இது கிரேக்க நாட்டில் அலெக்சாண்டிரியா என்ற பெரு நகரத்தில் பிளேட்டோ (Plato)வின் தத்துவங்களைக் கற்பிக்கும் கூடமாக, கி.மு. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டுவரை அதாவது அரேபியர்கள் அந்தப் பெருநகரத்தைத் தங்கள் கைப்படுத்திய காலம்வரை விளங்கியது. இதைத் தோற்றுவித்தவர் மாவீரர் அலெக்சாந்தர் என்று சொல்லப்படுகிறது. பிலோ (Philo) என்ற தத்துவ அறிஞர் அலெக்சாண்டிரியாவில் கி.மு. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவர் பிளேட்டோவின் தத்துவக் கோட்பாடு வாயிலாகப் பைபிளுக்கு விளக்கம் கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் அப்பணியை இந்தத் தத்துவப் பள்ளியின் மூலமாகச் செய்தார் என்றும் தெரிகிறது. பிலோவின் இந்தப் பணி அவரை உயர்த்தியதோடு பிளேட்டோவின் தத்துவக் கொள்கைகளைப் புகழடையவும் செய்தது. பிளேட்டோவின் தத்துவங்களே வாழ்விற்கு அடிப்படை என்ற உன்னத நிலையையும் ஏற்படுத்தித் தந்தது. இந்த எழுச்சியை உலகம் முழுவதும் பரவச் செய்த பெருமையும் இதன் மூலம் கிறித்தவ மதத்தைத் தன் வயப்படுத்திய பெருமையும் பிலோலையே சாரும். இந்தத் தத்துவப்பள்ளி, ஏதன்சு நகரப் பள்ளியோடு நீண்ட காலம்வரை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது என்பது தெரிய வருகிறது. இந்த இரண்டு பள்ளிகளுமே பிளேட்டோவின் தத்துவங்களைப் பாடமாக வைத்திருந்தபோதிலும் இரண்டு பள்ளிகளும் வெவ்வேறு வகையில் அப்பாடத்தைப் பயிற்றுவித்தன. இந்த இரண்டு பள்ளிகளுள் அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி மிகச் சிறப்பாகச் செயற்பட்டதாகவும் வருவாயும் மிகுதியாகக் கிடைத்ததாகவும் கூறப்படுகின்றது. இவ்விரு பள்ளிகளும் பிளேட்டோவின் தத்துவங்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கற்பித்தன. ஏதன்சு நகரப் பள்ளியில் யூக தத்துவம் (Speculative Philosophy), அருளனுபவத் தத்துவம் (Mystic Philosophy), சமயத் தத்துவம் (Religious Philosophy) முதலியன சிறப்பாகக் கற்பிக்கப்பட்டன. ஏதன்சுபள்ளி அதன் இறுதிக்காலம் வரை புறச் சமயத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால் அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளி இதற்கு மாறாகச் சார்பற்ற பொதுவான தத்துவப்பாடங்களைக் கூர்ந்த அறிவு வாயிலாகக் கற்பித்தது. பின்னர் அலெக்சாந்தரின் தத்துவப் பள்ளியின் பாடங்களில் கிறித்தவத் தத்துவத்தின் மணம் வீசத் தொடங்கியது. அரேபியர் நுழைவுக்குப் பிறகு அங்கு இசுலாமியத் தத்துவத்தின் மணம் வீசத்தொடங்கியது. அலெக்சாந்தரின் தத்துவப்பள்ளிக்கும் ஏதன்சு பள்ளிக்கும் இடையே நிலவிய வேறுபாடுகளை (Tension), போலிமிக்கு (Polemic) என்பவருக்கும், புரோக்குலசு (Proclus) என்பவருக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மூலம் அறியலாம். இந்தக் கருத்து வேறுபாடுகளுக்கு அடிப்படையாக அமைந்தது பிளேட்டோவின் தீமயூசு (Timaeus) என்ற அவரது படைப்பில் எழுந்த சிறு ஐயந்தான். அதாவது, இந்த உலகத்தின் படைப்பு காலவரம்பிற்குட்பட்டதா? உட்படாததா? என்ற ஐயந்தான் அது. போலிமிக்கு இந்த உலகம் காலவரம்பிற்கு அப்பாற்பட்டதாதலால் அழிவில்லாதது என்று கூறினார். புரோக்குலசு இந்த உலகம் காலவரம்பிற்குட்பட்டது. ஆதலால் அழிவது என்று மறுத்துரைத்தார். இருவருக்கும் ஏற்பட்ட இந்தக் கருத்து வேற்றுமை நீண்ட காலம் வரை நீடித்தது. இந்தத் தத்துவப் பள்ளியில் உறுப்பினர்களாகத் திகழ்ந்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் இராக்கிலிசு (Hierocles), எரிமியசு (Hermeias), அம்மோனியசு எர்மியோன் (Ammonius Hermeion) போன்றவராவார்கள். இவர்கள் ஏதன்சு பள்ளியில் மாணவர்களாகவும் திகழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்சாந்தர் தத்துவப் பள்ளியின் முதல் பேராளர் என்ற பெருமை இராக்குலிசு என்பவரைச் சாரும். இவர் ஆராய்ச்சிக் கட்டுரையில் பிளேட்டோவின் கருத்தும் அரிசுடாட்டில் கருத்தும் அடிப்படையில் ஒன்றுதான் என்று குறிப்பிடுகிறார். இப்பள்ளிக்கும் கிறித்தவத் தத்துவப் பள்ளிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை. இறுதியாக வந்த இசுடீபன்லெசுலி (Stephen Leslie) என்ற இந்தப் பள்ளியின் தத்துவவியலார், கான்சுடாண்டி நோபில் பல்கலைக் கழகத்தில் (University of Constantinople) தத்துவம் கற்பிக்க அழைக்கப்பட்டார். அலெக்சாண்டிரியப் பெருநகரத்தில் கற்பிக்கப்பட்ட பிளேட்டோவின் தத்துவத்தைப் பைசாண்டைன் பேரரசு (Byzantine Empire)க்கு எடுத்துச் சென்ற பெருமை அலெக்சாந்தரைச் சாரும்.ஆர்.கோ.