச்சர் சைமன் காமரூன் (Simon Cameron), கப்பற்படை அமைச்சர் கிடான் வெல்சு (Gideon Welles) போன்றவர்கள் ஏனைய முக்கிய அமைச்சர்கள்.
நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாக்கும் சிக்கல் நாட்டு மக்களையும் புதிய குடியரசுத் தலைவரையும் எதிர்நோக்கியது. குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபோது இலிங்கன் ஆற்றிய தொடக்கவுரையில், மாநிலங்களின் ஐக்கியம் நிலையானதென்றும் நாட்டின் ஐக்கியத்தை விட்டு எந்தவொரு மாநிலமும் சட்டப்படி விலக முடியாது என்றும் அறிவித்தார். எனவே, நாட்டின் ஐக்கியம் உடைக்கப்படக் கூடாததென்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த அனைத்து மாநிலங்களையும் நேர்மையுடன் காக்கும் அரசியலமைப்புக் கடமை தமக்கிருக்கிறதென்றும் தெளிவாக்கினார். அதனைக் காக்கும் பொருட்டுக் குருதி சிந்துவதோ வன்முறையோ தேவையற்றது என்றும், அத்தகைக தேவை ஏற்படாதென்றும், அமெரிக்கத் தேசியத்தின் அதிகாரத்தை எதிர்த்துத் தம்மீது திணித்தாலன்றி அது ஏற்படாதென்றும் இவர் பேசினார். அரசுக்குச் சொந்தமான சொத்துகளையும் இடங்களையும் காத்து, கைக்கொண்டு நிருவகிக்கும் பொறுப்புத் தாம் ஏற்றிருக்கும் பதவியின் கடமையாகும் என்றும் இவர் குறிப்பிட்டார். அத்துடன் கூட்டாட்சிக்குரிய வரிகள் வசூலிக்கப்படும் என்றும் இவர் அறிவித்தார் அடினம முறையொன்றுதான் வழக்கின் ஒரே சிக்கல் என்றார். இவர் எங்கெல்லாம் அடிமை முறை வழக்கில் இருந்து வருகிறதோ அங்கெல்லாம் தலையிடப்போவதில்லை என்று தென் மாநிலங்களுக்கு இவர் வாக்குறுதியளித்தார். எனவே அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக் காப்பது அனைவரின் கடமையாகும் என்று வேண்டுகோள் விடுத்து இவர் தம் உரையை முடித்தார்.
உள்நாட்டுப் போர்
தென்கரோலினாவிலுள்ள சார்லசுட்டன் (Charleston) துறைமுகத்திற்குள் அடங்கியிருந்த சம்டர்கோட்டை ஐக்கிய அமெரிக்காவிற்குச் சொந்தமானது. அதன் கதி என்னவாகும் என்ற வினாவிற்கு இவர் பதில் கொடுக்க வேண்டியவரானார். போரா? சமாதானமா? என்பதே இதன் விடை என்பதும் தெளிவாயிற்று. தென் கரோலினா இக்கோட்டையை அதனிடம் ஒப்படைக்குமாறு கோரியது. அதனுடன் நில்லாமல் கோட்டைக்கு வந்த தளவாடங்களையும் அது தடுத்து நிறுத்தியது. சம்டர் கோட்டையை எவ்விலை கொடுத்தாயினும் காப்பது என்று இவர் முடிவு செய்தார்; அதன்படி கி.பி. 1861 ஏப்பிரல் 8–ஆம் நாள் சம்டர் கோட்டையைக் காக்கத் துணைப்படையொன்றை அனுப்பினார்.
சார்லசுட்டன் துறைமுகத்தில் துப்பாக்கிகள் வெடிக்கத் தொடங்குமாயின், அது தென்கரோலினா கூட்டாட்சிப் படைகளின் கோட்டையைத் தாக்கியதற்கொப்பாகும் என்பது இவர்தம் கணிப்பு. அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பது என்று திட்டமிட்டார் இவர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் படைவீரர்களுக்குப் போரில் இறங்கவேண்டிய அச்சம் இருக்காது என்றும் இவர் நம்பினார். ஆனால், சம்டர் கோட்டையைத் தாக்கிய தென்மாநிலப் படைகள் போரைத் தொடங்கின.
சம்டர் கோட்டையை கி.பி. 1861–ஆம் ஆண்டு ஏப்பிரல் 14–ஆம் நாள் தென்மாநிலத்தவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். அடுத்த நாள் இலிங்கன் 75,000 தொண்டர்கள் மூன்று மாதங்களுக்குத் தொண்டு செய்யவேண்டுமெனக் கட்டளையிட்டார். சில நாட்களுக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கப்பற்படையினைப் பிரிந்துபோகும் மாநிலங்களின் கடற்கரையை முற்றுகையிடும்படி இவர் ஆணையிட்டார். நிலையான படைகளின் எண்ணிக்கையையும் இவர் பெருக்கிக்கொண்டார். மேலும் மூன்றாண்டுகள் இராணுவத் தொண்டு செய்ய மேலும் 42,000 வீரர்களைத் திரட்டினார்.
படைகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் அதிகாரம் அரசியலமைப்புப்படி காங்கிரசுக்கு இருந்ததேயன்றிக் குடியரசுத் தலைவருக்கு இல்லை. இதை இலிங்கன் நன்கு அறிந்திருந்தார். ஆனால் அடுத்துக் கூடிய காங்கிரசு இவர் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்து ஏற்றுக்கொண்டது. தாம் எடுக்கும் நடவடிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பானவை என்பதையும் இவர் உணர்ந்திருந்தார். எனினும் நாட்டின் ஐக்கியத்தைத் காப்பது அரசியலமைப்புத் திட்டத்தின் கோட்பாடுகளைக் காப்பதை விட முக்கியமானது என்று இவர் எண்ணினார்.
அடிமை முறையை ஆதரித்த 15 மாநிலங்களுள் 8 பிரிந்து போகாமல் இருந்த நிலையில் அமெரிக்காவின் ஐக்கியத்தைக் காப்பது கடமை என்று கி.பி. 1861–ஏப்பிரலில் இவர் மேலும் படைவீரர்களைத் திரட்டினார். இந்நிலையில் பிரிந்து போகாதிருந்த எட்டு மாநிலங்கள் ஐக்கியத்திற்காகப் போராடுவதா, ஏற்கனவே பிரிந்துபோயிருந்த ஏழு மாநிலங்களுடன் இணைந்துவிடுவதா என்னும் சிக்கலை இவருடைய படை திரட்டும் முயற்சி தோற்றுவித்தது. வர்சீனியா, அர்க்கன்சா, வடகரோலினா, தென்னசி என்னும் நான்கு மாநிலங்கள் அடிமை முறையை ஆதரித்த ஏழு மாநிலங்களுடன் இணைவதென முடிவு செய்தன. மேரிலாந்து, தெலாவர், கெண்டகி, மிசூரி ஆகிய எஞ்சிய நான்கு மாநிலங்கள் ஐக்கியத்துடன் இணைவது என்று முடிவு செய்தன.
இசுடீபன் ஏ. தக்லசு கி.பி. 1861–ஆம் ஆண்டு சூன் மாதம் 3–ஆம் நாள் காலமானார். போர் மூண்டிருந்த நிலையில் தக்லசு அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாப்பது இன்றியமையாத கடமையெனக் கொண்டு இலிங்கனுக்கு ஆதரவு நல்கினார். தேசபக்தர்களா? தேசத்துரோகிகளா? என்பதே ஆராயத்தக்கது; கட்சிகளன்று என்பது அவருடைய திண்ணமான கருத்து. தக்லசு மக்களாட்சிக் கட்சியின் தலைவர்; பொதுமக்களால் கவரப்பட்டவர். அத்தகைய தலைவர் காலமானது ஐக்கியத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அடிமை முறை ஒழிப்பு
அமெரிக்காவின் ஒருமையைக் காக்க மாநிலங்களுக்கிடையே போர் மூண்டது. அடிமை முறையை ஒழிப்பதை அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டால், அமெரிக்காவின் ஒருமையைக் காக்கும் கருத்துக்குப் பேராதரவு கிட்டும் என்ற சூழல் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது தெளிவாயிற்று. அப்படியாயின் அடிமை முறையை ஒழிப்பதற்குப் போர்க்கால அதிகாரங்களைப் பயன்படுத்துவதென்று இலிங்கன் முடிவு செய்தார்.
தென்மாநிலப் படைகள் கி.பி. 1862–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மேரிலாந்தின்மீது படையெடுத்தபோது, சார்ப்சுபர்க்கு என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் அவை விரட்டியடிக்கப்பட்டன. இவ்வெற்றி பெற்ற ஐந்து நாள்களுக்குப் பின்னர், அமெரிக்க ஒருமைக்கு எதிராகக் கலகம் செய்யும் அடிமை முறையை ஆதரிக்கும் தென்மாநிலங்களில் வாழும் அடிமைகளும் கி.பி. 1863–ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் நாள் சுதந்திரம் பெறுவர் என்று குடியரசுத் தலைவர் அறிவித்தார். அமெரிக்க ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்த எல்லைப்புற மாநிலங்களில் வாழும் அடிமைகளை இந்நடவடிக்கை விடுதலையாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேரிலாந்து, மிசூரி போன்ற மாநிலங்களில் வாழ்ந்த அடிமைகள் அடிமைகள் ஒழிப்புச் சட்டம் வரும்வரை காத்திருக்க வேண்டியவர்களாயினர். தெலாவர், கெண்டகி மேற்கு வர்சீனியா போன்ற மாநிலங்களில் வாழ்ந்த அடிமைகள் 13–ஆம் அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேறும்வரை காத்திருந்தார்கள். இத்திருத்தம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அடிமை ஒழிப்பை ஏற்றுக்கொண்டது. இது கி.பி. 1865–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 18–ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.
அடிமை ஒழிப்புப் பற்றிய தம் அறிக்கையை இலிங்கன் உரிய காலத்தில் எச்சரிக்கையாக வெளியிட்டார். இவ்வறிக்கையை வெளியிடும் முன் இவர் படைத்தலைவர்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் அவசரப்படக்கூடும் என்னும் காரணத்தாலேயே இவர் இப்பணியை அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. தம்மை மீறி அடிமை ஒழிப்பு ஆணைகளைப் பிறப்பித்த இரு படைத்தலைவர்களின் ஆணையை இவர் தள்ளுபடி செய்துவிட்டார்.
குடியரசுத் தலைவரின் இந்த நடவடிக்கைகளைக் கண்டு அடிமை ஒழிப்பு ஆதரவாளர்கள் சினம் கொண்டனர். அடிமையொழிப்பு ஆதரவாளர்களை மகிழ்விக்க எண்ணினால் அடிமைகளைக் கொண்டுள்ள எல்லைப்புற மாநிலங்களைப் பகைத்துக்கொள்ள வேண்டிவரும்; அவை அமெரிக்க ஐக்கியத்தை நம்பியவை. அவர்களின் ஆதரவு அமெரிக்க ஐக்கியத்திற்குப் பெரிதும் தேவைப்பட்டது. அதற்கு மாறாக அடிமைகளைக் கொண்டுள்ள எல்லைப்புற மாநிலங்களை மகிழ்விக்க எண்ணிணால், அடிமையொழிப்பு ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ளும் சூழ்நிலை தோன்றக்கூடும். அமெரிக்காவின் ஒருமையைக் காத்துப் போரை வெல்லவேண்டுமாயின் அவர்களின் ஒத்துழைப்பு மிகத் தேவை என்பதையும் தெளிவாக உணர்ந்திருந்த இலிங்கன் தம் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி இரு குழுவினரையும் மகிழ்விக்க விரும்பினார்.
புதிய சட்டங்கள்
இலிங்கனின் நிருவாகத்தின் போது பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை போர் தொடர்பானவையல்ல. அச்சட்டங்களுள் சில இன்றும் நடைமுறையிலுள்ளன.
நாணயச் செலாவணிச் சட்டம்
கி.பி. 1862–இல் நிறைவேற்றப்பட்டது. இதன்படி காகிதப் பணம் செலாவணிக்கு வந்தது. காகிதப் பணத்தை அமெரிக்காவில் பொன்னாகவோ வெள்ளியாகவோ மாற்ற இயலாது. இக்காகிதப் பணத்தின் மதிப்புக் கூட்டாட்சி அரசின் மதிப்பைப் பொறுத்திருந்தது. போருக்குப் பின்னர்க் காகிதப் பணம் பெரும் அரசியல் கொந்தளிப்புக்கு அடிகோலியது.
மனையகச் சட்டம்
கி.பி. 1862–ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இதன்படி ஐந்து ஆண்டுகள் பொது நிலத்தில் குடியேறி அங்கு நிலையாக வாழ்ந்து அதனை உருப்படியாக வளர்த்து முன்னேற்றம் செய்திருந்தால் அவர் 160 ஏக்கர் வரையுள்ள நிலத்தை மனையகத்திற்காக வைத்துக்கொள்ள வழிவகை செய்தது இம்மனையகச் சட்டம் (The Homestead Act). போருக்கு முன்னர் அடிமை முறை நிலவி வந்த மாநிலங்களின் இடையறாத எதிர்ப்பினால் இச்சட்டம் நிறைவேற்றப்பட முடியாமல் தோல்வியுற்றது. இவ்வாறு குடியேறியவர்கள் அடிமை முறை இல்லாத மாநிலத்தவர்களாக இருந்தமையால், சுதந்திர மாநிலங்கள் மிகுதியாகும் என்ற அச்சத்தால் தென்மாநிலங்கள் இதனை எதிர்த்தன. காங்கிரசிலிருந்து பிரிந்துபோன மாநிலங்கள் அகன்று விட்டபடியால், இச்சட்டம் எளிதாக நிறைவேற்றப்பட்டது.
அட்லாண்டிக்குப் பெருங்கடல் முதல் பசிபிக்குப் பெருங்கடல் வரை இருப்புப் பாதை அமைக்கப்படல்
காங்கிரசு கி.பி. 1862–இல் ‘யூனியன் பசிபிக்கு இருப்புப்பாதை’ (Union Pacific Railroad) என்னும் நிறுவனத்திற்கும் கி.பி. 1864–இல் மத்திய பசிபிக்கு இருப்புப் பாதை நிறுவனத்திற்கும் பட்டயம் வழங்கியதால், கிழக்கில் அட்லாண்டிக்குப் பெருங்கடற் கரையிலிருந்து மேற்கில் பசிபிக்குப் பெருங்கடற்கரை வரை இருப்புப்பாதைகள் போடப்பட்டன (1869). கண்டங்கடக்கும் இப்பெரும் இருப்புப் பாதையை அமைக்கப் பொது நிலங்களும் ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டன.
மோரில் நிலமானியச் சட்டம் (கி.பி. 1862)
பெருமளவு நிலத்தை மேலவையினரின் எண்ணிக்கைக்குத்தக மானியமாக வழங்கி, வேளாண்மையையும் தொழில் நுட்பக் கலைகளையும் வளர்க்க உதவி செய்தது.
தேசிய வங்கிச் சட்டம் (1863)
பிறிதொரு முக்கியச் சட்டமாகும். இதன்படி நாடெங்கும் நம்பிக்கை வாய்ந்த வங்கிகள் உருவாக்கப் பெற்றன. இவ்வங்கிகள் காகிதப் பணத்தைச் செயற்படுத்தின. கூட்டாட்சி அரசின் பத்திரங்கள் கொடுக்கப்பட்டன. தேசிய வங்கிச் சட்டம் போருக்குத் தேவையான பொருளைத் திரட்ட உதவியது.
போரின்போது இரு புதிய மாநிலங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவையாவன: (1) மேற்கு வர்சீனியா (2) நெவாடா (Nevada). மேற்கு வர்சீனியா கி.பி. 1863–ஆம் ஆண்டிலும், நெவாடா கி.பி. 1864–ஆம் ஆண்டிலும் ஒன்றியத்துடன் இணைந்தன.
அடிமை ஒழிப்புச் சட்டத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த நாலில் மூன்று பங்கு மாநிலங்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இப்புது மாநிலங்கள் அவ்வாறு வாக்களித்தமையால், அரசிலமைப்புத் திருந்தம் கி.பி. 1865–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 18–ஆம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இரண்டாம் முறை குடியரசுத் தலைவராக இலிங்கன்
ஆபிரகாம் இலிங்கன் தென்மாநிலத்தவர்களின்பால் கனிவாகச் செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டிக் குடியரசுக் கட்சியின் ‘தீவிரவாதிகள்’ குழு இவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது. தென் மாநிலத்தவர்களை நடத்தும் விதத்தைத் தீர்மானிப்பது காங்கிரசுதான், குடியரசுத் தலைவரல்லர் என்பது அவர்கள் கருத்து. எனவே மீண்டும் தேர்தலுக்கு இலிங்கன் நிறுத்தப்பட்டால் இவரை எதிர்ப்பது என்று அத்தீவிரவாதிகள் முடிவுசெய்தனர். ஒகையோ மாநிலத்தைச் சார்ந்த கிளீவ்லாந்து நகரில் 1864–ஆம் ஆண்டு மே 31–இல் நடைபெற்ற மாநாட்டில் மிசூரியைச் சார்ந்த சான் சி. பிரிமாண்ட்டு (John C. Fremont) என்பவரைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு நியமனஞ் செய்தனர். கட்சி இவ்வாறு உடையுமாயின் மக்களாட்சிக் கட்சி வெற்றி வாய்ப்பைப் பெற்றுவிடும் என்று கருதிய பிரிமாண்ட்டு தேர்தலிலிருந்து விலகிக் கொண்டார்.
குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு பால்ட்டி மோரில் ( Baltimore) கூடி இலிங்கனையே இரண்டாம் முறையாகக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தேர்ந்தெடுத்தது. மக்களாட்சிக் கட்சி சார்சு பி. மக்கிளிலான் (George B. McClellan) என்பாரைத் தெரிந்தெடுத்தது. தேர்தல் நடைபெற்ற போது இலிங்கன் வெற்றிபெறுவாரா என்ற ஐயம் நிலவியது. போரைப் பலர் வெறுத்தனர். ஆனால், அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் போரில் பல குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை இத்தருணத்தில் பெற்றமையால் இலிங்கனின் புகழ் ஓங்கியது. போர் விரைவில் முற்றுப்பெறும் என்று மக்கள் நம்பினர். தேர்தலில் இலிங்கன் 212 தேர்தல் வாக்குகளைப் பெற்று இரண்டாம் முறையும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்த மக்கிளிலான் வெறும் 21 தேர்தல் வாக்குகளே பெற்றுப் படுதோல்வியுற்றார்.
போரினால் ஏற்பட்ட தொல்லைகள்
குடியரசுத் தலைவராக இலிங்கன் பணியாற்றிய காலத்தில் இவர் போரில் ஈடுபடும் பெரும் பணியில் இருந்தார். போர் புரிந்து பழக்கப்படாத பண்ணையாட்கள், தொழிற்சாலைப் பணியாட்கள் போன்றவர்களுக்குப் போர்ப்பயிற்சி கொடுத்துத் துப்பாக்கிகள், தளவாடங்கள் போன்றவற்றைத் தவறாமல் பயன்படுத்தச் செய்யவேண்டும். தொல்லைகள் நிறைந்த இக்கால கட்டத்தில் வட பகுதியின் ஒற்றுமையையும் சீர்குலையாமல் காக்கவேண்டும். ஏனெனில், சில வேளைகளில் ஐக்கியப் படைகள் தோல்வியையும் கண்டன.
தமக்கு உறுதுணையாக நின்ற பெருமக்களுடன் சச்சரவிட்டுக் கொள்ளாமல் அமைதியான முறையை இலிங்கன் கைக்கொள்ள வேண்டியவரானார். அமைச்சரவையிலிருந்த உறுப்பினர்கள் தமக்குள் கருத்து வேறுபாடு கொண்டவர்களாயிருந்தனர். போர்த்துறை துரோகம் செய்வதையறிந்து இலிங்கன் அத்துறையின் அமைச்சரை மாற்றியமைத்தார். இசுடாண்டன் என்னும் பெயர் கொண்ட அவ்வமைச்சர் நேர்மையாக நடந்து கொண்டார்.
போரினால் ஏற்பட்ட சாவுகளையும் அழிவுகளையும் கண்டு இவர் கலங்கினார். கெட்டிசுபர்குக் கல்லறையை நாட்டுக்கு உரிமைப்படுத்தியபோது. இலிங்கன் இரண்டு மணித்துளி நேரம் பேசினார். இவ்வுரை ‘கெட்டிசுபர்குப் பேருரை’ (Gettysburg Address) எனப்படும். இது அமெரிக்க வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பேருரையாகும் (கி.பி. 1863 நவம்பர் 19–ஆம் நாள்).
இலிங்கனின் மிகப் பெரிய தொல்லை இராணுவம் பற்றியதாகும். அமெரிக்க ஐக்கியத்தின் சார்பாகப் போராடிய படைத்தலைவர்களைவிடத் தென் மாநிலப் படைத்தலைவர்கள் திறமையானவர்களாய் இருந்தனர். படைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டா- லும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இறுதியாக கி.பி. 1864 மார்ச்சு மாதத்தில் யுலிசசு எசு. கிராண்ட்டு (Ulysses S. Grant) என்பாரை ஐக்கியப் படைகள் அனைத்தின் படைத்தலைவராக இலிங்கன் நியமித்தார். அவர் வெற்றிபெற்றார். தென் மாநிலப் படைகள் தோற்கத் தொடங்கின.
போரின் முடிவு
ஆபிரகாம் இலிங்கன் கி.பி. 1865–ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் குடியரசுத் தலைவராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிப் பொறுப்பை ஏற்றபோது, உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் இருந்தது. ஒருமைக்காகப் பாடுபட்ட மக்களின் பெரும் எண்ணிக்கையும், பெருமளவில் கிடைத்த படைத்தளவாடங்களும் போரின் வெற்றிக்குக் காரணமாயின. கிராண்ட்டு, செருமன் (Sherman), செரிடன் (Sheridan) போன்றவர்கள் விழுமிய படைத்தலைவர்கள், தென்மாநிலப் படைத்தலைவர்களை விட இவர்கள் வல்லவர்களாயிருந்தனர். இரண்டாம் முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபோது இலிங்கன் ஆற்றிய உரையின் இறுதிச் சொற்கள் உலகப் புகழ் படைத்தவை. இலிங்கன் தம் இறுதிச் சொற்களைப் பேசி முடித்த போது போரும் பெரும்பாலும் முடிவுக்கு வந்திருந்தது. இவர் அமைதிக்கான திட்டங்களைத் தீட்டி வந்தார். மீண்டும் தென் மாநிலங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் இணைய வேண்டுமென விரும்பிய இலிங்கன் அவற்றை இணையுமாறு வரவேற்றார். போரினால் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்துவிடும்படியும் இவர் வேண்டினார்.
தென் மாநிலங்களின் படைத்தலைவரான இலீ (Lee) கி.பி. 1865–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 9–ஆம் நாள் சரணடைந்தார். அவருக்குப்பின் மற்றவர்களும் சரணடைந்தனர். ஒருவாறாகப் போர் முடிவுற்றது.
இலீ சரணடைந்ததையும், தம் தலைமையின் கீழ் அமெரிக்க நாட்டின் ஒற்றுமை காக்கப்பட்டதையும் இலிங்கன் உயிருடன் இருக்கும்போதே அறிந்து மகிழ்ந்தார். போர்டு கலையரங்கத்தில் நடைபெற்ற நாடகம் ஒன்றைப் பார்க்க இவர் கி.பி. 1865–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14–ஆம் நாள் சென்றார். மனநிறைவோடு நாடகத்தைக் கண்டுகளித்திருந்த போது சான் வில்கீசு பூத்து என்னும் கொடியவன் இலிங்கனைச் சுட்டான். காயமுற்ற இலிங்கன் உணர்விழந்து கி.பி. 1865–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 15–ஆம் நாள் உயிர்துறந்தார்.
துணை நூல்கள்
Thomas, Benjamin, P., Abraham Lincoln, Knopf, 1952.
McCarthy, Charles H., Lincoln’s Plan of Reconstruction, AMS Press, 1960.
Angle, Paul M., A Shelf of Lincoln Books, Rutgers University Press, 1955.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 397)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nejw6ana/
தமிழ்“இலிங்கன், ஆபிரகாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nejw6ana/APA
Oliyon Research. (2026). இலிங்கன், ஆபிரகாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nejw6ana/MLA
"இலிங்கன், ஆபிரகாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nejw6ana/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment